சிறுகதைத் தொகுப்பு
பேனா விற்கும் பில்கேட்ஸ்

                 - - லக்கி ஷாஜஹான்
உலகில்

ஒவ்வொருவரிடமும் தவறாமல் ஒரு நல்ல சிறுகதை இருக்கிறது. *

பேனா விற்கும் பில்கேட்ஸ் - லக்கி ஷாஜஹான். *

வாழ்க்கையில் வெற்றி பெற்ற எல்லா மனிதரிடமுமே சில இரத்தம் தோய்ந்த சம்பவங்களோ அல்லது வியர்வை வாசமுள்ள

கனவுகளோ கொண்ட ஒரு பின்னோக்கிய மின்னிடும் நிகழ்வு ( ஃபிளாஷ்பேக் என்றே சொல்லி இருக்கலாமோ ) இருந்தே தீரும் . அவர்கள் அதை அந்தந்த காலகட்டத்தில் சொன்னால் அதற்கு அவ்வளவாய் மதிப்பில்லை.. ஆனால் மற்றவர்களுடைய பிரமிப்பில் அவர் உயரும் தருவாயில் இந்த சம்பவங்கள் முக்கியத்துவம் பெற்று விடுகின்றன .. உதாரண கதைகளாய் மேடைகளில் பறிமாறப்படுகின்றன. எனக்கு தெரிந்த ஒருவர் எப்போது பேசினாலும் காலி பாட்டில் பொறுக்கி விற்று பெரிய ஆளாய் வந்தவர் பற்றியும் செருப்பு தைப்பவர் அமெரிக்க அதிபரானதும் பற்றியே சொல்லி பேசிக் கொண்டிருப்பவர்களை ஒரு வழி செய்து கொண்டிருப்பார். ஆமா நீங்க மட்டும் ஏன் இப்படியே இருக்கீங்க என்று கேட்டால் 'தம்பி ரொம்ப சூடா இருக்கீங்க மாதிரி தெரியுது ' என்று கேட்ட படியே நகர்ந்து விடுவார். ஆனால் போராடி போராடி கடைசிவரை வெற்றி பெறாமலே போனவர்களும் உண்டு

. 'அவருக்கு ஆண்டவன் நாடுனது அவ்வளவுதான் ' என்று சமூகம் அதற்கும் ஒரு காரணம் சொல்கிறது.கணிணி கற்பித்தலில் இந்தியாவில் ஒரு நேரத்தில் முன்னணி நிறுவனமாய் இருந்த SSI (Software Solution Int.) ன் பட்டுக்கோட்டை கிளையில் நான் மேலாளராக பணி புரிந்து கொண்டிருந்த நேரத்தில் பணிக்கு போகும் தருவாயில் பஸ் ஏறும் இடத்தில் ஒரு பிச்சைக்காரரை அடிக்கடி பார்ப்பேன்.பிச்சைக்காரர் என்ற சொல்லுக்கு சரியான அல்லது மரியாதையான தமிழ் வார்த்தை என்ன என்று நகம் கடித்து யோசித்து பார்த்ததில், ஆங்காங்கே தேடிப் பார்த்ததில் யாசிப்பவர் என ஒரு இடத்திலும் , ' இரந்து வாழ்க்கை நடத்துபவர் ' என மற்றொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

யாசிப்பவர் என எல்லா இடத்திலும் எழுதினால் அது கவிதையான ஒரு மிகையான அடையாளத்தை எடுத்துக் கொள்ளும் இரந்து வாழ்பவர் என நிறைய இடங்களில் எழுத நேரும்போது பிழையாகி இறந்து வாழ்பவர் என வந்துவிட்டால் பிரச்னையாகிவிடுமே என்று வேறு பயமாக இருக்கிறது.. ஆனால் இரந்து வாழ்வது என்பது கூட ஒருவகையான இறந்து வாழ்வதற்கு ஒப்பானதுதான் என்பதால் அதிலொன்றும் தப்பில்லை என உள்ளே பட்சி சொல்ல ( எப்படிப்பா இப்படியெல்லாம் யோசிக்கிறே... ) எதற்கு இந்த விவாதமெல்லாம் என்று தூக்கிப் போட்டுவிட்டு பிச்சைக்காரர் என்றே அழைக்கலாம் என முடிவு செய்து விட்டேன். அவர்கள் ஏதும் சங்கம் வைத்திருந்து போர்க்கொடி தூக்கினால் ஏதாவது இரண்டெழுத்து தனியார் டிவியில் அழுதுகொண்டே மன்னிப்பு கேட்டால் சரியாகி விடும் என்று ஒரு குஷ் (ம்)புத் தனமான நம்பிக்கைதான்.. அந்த பிச்சைக்காரரின் பெயர் தனபாலன்

