அறிந்ததும் அறியாததும்
  1. காத்து உள்ளபோதே தூத்திக்கொள்

  2. கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!

  3. கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு

  4. வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்

  5. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும்.

  6. ஆறிலும் சாவு நூறிலும் சாவு

  7. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.

  8. களவும் கற்று மற.

  9. சேலை கட்டும் பெண்ணை நம்பாதே

  10. ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்.

  11. ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது.

  12. போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

  13. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்.

  14. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

  15. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்து.

  16. அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது

  17. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

  18. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

  19. அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் .

  20. பந்திக்கு முந்து . படைக்கு பிந்து ( அ) பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ

  21. அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

  22. சோழியன் குடுமி சும்மா ஆடாது.

  23. உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு.

  24. பகையாளி குடியை உறவாடி கெடு.

  25. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும்

  26. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

  27. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்.

  28. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

  29. ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி.

  30. கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.

  31. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

  32. புல் தடுக்கிப் பயில்வான் போல...

  33. குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா..?

  34. எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்

  35. ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு .

  36. ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

  37. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

  38. குந்தித் தின்றால் குன்றும் மாளும்..


 
அறிந்ததும் அறியாததும்
--மு.வெற்றிவேல்

"காத்து உள்ளபோதே தூத்திக்கொள்"

நேர் விளக்கம்
காத்து அடிக்கும்போது பதரோடுள்ள நெல்லை மேலிருந்து கீலாக கொட்டினால் பதர் நெல்லை விட்டு பிரிந்து காத்திலே பறக்க நெல் மட்டும் தணியாக கிழே சேகரிக்கப் படும். காத்து அடிக்கும் பொழுது இதை செய்து கொள்ள சொல்லி அன்றைய விவசாயிகளுக்கு சொன்னது. ( இப்போது நவீன நெல் ஆலைகளில் ராட்சத மிண்விசிறிகள் மூலம் இது நடக்கிறது)

அறிந்த விளக்கம் :
சாதகமான சூழ்நிலையை தவறாமல் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.

அறியாத விளக்கம் :
1. காத்து [ காத்திருந்து ], உனக்கு இதை உணர்த்தும் பெரியோர் உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

2. உனக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

3. உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [ உயிர் ] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.

மேலே

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"

நேர் விளக்கம்
நாய் துரத்தும் போது அதை துரத்த கல்லைத் தேடும் போது கல்லைக் காணவில்லை. பிறகு கல் கிடைக்கும் போது பார்த்தால் நாயைக் காணவில்லை.

அறிந்த விளக்கம் :
உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.

அறியாத விளக்கம் :
இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது என்று சொல்கிறார்கள்.

இதன் விளக்கம்,
நாயகன் = கடவுள்
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".

கல்லால் செதுக்கப் பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளை பார்க்க மாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாக பார்க்கும் போது கல்லை பார்க்க மாட்டீர்கள்.

திருமூலர் சொன்னதைப் பாருங்கள்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
---------------
தேக்கு மரத்தில் கலை வல்லான் ஒருவன் மிக நேர்த்தியாக யானை உருவத்தைச் செதுக்கி வைத்துள்ளான். இரு நண்பர்கள் அதனைப் பார்க்கிறார்கள்

ஒருவன் 'அடேயப்பா! எவ்வளவு அழகான யானை?' என்கிறான். அடுத்தவன் 'இது தேக்குமரம்' என்கிறான்.
யானையாகப் பார்த்தவனுக்கு மரம் தெரியவில்லை. மரமாகப் பார்த்தவனுக்கு யானை தெரியவில்லை.
 

மேலே


 


அறிந்ததும் அறியாததும்
லக்கி ஷாஜஹான்.
-------------------------------------------------------------------------------------------

1. கோத்திரம் அறிந்து பெண் கொடு . பாத்திரம் அறிந்து பிச்சை இடு.

அறிந்த விளக்கம் :

பொதுவாக இது நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மறுமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும் அடுத்து , தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருக்கிறது.

அறியாத விளக்கம் :

ஆனால் இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது.

கோ என்பது அரசன் எனப் பொருள் படும் ( கோ+யில் -அரசன் உறையும் இடம் ). திறம் என்பது திறன் அல்லது திறமை.
அதாவது ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது.. கோத்திரம் என்பது கோத்திறம் என வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் ( பா+திறம் ) என
வரவேண்டும் (பா என்பது பாடல் ). புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும்.

மேலே

2. வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்..

மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை (சீரியல்களில் கிராஃபிக்ஸ் உதவியுடன் சிற்சில சமயங்களில் சாத்தியம் ). மனைவிகள் எப்போதாவது (செல்லமாக) அடி கழுதையே என வர்ணிக்கப்படுவதுண்டு.. அதுவும் கோபமாக இருக்கும் போது கழுதை என்று சொன்னால் அந்த இடத்தில் இரண்டு கழுதைகள் எண்ணிக்கையில் சண்டையாய் மாற வாய்ப்பிருக்கிறது (சொன்னவரையும் சேர்த்து ) ..

அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும் . கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ
அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷமாய் முள்ளாய் மாறி
அவ்வப்போது துன்புறுத்துவது போல் மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில்
வேம்பாய் கசப்பதுபோல் என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது. (குறிப்பு : என் மாமியார் இண்டர்நெட்
பார்ப்பதில்லை.எனவே ஐயா விடு ஜுட் )
 

மேலே
 

3. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானே வளரும..

அறிந்த விளக்கம் :
மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும். ( ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்க்கும்.. உன் பிள்ளையை கொடைக்கானல் வளர்க்கும் அடி போடி என்று கடி'ப்பார் தம் மனைவியை கவுண்டமணி ஒரு படத்தில்.. )

அறியாத விளக்கம் :
ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும்.. அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை அவள் கணவன்
நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன்
வளரும். ( உன்னைய நான் நெஞ்சிலே சுமப்பேன் என்னைய நீ வயித்தில சுமப்ப உலகமே நீதான் எனக்கு அழகம்மா என்று மனைவியை பார்த்து பாடும் பாடல் ஒன்று நினைவாடலில்...)
 

மேலே
 

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு .

அறிந்த விளக்கம் :
மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல..

அறியாத விளக்கம் :

இந்த பழமொழிக்கான சம்பவம் மஹாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது.. கர்ணணை குந்தி தேவி (
போர் நிகழும்போது ) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன்
சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் 'தாயே பஞ்சபாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் இவர்கள் ஆறு பேருடன்
இருந்தாலும் சரி..அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் என்பது எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று.. அதாவது ஆறிலும் சாவு நூறிலும் சாவு நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப் போகிறேன் என்கிறான் கர்ணன்.
 

 

மேலே
 

 


5. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.

அறிந்த விளக்கம் :
யாரோ ஒரு புண்ணியவான் போன போக்கில் ஐந்தும் பெண் பெற்றால் அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட நாளடைவில் ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில் புயல் அடிக்க செய்து விட்டனர். உண்மை  அதுவல்ல,

அறியாத விளக்கம் :
ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்
1. ) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2. ) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3. ) ஒழுக்கமற்ற மனைவி,
4. ) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர்,
5. ) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவர்களை கொண்டிருப்பவன் அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம் இங்கு பயன்படுகிறது.
 

மேலே
 


6. களவும் கற்று மற.

