எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---13  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

பிரியமானவர்களை எதிர்பாராத இடத்தில் சந்திக்கும் தருணம் மிக அபூர்வமானது

. அது பேச்சற்று மௌனத்தில் கரைந்துவிடக்கூடியது .கேட்பதற்கும் சொல்வதற்கும் எவ்வளவோ இருந்த போதும் காலம் அந்த சந்தர்ப்பத்தை தராமல் நிசப்தமாக்கி விடுகிறது .பிரியமானவர்களை சந்தித்தும் அந்நேரத்தில் பேசிக் கொள்ள முடியாத துக்கத்தைப் போல் வலி தரும் விஷயம் உலகில் இல்லை.
-

எஸ்.ராவின் கதாவிலாசத்தில் அடுத்த வீடு என்ற பகுதியிலிருந்து ....
*

விடுமுறைக்கு தாயகம் போயிருந்த மக்கள் எல்லாம் மீண்டும் அரபு தேசம் திரும்பத் தொடங்கியிருக்கும்

,வெயில் சற்றும் குறையாத ஆகஸ்ட் மாத முதல் வெள்ளிக்கிழமையின் மாலை 3:30 க்கு நண்பர் பாலமுகுந்தன் வீட்டில் நடைபெற்ற எழுத்துக்கூட சந்திப்பின் நிகழ்வுகளை இந்த வாரமும் நண்பர் அஹமது சுபைர்தான் தொகுத்து வழங்குவதாய் இருந்தது . கடைசி கட்ட மாறுதலில் மீண்டும் அடியேன்...
நிகழ்வு

- 1
எழுத்துலகில் பிரபலமில்லாத ஆனால் தம் படைப்புகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டு சென்ற எழுத்தாளர்களை

கதாவிலாசம் மூலம் ஆனந்த விகடன் வழியே அறிமுகப்படுத்திய எஸ்.ராமகிருஷணன் என்ற எஸ் .ராவின் கதாவிலாசத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு எழுத்துக்கூடத்தின் முதல் நிகழ்வாய் படித்து அதைப் பற்றி அலசுவதுதான் முதல் அம்சம் என்பது அனைவரும் அறிந்ததே ..
இந்த வாரம் எடுத்துக் கொண்ட

அடுத்த வீடு என்ற பகுதியை பேராசிரியர் ஐயா மாசிலாமணி அவர்கள் வாசித்தளித்தார்கள். ஏறத்தாழ எல்லா நண்பர்களிடமும் இப்போது கதாவிலாசத்தின் புத்தகப் பிரதி கையில் இருக்க கிடைக்கப் பெறாதவர்களுக்கு மட்டும் நண்பர் கல்யாண் அந்தப் பகுதியை நகலெடுத்து வந்து வழங்கினார். அடுத்து தாயகம் வர இருக்கும் நண்பரிடத்தில் மேலும் புத்தகங்கள் வர இருப்பதால் விரைவில் எழுத்துக்கூடத்தின் பாடப்புத்தகமாக எல்லோர் கையிலும் கதாவிலாசம் பள்ளி மாணவன் கையில் இருக்கும் பாடப்புத்தகம் போல் காட்சியளிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோணுகிறது .
எஸ்

.ராவின் அடுத்த வீட்டு சகோதரி பற்றிய சின்ன வயது ஞாபகங்களுடன் இந்த வார எழுத்தாளராய் அறிமுகமாயிருப்பவர் எம்.வி. வெங்கட் ராம். சாகித்ய அகாடமி விருது வாங்கிய எம். வி.வெங்கட் ராம் நிறைய சிறுகதைகள், நாவல்கள் எழுதியதோடு மட்டுமல்லாமல் இலக்கிய இதழ் ஒன்றையும் நடத்தி வந்திருக்கிறார். தமிழ் இலக்கிய உலகின் அடையாளமாய் இருந்த தி .ஜானகிராமன் போன்ற இலக்கிய நண்பர்களைப் பெற்ற இவர்ஆங்கிலத்திலிருந்து படைப்புகளை மொழி பெயர்த்து வழங்கியது , 200க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியது போன்ற சேவைகளை செய்து தமிழுக்கு தொண்டு ஆற்றியிருக்கிறார்.
அவரின்

ஏழை என்ற சிறுகதையை இந்த வார கதாவிலாசத்திற்காக எடுத்தாண்டிருக்கிறார் எஸ் .ரா.தன் பழைய காதலனை பார்க்க ஒரு மழைநாளின் இரவில் வந்து எதுவும் பேசாமலே திரும்பி போகும் ஒரு பெண்ணின் கண நேர பரிமாணங்களை கேள்விகளாலேயே நிரப்பிவிட்டு முடிவுறும் சிறுகதைதான் ஏழை என்ற இந்த சிறுகதை . ஒரு மின்னல்வெட்டைப் போல் திடீரென வந்து போன அந்த நிகழ்வின் அபூர்வமான கணத்தை அப்படியே பதிவு செய்திருக்கும் கதை . எப்போது பெய்யும் எப்போது நிற்கும் என்பது மழைக்கும் மட்டுமல்ல .. வாழ்வின் அரிய கணங்களுக்கும் பொருந்தும் என்பதாய் நிறைவுறுகிறது இந்த படைப்பு .
நிகழ்வு

