எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---14  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

இந்திய தூதரக கலையரங்கில் வாரம் ஒரு திரைப்படம்

( வெள்ளிக் கிழமை சினிமா ? ) போடத் துவங்கியதிலிருந்து எழுத்துக்கூட சந்திப்புக்கு சரியான நேர ஒதுக்கீட்டை மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது எழுத்துக்கூட நண்பர்களுக்கு ... சினிமா ஒன்றும் கட்டாயமில்லாத விஷயம் தான். ஆனால் எழுத்துக்கூடத்தின் சொச்ச நேர சுவாரஸ்யங்களை அது கபளீகரம் செய்து விடுமோ என்று ஒரு பயம் வந்திருக்கிறது.எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் உடனே கவனித்து இந்த நேர ஒதுக்கீடு தொடர்பாய் ஆவண செய்வார்கள் என்ற கோரிக்கையுடன் இந்தப் பதிவை தொடங்குகிறேன் ...
 

கரிசல் காட்டு இதிகாசங்களின் பிதாமகன் என்றழைக்கப்படும் கி .ராஜநாராயணனைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அவர் எழுதிய ஒரு சிறுகதையோடும் , எஸ்.ராவின் அறிமுக உரையுடனும் தொடங்கியது சென்றவார ( 18 - 08 - 2006 ) எழுத்துக்கூட சந்திப்பு நண்பர் பால முகுந்தன் வீட்டில்.. எண்பது வயதுகளின் அருகாமையில் இருக்கும் கி .ராவைப் பற்றியும் அவரது எழுத்துக்களைப் பற்றியும் நிறைய முன்பே கேள்விப்பட்டிருப்பதால் இந்த எழுத்துக்கூடத்தில் அவரைப் பற்றி நிறைய பேசுவதும் அவர் எழுத்துக்களைப் பற்றி அலசுவதும் மிகவும் இன்றியமையததாக போய்விட்டது .. இனி கி. ராஜநாராயணன் பற்றி எழுத்துக்கூடத்திற்கு வெளியே கேள்விப்பட்டவை முதலில்...
* * *

முதலில்

கரிசல் காட்டு இலக்கியம் என்பது எந்த பிரதேசங்களை சார்ந்தது என்பது பற்றி ஒரு சந்தேகம் நெடுநாள் வரை இருந்து வந்தது . இந்த வார்த்தைப் பிரயோகத்தை மற்றவர்கள் தம் எழுத்துக்களுக்கு சூட்டிய மகுடம் என்றே கி .ரா கருதுகிறார். கோவில்பட்டியும் அதை சுற்றியுள்ள இடங்களில் இருந்தும் எழுத்தாளர்கள் தோன்றியது ஒரு தற்செயலான நிகழ்ச்சி என்றே கி .ரா அடக்கமுடன் சொல்லிக் கொள்கிறார். ஏனெனில் இந்தப் பகுதியிலிருந்து இரண்டு பேர் சாகித்ய அகாதமி விருது வாங்கியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் கி .ரா. மற்றவர் கு .அழகிரிசாமி. கரிசல் இலக்கியம் என்பது ஒட்டுமொத்தமான உள்ளே அடங்கிப் போன கிராமங்களின் ( Remote Village) மக்கள் வாழ்க்கையைப் பற்றியதல்ல என்பது இங்கே குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது. சிதம்பரனார் மாவட்டம் ,இராமநாத புரம் மாவட்டம், நெல்லை மாவட்டத்தின் சில பகுதிகள் ,காமராஜர் மாவட்டம் ஆகியவை மட்டுமே கரிசல் இலக்கிய களங்கள் என்று கி.ரா கூறுகிறார் . கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், கதவு, வேட்டி, கரிசல் காட்டு கடுதாசி ,பிஞ்சுகள்,அந்தமான் நாயக்கர் போன்றவை கி .ராவின் மிகச்சிறந்த படைப்புகள் என்று அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன . இவரது எழுத்துக்களை வியந்து பார்த்த இலக்கிய உலகின் இன்னொரு பிதாமகன் சுந்தர ராமசாமி கி. ராவின் எழுத்துக்களில் செகோவ் பாதிப்பு இருப்பதாக பாராட்டுகிறார். எண்பதுகளின் பக்கமாய் வயது கூடிப்போனாலும் கிராமப் பாலியல் தொடர்பான கதைகளிலும், கட்டுரைகளிலும் கி .ராவின் எழுத்துக்கள் செய்த மாயாஜாலம் இளவயதினரையும் அவர்பால் இழுத்து கொள்ள செய்திருக்கிறது. வயது வந்தவர்கள் மட்டும் என்ற தொடர் எழுதியதின் மூலம் அதிகமான எதிர்ப்பையும் சம்பாதித்து தந்திருக்கிறது. வயதானவர்கள் தான் இந்த மாதிரியான விஷயங்களை இளம் தலைமுறைக்கு இதமாக பதமாக எடுத்து சொல்ல முடியும் என்று மென்மையான கருத்தால் அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் . கிராமத்து பாலியல் இலக்கியமும் நிறைய எழுதியிருக்கிறார். அதிகம் இதைப்பற்றி சொல்ல விரும்பவில்லை எனினும் கொஞ்ச நாள் முன்பு ஒரு வார இதழில் தொடராய் வந்திருந்த இவரது படைப்புகளில் ஒன்றில் பெண்கள் நிர்வாணத்திலோ, அரை நிர்வாணத்திலோ, குளிக்கும் போதோ யாரேனும் ஆடவன் வந்து விட்டால் ஏன் சட்டென மற்ற அவயங்களை விட்டு விட்டு மார்பை மட்டும் மறைத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்விக்கு "ஒரு பெண் அவள் பிறந்ததிலிருந்து எல்லா உறுப்புகளுமே அவளுடன் வளர்ச்சியடைந்து வருகின்றது என்பது இயற்கை. எல்லோருக்கும் தெரிந்த விஷயம் .ஆனால் மார்பகங்கள் என்பது அவள் பூப்படைந்ததற்கு பிறகு புதியதாய் வளர்ச்சியடையும் அவளது தோற்றத்தையை மாற்றியமைக்கும் ஒரு புதிய விஷயம் .அதனாலேயே இயற்கை இயல்பாய் தனக்குள் தோற்றுவித்த அந்த புதிய தோற்றத்தை - தான் மட்டுமே கவனித்து வந்த அந்த மாற்றத்தை பிற பார்வைகள் நோக்கும்போது நாணங்கள் உயிர்பெற்று தன்னிச்சையாய் மறைத்துக் கொள்கிறாள் என்று கி .ரா தந்த விளக்கம் எந்த பாட புத்தகமும் ,பல்கலை கழகமும் , ஆசிரியர்களும், பெரியவர்களும் இவ்வளவு நாசூக்காய் ,நாகரீகமாய் சொல்லித் தராத ஒரு விஷயம். பள்ளிப்படிப்பை கூட முழுமையாய் நிறைவு செய்யாத ஒரு பாமர எழுத்தாளன் - பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராக பணியாற்றியவர் .. நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர் என்பதனாலேயே கி. ராவைப் பற்றி இவ்வளவு சொல்வது என்பது தவிர்க்க இயலாததாகப் போய்விட்டது.
 

