எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---11  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின்

பதினொன்றாம் கூட்டம் - ஒரு பார்வை .

-

லக்கி ஷாஜஹான்.

*

சரியாக மாதத்திற்கு இரண்டு தடவைதான் எழுத்துக்கூட சந்திப்பு என்பதில் அமைப்பாளர்கள் உறுதியாக இருக்கிறார்கள்

. எனவேதான் சென்ற சந்திப்பு இரண்டு வெள்ளிக்கிழமைகளை விழுங்கிவிட்டு சென்ற வார வெள்ளிக்கிழமை ( 07 - 07 - 2006 ) அன்று நடப்பதாய் எழுத்துக்கூட மடலில் காண முடிந்தது .. ஆனால் இடம் அறிவித்து விட்டு நேரம் பற்றி பின்னர் குறிப்பிடப்படும் என்றவுடன் குழப்பம் இன்னும் அதிகமாயிற்று ..பின்னர்தான் எழுத்துக்கூட நேரம் மாற்றம் ஏன் என்பது பற்றி சந்தோஷமான அறிவிப்புடன் காரணம் கிடைத்தது. இந்தவாரம் எழுத்துக்கூட சந்திப்பு மேதகு இந்திய தூதுவர் M.O.H ஃபரூக் ஐயா வீட்டில் என்பதும் இந்த வார நிகழ்வை ஐயா அவர்கள் பங்கு கொண்டு நடத்தித் தருகிறார்கள் என்பதும்தான் அந்த மகிழ்ச்சியான செய்தி .

"

அடடா ஒரு நாள் முன்பே தெரிந்திருந்தால் அழகு நிலையம் போய்... " என்று ஆரம்பித்த என்னை " தம்பி ஷாஜி நாம போறது ஒரு மூத்த தமிழ் இலக்கியவாதி - மரியாதைக்குரிய தூதுவர் ஐயா இடத்துக்கு கொஞ்சம் அடக்கியே வாசி அடங்கியே வா " என நண்பர் சிக்கந்தர் எச்சரித்து கூட்டிப் போக வந்திருந்ததால் வழக்கமான ரவுசுகளை அறையிலேயே விட்டுவிட்டு நல்ல பிள்ளையாய் எளிமையாகவே கிளம்பி போய்விட்டேன்... ஒருங்கிணைப்பாளர் -நண்பர் கல்யாண் வீட்டிலிருந்து கல்யாண், நண்பர் ராஜா, நண்பர் பாலராஜன் மற்றும் புதிய உறுப்பினர் நண்பர் மோகன் ஆகியோர் ஒரு குழுவாகவும், நான் , நண்பர் சிக்கந்தர் , நண்பர் அஹமது சுபைர் ஒரு குழுவாகவும் கிளம்பி இந்திய தூதரகம் நோக்கிப் பயணித்தோம்.

*

ஏழு மணிக்கு சற்று முன்னதாகவே இந்தியத் தூதரகத்துக்குள் சென்றுவிட்டாலும் பாதுகாப்பு சம்பிரதாயங்கள் தொடர்பாய் வெளிவாசலியே கொஞ்ச நேரம்

காத்துக் கிடக்க வேண்டியதாயிற்று. அங்குள்ள காவலர்களிடம் நண்பர் கல்யாண் விஷயம் விளக்கி அனுமதி பெற்று உள்ளே நுழைய ஏற்கனவே ஐயா வெற்றிவேல் அவர்களும் நண்பர் அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் நண்பர் பால்ராஜ் அவர்களும் வந்திருந்தார்கள் . கூட்டம் ஆரம்பித்த சில நிமிடங்களில் திரு ஜெயசீலன் மற்றும் அவர்தம் துணைவியார் வந்திருக்க நாங்கள் ஐயாவுக்காக காத்திருக்கத் தொடங்கினோம் .

சரியாய் ஏழு மணிக்கு எளிமையான தோற்றத்துடன் புன்னகை தவழும் முகத்துடன் உள்ளே நுழைந்த தூதுவர் ஐயா எங்களை மகிழ்வுடன் வரவேற்று அமர எங்களை நாங்கள் அறிமுகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினோம்

. ஐயா பொறுமையாக இந்த எழுத்துக்கூட சாரம்சம் மற்றும் நிகழ்வுகள் பற்றி கேட்டுக் கொள்ள முதல் கட்ட நிகழ்வு ஆரம்பமானது. சிம்மக்குரலோன் அஹமது சுபைர் இந்த வார பதிவான நிலா பார்த்தல் என்ற கட்டுரையை எஸ் .ராவின் கதாவிலாசத்திலிருந்து தம் கணீர் குரலில் வாசிக்கத் தொடங்கினார்.