அறிந்த விளக்கம் :
திருடுவதையும் தெரிந்து கொண்டு பின் மறந்து விட வேண்டும் என்பதாக நேரிடையாக ஒரு பொருள் உலக வழக்கில் எடுத்துக்
கொள்ளப் படுகிறது. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தவரை சங்க காலப் பாடல்களில் களவு காதல் என்ற வார்த்தைப் பிரயோகம் அதிகம் வருகிறது. தலைவனும் தலைவியும் திருமணத்திற்கு முன்பே யாரும் அறியா வண்ணம் சந்தித்துக் கொள்வதை களவு என்று அந்த இலக்கியங்கள் குறிக்கின்றன.எனவே இதையும் குறிக்கலாம் என்பது சிலர் கருத்து.

அறியாத விளக்கம் :
மேற் கண்ட பழமொழி ' களவும் கத்தும் மற ' என்று வந்திருக்க வேண்டும். இதில் கத்து என்பது தூய தமிழில் பொய்
அல்லது கயமை என்பதாய் பொருள் கொள்ளப் படுகிறது. அதாவது ஆத்திச்சூடி பாணியில் திருட்டையும் பொய்யையும் தவிர்த்துவிடு என்பதாய் சொல்லப்பட்ட இப்பழமொழி நாளடைவில் மறுகி களவும் கற்று மற என்றாகி விட்டது.
 

மேலே
 


7. சேலை கட்டும் பெண்ணை நம்பாதே

அறிந்த விளக்கம் :
சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெண்களை பிடிக்காத ஒருவர் ஒரு கால கட்டத்தில் கோபமாய் சொல்லிவிட்டு போனதாக கூட  எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் சிலர். நிச்சயம் நாகரீக காலகட்டட்துக்கு பின்னால்தான் என எடுத்துக் கொள்ள வேண்டும். ( சேலை கட்டுற பொண்ணை, ஜீன்ஸ் போடற பொண்ணை , சுடி போடற பொண்ணை நம்பலைன்னா வேற யாரை தாங்க நம்பறது என்கிறார் உடையார்கோவிலிருந்து உலக நாதன் ). ஆனால் உண்மையான பழமொழி அதுவல்ல..

அறியாத விளக்கம் :
சேல் + ஐ அகட்டும் பெண்ணை நம்பாதே என்பது இந்த பழமொழியின் உண்மையான வடிவம். சேல் என்பது கண் விழியை
குறிக்கிறது. எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்கள் தப்பான நடத்தையை,
குணத்தை கொண்டிருப்பார்கள் ( உள்ளத்தின் கதவுகள் கண்களடா.. ) . எனவே அந்த குணமுடைய பெண்களின்
குணாதிசயங்களை அவர்கள் கண்ணிலிருந்தே கண்டுபிடித்து விடலாம். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து இப்படியாகி விட்டது. ( இந்த காலத்தில் சேல் அகற்றா
விட்டாலும் கூட ஆண்களை நம்ப முடியாது என்கிறார் நண்பர் )
 

மேலே
 

8. ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்.

அறிந்த விளக்கம் :
ஒரு வைத்திய சாலையில் யாரோ ஒரு வைத்தியர் அதிகமாய் காசு வாங்கிய கடுப்பில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் சொல்லி வைத்துப் பின் நிரந்தரமாகிப் போன பழமொழி இது.. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் என்றால் முழு வைத்தியனாவதற்கு இரண்டாயிரம் பேரை அல்லவா கொல்ல வேண்டும். அவர் என்ன வைத்தியரா அல்லது எமனுக்கு மனித உயிர்களை எக்ஸ்போர்ட் செய்யும் பைத்தியமா ? ஆக இதல்ல உண்மையான பழமொழி

அறியாத விளக்கம் :
ஆயிரம் வேரை கண்டவன் அரை வைத்தியன் என்பது இதன் உண்மையான வடிவம்.சோற்று கற்றாழை,கரிசலாங்கண்ணி,
பொன்னாங்கண்ணி,கீழா நெல்லி போன்ற எண்ணற்ற தாவர வேர்களின் நோய் தீர்க்கும் பயனை கண்டறிந்து கொள்பவன்
ஒரு முழுமையான மருத்துவருடைய அறிவில் பாதியை அடைகிறான் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி நாளடைவில் திரிந்து வேரை - பேர்களாகி கண்டவன் - கொன்றவன் என்றாகி விட்டது.
 

மேலே
 


9. ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது.

அறிந்த விளக்கம் :
மேற்சொன்ன பழமொழி வெவ்வேறு வாழிடங்களில் வெவ்வேறு சமூகங்களில் வெவ்வேறு விதமாக சொல்லப்பட்டாலும்
எல்லோரும் கொள்ளும் பொருள் ஒன்றே ஒன்று. அது ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு
அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி. (டவாலி என்பார்கள் ). நீதி மன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம், நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர்.எனவே அவர் வீட்டுக்கு வந்தாலும் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது. ( நன்றாக பாருங்கள் ஆமினா என்று வந்துவிட்டால் அந்த பெயர்உள்ள வீட்டில் உடம்பு ரணகளம் ஆக வாய்ப்பிருக்கிறது )

அறியாத விளக்கம் :
மேற்சொன்ன பழமொழியின் முதல் பாதியில் உள்ள ஆமை என்பது நாம் நினைப்பது போல் நாட்டு ஆமையோ ( நாட்டாமை
இல்லீங்க ) அல்லது கடல் ஆமையோ அல்ல. இது இங்கு மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது.
1. ) கல்லாமை
2. ) இயலாமை
3. ) முயலாமை .
அதாவது கல்வி இல்லாத , சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு
முன்னேறாது என்பதை அப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு
எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்ட விஷயமாகவே தமிழாய்வாளர்கள் கருதுகிறார்கள். அமீனாவின் பணி என்னவோ அதைதான் அவன் செய்ய முடியும். அவன் வரும் இல்லம் ஏதும் விளங்காது எனில் அவன் அவன் சொந்த வீட்டுக்கு போவதெப்படி அல்லது உறவுக்காரர்கள் வீடுகளுக்கு செல்வதெப்படி...?
 

மேலே
 


10. போக்கத்தவனுக்கு போலீஸ்காரன் வேலை. வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை.

அறிந்த விளக்கம் :
நிறைய பேர் இதை அறிந்திருக்க கூடும். உண்மையான விளக்கமும் தெரிந்திருக்கலாம்.சாதாரணமாய் படிக்கையில் போக்கிடம்
இல்லாதவன் அல்லது வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல் துறை அதிகாரிக்கும், எந்தவித பின்புலமும் ,செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள்/செய்பவர்கள் என்று அர்த்தம் கொள்ளும்படி ஆகி விட்டது.

அறியாத விளக்கம் :
வார்த்தைகளை சற்று பிரித்து பொருள் கொண்டோமேயானால் இந்த உட்பொருளை சொல்ல வந்த விளக்கத்தை எளிதாக விளங்க
கொள்ளலாம். போக்கத்தவன் =போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றுக் கொண்ட மனிதன் போலீஸ் வேலைக்கு
தகுதியானவன். வாக்கத்தவன் = வாக்கு +கற்றவன்.. வாக்கு என்பது சத்தியம்,அறிவு என்றெல்லாம் பொருள் கொள்ளப்படுகிறது,
மொத்தத்தில் படித்தவன், அறிவு பெற்றவன். இந்த தகுதிகளை கொண்டவன் கற்பித்தல் பணிக்கு தகுதியானவன். இதைக் கொண்டே சொல்லப்பட்ட மொழி மறுகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.
 