- 2
நண்பர் கே.வி .ராஜாவின் வெண்பா ஒரு பயிற்சி வெற்றிகரமாய் மூன்று வகுப்பை தாண்டிய நிலையில் நான்காவது பகுதிக்கு களை கட்டத் தொடங்கியது. தமிழாசியர்த்தனமாய் வறுத்தெடுக்காமல் இயல்பான உதாரணங்களிலும் எளிமையான நடையிலும் இந்த வகுப்பு அனைவரையும் கவர்ந்துகொண்டு விட்டது என்பது பங்கு பெறுபவர்களின் ஆர்வத்திலேயே பளிச்சிடுகிறது . இதை திறம்படவே ராஜா செய்கிறார். சீர்கள், சீர்களுக்கான பொதுவிதிமுறை வாய்ப்பாடுகள் என்று அலுப்புத்தட்டாமல் கொண்டு சென்று முடித்து குறள் வெண்பா அமைப்புக்கு தயார்படுத்தும் விதமாய் எல்லோர்க்கும் ஒரு குறள் தந்து அலகிட்டு ( சீர் பிரிக்கும் முறை ) காண்பிக்க அனைவரும் உற்சாகமாய் களம் இறங்கி விட்டனர்.
சரியாக இன்னொரு வகுப்புடன் முடிவடைய இருக்கும் இந்த வெண்பா பயிற்சி நிறைவு பெற்றபின் ரியாத் தமிழ் சங்க எழுத்துக்கூடத்தின் உறுப்பினர்கள் அனுப்பும் வெண்பா

( ம்)க்களால் சௌதி மண்ணில் தமிழ் மணத்தின் வாசம் இன்னும் கிளர்ந்துவிட்டு எழும் என்றொரு அசைக்க முடியாத நம்பிக்கை வந்திருக்கிறது . இதுவரை நடந்த வகுப்புகளை நம் மடலாற்குழுவில் தொகுத்து தரலாம் என்றிருக்கிறேன் . இதுபற்றிய ஒரு விரிவான பதிவை நண்பர் ராஜாவுடன் கலந்து கொண்டு விரைவில் நம் மடலாற்குழுவில் பதிக்க ஆவண செய்யப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் .
நிகழ்வு

- 3
சிறுகதைகள் எப்படி எழுதுவது என்பது குறித்து ஒரு கலந்தாய்வு நடந்தது

.தேன் கூடு வலைமனைத் தளம் தலைப்பு கொடுத்து நடத்தும் கதை/கவிதை/ கட்டுரைக்கான போட்டியில் கலந்து கொள்வதன் பொருட்டு சின்ன சின்ன படைப்புகளை எழுத தொடங்க முடியும் என்பதாய் விவாதித்தோம். இது தொடர்பாய் முதலில் ஒரு படைப்பு எழுதி அதை முதலில் நம் எழுத்துக்கூடத்தில் வழங்க , படிக்கும் அன்பர்கள் அதன் நிறை குறைகளை சுட்டிக்காட்டி திருத்த , விமர்சிக்க இப்படியாக ஒரு படைப்பு மெருகேற்றப்பட்டு சிறந்த படைப்பாக மாற்றுவது தொடர்பாய் நிறைய நேரம் விவாதிக்கப்பட்டது.
வரும் அடுத்த கட்ட எழுத்துக்கூட நிகழ்விலிருந்து தமிழ் உலகின் டாப்

10 நாயகர்களை பற்றிய ஒரு அறிமுகமும் அவர்கள் தமிழ் உலகில் ஏற்படுத்திய ஆரோக்கியமான பாதிப்புகள் பற்றியும் ஒரு புதிய தலைப்பில் உரையாற்ற இருக்கிறார்கள் ஐயா மாசிலாமணி அவர்கள் .இதுவும் நிச்சயம் எழுத்துக்கூடத்துக்கு சிறப்பு சேர்க்கும் முக்கிய அம்சமாகவே இருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன் .
நிறைவாக

ஐயா வெற்றிவேல் அவர்கள் உபயத்தில் குளிர்பானமும் ,பிஸ்கெட்டும் வழங்கப்பட கூட்டம் இனிதாய் முடிவடைந்தது.
விரைவில் ரியாத் தமிழ் சங்க அமைப்பில் நிகழ இருக்கும் சில விஷயங்களை கூறி இந்த பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்

.
>

ரியாத் தமிழ் சங்கம் நிறுவியிருக்கும் ஐந்து கூடங்களில் எழுத்துக்கூடம் தடை படாது சிறப்பான முறையில் நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே .அடுத்ததாய் கல்விக்கூடமும் துவக்கப்பட்டு வெற்றிகரமாய் நான்காவது சந்திப்பை எதிர்நோக்கி இருக்கிறது. தமிழ் படிக்க/எழுத தெரியாத அன்பர்களுக்கு தமிழ் கற்று கொடுக்கும் இந்த முயற்சி பரவலாய் நல்ல பயனை பெற்று தந்திருக்கிறது . அடுத்தடுத்த வகுப்புகளில் உறுப்பினர்கள் அதிகரித்துக் கொண்டிருப்பது இதற்கு நல்ல உதாரணம் .
>

ரியாத் தமிழ் சங்க இணைய வலைமனை முற்றிலும் புதிதாய் வடிவமைக்கப்பட்டு சீரமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அனேகமாய் இந்திய சுதந்திர தினத்தன்று உலகமெங்கும் உள்ளங்கையில் கொண்டுவந்து தரும் குட்டித்திரையில் ரியாத் தமிழ் சங்க இணையத்தளத்தை பார்க்கலாம் .
அடுத்தடுத்த ஆக்கப்பூர்வமான செயல்களை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் ரியாத் தமிழ் சங்கத்தின் எல்லா முயற்சியும் வெற்றி பெற இறைவனைப் பிரார்த்திப்போம்

. மெதுவாய் விளைவோம். உறுதியாய் வளர்வோம்... ஆலமரம் எங்கேனும் ஒரு இரவில் வளர்ந்ததாய் வரலாறு இருக்கிறதா என்ன..?
 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006