கட்டுரைத் தொகுப்பு
சௌதியில் தகப்பன் சாமிகள் .

             
   - லக்கி ஷாஜஹான்
சௌதி தகப்பன் சாமிகள்

... -

லக்கி ஷாஜஹான். *

ஹுஸைன் மரைக்காயருக்கு இன்றைக்கெல்லாம் அறுபது வயது இருக்கலாம்

.ஆனால் அந்த வயதோ அதற்குரிய தளர்ச்சியோ தெரியாத ஒரு ' மார்க்கண்டேயத்தனம் ' உள்ள சுறுசுறுப்பான இளைஞர் மன்னிக்கவும் கிழைஞர். இந்த வயதுகளில் உள்ள சில மனிதர்களுக்கே இப்படி ஒரு உடல்வனப்பு இருக்கிறது. முப்பதுகளில் எண்பதுகள் போல் தோற்றமளிக்கும் மனிதர்களும் இருக்கிறார்கள் . அறுபதுகளில் இருபது போல் காட்சியளிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஹுஸைன் மரைக்காயர் இந்த இரண்டாம் ரகம் . வாழ்க்கையில் இந்த வயதில் ஏக்கங்கள் நிரம்பியும் தூக்கங்கள் குறைந்ததுமான மனித வர்க்கங்களில் வித்தியாசமானவராகவே வலம் வந்து கொண்டிருக்கும் ஹுஸைன் மரைக்காயர் முதலில் பழக்கமானது என் தம்பியிடம்தான். தாயகத்தில் புதுக்கோட்டைக்கு அருகில் அண்டக்குளம் என்ற

, மாவட்ட வரைபடத்தில் கூட தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கிராமம்தான் ஹுஸைன் மரைக்காயருக்கு சொந்த ஊர் . சௌதி வந்து சுமார் ஏழு வருடத்துக்கு மேலிருக்கலாம்.ஃபென்னி தெகோர் எனப்படும் கட்டட அழகுபடுத்துநர் விசாவில் வந்து வழக்கம்போலவே ஏமாற்றும் சில டுபான்ஸ் கம்பெனியில் ஒன்றில் பணிக்கமர்ந்து கொடுக்கின்ற காசை வாங்கிக் கொண்டு கூடுதலான தொகை உள்ள இடத்திற்கு நேரே கையெழுத்திட்டு இரண்டுவருடத்துக்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவந்து -சௌதி பாஷையில் "எஸ்கேப் " ஆகி வந்தாரை வாழவைக்கும் பத்தாவில் அடைக்கலம் புகுந்தவர். கையில் இருக்கவே இருக்கிறது சொந்த தொழில்

- டைல்ஸ் பதித்தல் மற்றும் இதர வேலைகள் - உங்கள் வீட்டில் பாத்ரூமில் டைல்ஸ் போடவேண்டுமா..? எங்கேனும் பூச்சு பூச வேண்டுமா , பிளம்பிங் பணிகள் இருக்கிறதா.. சகாய தொகைக்கு அற்புதமாக வந்து செய்து கொடுத்து விட்டு போவார் ஹுஸைன் மரைக்காயர். உதவிக்கு ஆட்கள் எல்லாம் தேவையில்லை. ஒரு கட்டு பீடி போதும். அசராமல் வேலை பார்ப்பார். பல நிறுவனங்களை வைத்து அல்லாடும் எங்கள் லக்கி காதரை கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்றால் ஹுஸைன் மரைக்காயர் போன்ற ஆட்களைத்தான் சித்தப்பா கை காமித்து பேசுவார் ."இவங்க வயசுக்கே இவ்வளவு வேலை பார்க்கிறாங்க.. நாம எவ்வளவு பார்க்கணும் ..?" ஹுஸைன் மரைக்காயருக்கு இகாமா செத்துபோய் வருடங்கள் ஓடிவிட்டன என்றாலும் ஒரு நாள் கூட அவர் ஜவாசத்திடம் மாட்டியதில்லை

. அல்லது எந்த போலிஸிடமே இகாமா காண்பிக்கும்படியுமான சூழ்நிலை உண்டானதில்லை .அன்னாரின் தோற்றம் அப்படி.. ஒரு வெள்ளிக்கிழமையின் அடர்ந்த நெரிசலான மக்கள் கூட்டங்களுக்கிடையே லக்கி வீடியோ எதிரே போடப்பட்டிருக்கும் பெஞ்சுகளில் இவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்த வங்காள தேசத்து ஆளை அமுக்கிய ஜவாசத் , மருந்துக்கு கூட இவரிடம் இகாமா இருக்கிறதா என்று கேட்கவில்லை. கேட்டாலும் பயப்பட மாட்டார் . சடாரென எடுத்துக் கொடுத்து விடுவார்.அப்படியே அருமையாக நுனி மடங்காது அந்த செத்த இகாமாவை பூப்போல் எடுத்துக் கொடுக்கும் தெனாவட்டிலேயே அவர்கள் வாங்காமல் போய்விடக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறைய அமைந்திருக்கிறது . ஹுஸைன் மரைக்காயருக்கு சுமாரான வேலைகள் தினந்தோறும் வந்து அமைந்ததில் போதுமான சம்பாத்தியமும் சந்தோஷமான திருப்தியும் நிறைய கிடைத்துக்கொண்டிருந்தது