மேலே
 


11. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினாற் போல்.

அறிந்த விளக்கம் :
மண் குதிரை மீதேறி ஆற்றில் இறங்கினால் என்ன ஆகும். குதிரை கரைந்து போய் ஆற்றோடு போக வேண்டியதுதான். அதாவது
தகுதியற்ற நபர்க்கு தரப்படும் பெறும் பொறுப்பு சீரழிவில் கொண்டு விடும் என்பதற்காக சொல்லப்பட்ட உவமையாக மேற்கண்ட
பழமொழி உலக வழக்கில் இருந்து வருகிறது. சொல்ல வந்த கருத்து என்னவோ சரிதான்..ஆனால் அந்த பழமொழி
படிக்கத் தரும் அர்த்தம் அதுவல்ல.

அறியாத விளக்கம்:
மண் குதிரை என்பது மண்ணால் ஆன விலங்கை குறிக்க வில்லை. ஆற்றில் நீரில்லாது வறண்டு போன சமயங்களில் ஆங்காங்கே மணல் மேடுகளை காணலாம். நீர் இழுவையிலோ அல்லது ஓரிடத்தில் மண் அரித்தோ மற்றொரு இடம் மேடாகவே அந்த ஆற்றுப் பரப்பு ஒரு ஒழுங்கின்மை வடிவமாக இருக்கும். அந்த மேடான மணற்பரப்பை குதிர் என்பார்கள் ( குதிர் = குன்று ). நீரில்லாதபோது அந்த மேடான மண் குதிர்களை பார்த்து விட்டு பின் ஆறு நிறைய நீர் போகும்போது இந்த இந்த இடத்தில் ஏற்கனவே மேடு இருக்கிறது எனவே ஆழம் குறைவாக இருக்கும் என்று இறங்கினால் ஆபத்தை சந்திக்க நேரிடும்.ஏனெனில் நீர் போக்கின் போது மேடான பரப்புகள் கரைக்கப்பட்டு அடித்து செல்லப்பட்டிருக்கலாம். எனவே முன் பார்த்ததை நினைத்துக்  கொண்டு இறங்கினால் ஆபத்தில் கொண்டு விடும் என்பதற்காக சொல்லப்பட்டது குதிர் குதிரையாகி பழமொழியின் தோற்றமே மாறி  போய்விட்டது.
 

மேலே
 


12. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

அறிந்த விளக்கம் :
மேற்சொன்ன பழமொழி கொஞ்சம் வஞ்(சி)சப் புகழ்ச்சியாக பெண்கள் மீது இடப்பட்ட கருத்தாக உலக வழக்கில் எடுத்துக் கொள்ளப்
படுகிறது. புராணங்களில் படிக்கும் போது அசுரனுக்கு வரம் தந்து வாழ்வளிக்கும் பெண் தெய்வங்கள் பின் அந்த அசுரனையே அழிக்க நேரிட்டதால் இப்பழமொழி வந்திருக்க கூடும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர்.

அறியாத விளக்கம் :
இப்பழமொழியில் இரண்டு விஷயங்கள் நளினமாய் மறைக்கப்பட்டுள்ளன. நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை
அழிவதும் பெண்ணாலே என்று வந்திருக்க வேண்டும். அவசர உலகில் பேசுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த பழமொழியில்
நல்லவை, தீயவை என்ற இரண்டு வார்த்தைகளும் மற(றை)க்கப்பட்டு ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்று
வந்துவிட்டது. ( உள்ளம் கொள்ளை கொள்ளும் வெள்ளை தாஜ்மஹால் வந்ததும் பெண்ணாலே,இந்தியா தங்கப் பதக்கம்
ஜெயிச்சதெல்லாம் பெண்ணாலே என்ற ரீதியில் கவிப்பேரரசு ஆவதும் பெண்ணாலே அணிக்கு வலு சேர்க்க ஒரு திரைப்பாடலே
எழுதியிருக்கிறார் திருமதி ஒரு வெகுமதி என்ற திரைப்படத்துக்காக.. )

* மேற்சொன்ன பழமொழி விளக்கத்துக்காக சௌதி வாழ் தமிழ் சகோதரிகள் ஏதோ விருது கொடுக்க என்னை தேடுவதாக கனவு
கண்டேன். ' வேறெது 'வும் கொடுப்பதாக இருந்தால் ஐயா விடு ஜூட்,எஸ்கேப் *
 

மேலே
 


13. ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் நடத்து.

அறிந்த விளக்கம் :
ஒரு திருமணம் நல்லபடியாக நடந்து முடிய எத்தனை பொய் வேண்டுமானாலும் சொல்லலாம். தப்பேயில்லை என்பது போல் சில  பொய்களால் ஒரு கல்யாணம் நடந்தால் நல்லது என நியாயப்படுத்தும் வழக்க சொல்லில் இந்த பழமொழி அனேகம் பேரால்
சொல்லப்படுகிறது. ஒரு சில பொய்கள் கல்யாணத்திற்கு பின் தெரிய வந்ததுமே விவாகரத்து வரை போன சம்பவங்கள் ஏராளம்
இருக்கின்றது . எனவே இந்த பழமொழியின் உண்மையான வடிவம் இது இல்லை .

அறியாத விளக்கம் :
கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். அதாவது ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் என்பதை உணர்த்துவதாக  அப்படி சொல்லப்படுகிறது. எனவே இந்த திருமணம் என்ற நிகழ்விற்கு சரியான புரிந்துணர்வு மாப்பிள்ளை வீடு - பெண் வீடு என்ற இரு தரப்பினருக்கும் அவசியம் . எனவே திருமணம் சரியாய் நடை பெறுவதற்கான ஒவ்வொரு செயலிலும் சரியான தெளிவு இருக்க வேண்டும் என்பதற்காக ஆயிரம் முறை போயாவது சொல்லி-விளக்கி ஒரு திருமணத்தை நல்ல முறையில் செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி இது. காலவாக்கில் போய் சொல்லி என்பது பொய் சொல்லி என்றாகி விட்டது.  இதுவரை மனஸ்தாபங்களால் இருந்து வந்து கொண்டிருக்கும் உறவுகளிடம் எல்லாம் பல முறை போய் சொல்லி அவர்களையும்  திருமணத்தில் சேர்த்துக் கொள்வதற்காக சொல்லப்பட்ட ஒரு வழக்குமொழி என்றும் சில கருத்துகள் நிலவுகிறது.
 

மேலே
 


14. அறப்படிச்ச மூஞ்சூறு கழுநீர் பானைக்குள் விழுந்தது .

அறிந்த விளக்கம்
: மேற்கண்ட பழமொழி ஊருக்கு ஊர் இனத்துக்கு இனம் வெவ்வேறு வார்த்தைகளால் பிணைத்து பயன்படுத்தப் படுகிறது. எங்கள் ஊர்  வழக்கில் ' அதிகம் படிச்ச நாய் வேட்டைக்கு உதவாது' என்பார்கள்( அடியேன் செய்யும் சில 'அதிகப்பிரசங்க செயல்களுக்கு ' என் அம்மா அடிக்கடி பயன்படுத்தும் பழமொழி இது ) . இன்னும் சில இடங்களில் 'எல்லாம் தெரிஞ்சவர்தான் கழனிப்பானைக்குள்ளே கைய  விட்டாராம் ' என்பார்கள். ஆக இதெல்லாம் குறிப்பது ஒன்றே ஒன்றுதான் ஆர்வகோளாறில் தெரியாத ஒன்றை செய்யப் போக அது வேறுவிதமான முடிவைத் தரும் என்பதே..மேலும் இந்த விளக்கத்தை சொல்ல வரும் சரியான பழமொழி "சிறு பிள்ளை விதைத்த வெள்ளாமை வீடு வந்து சேராது ' என்பதே..

