கட்டுரைத் தொகுப்பு
சௌதியில் மரணமும் - சங்கடங்களும்...

             
   - லக்கி ஷாஜஹான்
சௌதியில் மரணமும் - சங்கடங்களும்... -லக்கி ஷாஜஹான். *

ஹுசைன் மரைக்காயர் மரணம் பற்றி எழுதியிருந்தேன்

. (பார்க்க : சௌதியில் தகப்பன் சாமிகள் 25-07-2006 மின் மடல் ) அவரை இன்னும் அடக்கம் செய்ய முடியவில்லை .சுமார் ஒரு வார காலத்துக்கு மேலாக ஆகி விட்டது.அன்றே செய்தியறிந்து தமாமிலிருந்து வந்த அவரது மைத்துனர் மருத்துவமனையிலிருந்து அவர் உடலைப் பெற முடியவில்லை . காரணம்..? இறந்து போன ஹுசைன் மரைக்காயர் வேலை பார்த்த இடத்திலிருந்து ஓடி வந்து மரணித்தவர் என்பதால் அவரிடம் எந்த ஒரு விவரணமும் ஒழுங்காக கிடைக்கப் பெறவில்லை . அவசர ஆத்திரத்திற்கு அவரைக் கொண்டு போய் சுமேசி மருத்துவமனையில் சேர்த்த என் தம்பியையும்

- அவனது நண்பர் ஜான் என்பவரையும் மருத்துவமனை நிர்வாகம் பணயமாகப் பிடித்துக் கொண்டது . அவர் இருப்பிடத்தைக் காட்டு.. சோதனையிட வேண்டும் என தம்பியின் நண்பன் ஜானின் இகாமாவை காவல்துறையினர் பறித்து வைத்துக் கொண்டனர் . இடத்தைக் காட்டினால் அவரைத் தங்க வைத்திருந்தவர்-அடைக்கலம் வைத்தவர் மாட்டிக் கொள்வார்கள் ..(ஏன் எந்தவித விவரணமும் இல்லாத ஆளுக்கு அடைக்கலம் கொடுத்தாய்..? ) ஆரம்பித்தது முதல் சிக்கல் ... அடுத்ததாய் இந்த மரணத்தைப் பற்றி நான் பதிவு வெளியிட்ட அன்று காலை ஹுசைன் மரைக்காயரின் மைத்துனரிடமிருந்து எனக்கு ஒரு போன் வந்தது

. "தம்பி , இறந்து போனவரின் இக்காமாவில் அவரின் பாஸ்போட் எண்கள் தெளிவாக இல்லை. வரிசைக்கிரமும் ஆங்கில எழுத்தும் அழிந்து போயுள்ளது . எனவே இந்திய தூதரகத்தில் அவரை அடக்கம் செய்வதற்கோ, இறப்பு சான்றிதழ் தருவதற்கோ இயலாது என்று சொல்லிவிட்டார்கள் .. உங்களால் ஏதும் செய்ய முடியுமா..?" . நான் யோசித்து பின் இது தொடர்பாய் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நெருக்கமாய் உள்ள நம் ரியாத் தமிழ் சங்க நண்பர்களுக்கு போன் செய்து கேட்க அவர்கள் சொன்ன ஆலோசனையின் படி செயல்படத் தொடங்கினேன் . அப்போதுதான் பிரச்னையின் முழுவடிவமும் தெரியத் தொடங்கியது. இதற்கிடையே ஊரிலிருந்து ஹுஸைன் மரைக்காயர் மனைவியிடமிருந்து அவரை இங்கேயே அடக்கம் செய்ய அனுமதி கடிதமும்

, அவர் வீட்டு ரேஷன் கார்டு நகலும் தொலைநகல் வழியே இந்திய தூதரகத்திற்கு அனுப்பட்டது . இருப்பினும் இங்கு அவர்தான் அது என உறுதிப்படுத்திக் கொள்ள ஒரே ஒரு ஆவணம் கிடைத்தாலும் இங்கே அடக்கம் செய்வதற்கு சான்றிதழ் தந்துவிடுகிறேன் என்று தூதரக அதிகாரி கண்டிப்பாக சொல்லிவிட்டார் . ஒரு புறம் நான் இது தொடர்பாய் அவர்களுக்கு எந்த வித ஆவணம் தந்தால் சரியாக இருக்கும் என தொலைபேசிக் கொண்டிருக்க மறுபுறம் ஹுசைன் மரைக்காயர் மைத்துனர் அவர் இக்காமாவைக் கொண்டுபோய் ஜவாசத்தில் கொடுத்து அவர் பற்றிய கம்ப்யூட்டர் விவரங்களை பெற கேட்டுக் கொள்ள அவர் ஒரு சௌதியை அமர்த்திக் கொண்டு அங்கு போய் விட்டார் . இன்றைக்கு புதன்கிழமை

