எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---10  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் பத்தாம் கூட்டம்

- ஒரு பார்வை.

-

லக்கி ஷாஜஹான்.

*

ரியாத் தமிழ் சங்கம் மூலம் ரியாத்தில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம் விரைவில் பொதிகை டிவியில் தொடர்ந்து ஒளிபரக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து நம்பத்தகாத ஒரு செய்தி கசியத் தொடங்கியதிலிருந்து இந்த ஷாஜஹானின் நடவடிக்கையே மாறிப்போய்விட்டது

. லேசாக சூரிய வெளிச்சம் பட்டு கார் கண்ணாடிகள் ஃபிளாஷ் அடித்தால் கூட யாரோ போட்டோ எடுக்கிறார்கள் என்று நடுரோட்டிலேயே போஸ் கொடுக்க தயாராகி விடுகிறார் . அவர் தொடர்ந்து பங்கு பெறும் எழுத்துக்கூட நிகழ்வுகள் எல்லாம் கூட டிவியில் வரப்போகிறது என்றவுடன் அவர் சோஃபாவில் ,நாற்காலியில் ஏன் தரையில் உட்காரும்போது கூட என்ன ஸ்டைல் என்ன ஸ்டைல்... ரபி பெர்னாட் ,சுப வீரபாண்டியன் , பிரணாய் தோத்தார்கள் போங்கள் ...

டிவியில் பேட்டி எடுக்கிறச்சே ரெண்டு பேர் பேசிப்பாங்க

.. அந்த மாதிரி இந்த எழுத்துக்கூட சந்திப்பை உன்னால விவரிக்க முடியுமான்னு அவரோட மனசாட்சி எகத்தாளமாக கேட்க பொங்கி விட்டார் ஷாஜஹான் . வெள்ளிக்கிழமை சந்திப்புகளில் முக்கியமான நபராம் ஃபகுருதீனுடன் அவர் உரையாடியதே இந்த பத்தாம் சந்திப்பை பற்றித்தானாம் ... இனி முன்னால் ஜனாதிபதியும் மொகலாய சக்கரவர்த்தியும் உரையாடிய நேருக்கு நேர், காந்திக்கு நேர் , அண்ணாவுக்கு நேர் மன்னிக்கவும் நம் எழுத்துக்கூடத்தின் பத்தாம் சந்திப்பு பற்றி....

*

ஷாஜி

: வாங்க பகுருதீன்.. இந்த எழுத்துக்கூட சந்திப்புக்காவது ( 16-06-2006 ) நிச்சயம் வந்துருவீங்கன்னு எதிர்பார்த்தேன் ..

ஃபகுருதீன்

: எங்க ஸார் வர்றது.. ஃபேமிலி வெகேஷன் வந்தாலும் வந்தாங்க.. அங்க இங்க நகர முடியலை .. அடுத்த வாரம் கிளம்பறாங்க.. இனிமே தொடர்ந்து வந்திடுவேன் .. ஆமா இந்த வார கூட்டம் எங்க நடந்திச்சி ..?

ஷாஜி

: நண்பர் பாலமுகுந்தன் ஸார் வீட்லதான் .. நம்ம அமைப்பாளர்கள் நிரந்தரமா ஒரு இடத்தில் நடத்த தீவிரமா முயற்சி செஞ்சிக்கிட்டிருக்காங்க.. அதுவரைக்கும் பாலமுகுந்தன் ஸார் வீட்ல தான் இனி அடுத்தடுத்த சந்திப்புகள்லாம் இருக்கும்னு நினைக்கிறேன் ..

ஃபகுருதீன்

: இந்த வாரம் சந்திப்புல என்ன ஸ்பெஷல் ..?

ஷாஜி

: எல்லாமே ஸ்பெஷல்தான்.. வழக்கம்போல எஸ்.ராவின் கதாவிலாசத்தில் இருந்து ஒரு பகுதி . கண்ணில் விழுந்த மணல் என்ற தலைப்பில் அமைந்த எஸ். ராவின் கட்டுரை. இந்த கட்டுரைல விவசாயிகள் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பத்தி சொல்லிட்டு பூமணி என்ற எழுத்தாளரைப் பத்திஅறிமுகப்படுத்தி அவரோட ஒரு சிறுகதையை பத்தி சொல்லிருக்கார் எஸ்.ரா .

ஃபகுருதீன்

: இந்த வாரம் யாரு படிச்சது ..?