அறியாத விளக்கம் :
ஆனால் மேற்கண்ட பழமொழி இந்த விளக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.
அதாவது "அறவடிச்ச முன்சோறு கழுநீர் பானைக்குள் விழுந்தது" என்பதுதான் சரியான பழமொழி.வட்டார வழக்கில் மருவி அது
மேற்கண்டவாறு திரிந்தது. அதன் பொருள் ஊரில் சோற்றுப் பானையில் கஞ்சி வடிக்கையில் ஒரு சில பருக்கைககள் கஞ்சிக்குள்
விழவே செய்யும் . ஒரு பானை சோற்றுக்காக ஒரு சில சோறு கஞ்சிக்குள் விழுகின்றன. இதனை குறிக்கும் பழமொழி அறவடிச்ச
என்பது அறப்படிச்ச என்றாகி முன் சோறு- மூஞ்சூறு ஆகிவிட்டது .
 

மேலே
 


15. அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்.

அறிந்த விளக்கம் :
வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அவ்விதமே இன்று வரை
விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. கற்று கொடுக்கும் வாத்தியார் கூட சில தருணங்களில் அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான் என்று பிரம்பெடுத்து பின்னி விடும் சம்பவங்களும் உண்டு ( அனுபவம் பேசுதோ.. ? ) .ஆனால் புரிந்து கொண்டால் எவ்வளவு அழகான பழமொழி இது..?

அறியாத விளக்கம் :
மேலே உள்ள பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போது எல்லாம் அவனே என
இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை.அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது.( பங்காளி சண்டையில் பாதிக்கப்பட்டவனோ அல்லது
பாகப்பிரிவினையில் அநீதம் இழைக்கப்பட்டவனோ 'அண்ணன் என்னடா தம்பி என்னடா என பாடுவதெல்லாம் இங்கு பொருந்தாது )
 

மேலே
 


16. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

அறிந்த விளக்கம்
: அமெரிக்காவுக்கு ஒரு வாழ்வு வந்தால் அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கும் ஒரு வாழ்வு வரும் . இப்படி ஏராளமான  விளக்கங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஒரு எதுகை மோனை சந்தத்துக்காக யானை பூனை என்ற விலங்குகளை  எடுத்துக் கொண்டதாக நாம் நேரடியாக அறிய முடிகிறது . இரண்டாவதாக யானை உருவத்தில் பெரியது. பூனை உருவத்தில் சிறியது.  அந்த வலிமையான விலங்கு ஒரு நேரத்தில் அதிகாரத்தில் இருந்தால் உருவத்தில் சிறியதான பூனையும் ஒரு கட்டத்தில் பலம் பெற்றதாய் இருக்கும் என்று பொருள் அறிவோம்.

அறியாத விளக்கம்
: உண்மையில் அந்த காலத்தில் இந்த பழமொழியை இவ்வாறு உபயோகித்தார்கள் . ஆனை = ஆ+ நெய் = பசுவின் நெய்
பூனை = பூ +நெய் = பூவின் நெய் ( தேன் ) அதாவது சிறு வயதில் பசுவின் நெய் சாப்பிடுவது நல்லது . அதே நெய் வயதான
காலத்தில் சாப்பிட உடல் ஒத்துக் கொள்ளாது உடம்புக்கு கெடுதலாகும் . தேன் வயதான நிலையில் சில மருந்துகளுடன் கலந்து
சாப்பிட உடம்புக்கு ஏற்றது . இதை நம் முன்னோர்கள் சொல்லி வைத்த விதம் மாற்றி நாம் காலத்திற்கு ஏற்றார்போல் சொல்லி
பயனடைகிறோம்.
 

மேலே
 


17. அரப்படிச்சவன் அங்காடி போனா விற்கவும் மாட்டான்,வாங்கவும் மாட்டான் .

அறிந்த விளக்கம்
அரை குறையாய் கல்வி கற்றவனால் சந்தையில் எந்த பொருளையும் வணிகம் செய்திட இயலாது. அவனால் எந்த பொருளையும்
திறமையாக வாங்கி வரவும் முடியாது. விற்று வரவும் முடியாது. நாம் இந்த பழமொழிக்கு நேரிடையாக உணரும் பொருள் இதுதான்..

அறியாத விளக்கம்
அரப்படிச்சவன் என்பது வழக்கு மொழியில் மாறிப்போன வார்த்தையாகி விட்டது. அந்தப் பழமொழியின் சரியான வாக்கியம் அறம் படித்தவன் என்றிருக்க வேண்டும். அதாவது இலக்கிய நூல்கள் அல்லது வேதங்கள் சொல்லும் அறங்களை முழுமையாக கற்றவன் எல்லா வணிகமும் ஒழுங்காக செய்திட முடியாது .சில வியாபாரத்துக்கு சில நெளிவு சுளிவுகள் அறத்தைப் பொறுத்தவரை தவறாகப் படும். அதிகம் படித்த மேதாவி படித்து முடித்த பின் வணிகம் செய்ய நினைத்தான் . அவன் சென்ற இடமோ தூத்துக்குடி. அங்கே மீன் வணிகம் செய்தால் பிழைக்கலாம் . மீனைப் பிடிப்பதும் வெட்டுவதும் பாவம் என நினைத்தான். மீன் வியாபாரம் செய்யவில்லை . முத்து விற்க நினைத்தான். சிப்பிகளை கொன்றல்லவா முத்து எடுக்க வேண்டும். முத்து வியாபாரம் செய்யவில்லை . உப்பு விற்கலாம் என்று நினைத்தான். உப்பளம் சென்று பார்க்கையில் ஆண்களும் பெண்களும் வெயிலில் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்ததும் 'யாரையும் வருத்திப் பொருள் சேர்த்தல் பாவம் ' என்று ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது .இப்படியாக எண்ணும் மெத்தப் படித்த மேதாவிகளுக்கு சொல்லப்பட்ட பழமொழியே இது.
 

மேலே
 


18. பந்திக்கு முந்து . படைக்கு பிந்து ( அ) பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ

அறிந்த விளக்கம்
விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும், போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என
நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது . பந்திக்கு பிந்தினால்
எஞ்சியதுதான் கிடைக்கும் என விவரமாய் ஒருவர் சொல்லிவிட்டுப் போக ( உண்மைதானுங்களே ... ) இந்த பழமொழி இப்படியே
பொருள் கொள்ளப்பட்டு விட்டது.

அறியாத விளக்கம்
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் ' பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் ' அல்லது ' பந்திக்கு முந்திக்கை படைக்கு பிந்திக்கை ' என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோ ,வாளோ,வில்லோ,ஈட்டியோ கை பிந்தும் . எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள்.  அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட  வாக்கியமே இந்த பழமொழி . வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும்.அதே கை உணவருந்தையில் முன்னே போகும் . இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப் பட்டது.
 