.. இன்றைக்கு விட்டால் உடலைப் பெற நாளை,நாளை மறுநாள் எந்தவித முகாந்திரமும் இல்லை .நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது.. ஜவாசத்தில் சரியான ஒத்துழைப்பு இல்லை . பிரச்னையின் வடிவம் இதுதான்.. நம் இந்திய பாஸ்போர்ட்டில் நம் பாஸ்போர்ட் எண்களுக்கு முன்னால் ஆங்கில எழுத்து ஒன்று வரும் . உதாரணமாய் E 4566324556 என்பது போல் .. ஆனால் ஹுசைன் மரைக்காயர் இகாமாவில் அந்த ஆங்கில எழுத்து இல்லை.. எழுதவில்லையா அல்லது சிதைந்து போய்விட்டதா என்று உறுதிப்பட கூற முடியவில்லை . ஊருக்கு அடித்து கேட்டால் அவர்களுக்கும் தெளிவாய் விளங்கிக் கொள்ள இயலவில்லை. கடைசியாய் ஒருவழியாய் எல்லா எழுத்தையும் வரிசைப்படி அடித்துப் பார்த்து G வரிசையில் அமைந்த அந்த எண்ணைத் தந்து அவர் பற்றிய கம்ப்யூட்டர் குறிப்புகள் வாங்கிய பின் எனக்கு போன் செய்தார். மணி அப்போதே பனிரெண்டே காலாகி விட்டது. உடனடியாக ஒரு டாக்ஸி அமர்த்திக் கொண்டு இந்திய தூதரகம் போனோம்

.உயரதிகாரிகளில் ஒருவர் - தமிழ் நன்றாக பேசும் மலையாளி - உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொண்டார் . நம் தாயகத்தில் ஒரு சில அரசு அலுவலகங்களில் நடக்கும் அவல பம்மாத்து பணித்தனங்கள் ஏதும் இங்கு இல்லை. தன்மையாக பொறுமையாக பதிலளிக்கிறார்கள் .." ஏன் ஆவணங்கள்...? அது இல்லையென்றால் இந்திய அரசுக்கு தாங்கள் எவ்விதம் பதிலளிக்க முடியும் இந்த நபரைப் பற்றி " என்பதெல்லாம் விளக்கமாகவே சொன்னார்கள். சரியாக பதினான்கு நிமிடத்தில் அவரை இங்கே அடக்கம் செய்ய அனுமதிக்கும் இந்திய தூதரக சான்றிதழை தந்து விட்டார்கள் . மறக்காமல் பின் வரும் நாளில் அவரைப் பற்றி தூதரகம் கேட்டிருந்த ஆவணங்களை தந்து இறப்பு சான்றிதழ் கட்டாயம் வாங்கிக் கொள்ள வேண்டும் என அன்புடனும் சற்று ஆணித்தரமாகவும் அறிவுறுத்தினார்கள் .இறப்பு சான்றிதழ் இல்லாமல் தாயகத்தில் அவர் தொடர்பான எந்த ஒரு தூசியையும் நகர்த்த முடியாது என்று எச்சரித்தார்கள். வாங்கிக் கொண்டு நன்றி சொல்லி வெளியே வந்து பத்தா வர அடுத்த பிரச்னை நகராட்சி சான்றிதழ் பெறுவதில் தொக்கிக் கொண்டு நின்றது. நகராட்சி சான்றிதழ் இருந்தால்தான் அடக்கஸ்தலம் கொண்டு போக முடியும்