. தனபாலனுக்கு நாற்பது வயதிருக்கலாம்.. அணிந்து கொண்டிருக்கும் கிழிந்த ஆடைகளில் ஒரு நேர்த்தி இருக்கும். வைத்திருக்கும் ஒரு சில பாத்திரங்கள் சுத்தமானதாக இருப்பதை அகஸ்மாத்தாக கவனித்திருக்கிறேன் .. ஃபேவரைட் சாப்பாடு, ஃபேவரைட் சினிமா என்பது போல் தனபாலனுக்கு அந்த பஸ் ஸ்டாப் ஃபேவரைட் ஸ்தலமாக இருந்தது . தினந்தோறும் ரெகுலராய் பஸ் ஏறும் என் போன்ற பயணிகளிடம் அவர் அடிக்கடி யாசகம் கேட்பதில்லை.. நான் இரண்டொரு முறை காசு தந்திருக்கிறேன்.. ஒரு முறை கேட்டுக்கொண்டதற்காக டீ வாங்கி கொடுத்தேன் .. தீபாவளி ரம்ஜான் சமயங்களில் பத்து ரூபாய் போன்ற என்னளவுக்கு பெரிதான காசு கொடுத்து சந்தோஷித்ததாய் ஞாபகமிருக்கிறது .. வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாரியம்மன் கோவிலுக்கும் வெள்ளிக்கிழமை ஆத்துப் பள்ளிவாசலுக்கும் அன்று மாலை ரெட்டைமஸ்தான் தர்காவுக்கும் விழாக் காலக்களில் மட்டும் குழந்தை யேசு தலத்துக்கும் சென்று விட்டு வரும் மத நல்லிணக்க மனிதநேய யாசகன்.. எந்த இடத்தில் பிஸினஸ் உண்டோ அவ்விடத்தில் பிரார்த்தனையும் உண்டு என்பது கூடுதல் தகவல்.. ஆனால் எதன் பொருட்டும் சொந்த இடத்தை மட்டும் மாற்றி கொண்டதே இல்லை .. அதிகமாய் கோபப்பட்டும் பார்த்ததில்லை.யாராக இருந்தாலும் வார்த்தைக்கு வார்த்தை வாழ்க வளமுடன் என சொல்லிவிட்டு செல்வார் .. சில்லறை இல்லையேப்பா

பரவாயில்லை வாழ்க வளமுடன்

ஏம்பா பிச்சை எடுக்கறியே உழைச்சி சாப்பிட்டா என்ன

..? இது விதிங்க

.. வாழ்க வளமுடன் என்ன இது வார்த்தைக்கு வார்த்தை வாழ்க வளமுடன் என்று ஒரு முறை கேட்டதற்கு இது ஆழியார் வேதாந்திரி மகரிஷி கற்றுக் கொடுத்தது என சொல்லி அயரவைத்தார்

. கொஞ்சம் இரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதாதனமான நக்கலும் உண்டு. ஒருமுறை ஒரு பெண் இவரிடம் ' கை கால்லாம் நல்லாத்தானே இருக்கு.. உழைச்சி சாப்பிட்டா என்ன.. என்று கேட்க அதற்கு இவர் ' எல்லாருமே உழைச்சி சாப்பிட ஆரம்பிச்சா அப்புறம் யாருதான் பிச்சை எடுக்கறது ..? என கேட்க அந்த இடமே கொல்லென சிரிக்க அந்த பெண் அங்கிருந்து நகர்ந்து போய்விட்டாள் .

தனபாலனுக்கு உலக விஷயங்கள் அனைத்தும் அத்துப்படி

.. எனக்கு தெரிந்து தினத்தந்தி செய்திதாளை காசு கொடுத்து வாங்கிப் படிக்கும் ஒரே பிச்சைக்காரர் அவர்தான் .. ஆனால் அதற்கான காரணம் பின்னால்தான் தெரிந்தது. அந்த தினத்தந்தி தாளை காசு கொடுத்து வாங்கி படிப்பதால் அதே செய்தி தாள் விற்கும் பொட்டிக்கடை இணைந்த டீக்கடையில் ஓசியில் மற்ற இதர பத்திரிக்கையும் வாங்கி படித்து விடுவார் . அதென்ன தினத்தந்தி மட்டும் குறிப்பா வாங்கறீங்க என்று ஒரு முறை கேட்டதற்கு அதைதான் பழைய பேப்பர் கடைல போடும்போது காசு கொஞ்சம் கூட கிடைக்கும் என்று சிரித்துக் கொண்டே சொல்வார் . நல்லவேளை தனபாலனுக்கு ஆங்கிலம் அதிகமாக தெரியாது. இல்லை என்றால் ஹிந்து பேப்பர் அல்லவா தினமும் வாங்குவார் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டதுண்டு . தம்பி , பாடகியம்மா எம். எஸ்.சுப்புலட்சுமி முழு பெயர் தெரியுமா.. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி என்று சினிமா பற்றிய தனது ஞானத்தையும் அவ்வப்போது அள்ளி விடுவார்.