மேலே
 


19. அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

அறிந்ததும் அறியாததும்
கொஞ்சம் எசகு பிசகான பழமொழியாக இருப்பதால் ஒருவருக்கு இருவரிடம் நன்றாகவே விசாரித்து விட்டு இதை எழுதுகிறேன் .
அந்த கால சில அரசர்கள் எந்த பெண்ணை விரும்பினாலும் அந்த பெண் அரசனுக்கு உடைமையாகி விடுவாள் . முக்கியமாக
அந்தப்புரத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசன் தான் புருஷன். அரசனுக்கு பின் தான் புருஷன் . எனவே அரசனின் கடைக் கண் பார்வை பட்டால் புருஷனிடம் வாழ்வதை விட வசதியாக இருக்கலாம் . ஆனால் எப்போதும் கிட்டத்தரசியாக இருக்க முடியுமே தவிர பட்டத்தரசியாக முடியாது அதுவும் கொஞ்ச காலத்திற்கு மட்டுமே . ( சில அரசர்கள், சில பெண்கள் என்றே படிக்கவும். இன்னாத்துக்குங்க வம்பு.. ? ) சொல்ல வரும் நேரடி உட்பொருளாக தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை தவிர்த்து எதிர்பார்த்திருக்கும் வாய்ப்புகளும் கை நழுவிப் போக மொத்தமாக எல்லாவற்றையும் இழந்து நிற்க கூடிய சூழலுக்கு சொல்லப்பட்டதாகவும் அறியப்படுகிறது .

அறியாத விளக்கம்

இங்கு அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும். அரச மரத்தின் காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு
அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்து உபதேசித்துள்ளனர். தவிர குழந்தைப் பேறுக்கும் நல்லது என்றும் சொல்லப்படுவதுண்டு. அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிப்பதற்கு மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம் .இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.
 

மேலே
 


20. சோழியன் குடுமி சும்மா ஆடாது.

அறிந்த விளக்கம்
தனக்கு லாபம் இல்லாமல் எந்த செயலிலும் இறங்காத மனிதர்களின் தன்மையை குறிக்கும் படி நேரடி பொருளை கொண்ட
பழமொழியாக இது கருதப்படுகிறது . ஆனால் உண்மையான பழமொழியின் வடிவம், பொருள் இது அல்ல.

அறியாத விளக்கம்
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்பதுதான் இந்த பழமொழியின் சரியான வடிவம். சோழ நாட்டை சார்ந்த ஆண்கள்
முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள்.பாரம் தூக்கும்போது பெண்கள் தம் சீலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள் .இதற்கு சும்மாடு என்று பெயர்.( பிரம்பு, கோரைகளை கொண்ட சேலை சுற்றிய பொருளும் சும்மாடு என்பதில் அடங்கும் ) . ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழ நாட்டவர் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது.ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
 

மேலே
 


21. உண்டி சுருங்குதல் பெண்டீர்க்கு அழகு.

அறிந்த விளக்கம்
மிக அழகாக பெண்கள் பக்கம் திருப்பி விடப்பட்ட பழமொழிகளில் இதுவும் ஒன்று. உணவு நிறைய சாப்பிட்டால் பெண்கள் உடல்
பெருத்து அழகற்றவர்களாகி விடுவார்கள்என்று பயந்தோ என்னவோ பழமொழியையே மாற்றி விட்டார்கள். சொல்லப் போனால்
இந்தப்பழமொழியின் உண்மையான வடிவமும் சொல்லப்படும் நீதியும் ஆண்களுக்குத் தான் என அறியும்போது இதில் உள்ள
அறிவியல் தத்துவமும் ஆச்சரியத்தை தருகிறது.

அறியாத விளக்கம்
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் "உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு " என வந்திருக்க வேண்டும்.பண்டி என்பது பெண்டீர் என மறுகி பெண்களுக்கு நல்லது என அறிவுறுத்தலாய் வந்து விட்டது .உடல் பெருத்தலின் ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க  நோய்' ஆங்கிலத்தில் ஹெரணியா என்பார்கள். இது தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வரும் என ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன . இதை தடுக்கத்தான் நம் முன்னோர்கள் இடுப்பில் அரைஞாண் கயிறு கட்ட அறிவுறுத்தினார்கள். ஆக உண்டி சுருக்க பொதுவாய் சொல்லித் தரப்பட்ட பழமொழி பெண்களுக்கு மட்டும் என்றாகி விட்டது .
 

மேலே
 


22 . பகையாளி குடியை உறவாடி கெடு.

அறிந்த விளக்கம்
பழமொழிகள் எவ்வாறு வசதிக்கேற்ப வளைத்து தப்பான பொருளை தந்து பயன்படுத்தப் பட்டு கொண்டிருக்கின்றன என்பதை
உணர்த்தும் மற்றொரு உதாரணம் இது . இதை நேரடியாக பொருள் கொண்டால் நமது எதிரி குடும்பத்தை பழகிக் கொண்டே
அவர்களை நயவஞ்சகமாய் அழித்து விட வேண்டும் என்று அவ்விதமே உலக வழக்காடலிலும் இருந்து வருகிறது .ஆனால்
உண்மையான வடிவம் இது அல்ல.

அறியாத விளக்கம்
இந்த பழமொழியின் சரியான வடிவம் "பகையாளி பகையை உறவாடி கெடு " என்றிருக்க வேண்டும். அதாவது நம்மை பகைமை
பாராட்டுபவனிடம் அன்பாய் நடந்து கொண்டு நல்ல முறையில் அணுகி ,பழகி அவன் கொண்டுள்ள பகைமை உணர்ச்சியை மாற்றி / நீக்கி அந்த உறவை நட்புறவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது திரிந்து பகை குடியாகி பழமொழியின் வடிவம் இப்படி மாறி போய் விட்டது.
 

மேலே
 


23. உப்பு தின்னவன் தண்ணி குடிக்கணும் .

அறிந்த விளக்கம்
நம்முடைய பேச்சு வழக்கில் அதிகமாய் பயன்படுத்தப் படும் பழமொழிகளில் ஒன்று இது . ஒது எதுகை மோனை நடை என்பதற்க்காக தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்கணும் என்பதையும் சேர்த்துக் கொள்வார்கள். ஆனால் தற்காலத்திற்கு பொருந்தக் கூடிய அறிவியல் உண்மை ஒன்றை அற்புதமாய் எடுத்துரைக்கும் பழமொழி இது .

அறியாத விளக்கம்
ஒரு மனிதனின் இரத்தத்தில் மொத்தம் இருநூறு கிராம்தான் சோடியம் உப்பின் அளவு இருக்க வேண்டும் .அதற்கு மேல் இரத்தத்தில் சேரும் உப்பு வியர்வை,சிறுநீர் மற்றும் மலம் வழியே வெளியேறி விடுகிறது.ஒரு லிட்டர் சிறுநீரில் இரண்டு கிராம் உப்பை வெளியேற்றுகிறது நம்சிறு நீரகம். இப்போது சொல்லுங்கள் நாம் நம் உடலில் சேரும் தேவையில்லாத உப்புகளை வெளியேற்ற  எவ்வளவு நீர் அருந்த வேண்டும். இதை தான் பெரியவர்கள் உப்பைத் தின்னவன் தண்ணிகுடிக்கணும் என்று சொல்லி வைத்தார்கள் (நன்றி:-மருத்துவ குறிப்பு ஆதாரம் : குமுதம் ஹெல்த் இதழ் )
 

மேலே
 


24. குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படணும்

அறிந்த விளக்கம்
ஒரேயொரு வார்த்தை மாறினால் எப்படி தம் வசதிப்படி பழமொழிக்கு விளக்கம் அமைத்துக் கொள்ளலாம் என்பதற்கு மேற்கண்ட  பழமொழியும் ஒரு சான்று .சிறுமை அடைய நேரிட்டாலும் கூட அதிலும் எதாவது சமாதானத்தை தேடிக் கொள்ளும் மனபாவம் உள்ளவர்களுக்காய் சொல்லப் பட்ட பழமொழியாக இது அறியப்படுகிறது .

