கட்டுரைத் தொகுப்பு
முருங்கைக்காய் இலக்கியம் 
நன்றி : இளசு என்கிற Dr.பரசுராம்                  - லக்கி ஷாஜஹான்
இலையே இல்லாமல்
சடை சடையாய் காய்க்குதே
எதிர் வீட்டு முருங்கை...
ஏக்கத்தோடு பார்த்த என்னை
மிரட்டியது
மரத்தில் தொங்கிய செருப்பு.."
கண்ணுபடப்போகுதய்யா என்று
அவங்க வீட்டு அய்யா செஞ்ச ஏற்பாடு அது.

வெயிலுக்கு வேப்பமரம்
...
வீட்டுக்கு முருங்கை மரம்

மாதக்கடைசியில் கறிகாய்
, எண்ணெய்க்கும் தட்டுப்பாடு..
குருணை (நொய்) அரிசியில் , இளசாக முருங்கைக்கீரை போட்டு ,
பொங்கி, உப்பிட்டு புசித்தால் ...
அது..அது.. சாப்பிட்ட நாக்குக்கு மட்டுமே தெரிந்த தேவரகசியம்..
உண்டவர் விண்டிலர்..

முருங்கைக்கீரை - வெங்காய வதக்கல் ,முருங்கைப்பூ ரசம்
இப்படி பக்க வாத்தியங்கள் இருந்தாலும்
முக்கிய கச்சேரி செய்பவர்.. திருவாளர் .முருங்கைக்காய்தான்.

அண்மையில் முருங்கைக்காய் சாம்பார் சாப்பிட்ட
என் அயல்தேச நண்பர்
- " Ah... What's this..? A wooden piece!"
(ஆ.. என்ன இது ..? ஒரு மரத்துண்டு..! - ) என்றார் .
சாப்பிட்டுப் பாருங்கள் என்றேன்

.
சவ்வூடு பரவுதல் முறையில் பருப்புச்சாற்றை உள்வாங்கி இருந்த முருங்கைக்காயை
..
பிப்பெட்டின் siphon முறையில் நண்பர் உறிந்து ருசித்த
அழகே அழகு..

அந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காணும்போது
வேறொரு முருங்கைக்காய் சினிமா காட்சி நினைவுத் திரையில்
..
(முந்தானை முடிச்சி - முருங்கைக்காய் சீன் இல்லீங்கோ... )

படம் = ரோசாப்பூ ரவிக்கைக்காரி .
கணவன் = சிவகுமார்
மனைவி = தீபா
"நண்பன்"= சிவச்சந்திரன்..

படிப்பறிவில்லா கணவன் கரடுமுரடாய் கடைவாயில் வைத்து
"சைவ ராஜ்கிரண்" போல முருங்கைக்காயை மென்று துப்ப,
நாகரீக நாசூக்கு நண்பன் விரல்களால் காயை மெல்லப்
பிளந்து, முன்பல்லால் மென்மையாய் நெருடி , பட்டை நீக்கி
மென்மையாய் சாப்பிடும் லாவகம் கண்டு இமை கொட்டாமல்
வியப்பார் உச்சி வகுந்தெடுத்த மனைவி...

என் நண்பர் முட்கரண்டிக்கு விடை கொடுத்துவிட்டு
இரு கைகள்
, பற்கள் உதவியுடன் ராஜ்கிரண் பாணியில்
ருசித்துச் சாப்பிட்டார்.

பின்
, முருங்கையைப் பற்றி அவர் கேள்விமேல் கேள்வி கேட்க
வெறுங்கையால் முழம் போடாமல்,ஹோட்டலில்
சமைக்காமல் வைத்திருந்த முழுக்காயைக் காட்டி
வாய்க்கு வந்த சேதிகளை நான் சொல்ல
வாய் கழுவவும் மறந்து நண்பர் கேட்டுக்கொண்டார்!