. எங்கு தங்கியிருக்கிறார் என்பது தெரியாது,ஆனால் தினமும் மாலை நேரத்தில் தம்பி மற்றும் அவன் வயதொத்த நண்பர்களிடம் வந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பார் . தினம் தவறாது ஒரு படம் பார்த்துவிடுவார். படத்தை பற்றி நிறைய விமர்சிப்பார் . சௌதியில் குடும்பங்களற்ற லட்சோப லட்ச கல்யாணத்துக்கு காத்துக் கிடக்கும் பிரம்மச்சாரிகளுக்கும் - கல்யாணம் பண்ணி வந்த பிரம்மச்சாரிகளுக்கும் சினிமாவை விட்டால் இங்கு வேறென்ன சந்தோஷம் இருக்கப் போகிறது ..? என்னுடனான சந்திப்புகள் அபூர்வம் எனினும் சந்திக்கும் பொழுதுகளில் பொதுவாக அவர் பேச்சு நான் எப்போது ஊருக்குப் போகிறேன் என்பது பற்றியும் அவர் குடும்பம் எப்படி இருக்கிறது என்பது பற்றியுமே இருக்கும்

. என் தந்தையை விட அதிகமான வயது கொண்டவர் என்பதால் ஒரு மரியாதையும் இந்த வயதில் இவர் வந்து சம்பாதிக்கும் அளவிற்கு என்ன குடும்ப சூழல் என்பது பற்றியுமான ஒரு ஆவலும் ஒருநாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே கேட்டுவிடத்தோன்றியது . "

தம்பி நமக்கு பெரிய குடும்பம்... இருந்த கொஞ்ச பூர்வீக காணி நெலங்களையும் அங்காளி பங்காளிக ஏமாத்தி புடுங்கிப்புட்டானுங்க .. வரிசையா பொண்ணுங்களை பெத்துட்டேன்.. பையன் கடைசி .. சின்னப் பையன்ல அதான் ஊர்ல படிச்சிக்கிட்டிருக்கான்.. நான் ஏதோ இந்த பொழைப்பு பார்த்துதான் எல்லா கொமரையும் ( கல்யாண வயது பெண் ) கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டேன்.. இன்னும் ஒரு பொண்ணு இருக்குப்பா.. அதையும் நல்லபடியா ஒருத்தன் கைல புடிச்சிக்கிட்டேன்னா ஆண்டவான்னு ஊர்ல போய் அடைஞ்சிடுவேன் ... ". பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் கண்ணில் விரியும் சொந்த ஊர்

, குடும்பம் கனவுகள் பற்றிய அவர் ஏக்கம் மெல்லியதாய் விரிவடைந்து அவர் புகைத்து விடும் பீடி புகையில் கரைந்து போவதை கொஞ்சம் உணர்ந்து கொள்ள முடிந்துகொண்டிருக்கிறது என்னால் .தம்பியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது "அவர் நமக்கு கொஞ்சம் தூரத்து சொந்தமா வர்ராருண்ணே .. நம்ம ஊர்ல எல்லாரையும் பத்தி கரெக்டா சொல்றாரு" என்றான் . அவனுக்கு எல்லோரும் நண்பர்கள் - எல்லோரும் உறவினர்கள் - யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பது போல்... இரண்டு மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பத்திரிக்கையுடன் வந்தார் சந்தோஷம் பொங்க