. ஆனால் முதலின் இந்த சான்றிதழும் வாங்கிக் கொண்டுதான் உடலைப் பெற முடியும் . அங்கே ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்கள் என்று சொன்னார்கள்.நான் போகவில்லை . கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு அலுவலகம் திரும்பி வரலாம் என்றிருந்தவனை நாலு மணி சுமாருக்கு இன்னொரு செல் பேசி அழைப்பு எழுப்பியது. எல்லாம் முடிந்து மருத்துவமனை போனால் அங்கு ஏதோ பெயர் சிக்கலாம். என்ன செய்யலாம் என்று ஹுஸைன் மரைக்காயர் மைத்துனர் விவரம் கேட்டார். தம்பியும் தம்பி நண்பனும் ஹுசைன் மரைக்காயரை முதலில் அருகிலுள்ள சின்ன மருத்துவமனையில் சேர்த்த போது அங்கு கொடுத்த பெயர் அவரை பரவலாக அழைக்கும் பெயர்

. ஆனால் இகாமாவில் இருப்பது உண்மையான பெயர். இக்காமாவில் இருக்கும் பெயருக்குதான் தூதரக சான்றிதழும், நகராட்சி சான்றிதழும் இருந்தது.அந்த மருத்துவமனை ஹுசைன் மரைக்காயரை சுமேசி மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தியபோது என்ன பெயர் தரப்பட்டதோ அந்த பெயரிலேயே சுமேசி மருத்துவமனையில் எழுதிக் கொண்டார்கள் .இப்போது பெயர் சான்றிதழ்களுக்கும் பதிவேட்டிற்கும் வித்தியாசத்தோடு இருப்பதால் போய் மாற்றி வாங்களப்பா.. அத்துடன் மாற்றியதற்கான காவல் நிலைய சான்றிதழோடு வாங்கப்பா என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். மணி மாலை ஆறாயிற்று.. ஏறத்தாழ இந்த வகை சிக்கல் எனக்கும் இருக்கிறது

. அழைப்பில் பரவலாக என் பெயர் ஷாஜஹான் என்றாலும் என் இக்காமா பாஸ்போர்ட் படிப்பு சான்றிதழ்கள் இதரவகைகளில் உள்ள என் உண்மையான பெயர் வேறு . அவசரத்திற்கு ஒரு முறை உடல்நலம் சரியிலாது மருத்துவமனையில் சேர்ந்தபோது பேர் கேட்டதற்கு உடனிருந்த உறவினன் ஷாஜஹான் என்று பொதுவான பெயர் சொல்ல அந்த பெயரிலேயே இன்றளவும் அந்த மருத்துவமனையில் தொடர் வருகைக்குப் போக பயன்படுத்தப்பட்டுவருகிறது . எனக்கும் லேசாக பயம் எட்டிப் பார்த்தது.அன்றளவு கொஞ்சம் கோழித்தூக்கமும் ஏகாதாசித் தூக்கமுமாகவே கழிந்தது ..ஒரு வேளை நான் இறந்தாலும் இப்படித்தானா..? ஆக புதன்கிழமை வாங்கி அடக்கம் செய்வதாக இருந்த ஹுசைன் மரைக்காயர் உடலை அன்று வாங்க முடியவில்லை

.வியாழக்கிழமை ஒருவழியாக முதலில் சேர்ந்த மருத்துவமனைக்கு போய் அந்த மருத்துவர் காலில் விழாத குறையாக கெஞ்சி சான்றிதழ் பெற்று அதை காவல்துறையிடம் காட்டி அங்கு அனுமதிப் பெற்று சுமேசி மருத்துவமனைக்குப் போக அவர்கள் சனிக்கிழமை வாருங்கள் என்று சொல்லி விட்டார்கள் .இதோ சனிக்கிழமை இந்த நிமிடம் வரை ம்..ஹும்.. சான்றிதழ்கள் வாங்கி வைத்திருந்த காவல்துறை உயராய்வாளர் பயணம் சென்ரிருக்கிறாராம்..வந்தவுடன் தான் என்று திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஆக இந்த மடலை படிக்கும் நண்பர்களே

,சகோதரர்களே... ஓடி வந்து வேலை பார்க்கும் உங்களது நண்பர்கள்

-உறவினர்கள் யாரேனும் இருப்பின் இந்த பிரச்னைகளைப் பற்றி பேசுங்கள். முடிந்தால் அவர்கள் தரப்பு ஆவணங்களை பத்திரப்படுத்த சொல்லுங்கள்,பாதுகாக்க சொல்லுங்கள் . முடிந்தவரை ஒருவேளை ஏதும் நடப்பின் அது தொடர்பாய் நடவடிக்கை எடுக்க யார் யார் எங்கிருக்கிறார்கள் என்ன உறவு முறை என்பதையெல்லாம் அவசியம் தெரியப்படுத்த அறிவுறுத்துங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்.முக்கியமாய் பாஸ்போர்ட் நகல் எல்லோரிடமும் இருப்பது அவசியம் . கடவு சீட்டு (Passport ) என்பது கடவுள் சீட்டு மாதிரி.. அதேபோல் மரணம் என்பதும் ரஜினிகாந்த பஞ்ச் மாதிரி.. எப்ப வரும் எப்படி வரும்னு தெரியாது ஆனா வர வேண்டிய நேரம் வந்தா கரெக்டா வந்துடும் ... நல்ல புரவலர்