எழுத்துக்கூட நிகழ்வில் வாசிக்கப்பட்ட கி .ராவின் படைப்பும் பின் நிகழ்ந்தவையும் ...

ஒரு குடும்பத்தில் ஏற்படும் சரிவை அற்புதமாக படம் பிடித்துக் காட்டும் கி .ராவின் "கதவு" என்ற சிறுகதையைத் தான் கி .ரா பற்றிய அறிமுகத்துக்கு எஸ்.ரா கையாண்டிருக்கிறார் . இந்த கதை நாற்பதாண்டுக்கு முன்னால் எழுதப்பட்டது.சமீபத்தில் மறுபதிப்புக்கு எடுத்தாளப்பட்ட இந்த சிறுகதைக்கு இரட்டைக் கதவுகள் படம்போட்டு வெளிவந்தது அப்போதைய வாசிப்பாளர்கள் மத்தியில் சின்ன சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் தீர்வை செலுத்த இயலாத ஒரு ஏழை வீட்டின் கதவை ஊர்த் தலையாரியும் இன்னும் நால்வரும் பதிலீடாக கழட்டிக் கொண்டு போய்விட கதவில்லாத அந்த வீட்டின் சூழலை வறுமை நிலையை திரைப்படமாய் விவரிக்கிறது .கி.ராவின் எழுத்துக்கள் .கதவில்லாததால் குளிர் தாக்கி அந்த வீட்டின் குழந்தை இறந்து போய் விடுகிறது.  கழட்டி எடுத்துப் போன கதவு எங்கோ தெருவோரம் கிடக்க அதைப் பார்த்து அந்த வீட்டின் குழந்தைகள் சந்தோஷமாய் கட்டித் தழுவிக் கொண்டு அந்த கதவருகே இருப்பதாய் கதை முடிவடைகிறது.
இந்த கதையோடு சேர்த்து அன்றைய முழுப்பதிவையும் அஹமது சுபைர் வாசித்தளித்தார்