ஷாஜி

: அஹமது சுபைர்னு ஒரு நண்பர் புதுசா வந்திருக்கார் . ஏற்கனவே ரியாத் தமிழ் சங்க மடலாற்குழுவில் அப்பப்ப வாசகர் கருத்துக்கள் எழுதியிருக்கார். முரண்பாடுகள் 'னு ஒரு கவிதை கூட எழுதியிருக்கார்.. நல்ல கம்பீரமான குரல்பா சுபைருக்கு .. 'உலகமெங்கும் சின்னத்திரைகளில்'னு பி .ஹெச்அப்துல்ஹமீது ராஜ்டிவி அறிவிப்புக்கு பேசுவாரே.. அந்த மாதிரி வாய்ஸ்.. எல்லாருமே கொஞ்சம் அசந்து போய்ட்டோம்.. அப்புறம்தான் தெரிஞ்சது.. சுபைர் ஏற்கனவே சன் டிவி செய்தி வாசிக்கும் பணிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டவராம் .. ஏழு வருஷம் ஒப்பந்தம்னு சொன்னவுடன் வேணாம்னுட்டு சௌதி வந்துட்டார்.

ஃபகுருதீன்

: இண்ட்ரஸ்ட்டிங்.. அது சரி.. அவர் மட்டும்தானா.. இல்லை வேற யாரும் உண்டா?

ஷாஜி

: அப்புறம் பால்ராஜ்னு இன்னொரு புதிய நண்பர் . அப்பாஸ் ஷாஜஹான் அழைத்து வந்திருந்தார். பால்ராஜ் ஸாரும் நல்ல இலக்கிய ரசனை கொண்டவர் போல .. ஆர்வமா வந்திருக்கார்..

ஃபகுருதீன்

: வர வர நிறைய பேர் வர ஆரம்பிச்சிருக்காங்கள்ள..?

ஷாஜி

: இன்னும் நிறைய பேர் வருவாங்க ... எல்லோர்க்குமே ஆர்வம் இருக்கு.. நேரம், மற்ற சூழல் எல்லாம் இடம் கொடுக்கறப்ப ஆர்வமுள்ள நிறைய பேர் நிச்சயம் வர ஆரம்பிப்பாங்க ..

ஃபகுருதீன்

: கண்டிப்பா.. ஆமா இந்த வார கதாவிலாசம் எதைப் பத்தி..? பூமணிங்கற எழுத்தாளர் நிறைய எழுதியிருக்காரா .. கேள்விப்பட்ட பேர் மாதிரி தெரியலையே..?

ஷாஜி

: விவசாயம் சில நேரம் ஏமாற்றத்தை தர்றப்போ அவங்க வெறுத்துப் போய் வேற தொழிலுக்குப் போயிர்ராங்களே அதைப் பத்திதான் எஸ் .ராவோட முன்னுரை.. விவசாயம் பண்ணிட்டு அது தந்த இழப்புல விவாசய கட்சி தலைவராக மாறி போராடி மிசாவுல கைதான பெத்தையா அப்படிங்கற ஒருத்தரைப் பத்திதான் எஸ் .ராவோட முன்னுரை இருக்கு. அதுக்கு உதாரணமாதான் பூமணி எழுதிய அடமானம்ங்கற சிறுகதை தந்திருக்கார். விவசாயத்திலேர்ந்து மாறி சின்ன சின்ன தொழில் செஞ்சி வசதியாய் திருப்பி மறுபடியும் வீழ்ச்சிக்கு திரும்பி நிலத்தை அடமானம் வைக்க கூடிய அளவுக்கு வந்திட்ட ஒரு குடும்பத்தோட கதை அது ... அப்புறம் எழுத்தாளர் பூமணி கரிசல் வட்டார படைப்புகள் தருவதில் புகழ் பெற்ற எழுத்தாளரா இருந்திருக்கார் .. நிறைய நாவல்லாம் எழுதியிருக்கார்.விருதெல்லாம் வாங்கியிருக்கார் .அவ்வளவு ஏன் கருவேலம் பூக்கள்னு ஒரு சினிமா வந்திச்சில்ல.. நாசர் நடிச்சது ..அது இவர் இயக்கிய படம்தான்.. நிறைய உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட படம்னு எஸ் .ரா சொல்லிருக்கார்.

ஃபகுருதீன்

: வழக்கம்போல் முன்னுரைல எஸ் .ராவோட டச் அங்கங்கே இருக்குமே..?