நாளாக நாளாக அவர்மேல் எனக்கு ஒரு வித சுவாரஸ்யம் ஏற்பட பஸ் ஏறும்வரை பேசிக் கொண்டிருக்கும் ( பஸ் நிறுத்த ஸ்னேகிதம் ??! ) நண்பராகவே மாறிப் போய்விட்டார் தனபாலன் . குடும்பம் பற்றி எல்லாம் விலாவரியாய் சொல்லியதில்லை ..இரண்டொரு முறை கேட்டதற்கு நான் வாழ்க்கைல இந்த நிலமைக்கு வந்ததுக்கே என் குடும்பந்தான் காரணம்.. அதை பத்தி மட்டும் தயவு செஞ்சு கேட்காதீங்க என்றுசொல்லி விடுவார். ஆக இதிலிருந்து நான் அறிந்து கொண்டது தனபாலன் பரம்பரை பிச்சைக்காரர் அல்ல ..தவிர கொஞ்சம் தன்மானம் மிக்க பிச்சைக்காரரும் கூட.. குஜராத் பூகம்பத்திற்கு கடை கடையாக வசூல் செய்து வந்த தொண்டரடி கொடியாள்வார்கள் அவரை கண்டு கொள்ளாமல் சென்றவுடன் வந்ததே கோபம்.. அவர்களை கூப்பிட்டு இருபது ரூபாய் தந்து பெயர் போட வேண்டாம் ' ஒரு இந்திய சகோதரன் ' என்று குறித்துக் கொள்ள சொன்னார்.. அந்த நொடியிலிருந்துதான் தனபாலன் எனக்கொரு நேசமுள்ள ஜீவனாகிப் போனார். ஒரு சமயம் ஒரு வார இதழில் வந்த என் கவிதை ஒன்றை அவரிடமும் காட்டி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டிருக்கும் தருணத்தில்

' என்னை பத்தியும் எதாவது கவிதை சொல்லுப்பா ' என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார். அடடா என்னையும் மதித்து ஒருவர் கவிதை கேட்ட சந்தோஷத்தில் வறுமை தீயில்

எரிந்து போன

மனித மரம் நீ

.. வாழ்க்கை மழை

பொய்த்து விட்ட

வறண்ட நிலம் நீ

.. என்ற ரீதியில் ஒருவித வாலி

'த்தனமாய் கவிதை எழுதி தள்ளி கையெழுத்திட்டு தர சந்தோஷமாய் வாங்கி கொண்டார் . என் போலவே அவருக்கு அங்கு வேறு சில தெரிந்த முகங்களும்

( !? ) இருந்தார்கள். பட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும் அதில் அடக்கம் . தனபாலனுக்கு சில சமயம் அந்த ஆசிரியை சாப்பாடு பார்சல் கட்டி எடுத்து வந்து தந்திருக்கிறார். சாப்பிடுவதில் எல்லாம் ரோட்டில் அல்ல.. பக்கத்தில் உள்ள கோவில் மரத்தடியில்.. மிக நளினமாய் மிக நாகரீகமாய்.. நமக்கு எப்பவுமே கொஞ்சம் கோணல் புத்தி. " ஏங்க எதாவது கெட்டுப் போன சாப்பாடா இருக்கப் போகுதுங்க" அசராமல் உடனே பதில் தருவார் " தம்பி, போற உயிர் எப்படி போனா என்ன..? " . எங்கள் எல்லோருக்கும் அவர்தான் டைம் கீப்பர். தம்பி உங்க வண்டி ராஜ்கபூர் போயிட்டானே .. ஐயா உங்க பஸ் சக்திவிலாஸ் இன்னிக்கு பத்து நிமிஷம் லேட்டுன்னு நினைக்கிறேன்.. இன்னும் வரலை. அம்மா உங்க பஸ் கணநாதன் வர்ர நேரம்தான் என்றெல்லாம் சரியாக சொல்வார் . பொன்னியின் செல்வன் ஐந்து முறை படித்திருப்பதாக சொல்வார். எண்டமூரி வீரேந்திரநாத் கதைகள் பற்றி என்னுடன் பேசுவார். சுஜாதாவின் தற்போதைய கதைகளில் எல்லாம் முன்னளவு விஷயம் இல்லை என்பதான அபிப்ராய பேதங்கள் எல்லாம் தெரிவிப்பார்.சரியாக புதுமுகம் பஸ் ஸ்டாப் வந்திருக்கிறது என தெரிந்துவிட்டால் எங்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் கருமமே கண்ணாகி விடுவார். அதெல்லாம் சரி ஆனால் இந்த பிச்சை எடுப்பது மட்டும் கொஞ்சம் உறுத்தலாகவே தோன்றியதால் அவரை ஏதாவது சிறிய சிறு தொழிலாக செய்யலாமே என ஒரு முறை