. எழுத்துக்கூடத்தின் ஆஸ்தான வாசிப்பாளர் என்று பட்டம் தரலாமா என்று சக நண்பர்கள் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக ஒரு சம்சயம்.  கொஞ்சம் தாமதமாய் வந்து சேர்ந்த நண்பர் ராஜா கி. ராவின் கோபல்ல புரத்து மக்கள் பற்றியும் கோபல்ல கிராமம் பற்றியும் தாம் படித்த கதையிலிருந்து சில பகுதிகளை எழுத்துக்கூடத்தில் பகிர்ந்து கொண்டார். இந்த கதையின் வரும் சில சாரம்சங்களை இயக்குனர் பாரதிராஜா தம் திரைப்படங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.  இதுவரை கேள்விப்படாத தகவல்...கூடவே ராஜா எடுத்து வந்திருந்த கி .ராவின் கோபல்ல கிராமம், கோபல்ல புரத்து மக்கள், அந்தமான் நாயக்கர் ஆகிய மூன்று நாவல்கள் அடங்கிய தொகுப்பை நண்பர் கல்யாண் படிப்பதற்கு வாங்க அவரிடமிருந்து நான் பறித்துக் கொண்டேன் . இப்போது அதைத் தான் படித்துக் கொண்டிருக்கிறேன். ரியாத் தமிழ் சங்கத்தின் ஐந்து கூடங்களில் ஒன்றான திறனாய்வு கூடத்தில் இந்தப் புத்தகத்தைப் பற்றி விமர்சிக்கவும், விவரிக்கவும் ஒரு எண்ணம் இருக்கிறது .. அனேகமாய் திறனாய்வுக் கூடத்தில் இனி மற்ற பதிவுகள் தொடர இது ஏதுவாய், முதல் முயற்சியாய் இருக்கும் என்றும் நம்புகிறேன்.
நேரங்கள் கடந்து விட்ட படியாலும்,  இந்திய சுதந்திர போராட்ட வீரன் பகத்சிங்கின் வாழ்க்கையை பிரதானமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான பகத்சிங் இந்திய தூதரகத்தில் திரையிடப்படுவதாய் இருக்க அதைப் பார்க்க போகும் ஏகோபித்த ரசிகர்களுக்காகவும் நண்பர் ராஜாவின் வெண்பா கற்றுத் தரும் வகுப்பு அடுத்த நிகழ்வுக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது .ஆனாலும் இருந்த கொஞ்ச நேரத்தில் புதிதாய் வந்த நண்பர்களுக்காவும் விடுப்புக்குப் பின் திரும்பிய நண்பர்களுக்காகவும் முந்தைய வகுப்புகளின் சாரம்சங்களை மறுபார்வை வகுப்பாக நண்பர் ராஜா நடத்தித் தந்தார் .
 

ஊர் வாசத்தை நினைவுபடுத்தும் மோர் கலந்து தந்து பாலமுகுந்தன் ஸார் உபசரிக்க எழுத்துக்கூடம் நிறைவுபெற்று கலைய நானும் சகோதரர் அஹமது இம்தியாஸும் இந்திய தூதர் ஐயாவை சந்திக்க சென்றிருந்தோம்.  ஐயாவிடம் முன்பு அவர்கள் வீட்டில் நடந்த எழுத்துக்கூடத்தை நினைவுபடுத்திப் பேச ஐயா அவர்கள் ஏன் இப்பொழுது எழுத்துக்கூடம் நடைபெறுவதில்லையா என்று கேட்டார்கள். எழுத்துக்கூடம் தவறாது ஒன்றுவிட்ட வெள்ளிகிழமை தோறும் நடந்து கொண்டிருக்கிறது ஐயா.. இப்பொழுது கூட கூட்டம் முடிந்துதான் இங்கு வருகிறோம் என்று சொல்ல ஐயா அவர்கள் கூட்டம் பற்றி கொஞ்சம் விசாரித்து விட்டு அடுத்த சந்திப்பை அவர்கள் வீட்டில் வைத்துக் கொள்ளலாமே என்று சகோதரர் இம்தியாஸ் அவர்களிடம் ஆலோசனை செய்தார்கள் . இம்தியாஸ் அவர்கள் அனுப்பிய மடல் படி தூதர் ஐயா அவர்களின் காரியதரிசியிடம் வரும் எ .கூட நிகழ்வுக்கு சில நாட்கள் முன்னதாக நம் எ.கூட ஒருங்கிணைப்பாளர்கள் அணுகி விபரம் கேட்பதன் மூலம் தூதர் ஐயா தலைமையில் மீண்டுமொரு எ. கூட நிகழ்வு நடக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் ஒருமணி நேரம் ஐயா அவர்களிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு அருகிலிருந்த கலையரங்கில் நுழைய பகத்சிங் மாணவப்பருவம் முடித்து சுதந்திர போராட்டத்தில் ஆர்வம் காட்டி சேர முனையும் காட்சி திரையில். லாலா லஜபதி ராய் வெள்ளையர்களால் தாக்கப்பட்டு மரணிக்கும் வரை பார்த்துவிட்டு வெளியேறினேன்.  ஒரே காரணம் அடியேனுக்கு கியாலே, டீக்கே தவிர வேறெதுவும் ஹிந்தி வார்த்தைகள் தெரியாததால்.. தேச விடுதலைக்கு காரணமான ஒரு இந்தியனின் வாழ்க்கை வரலாறு என்றாலும் உணர்வுப்பூர்வமாக ரசிக்க மொழி தெரிந்திருக்க வேண்டும் அல்லவா ..?

 
 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

. தங்கள் மேலான கருத்துகளை webmaster@riyadhtamilsangam.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006