( விசா கஃபில் ), நாணயமான கம்பெனி இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒருவர் மரணமடைந்தால் இந்திய தூதரக தரப்பில் ஒரு மணி நேரத்தில் மரணம் தொடர்பான எல்லா உதவிகளையும் பெற்றுவிடலாம் .அவ்வளவு நேர்மையாக பணி புரிகிறார்கள்.உதவி செய்கிறார்கள் .அவர்களது தேவையெல்லாம் ஆதாரங்கள் - ஆவணங்கள் அவ்வளவே... ஓடி வந்து வேலை பார்ப்பவர்களை பற்றியும் மட்டும் அல்லாமல் என்னைப் போல் டுபான்ஸ்-படு மட்டமான நிறுவனத்தில் பணிபுரிபவர்களைப் பற்றித்தான் என் கவலை எல்லாம் .. என் கஃபில் குடும்பத்தோடு லெபனான் போய் ஏழு மாதமாகிறது. போனவன் என் பாஸ்போர்ட்டை , என் நிறுவனத்தில் உள்ளவர்கள் பாஸ்போர்ட்டை எல்லாம் எடுத்துப் பூட்டி சாவியையும் கூட எடுத்து சென்றுவிட்டான். ( என்ன மரியாதை வேண்டி கிடக்கிறது .. ? ) . நான் விடுமுறைக்கு விண்ணப்பித்து வாரங்கள் பல ஆகிவிட்டது. இங்கு பொறுப்பாளரும் இல்லை .தொஃபியத் எனப்படும் பவர் ஆஃப் அட்டர்னி எனப்படும் அதிகாரம் வழங்கப்பட்டவர் என்றும் எவருமில்லை. ஹுஸைன் மரைக்காயர் நிலை நாளை எனக்கு ஏற்பட்டால்.? நினைக்கவே நெஞ்சம் பதைபதைக்கிறது ..இறைவன் போதுமானவன்.லபனானில் சண்டை தொடங்கி எல்லாரும் வெளியேறத்தொடங்கிவிட்ட சூழ்நிலையில் என் கஃபில் மட்டும் அங்கேயே இருந்து கொண்டு அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் . ஹுஸைன் மரைக்காயர் மரணத்திற்கு பின்னால் நான் நேரடியாக சில விஷயங்களுக்கு களம் இறங்கியதால் இந்த விவரங்கள் தெரிய வந்தன

.. தலைநகரில் நாமிருக்கிறோம் .. தொலைதூரங்களில் வாழும்-வசிக்கும் நம் சகோதரர்களுக்கு .. ஏன் பிழைப்பிற்கு புலம் பெயர்ந்த அத்தனை பேருக்கும் இறைவன் மட்டுமே பாதுகாவலன்.. இதுபற்றி நம் ரியாத் தமிழ்சங்க மூத்த உறுப்பினர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது இதுபற்றி வரும் நாட்களில் ஒரு அமர்வில் பேசி நடவடிக்கைகள் எடுக்க ஆவண செய்யவேண்டும் என்றார் .மிக அருமையான இந்திய தூதர் கிடைத்திருக்கிறார்கள். நிச்சயம் பேசியே ஆக வேண்டும் . எனவே நண்பர்களே

.. சகோதரர்களே.. பறவை நம் தலைக்கு மேலே வட்டமடித்துக் கொண்டிருப்பதை பற்றி நாம் தடுக்க முடியாதுதான் .. கவலைப்பட தேவையில்லைதான்..ஆனால் அது நம் தலை மேல் கூடு கட்டி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவே .. சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்... எல்லாவற்றிற்கும் இறைவன்

- அந்த தனிப்பெருங்கருணையாளன் - போதுமானவன் ..அவன் நம்மை காப்பானாக...


 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006