அறியாத விளக்கம்
நியாயமாய் இந்த பழமொழியின் வடிவம் குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்பட வேண்டும் என்று வர வேண்டும்.அதாவது தன்னை குட்டுகிறவன் தன் சக்திக்கு நிகராக மோதுகிற தகுதி உள்ளவனாக இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையான விளக்கம் . மோதுகிற என்ற சொல்ல காலச்சக்கரத்தில் மோதி மோதி மோதிர என்றாகி விட்டது போலும்.
 

மேலே
 


25. ஏறச் சொன்னால் எருது கோபம், இறங்கச் சொன்னால் நொண்டி கோபம்.

அறிந்த விளக்கம்
மேற் சொன்ன பழமொழியை நேரடியாக பொருள் கொண்டோமானால் கால் ஊனமான ஒருவன் ஏர் பூட்டி உழவுத்தொழிலை
மேற்கொள்ளும்போது அவனையும் மாடையும் இணைப்பது ஏர். கால் ஊனமானவனால் ஏரைத் தள்ளிக் கொண்டே நடக்கமுடியாது . அவனை ஏரில் ஏற்றினால் மாடு எடை தாளாமல் தள்ளும். அவனை இறங்கச் சொன்னால் அவன் கோவித்துக் கொள்வான் . இருவருக்கும் இடையில் மாட்டிக்கொண்டு அல்லல் படுவது ஏர்தான் என்பது நமக்கு விளங்கும். ஆக ஏறச் சொன்னால் எருதுக்கு கோபம் . இறங்க சொன்னால் நொண்டிக்கு கோபம் என பழமொழியின் அர்த்தம் விளங்குகிறது

அறியாத விளக்கம்
மேலே சொன்ன பழமொழிக்கும் பலவிதமான அர்த்தங்கள் கொடுக்கலாம். ஆனால் அதிகம் பேரால் ஒத்துக் கொள்ளப்பட்ட
விளக்கமாய் அறிந்ததை தருகிறேன் . ஒரு செயலை செய்யும் போது அது ஒரு சாரருக்கு சந்தோசத்தை கொடுக்கும்
மற்றவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும். இது இயற்கை. உதாரணத்திற்கு மழை பெய்தால் விவசாயிகளுக்கு கொண்டாட்டம், அதே நேரத்தில் உப்பு விற்பவர்கள் , தீப்பெட்டி போன்ற தொழில் செய்பவர்களுக்கு திண்டாட்டம். எருதுவின் மேலே ஏறுவது தான் இங்கே செயல் , ஏறினால் எருதுவுக்கு வலிக்கும், ஏறவில்லை என்றால் நொண்டிக்கு கஷ்டம் என்று நேரிடையாக அர்த்தம் வருகிறது. ஆக மொத்தம் இந்த பழமொழியின் மூலம், நாம் செய்யும் சில காரியங்கள் சிலருக்கு நன்மையும், சிலருக்கு தீமையும் பயக்கும் , ஆக அது  மாதிரியான காரியங்களை தவிர்ப்பது நலம். ( நன்றி : நண்பர் பரஞ்சோதி )
 

மேலே
 


26. பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

அறிந்த விளக்கம்
மிகப் பிரபலமான இந்த பழமொழிக்கு அறிந்த விளக்கம் சொல்வது என்பது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேடுவது போல ( பாருங்கள் எடுத்துக்காட்டுக்கு கூட பழமொழியைத் தான்உபயோகிக்க வேண்டியிருக்கிறது ). பாம்பைக் கண்டால் தனியாக இருக்கும் போது வேண்டுமானால் நடுங்கிப் போவோம். படையோடு இருந்தால் பாம்புக்கு நாம் நடுங்க மாட்டோம். பாம்பை நடுங்கவைப்போம் .  முடிந்தால் மோட்சம் கொடுத்து விடுவோம்.. ஆனால் இந்த பழமொழி வந்ததுக்கு மிக முக்கியமானதொரு விளக்கத்தை நிறைய பேர் மூலம் கேள்விப்பட்டேன்

.
அறியாத விளக்கம்
புராண கால போர்களில் வாள்,அம்பு, வேல் இந்த ஆயுதங்கள் எல்லாம் பயன் படுத்தப்பட்டதற்கு பிறகு போரின் கடைசிகட்டமாக
அல்லது உச்சகட்டமாக பெரிய அழிவைத் தரும் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்குவார்கள். அதில் ஒன்று நாகாஸ்திரம் என்பது.  நாகத்தைப் போல் வடிவமைகப்பட்டிருக்கும் இது ஏவப்பட்ட இடத்திலிருந்து தன் இலக்கை அடையும் போது பெரும் சேதத்தை விளைவித்து நிறைய பேரை அழித்து விடும் . இதை மிக முக்கியமானவர்கள் மட்டுமே பயன் படுத்துவார்கள் என்பதால் இதை எடுப்பதை பார்த்தவுடனே எதிராளியினர் பதறியடித்து பின் வாங்குவார்கள் .என்பதனால் பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என சொல்லிவைத்தார்கள் .
 

மேலே

27. ஊருக்கு இளைத்தவன் (எளியவன் ) பிள்ளையார் கோயில் ஆண்டி.

இப்போதும் தமிழகத்தில் எளிமை என்பது ஏழ்மை என்றே பொருள் கொள்ளப்படுகிறது
சகோதர சமுதாயத்தில் விநாயகர் என்பவர் மிகவும் எளிமையானவர். மற்றவை எல்லாம் பெரிய பெரிய கோபுரங்களும் பெரிய மூல விக்ரகங்களையும் கொண்டு மிகவும் பணக்கார கோயிலாக விளங்கும் . ஆனால் பிள்ளையார் கோயில்களைப் பாருங்கள். சிறிய சன்னிதான் மட்டுமே கொண்ட கோயிலாக விளங்கும். அல்லது ஏற்கெனவே உள்ள மற்ற கோயில்களில் ஒரு அறை பிள்ளையாருக்காக ஒதுக்கப் பட்டிருக்கும். பிள்ளையாருக்கென தனியாக எல்லாம் கொண்ட பெரிய கோவில்கள் இல்லை ! அப்படிப்பட்ட எளிமையே உருவான பிள்ளையாரின் கோவில் ஆண்டி எப்படி இருப்பார்? கண்டிப்பாக பிள்ளையார் போன்றே மிகவும் எளிமையாக இருக்க வேண்டும் . அதாவது மற்ற கோவில் ஆண்டிகளை விடவும்! சரி .. ஆண்டி எப்படி இருப்பார் ? மக்களைவிடவும் மிக எளிமையாக இருந்தாக வேண்டும்! சரிதானே . ஆக பிள்ளையார் கோவிலின் ஆண்டி என்பவர் மிகவும் எளிமை மற்ற எல்லோரை விடவும்! இங்கு எளிமை என்பது இளைத்தவன் என்றூ கொள்ளப்பட்டது வட்டார வழக்கில் ! மற்றபடி உடலுக்கும் ஆண்டிக்கும் சம்பந்தமில்லை. அதே போல ஊருக்கு இளிச்சவாயன் புள்ளையார் கோயில் ஆண்டி என்றும் சிலர் சொல்வதுண்டு. இந்த இளிச்சவாயன் என்பதும் ஆண்டியின் எளிமையைக் குறிக்கிறது! ஆக மற்ற எல்லாரைவிடவும் எளிமையாக இருப்பதை இளைத்தவன் என்றும் இளிச்சவாயன் என்றும் நம் மக்கள் பேச்சுத்தமிழால் மாற்றிவிட்டார்கள் !
 

