எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---12  ஒரு பார்வை.

                 - அஹமது ஜுபைர்

நண்பர்களுக்கு வணக்கம்!

நண்பர் திரு. ஷாஜஹான் அவர்களின் தவிர்க்க இயலாத வேலைப் பளுவின் காரணமாக இந்த வாரத்தின் எழுத்துக்கூட பதிவை நான் எழுதுகிறேன்.

திரு.பாலமுகுந்தன் அவர்களது இல்லத்தில் கூட்டம் நடந்தது.

எழுத்துக்கூடத்தின் சிறந்த கூட்டங்களில் ஒன்றாக கடந்த கூட்டம் நடந்தது.

கதாவிலாசம் இந்த வாரத்தில் எழுத்தாளர் வண்ணதாசன் பற்றி பேசியது.

திரு. வெங்கடேஷ் வரதராஜன் அவர்கள் கதாவிலாசத்தின் "உள்ளங்கை எழுத்து" பகுதியை வாசித்தார்.

திரு. ஜெயசீலன் அவர்கள் கொடுத்த ஆப்பிள் பழச்சாறு (அட Apple Juice பா...)
"செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" என்பதை பொய்யாக்கியது.

செவிக்கு உணவு இருக்கும் போதே வயிற்றுக்கும் வழங்கப்பட்டது.

கதாவிலாசத்தின் எழுத்து நடையை எழுத்துக்கூடம் சிறிது நேரம் சிலாகித்து விவாதித்தது.

கதாவிலாசத்தின் பகுதி நிறைவு பெற்றவுடன், திரு. ராஜா அவர்கள் "கல்யாண்ஜி (வண்ணதாசன்)" அவர்களின் "அந்நியமற்ற நதி" கவிதை தொகுப்பிலிருந்து சில கவிதைளை எடுத்து வந்திருந்தார்.

அந்த கவிதைகளை திரு. சுபைர் வாசித்தார்.

அந்த கவிதைகளில், ஒரு காதலன் காதலிக்காக குளத்தடியில் காத்திருக்கிறான். அவள் வர நேரமாகிறது. அந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் இயற்கையோடு ஒன்றிப்போய் விடுகிறான். அவள் தூரத்திலிருந்து கல்லெறிந்து குளத்தின் அமைதியை கெடுத்துவிடுகிறாள். அப்போது அவன் சொல்கிறான், "நீ வந்திருக்க வேண்டாம் இப்போது"...

இந்த வரிகளின் வீரியத்தை உண்மை நடையில் படித்தால் மட்டுமே விளங்கும். (என்னைப் போன்ற திருமணமாகாதவர்களுக்கு கல்யாண்ஜியை நினைத்து பிழைக்கத்தெரியாதவன் என்றே தோன்றுகிறது.)

திரு சிக்கந்தர் அவர்கள் வரும்போது வடையும், சமோசாவும் வாங்கி வந்தார். (எழுத்துகூடத்திற்கு வருவதற்காக Taxiக்கு கொடுத்த காசு சரியாப்போச்சு)

இந்த நேரத்தில், இந்த வாரத்தின் இறுதிப்பகுதியாக திரு. ராஜா அவர்கள் வெண்பா வகுப்பு எடுத்தார்.

கடந்த வாரங்களில் கலந்து கொள்ள இயாலாதவர்களுக்காக, எழுத்து, சீர், அசைகளைப் பற்றிய ஒரு பார்வையும், ஓரசைச்சீர் பற்றிய சில விதிகளையும் தந்தார்.

இந்த வகையில் எழுத்துக்கூடம் இனிதே நிறைவு பெற்றது.

இனி வரும் காலங்களிலும், அணில் போல தமிழுக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறோம்.

அன்புடன்,

எழுத்துக்கூடத்தின் சார்பாக,

அஹமது சுபைர்.

 
 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006