நிலா பற்றிய தன் எண்ணங்களை அழகாக பகிர்ந்துகொண்ட எஸ்

.ரா இந்த வாரம் அறிமுகப்படுத்தி யிருக்கும் எழுத்தாளார் பி.எஸ்.ராமையா வின் சிறுகதை ஒன்றை தம் கட்டுரையில் எடுத்தாண்டிருக்கிறார்.எழுத்தாளர் பி. எஸ்.ராமையா சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதும் மணிக்கொடி என்ற இலக்கிய இதழ் நடத்திக் கொண்டிருந்தவர் என்பதும் சிறந்த நாடகம் ,சிறுகதை தொகுப்புகளை தமிழுக்கு தந்திருப்பவர் என்பதும் எஸ்.ராவின் குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது . நட்சத்திர குழந்தைகள் என்ற சிறுகதை வாயிலாக நிலாவுக்கும் நட்சத்திரத்துக்காகவும் வருத்தப்படும் ஒரு குழந்தையின் மனநிலையை நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறார் எழுத்தாளர். எரிநட்சத்திரத்தைப் பற்றி விளக்கம் கேட்கும் குழந்தையிடம் 'பொய் சொல்வதால் நட்சத்திரங்கள் உதிர்ந்துவிடும் ' என்று அக்குழந்தையின் அப்பா சொல்லி வைக்க அவ்வப்போது எரிந்து விழும் நட்சத்திரங்களைப் பார்த்து அந்த குழந்தை 'நம் ஊரில் யாரோ பொய் சொல்கிறார்கள்..ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போனால் கடவுள் எவ்வளவு வருத்தப்படுவார் ' என்று சொல்லி அழுகிறாள்.கடவுளுக்காக வருத்தப்பட குழந்தைகளைத் தவிர யார் இருக்கிறார்கள் என்பதாக முடிகிறது இந்த வார நிகழ்வுக்கான கதாவிலாசம்.

இரண்டாம் பகுதியை முழுமையாய் ஆக்ரமித்துக் கொண்டார்கள் தூதர் ஐயா அவர்கள்

. ஒரு கலந்துரையாடலாய் துவங்கிய ஐயாவின் பேச்சு கம்பராமாயணம் , பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் , ஷேக்ஸ்பியர் படைப்புகள் என பல தளங்களில் விரிவடைந்தது. கம்பரையும் ஷேக்ஸ்பியரையும் அவர்கள் வார்த்தைப் பிரயோகங்களில் கையாண்ட நவீனங்களையும் மிக எளிமையாய் விவரித்தார்கள் . ஐயா கம்பர் மீது கொண்டுள்ள காதலை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. தாம் ஆட்சி நடத்திய தாயகத்தில் ஐயா கம்பர் பெருமகனுக்கு விழா எடுத்து சிறப்பித்த காரணம் நன்கு புரிந்து போனது.கம்ப ராமாயணத்திலிருந்து ஐயா ஆங்காங்கே எடுத்தாண்ட சில வரிகளும் அதனை ஐயா விளக்கிய விதமும் நாங்கள் வியந்துபோய் கேட்டுக் கொண்டிருந்தோம் .சௌதி தேசத்தின் ஏதோ ஒரு இடத்தில் ஒரு ராஜ்ஜிய - அரசாங்க பிரதிநிதி கம்பரையும் - தமிழ்ச்சுவையும் பற்றி ஆர்வத்துடன் விவரிப்பதை கேட்டால் தமிழின் பெருமையை என்னவென்று புகழ ...? எழுத்துக்கூடத்தின் வளர்ச்சியை என்னவென்று சொல்ல..?

"

காதல் குற்றவாளிகள் " என்ற தலைப்பில் அமைந்த பாரதிதாசன் கவிதையின் ( பார்க்க : நண்பர் ராஜாவின் 08-07-2006 எழுத்துக்கூட மின் மடல் ) பெரும்பான்மையான வரிகளை வாசித்து விளக்கம் தந்து அசத்தினார்கள் ஐயா அவர்கள். நண்பர் ராஜா சொன்னதுபோல் ஐயாவின் நினைவாற்றலைக் கண்டு ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை . அந்த கவிதை போல் நீங்களும் கவிதையின் இறுதியில் அல்லது சாரம்சத்தில் ஒரு நீதியை சொல்லுங்கள் , எல்லாப் படைப்புகளிலும் அறமும் தர்மும் வலியுறுத்தும்படியான செய்தியை அமைத்து எழுதுங்கள் என அறிவுறுத்தினார்கள் ஐயா அவர்கள்.

