கட்டுரைத் தொகுப்பு
என்னருமை காய்கறிக்கு...

             
   - லக்கி ஷாஜஹான்
அன்பின் தமிழ் சொந்தங்களுக்கு,

கோடை விடுமுறைக்கு நிறைய பதிவாளர்கள் சென்றுவிட நம் மடலாற்குழு ரொம்பத்தான் வெறுமையாகப் போய்விட்டது

. விட்டால் மக்கள் மடலாற்குழுவையே மறந்துவிடக்கூடும் என்பதால் எல்லாவற்றையும் தொட்டுத் ( தொலைக்க ) துலங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார் போல் எதாவது தினம் தந்தே தீர வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு எழுத்துக்கூட அமைப்பில் உள்ள சிலர் ( அடியேனையும் சேர்த்து ) தொடர்ந்து மடலிட்டு வருவது அனைவரும் அறிந்ததே..அதன் பாதிப்பாய் நேற்று முருங்கைக்காய் இலக்கியம் மட்டும் தர இன்றைய பகல் கனவில் மற்ற காய்கறிகள் எல்லாம் சேர்ந்து வந்து போராட்டம் நடத்த தொடங்கி விட்டன . எனவே எப்போதோ படித்த ஒரு வலைப்பக்கத்தில் வந்து நான் ரசித்த ஒரு காய்கறிக் கவிதை இங்கே ..

உடனடியாக மற்ற படைப்பாளிகள் களம் இறங்கி தங்கள் பங்களிப்புகளைத் தொடராவிட்டால் என் தொல்லை தொடரும் என சத்தியமிட்டு ஆங்காங்கு படித்த கேட்ட ரசித்த எல்லாவற்றையுமே தொடர்ந்து தரத் திட்டமிட்டுள்ளேன் என்பதையும் ஊடாலே தெரிவித்துக் கொள்கிறேன்

.( இருந்தாலும் இந்த தண்டனை உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் அதிகம்தான் .. ) அன்பு படைப்பாளிகளே எழுமின் விழிமின் படைப்பின் இந்த தொல்லையை தவிர்ப்பின் நலம்.

-

லக்கி ஷாஜஹான்.

*

என்னருமை காய்கறிக்கு

...
சத்துக்காய் வாங்கப்போய்
சந்தையிலே விலைகேட்டால்
யானைக்காய் குதிரைக்காய்
விலைசொன்னார் வியாபாரி
 
வாழைக்காய் விலைகேட்டால்
எட்டிக்காய் கசப்பேதான்
வெள்ளரிக்காய் விலைகூட
மிளகாய்போல உறைப்பேதான்
பவுனுக்காய் அலைந்தவளோ
பரங்கிக்காய்க்கு அலைகின்றாள்
வானுயர பறக்காதே
என்னருமை காய்கறியே
 
ஏழைக்காய் பிறந்தகாய்
கத்தரிக்காய் ஒன்றேதான்
அதன்விலையும் உயர்ந்ததற்காய்
ஒருபாட்டம் அழுதுவிட்டோம்
பூவுக்காய் அலைந்தவளோ
பூசணிக்காய்க்கு அலைகின்றாள்
ஓடாதே காய்கறியே
எம்முயிரும் நீயல்லவோ
!
 
வெண்டைக்காய் நேற்றுவரை
அடுப்பினிலே வெந்ததய்யா
விலைகேட்டு இப்போது
மக்கள் மனம் வேகுதய்யா
கொலுசுக்காய் அலைந்தவளோ
கொத்தவரங்காய்க்கலைகின்றாள்
பறக்காதே காய்கறியே
பாழும் மனம் தாங்கலியே
 
அவரைக்காய் துவரைக்காய்
கசக்கும் அந்த பாகற்காய்
முருங்கைக்காய் புடலங்காய்
உயரே பறக்கும் தக்காளி
இவற்றுக்காய் அலைகின்றாள்
எந்தன் வீட்டு எழிலரசி
சீக்கிரமாய் இறங்கிவிடு
பசுமை நிற காய்கறியே
...

=================================================

லக்கி ஷாஜஹான்
தமிழே சுவாசமாய்...

=================================================

 


 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006