ஷாஜி

: இல்லையா பின்னே..? அதானே எஸ்.ராவோட பலமே.. எதுக்கு நம்ம எழுத்துக்கூடத்துல பிரதானமா எஸ்.ராவோட கதாவிலாசத்தை கண்டிப்பா தொடர்ந்து படிச்சு வாராங்க ..? புதுசா எழுத வாரவங்களுக்கு நிறைய விஷயம் சொல்லித் தர்ற புனைவு பாணியெல்லாம் எஸ். ரா எழுத்திலே நிறைய இருக்குங்கறதால தானே.. இந்த பதிவிலேயும் நிறைய சொல்றாரு .. விவசாயியின் வாழ்க்கை காற்றில் அடித்து செல்லப்படும் மணல் போல எந்த பிடிமானமும் அற்றது .மண்ணை மட்டும் நம்பியவன் வெயிலைப் பார்த்து தலை நீட்டிக் கிடக்கும் ஓணான் போல ஊரை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருக்கறான் .. இப்படி நிறைய...

ஃபகுருதீன்

: சரியா ஒவ்வொரு பதிவுக்கும் அது சம்பந்தமா ஒரு முன்னுரை தந்துர்ராரு இல்லியா ..?

ஷாஜி

: அதைத் தான் இந்த வாரம் எல்லோரும் ரொம்ப நேரம் வியந்து பேசிக்கிட்டிருந்தோம் . எஸ்.ராவைப் பத்தி நம்ம நாட்ல இருக்கறவங்களுக்கு தெரியுதோ இல்லியோ .. இங்க சௌதில ரொம்ப பேர்க்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு.. கதாவிலாசம் புத்தகத்துக்கு ஆர்டர் கொடுத்தவங்க லிஸ்ட் அதிகமாயிட்டே போகுது .. கவனிச்சீங்கள்ள..

ஃபகுருதீன்

: நிச்சயமா.. இதுக்கு நாம எழுத்துக்கூடத்துக்குதான் நன்றி சொல்லணும். அதுசரி ராஜாவோட வெண்பா வகுப்பு எப்படி இருந்திச்சி..?

ஷாஜி

: ஃபகுருதீன் நீங்க ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்க .. நான் கூட வெண்பா வகுப்புன்னு சொன்னவுடன்

இலக்கணத்தை காய்ச்சி ஊத்தி நேரடியா மாச்சீர்

,விளச்சீர் , தளை தட்டுறது.. ஈற்றடி மூச்சீர் , சிந்த்யல் வெண்பா இப்படியெல்லாம் போய் நிறைய பேர் வெண்பாவா அட போப்பா அப்படின்னு 'தெறிச்சிப்' போற அளவுக்கு கொண்டு போக போறார்னு நெனைச்சேன் ஆனா அப்படியெல்லாம் இல்லாம அழகா ஏழாம் வகுப்புலேர்ரந்து பாடத்திட்டத்துல தொடங்கற இலக்கணம் மாதிரி எழுத்து ,வார்த்தை, வாக்கியம் , அசை இப்படி ஆரம்பிச்சி மெதுவா கொண்டு போனார். இது சம்பந்தமா இணையத்திலேர்ந்து சுவையான ஒரு பதிவை இறக்கி , பிரசுரித்து வந்து எல்லோர்க்கும் தந்து நிதானமா நடத்தினார்..

ஃபகுருதீன்

: ரொம்ப அடிப்படைலேர்ந்து ஆரம்பிச்சாச்சி ...அது நல்லதுதான் ஷாஜி.. நிறைய பேர் ஸ்கூல் லைஃப்ல இலக்கணத்திலே அவ்வளவா ஆர்வம் காட்டியிருக்க மாட்டாங்க ..அவங்களுக்கு இது ரொம்ப பயன்படும்ல..

ஷாஜி

: நிச்சயமா .. அது நிறைய பேர் அங்க வருத்தப்பட்டதுலேர்ந்து கண்கூடா தெரிஞ்சது.. கணக்கு பிணக்கு, இலக்கணம் வெளக்கெண்ணெய்னு நிறைய பேர் பிடிக்காத சப்ஜெக்டுக்கு ஆர்வம் தராம போறது

இயல்புதானே

.. நமக்கென்னவோ அந்தந்த காலகட்டத்துல வாத்தியாரை புடிச்ச அளவுக்கு பாடம் புடிக்காம போயிடுச்சி ..

ஃபகுருதீன்

: எதுவரைக்கும் நடத்தியிருக்கார் ..?

ஷாஜி

: இப்போதைக்கு ஒரு வார்த்தையை அசை பிரிக்கிற வரைக்கும் சொல்லி தந்திருக்கார் .. குறில்,நெடில், மாத்திரை, அளபெடுத்தல் இப்படி நிறைய அடிப்படை விஷயங்களை தெளிவாக்கிட்டாரு... வரும் வாரம் சீர் பிரித்தல், சீர் விதிகள், அலகிடுதல், வெண்பா இலக்கணம் இப்படி கடக்க வேண்டிய பயணம் இருக்கு .. நாலு வாரம் ஆகும்னு சொல்லிருக்கார்.. ஆனா நம்ம மக்கள் நிறைய ஆர்வம் காட்றதினால் சீக்கிரம் முடியவும் வாய்ப்பிருக்கு ...