எல்லா மதங்களுக்குமான சாத்வீக தேடலான மறுபிறவி

- விதி பற்றிய ஆன்மீகப் பார்வையும் ஐயாவிடமிருந்து தப்பவில்லை .ஆன்மீகத்தில் ஆத்மீகம் பற்றி ஒரு சொற்பொழிவே நடத்தினார்கள் ஐயா அவர்கள். எந்த மதங்களையும் பற்றி உயர்வு /தாழ்வு,அபிப்ராய பேதங்கள் மற்றும் தெரியாத எதையும் எழுதி சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை எழுத்துக்கூட படைப்பாளிகளிடம் ஐயா அவர்கள் அன்புடன் வேண்டிக் கொண்டார்கள் . இன்றைய சந்திப்பின் இந்த ஆன்மீகப் பார்வை கூட என்னுடைய பார்வையும் தேடலுமே தவிர இதை எழுத்துக்கூடத்தின் பிரதான அம்சமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஐயா கேட்டுக் கொண்டது ஐயாவின் நேர்மையையும் இறையாண்மையையும் தெளிவாக எடுத்துக்காட்டியது .

கண்ணதாசன் தத்துவப் பாடல்கள் முதல் தற்கால திரைப்பட பாடல்களில் நம்பிக்கையூட்டக்கூடிய விதத்தில் அமைந்த ஒவ்வொரு பூக்களுமே

( படம் : ஆட்டோகிராப் ) வரை மீதான ஐயாவின் ரசிப்புத் தன்மை மற்றொரு ஆச்சரியம் . ஒவ்வொரு பூக்களுமே பாடலின் சில வரிகளை பாடி காட்டி இது போன்று ஊக்கம் தரக்கூடிய வரிகளை அமைத்து படைப்பு செய்யுங்கள் என்பதாகவும் ஐயாவின் பேச்சு அமைந்திருந்தது . இடையிடையே சில விஷயங்களை வெற்றிவேல் ஐயாவிடம், நண்பர் ராஜாவிடம், நண்பர் கல்யாணிடம், திருமதி ஜெயசீலன் அவர்களிடம் 'இது சரிதானே.. இது இப்படித்தானே சொல்லப்பட்டிருக்கிறது ' என்பது பற்றியெல்லாம் கேட்டு - நடுநடுவே எங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் மதிப்பளித்து கடைசியாக ஐயா அவர்கள் எல்லா விஷயங்களையும் கோர்வையாக்கித் தர இரண்டரை மணி நேரங்கள் விரைவாய் கடந்து போய் விட்டிருந்தது .

இதுவரை எழுத்துக்கூடத்தில் வெளியான நண்பர்களின் படைப்புகளில்

( அடியேனது உள்பட ) சிறந்தவற்றை எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர் நண்பர் கல்யாண் அச்சிட்டு தொகுத்து கொண்டு வந்து தூதுவர் ஐயா அவர்களிடம் வழங்கினார். தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த நாவல்களை அந்த நாவலாசிரியர்களே பேச்சு வடிவில் விவரிக்கும் குறுந்தகடுகளும் நண்பர் அப்பாஸ் ஷாஜஹானால் ஐயா அவர்களிடம் வழங்கப்பட்டது .

இடையே திருமதி உதயா ஜெயசீலன் நிலா பற்றி தாம் எழுதி வந்திருந்த ஒரு கவிதையை வாசித்தளிக்க அதை வெண்பா வடிவில் தர நண்பர் ராஜா சில குறிப்புகள் வழங்கினார்

. தூதர் ஐயாவுடனான பங்களிப்பு என்பதாலும் நேரம் கடந்து போய்விட்டிருந்ததாலும் வெண்பா - கவிதை கற்றுக் கொள்ளும் வகுப்பு அடுத்த நிகழ்வில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது . ( ராசா... தப்பிச்சுட்டீகளே வாத்தி ...! ) .நண்பர் கல்யாண் இலக்கண விதி ஒன்றை எளிமையாய் தெரிந்து கொள்ள அதை ஒரு சினிமா பாடல் வழியே பாடிக் காட்டினார் ..பாட்டு பிரபலமானது என்பதால் அந்த இலக்கண விதியும் எளிதில் மனதில் ஒட்டிக் கொண்டு விட்டது .நன்றி கல்யாண்..!

அடுத்தடுத்த கூட்டத்திலும் தூதர் ஐயா அவர்கள் கலந்து கொண்டு வழி நடத்த வேண்டும்

- ஆலோசனைகள் சொல்ல வேண்டும் என்று எழுத்துக்கூடம் சார்பாக ஐயா அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது . நேரமும் சூழலும் சரியாக இருப்பின் பார்க்கலாம் என ஐயா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் . பல்வேறு பணிகளுக்கிடையில் ஓய்வாக இருக்கும் ஒரு வெள்ளிக்கிழமையின் இரண்டரை மணி நேரத்தை எங்களுடன் செலவளித்தமைக்கு மேதகு இந்திய தூதுவர் ஐயா அவர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவு பெற்று எல்லோரும் வீடு திரும்பினோம் .

=================================================

லக்கி ஷாஜஹான்

தமிழே சுவாசமாய்

...

=================================================


 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006