அறிவுறுத்திய போது 'பரிசீலனையில் ' இருப்பதாக படாரென பதில் வந்தது அவ்விடத்திலிருந்து .. பின்னொரு நாள் என்ன செய்யலாம் நீங்களே சொல்லுங்கள் என கேட்க ஒருவர் லாட்டரி சீட்டு விற்க யோசனை தந்தார் . மற்றொருவர் சின்ன சின்ன பொருட்கள் வாங்கி பஸ் ஸ்டாண்டில் நிற்கும் பேருந்துகளில் விற்கலாம்.. நல்ல சில்லறை என சொல்ல 'அது என் தன்மானத்திற்கு ஏற்றதல்ல' என்று உடனே தனபாலனிடமிருந்து பதில் வந்தது .. தனபாலன் தன்மானம் என்பதற்கு என்ன வரையறை வைத்திருந்தார் என்று இதை எழுதும் வரை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை.. ஒரு புத்தாண்டு தினத்தில் தன் கையில் வைத்திருந்த காசை எல்லாம் போட்டு மொத்த வியாபாரக் கடையில் இருந்து பேனாக்கள் வாங்கி விற்க தொடங்கினார்

.. ஆனால் அன்றிலிருந்து பிச்சை எடுப்பதை விட்டு விட்டார். முன்னளவுக்கு ' செல்வ ' செழிப்பு இல்லை எனினும் ஏதோ சுமாராய் ' சேல்ஸ்' ஆவதை சொல்வார். பேனாவை பற்றி மார்க்கெட்டிங் செய்ய அவருடைய பேச்சாற்றல் நன்றாகவே உதவி செய்தது ..ஆனால் அதற்கு பின்பு அவரை பார்ப்பது கொஞ்சம் கொஞ்சம் குறைந்து வந்தது.. எனக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு வந்தபின்பு யதேச்சையாக ஒரு முறை பார்த்த போது சொல்லி விட்டு வந்தேன் .. . பேனா விற்று அதில் வந்த வருமானத்தை வைத்து வேறொரு தொழில் தொடங்கி அது பல்கி பெருகி பின் மெல்ல மெல்லமாய் வாழ்க்கைத் தரத்தில் உயர்ந்து பெரிய பணக்காரனாகி ஆயிரபதி லட்சாதிபதி ஸ்தானத்துக்கு உயர்ந்து சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வந்தார் என்று இந்த பதிவை முடிக்கத்தான் ஆசை

ஆனால் என்ன செய்வது உண்மை அதில்லையே... ஒரு விடுமுறைப் பயணத்தில் ஊர் திரும்பிய போது வீட்டில் பழைய வார இதழ் ஒன்றை பொழுது போகாமல் புரட்டிக் கொண்டிருந்த போது சின்னதாய் கட்டம் கட்டிய ஒரு பெட்டி செய்தியை ஒரு வயதானவரின் கறுப்பு வெள்ளை

படத்துடன் வெளியிட்டிருந்தார்கள். தஞ்சை பழைய பேருந்து நிலையத்துக்குப் பின்னால் தெற்கலங்கம் போகும் சாலையில் இரு கால்களும் ஊனமான ஒருவர் உருக்குலைந்த தோற்றத்தில் பேனாக்களை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்

.அவரை தாண்டி செல்பவர்கள் அவர் கழுத்தில் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும் சிலேட்டில் உள்ள வாசகங்களை படித்து நெகிழ்ச்சியோடு ஒரு பேனாவாவது வாங்கி செல்கிறார்கள் .. அந்த வாசகங்கள் இதுதான் "

நான் பிச்சை எடுப்பதை நிறுத்தி விட்டேன்.. ஒரு பேனா வாங்கி நான் வாழ உதவி செய்யுங்கள் " திடுக்கிட்டுப் போய் அந்த படத்தை உற்று பார்த்தேன்

.. அதில் இருந்தது அதில் இருந்தது

.. சே

.. தனபாலனாக இருக்க முடியாது... தனபாலனாக இருக்க கூடாது .. ! *

அதற்கு பின் தனபாலனை பார்க்க தோன்ற வில்லை

. தனபாலன் நான் பட்டுக்கோட்டைக்கு போய் வந்த கால கட்ட நினைவுகளில் மட்டும் என்னுள் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இனியும் வாழ்ந்து கொண்டிருப்பார்.நீங்கள் யாரும் அவரைப் பார்க்க நேரிட்டால் நான் மிக விசாரித்ததாய் சொல்லுங்கள் . =================================================

லக்கி ஷாஜஹான் தமிழே சுவாசமாய்...

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006