மேலே
 


28. கழுதை கெட்டால் குட்டிச் சுவர்.

கழுதையின் தோல் கெட்டால் என்று அர்த்தம். அதாவது கழுதையில் தடித்த உடம்புத்தோலில் அரிப்பு அல்லது புண் போன்று ஏதும் வந்தால் சாதாரணமாக இருக்கும் சுவர்களை விட பாதி சிதிலமடைந்த சுவர்களை நாடிச் சென்று தன் உடம்பை அதன்மேல் தேய்த்துக் கொள்ளும். காரணம் நல்ல சுவர்கள் சொரசொரப்பு அதிகம் இருக்காது. எனவே அது குட்டிச் சுவர் என்று சொல்லக் கூடிய சிதிலமடைந்த சுவர்களையே நாடும் . இங்கு கெட்டால் என்பது அதன் தோல் கெட்டால் என்று அர்த்தம். ஒத்த வயது இளைஞர் /இளைஞிகள் வழக்கமாய் எங்காவது சந்திப்பது அரட்டையடிப்பது என்று இருப்பவர்களை வீட்டார்கள் இவ்விதம் குறிப்பிடுவது வழக்கமாகப் போய்விட்டது. ( பின்னால் வாழ்க்கை என்னும் பொதியை சுமக்க போகிறவர்கள்தானே என்று இளைஞர்/இளைஞிகளை கழுதையாக்கி பெரியோர்கள் உவமானப்படுத்துக்கிறார்களோ என்னவோ ... )
 

மேலே
 


29.. ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

அறிந்த விளக்கம்
வாய்ச் சொல்லில் வீரனடி, அறுக்கத் தெரியாதவன் கக்கத்தில் ஏழெட்டுக் கருக்கருவாள் போன்ற பதங்களுக்கு என்ன பொருளோ
அதே பொருள் தருவதுபோல் தான் இந்தப் பழமொழியும் தோற்றமளிக்கிறது . அதாவது பேச்சு பெருசா இருக்கும்,செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப் பட்டு வருகிறது . ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.

அறியாத விளக்கம்
ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள்.. அது நாம்தான்.. என்ன குழப்பமாக
இருக்கிறதா..? ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது .. கவிஞர் கண்ணதாசன் இறைவனைப் பற்றி எழுதிய அவன் தான் இறைவன் கவிதையில் ஓரிடத்தில் இவ்வாறு குறிப்பிடுவார். ஒன்பது ஓட்டைக்குள் ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்று விட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன் தான் இறைவன் விளக்கம் புரிகிறது தானே நண்பர்களே..?
எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த
ஓட்டைவழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக்
கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்
 

மேலே
 


...
30. புல் தடுக்கிப் பயில்வான் போல...

அறிந்த விளக்கம்
புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு
பழமொழிகளில் கலந்து விடுகிறது.. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது .. வேண்டுமானால் சில வகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி என வேண்டுமானால் பொருள் கொள்ளலாம்.. சில பழமொழிகள் வார்த்தை தவறலாய் , மரூஉ மாறியதாய் பிரித்துப் பொருள் கொள்வதாய் நாம் அறிந்து வந்ததைப் போல சில பழமொழிகள் உபயோகிக்கப் பட்டதற்கு பின்னால் சில சம்பவங்கள் சொல்லப்படுகின்றன .. அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. இது பழமொழி என்பதை விட உவமை/உவமானப் பதங்களாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.


அறியாத விளக்கம் :
புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான் .. ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர், உடனே அதை வேரோடு பிடுங்கி, எரித்து சாம்பலாக்கி – கரைத்துக் குடித்தாராம்…. எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. ( டாஸ் மார்க் புல் தடுக்கி விழுவது வேறு ரகம்.. அது புல் இல்லை ஃபுல் ) தவிர தென்னிந்திய லாரல் - ஹார்டி என ஒரு நேரத்தில் புகழப் பெற்ற செந்தில் - கவுண்டமணி வகையறா சின்ன கவுண்டர் திரைப்படத்தில் அடிக்கும் புல் தடுக்கி மனுஷன் ஏன் விழறான என்ற செந்தில் ஆராய்ச்சியில் புல், ஆஃப், குவார்ட்டர் என்று செந்தில் கொடுக்கும் விளக்கமும் பின் அவரை கவுண்டர் செம்மையாய் மொத்துவதும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் ...
மேலே
 


31. குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா..?

தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தில் குறைவதில்லை என்ற பாடலைக் கேட்டிருப்பீர்கள். அதாவது எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்த விஷயங்களாகவே இருக்கும் , இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ தரமோ குறைந்து போய்விடாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம் இது. ஆனால் குண்டுமணி என்று பழமொழி உச்சரிக்கப்படுவதில் தான் கொஞ்சம் குழப்பம் நிலவுகிறது இங்கு. சரியாக சொல்லப் போனால் இந்தப் பழமொழியின் வடிவம் குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா என்று வரவேண்டும். உச்சரிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக பழமொழியின் அந்த குறிப்பிட்ட வார்த்தை வடிவம் மாறி விட்டது.  குண்டுவோ குன்றியோ இங்கு பழமொழி தரும் விளக்கம் மாறிப் போக வில்லை என்பது குறிப்பிடத் தக்கது .
 

மேலே
 


32. எழுதியவன் ஏட்டை கெடுத்தான். படிச்சவன் பாட்டை கெடுத்தான்

ஏடு என்பது மிகவும் தூய்மையாக இருக்கும். அதில் எழுதியவுடன் எழுத்துகள் பதிந்து ஏடு கெட்டுப் போகும். அதுதான் எழுதியவன் ஏட்டைக் கெடுத்தது. இது வஞ்சப் புகழ்ச்சி. படித்தவன் பாட்டைக் கெடுத்தான். தமிழிசையில் ஏழு சுரங்கள். குரல், விழி , துத்தம் என்று ஏழுக்கும் ஏழு பெயர்கள். சரிகமபதநி என்று வரிசையாக சுரங்கள் ஏறும். ஆங்கிலத்திலும் do-re-me-fa-so-la-te என்று சுரங்கள் கீழிருந்து மேலாக ஏறும். ஆனால் பாடற்கலையைப் படித்தவன் சுரங்களை மாற்றிப் போட்டு ஏற்றங்களையும் இறக்கங்களை முன்னுக்குப் பின் மாற்றி புது மெட்டுகளைக் கண்டு பிடிப்பார்கள் அல்லவா. அதுதான் படித்தவன் பாட்டைக் கெடுத்த கதை. ( நன்றி : நண்பரின் மின் மடலிலிருந்து )
 

மேலே
 


33. ஆறு கெட நாணல் விடு. ஊரு கெட நூல விடு .