ஃபகுருதீன்

: எல்லாரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாங்களா ..?

ஷாஜி

: சும்மாவா.. பாடம் நடத்திட்டு எல்லோர்க்கும் ஒவ்வொரு வரி கொடுத்து பிரிக்க சொல்லிட்டாரு. எல்லாரும் பிரிச்சி எடுத்துட்டாங்கள்ல .. இதிலே என்னா ஒரு விஷயம் தெரியுமா ஃபகுருதீன்.. யாரும் எந்த ஈகோவும் காட்டாம தெரியாதை ஆர்வமா கேட்டு தெரிஞ்சிக்கிட்டதான் .. நம்மளை விட வயசில, அனுபவத்தில மூத்தவங்கள்லாம் சின்ன பிள்ளை மாதிரி ஒவ்வொண்ணா கேட்டு தெரிஞ்சிக்கிட்டு எழுதி காமிச்சி அசத்திட்டாங்கப்பா.. நீங்க வேணா பாருங்களேன் .. இந்த வகுப்பு இப்படியே போனா வெண்பா புதுக்கவிதைன்னு விரைவில் எழுத்துக்கூடத்திலே எக்கச்சக்கமா கவிஞர்கள் பெருக வாய்ப்பிருக்கு .. ஏன்னா வளர்ச்சிங்கறது கத்துக் கொடுறக்கதிலே மட்டும் இல்லை .. நாம கத்துக்கறதிலேயும் இருக்கு..

ஃபகுருதீன்

: ராஜா கூட சாட்ல வந்தப்ப வெண்பா வகுப்பு ரொம்ப நல்லா போனதுன்னு சொன்னாரு .. நீங்க கூட கொஞ்சம் உதவியாய் இருந்தீங்கன்னு சொன்னாரு..

ஷாஜி

: நான் மட்டும்னு இல்ல.. ஞாபகம் வச்சிருந்த சிலபேர் கொஞ்சம் பகிர்ந்துக்க மத்தவங்களுக்கு அது உதவியாய் இருந்திருக்கும்னு நினைக்கிறேன் .. பாலராஜன் ஸாரும் கொஞ்சம் கொஞ்சம் நடுவில் வர வெண்பா வகுப்பு நல்லாவே களை கட்டுச்சி .. வரும் வாரங்கள்ள ராஜா ரொம்ப முனைப்பா நடத்த ஆரம்பிச்சிடுவார்..நல்லா போகும்னு ஒரு நம்பிக்கை இருக்கு ..

ஃபகுருதீன்

: நானும் இனிமே வந்திடுவேன் .. அப்புறம் வேற என்ன பேசினீங்க..?

ஷாஜி

: அப்புறம்..., எழுத்துக்கூடத்துக்கு அவசியம் படிக்க வேண்டிய 100 புத்தகங்கள் வாங்கிப் போடணும்னு நண்பர் கல்யாண் ஒரு கருத்து வச்சிருக்கார் .. பால ராஜன் ஸார் அவர்கிட்டே உள்ள புத்தகங்கள்லாம் தாரேன்னு சொல்லிருக்கார். வரும் வாரத்தில் நண்பர்கள் சுபைரும் , ராஜப்பாவும் தாம் படைப்புகளை எழுதி எடுத்து வந்து வாசிக்கிறோம்னு சொல்லிருக்காங்க.. இது அல்லாம எப்பவும் போல் ஆரோக்கியமான விவாதங்கள், விளக்கங்கள் , விமர்சனங்கள்னு மூணு மணி நேரம் தாண்டிப் போயிடுச்சி கூட்டம்.. போனவுடன் வெயிலுக்கு நம்ம நாட்டு ஸ்டைல்ல அருமையான மோர் கலந்து தந்து , நீர்ப்பழங்கள் தந்து நண்பர் பால முகுந்தன் எல்லோரையும் உபசரிச்சார் .. கூட்டம் முடிஞ்சி வாரப்ப மணி ஏழாயிச்சி

ஃபகுருதீன்

: அப்ப இந்த வாரம் எழுத்துக்கூடத்தின் பத்தாம் கூட்டம் பற்றிய பார்வைல எழுதறதுக்கு நிறைய விஷயம் இருக்கு ... எழுதுங்க.. அதிலேயும் கூட்டம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கிறேன் ...

எழுதிட்டோம்ல

...!

 

=================================================

லக்கி ஷாஜஹான்

தமிழே சுவாசமாய்...

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006