.. "தம்பி என் கடைசி பொண்ணுக்கும் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க வீட்ல .." இந்த கல்யாணம் நல்லபடியா முடியணும்னு துஆ செய்ங்க தம்பி.. இந்தோ இதுக்கு வாங்குன கடனை அடைச்சுட்டேன்னா ஊர்ல போய் நான் பையன் பொஞ்சாதி எல்லாம் கூழோ கஞ்சியோ குடிச்சுட்டு நிம்மதியா இருப்போம் " என்றவரை வியப்பாகத்தான் பார்க்க முடிந்தது என்னால்.. இதற்கேனும் இந்த மண்ணிற்கும் இறைவனுக்கும் நன்றி சொல்ல வேண்டும் அல்லவா ..? "ஒண்ணு மட்டும் தம்பி.. இந்த கடைசி காலத்தில குடும்பத்தை விட்டுட்டு இருக்கிற கொடுமை இருக்கு பாருங்க .. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா தம்பி .. எம் பொண்ணுங்க கல்யாணம் எதுக்குமே நான் பக்கத்துல இருந்ததில்லை ..பொழைப்பு பொழைப்பு பொழைப்புதான்.. " . நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தேன் . "ஆமா தம்பி.. அப்படி ஒரு ராசி.. அப்படி ஒரு சூழ்நிலை.. எனக்கு.." ஒரு நான்கைந்து நாட்களுக்கு முன்னால் பணி முடித்து திரும்பிய நேரத்தில் என் அறை வாசலில் காத்திருந்தார் ஹுஸைன் மரைக்காயர்

. "தம்பி .. ஒரு விஷயம்..நான் ஊருக்குப் போலாம்னு இருக்கேன்.. போலிஸில் பிடிபட்டு ஜெயில்ல இருந்துதான் போகணும்.. இங்கே நம்ம இந்தியன் எம்பஸில கூட இப்ப என் மாதிரி கேஸ்ல இருக்கறவங்களுக்கு ஏதோ நடவடிக்கை எடுத்து ஊருக்கு அனுப்பி வைக்கிறாங்களாம் .. கொஞ்சம் விசாரிச்சு சொல்றீங்களா.. உங்களை கேட்டு விவரம் தெரியும்னு பயக சொன்னாய்ங்க .. " என்றார்.இந்த மாதிரி ' கம்பெனி எஸ்கேப்' நபர்கள் பொதுவாக உம்ரா சென்று விட்டு அங்கிருந்து ஜித்தா போய் போலிஸில் பிடிபட்டு பின் தூதரகம் மூலம் எடுக்கப்பட்டு ஊர் போய் சேர்வது வழக்கம் . இவர் விஷயத்தில் இங்கிருந்து என்பது பற்றி ஆரம்பிப்பதால் விசாரித்து சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். இந்த வாரம் எழுத்துக்கூட சந்திப்பில் இதுபற்றி நம் ரியாத் தமிழ் சங்க அமைப்பாளர்களிடம் அல்லது இந்திய தூதரக தொடர்பு நண்பர்களிடம் விசாரிப்பது என முடிவு செய்திருந்ததேன்

.. ஹுஸைன் மரைக்காயர் ஊருக்குப் போய் தம் எஞ்சிய நாட்களை தம் குடும்பத்துடன் செலவிடக்கூடிய காலம் வந்துவிட்டமைக்காக இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் போல் இருந்தது. வாழ்க்கையில் கடமைகள் முடித்திட்ட குடும்பத்தலைவன் தன் குடும்பத்தோடு ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் காலக்கட்டங்கள் போல் சுகமான பொழுதுகள் கோடி கொடுத்தாலும் ஈடாகாது . இதைத்தான் வினை முடித்தனன் இனியனள் என்று சொல்லிவைத்தார்களோ என்னவோ...? பெரிய சாதனையாளர்கள் பட்டியலில் சேர்க்கும் அளவிற்கெல்லாம் ஹுஸைன் மரைக்காயர் ஏதும் சாகஸம் செய்துவிடவில்லைதான்

. அவரைப் பற்றி இதை ஒரு கட்டுரை எழுதுமளவிற்கும் இதுவரை நடந்த விஷயங்கள் முக்கியமானவை அல்ல என்பதும் உண்மைதான் .. ஆனால் பிரம்மாண்டம் என்பது மாபெரும் மலை மட்டுமல்ல..பனித்துளியில் சூரியன் தெரிவதும் கூடத்தான் என்று சென்ற வார எழுத்துக்கூடத்தில் வாசித்த எஸ் .ராவின் வரிகள் நினைவுக்கு வர கடைசியாக ஒரு செய்தியையும் சொல்லி இந்த கட்டுரையை முடிக்க வேண்டிய அவசியத்தில் நான் இருக்கிறேன் .. ஆம்

.. நேற்று முன் தினம் சின்னதாய் உடல்நிலை சரியில்லை என மயங்கி விழுந்த ஹுஸைன் மரைக்காயரை சுமேசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறைவன் அவரை அழைத்துக் கொண்டான் .. இதுவரை அவரின் கஃபில் பொறுப்பேற்காத நிலையில் ஹுஸைன் மரைக்காயரின் பிரேதம் சௌதி போலீஸாரோடு காத்துக் கொண்டிருக்கிறது அடுத்த கட்ட செயல்பாடுகளுக்காக .... நாமும் பிரார்த்திப்போம் அவருக்கு

. அவருக்காக மட்டுமல்ல - நமக்காகவும் ...


 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006