அறிந்த விளக்கம்
நேரடியாய் பழமொழியைப் பொருள் கொள்ளப் பார்த்தோமானால் ஆற்றை பாழாக்குவதற்கு நாணல் விட்டும் ஊரைக் கெட்டுப் போக செய்ய நூலை விடு என்பதாகவும் வரும். சில பழமொழிகள் இடம் மாற்றிப் பொருள் கொண்டோமானால்தான் அர்த்தம் விளங்கும்.  இது பற்றி இலக்கணப் பாடத்தில் இடம்மாற்றிப் பொருள்கோள் என்ற தலைப்பில் ஒரு பகுதியே தனியாக இருக்கிறது.

அறியாத விளக்கம் :
நூல் விட்ட ஊரும் நாணலற்ற ஆற்றுக்கரையும் பழுதாய் போகும் என்பதாய் அர்த்தம் கொள்ள வேண்டும். அதாவது
படிப்பறிவில்லாத அதில் ஆர்வம் காட்டாத ஊர் எந்த வித முன்னேற்றமும் அடையாது. நாணல் போன்ற தாவர வகைகள் அதிகம்
அடர்ந்திருக்கும் கரைப்பகுதி பலமுள்ளதாக இருக்கும்.சீக்கிரம் ஆற்றினால் அரிக்கப்பட்டு கரைகள் பாதிக்கப்படாது என்பதாய்
சொல்லப்பட்ட பழமொழி முன்னுக்கு பின் மாறி மருகி இவ்விதம் வந்து விட்டது.
 

மேலே
 


34 ஆலும் வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி

ஆல் என்பது ஆலமரம் . வேல் என்பது வேப்பமரம். ஆல மரத்தின் குச்சியும், வேப்ப மரத்தின் குச்சியும் கொண்டு பல்
துலக்கும்போது இவை பற்களுக்கு நல்ல வலுவைத் தரும். சிறந்த மருத்துவப் பண்புகளையும் கொண்டவை. ஆகையால் இவை
கொண்டு பல் விளக்க பல்வளம் சிறக்கும் . ( எவ்வளவு எளிமையான பொருளாதாரத்துவம் கொண்ட டூத்பேஸ்ட்கள்.. நான் பணிபுரியும் உயர்குடி சௌதிகளுக்கான பல் மருத்துவமனையில் பல்லுக்கு ஏதாவது வைத்தியம் பார்க்க வேண்டுமானால் எதாவது சொத்தை வித்து எடுத்துப் போனால்தான் உண்டு. அ ..வ்..ளோ துட்டு )
பல்லும் சொல்லும் தொடர்புடையவை என்பதால் இரண்டு பதங்களும் சேர்ந்து ஒரே பழமொழியாக வந்திருக்கிறது

( பல்லு போனால் சொல்லு போச்சு என்றொரு பழமொழி சொல்வார்கள் ).இப்போது இரண்டாவது அடியான நாலும் ரெண்டும்
சொல்லுக்குறுதி என்பதில் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. நாலு என்பது நல்லது கெட்டது நாலும் என்றும் இரண்டு என்பது உண்மையான விஷயங்களை பேசுதல் நன்மையான விஷயங்களை பேசுதல் என்பதைக் குறிக்கும் என்பது ஒரு கருத்து நாலு என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கின்றது

.அவற்றை ஒழுங்காகப் படித்து வர பல் உறுதியானது போல் சொல்லும் உறுதியாகும் . சொல்லின் வளமும் பெருகும் , அறிவும்
பெருகும் என்று மற்றொரு கருத்து நிலவுகிறது.இது தவிர நாலு என்பது எழுத்துக்கள் என்றும் இரண்டு என்பது எண்கள் என்றும்
இவையிரண்டையும் கற்பது நல்லது என்றும் மூன்றாவதாய் ஒரு கருத்து நிலவுகிறது . இதற்கு உதாரணமாய் " எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் ' என்பதை உதாரணம் காட்டுகிறார்கள் .
 

மேலே
 


35. பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

சில பிரச்னைகளிலேயே வாழ்ந்து அந்த பிரச்னைகளுடனே வாழப் பழகிப் போனவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இந்த
பழமொழியை உவமையாகக் குறிப்பிடுவார்கள் . பனை மரங்கள் அடர்ந்த பகுதியில் வசிக்கும் நரியானது அங்குள்ள
பனைமரங்களிலிருந்து காய்ந்து விழும் கீற்றுகளின் ஓசையை கேட்டு கேட்டு பழகிப் போயிருக்கும். எனவே இரவு பகல் எந்நேரத்திலும் மட்டை விழுந்து அதனூடே கேட்கும் அந்த பட பட ஓசையைக் கண்டு அங்குள்ள நரிகள் அச்சம் அடைவதில்லை.
ஊழலில் திளைத்து தவறு மேல் தவறு செய்து கொண்டிருக்கும் சில அரசியல் நரிகளும் இவ்விதமே அவற்றிற்கு இந்த வழக்கு,விசாரணை, நெஞ்சுவலி, கோர்ட் இதெல்லாம் பழகிப் போயிருக்கும். இத்தகைய்ய நரிகள் எந்தவிதமான
தாக்குதலுக்கும் அஞ்சப் போவதில்லை. திருந்தப் போவதும் இல்லை . இவர்களைப் போல் மனிதர்களை அடையாளம் காட்டி குறிப்பிட இந்த பனங்காட்டு நரி பழமொழி மிகவும் பயன்படுகிறது. இதே போல் பொருள் தரக்கூடிய பழமொழியை இலங்கையில் வேறுவிதமாக சொல்லி பொருள் கொள்கிறார்கள் . கோயில் பூனை சுருவத்துக்கு அஞ்சாது . ( சுருவம் = சிலை ).
 

மேலே
 


36. குந்தித் தின்றால் குன்றும் மாளும்..
(குந்தி = அமர்ந்து , உட்கார்ந்து )
(குன்று = சிறு மலை )
(மாளும் = அழியும் )
குந்தி இருந்து தின்றால் குன்றும் மாளும் என்பது பழமொழியின் உண்மையான வடிவம். உழைப்பில்லாத முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தை எந்த வித உழைப்புமில்லாதவர்கள் வெகு விரைவில் கரைத்து விடுவார்கள் என்ற அறிவுரைக்காக சொல்லப்பட்ட பழமொழி.இந்த பழமொழி "யானை அசைந்து தின்றது. வீடு அசையாமல் தின்றது" என்று இன்னொரு வடிவிலும் இருக்கிறது. அதாவது உயிரினங்களிலேயே மிகப் பெரிய யானையானது அதிக உணவை தனக்கு ஆகாரமாக உட்கொள்கிறது. ஆனால் வீடு எந்தவித அசைவுமின்றி நிறைய சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. அதாவது வீடு என்பது வீட்டிலுள்ள அனைவரையும் குறிக்கும் ஆகுபெயராக அழைக்கப்படுகிறது.

"எறும்பு ஊற கல்லும் தேயும் " என்ற பழமொழி முயற்சி உடையவர்கள் தம் முயற்சியை கை விடாது
தம் நோக்கில் உறுதியாய் இருந்தால் தமக்குரிய வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துக்கிறது.. ஆனால் இந்த பழமொழியை இன்னொரு வடிவில் பார்த்தால் குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பதற்குரிய விளக்கத்தையும் உணர்த்துவதாய் எனக்கு ஒரு புரிதல்... உங்களுக்கு எப்படி...?

மேலே

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006