ஆங்கிலத்தில்
- Drumstick.
உருவத்தால் வந்த காரணப்பெயர்!

அதிக நீர் வளம் கேட்காத சமர்த்து மரம்
.
தென்தமிழகம் வறட்சியில் சிக்க பல விவசாயிகள்
அதனால்தான் முருங்கைப் பயிரிட்டார்கள்.
(பலரும் பயிரிட்டு மார்க்கெட்டில் முருங்கை சரிந்தது சோகக்கதை.)

அடித்துக் காயப்படுத்தினால்
, "கம்" மென்று இருக்காது..
கோந்திக் கோந்தி அழும்... அந்த வாசம் கொஞ்சம் மோசம் .

சிறுதுண்டு வெட்டி
, முனையில் சாணம் பூசி
எங்கே நட்டாலும் வளரும்.

பேயிருக்கும் என்பார்கள்
.. கொஞ்சம் எறும்பு இருக்கும்
கூடவே கம்பளிப் பூச்சி குடும்பங்களும் இருக்கும்.
(மரத்தை தீய்க்காமல், கம்பளியை மட்டும் கபளீகரம் பண்ண
தீவட்டி வீரர்களின் சாகசம்.. ஆஹா ..!)

சில மிகுதியாய்க் காய்க்கும்
.
பொதுவாய் இது அடுத்த வீட்டு மரமாய் இருக்கும்.

வாயில் கரையும் வெண்ணெய் போன்ற ருசியான காயும் உண்டு.
கல்லால் அடித்துப் பிளக்கும்படி கசந்த கடும் பட்டைகளைக்
கொண்ட தீவிரவாதிகளும் உண்டு.

நல்ல மரத்தின் கிளைகள் பஸ்ஸேறி சம்பந்தி வீட்டுச் சீதனமாய்
போனது வரை பார்த்திருக்கிறேன்
.

இரும்புச்சத்து நிறைய உள்ளது
.
இதன் கீரை - கர்ப்பிணி , பால் கொடுக்கும் தாய், வளரும்
குழந்தைகளுக்கு இயற்கை அளிக்கும் இரும்புச்சத்து -இரத்த விருத்தி டானிக் .

ஒருவரின்
பிரியமான உணவு - ஒருவருக்கு நஞ்சு.
சிலருக்கு முருங்கைக்கீரையைப் பார்த்ததுமே பேதி காலோடு போகும்.
குடல் ராசி அப்படி.

எலும்பும் தோலுமாய் இருப்பவர்களை நக்கல் பண்ண
உதாரணமாய் உதவுவதும் முருங்கைக்காய்
.
ஒல்லியாய் இருக்கும் நாகேஷைத் திட்ட வந்த பாலையா
"டேய் முருங்கைக்காய்ப் பயலே.. அப்படியே உன்னை ஒடிச்சு.."ன்னு
முருங்கைக்காய் கடிப்பதுபோல் பற்களை நறநறப்பார்..

தில்லானா மோகனாம்பாளில்
.
கல்யாண முருங்கை என்று உண்டு. ஆனால் கல்யாணம் , முருங்கை
இரண்டோடும் இதற்கு என்ன சம்பந்தம் என்று இன்றும் தெரியாது.

பல விஷயங்கள் பிடிக்கும்படி இருக்கும் முருங்கையிடம்
ஒரு பிணக்கு உண்டு எனக்கு
.

மின் -தந்திக் கம்பிகளுடன் சபலம் கொண்டு கொஞ்சுவதால்
அடிக்கடி வாரியக்காரர்களால்
வெட்டுப்படுவதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியும் என்னால்..
சிறு புயல் அடித்த இரவின் முடிவில்
மளுக்கென முறிந்து கிடக்கும் அதன் பலவீனம் கண்டு ஆற்றாமல்
களுக்கென வந்து முட்டும். கோபமும் பின் கொஞ்சம் கண்ணீரும்...

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006