எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---16  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் பதினாறாம் கூட்ட சந்திப்பு

- ஒரு பார்வை.

லக்கி ஷாஜஹான்

.

* * *

புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள்தெரியார்
உய்த்தகம் எல்லாம் நிறைப்பினும் மற்றவற்றைப்
போற்றும் புலவரும் வேறே பொருள்தெரிந்
தேற்றும் புலவரும் வேறு.

-

நாலடியார்.

புனிதமிகு ரமலான் நெருங்கிக் கொண்டிருக்கிறது

.அனேகமாய் இன்னும் சற்று தினங்களில் துவங்கி விடும் .பேரானந்தப் பெருநாளை தரக்கூடியதோடு இல்லாமல் நன்மைகளையும் பெற்றுக் கொள்ளும் ஆற்றல்மிகு நாள்களையும் தன்னகத்தே கொண்ட இந்த மாதத்திற்கும் சென்ற வாரம் 15-09-2006 அன்று நண்பர். திருவாளர் பாலமுகுந்தன் வீட்டில் நடைபெற்ற ரியாத் தமிழ் சங்க எழுத்துக்கூட நிகழ்விற்கும் தெரிந்தோ தெரியாமலோ ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டுமே பசித்திருத்தல் தொடர்பானவை. அதைப் பின்னர் சொல்கிறேன் தற்சமயம் எழுத்துக்கூட நிகழ்வுகள் அனைத்தும் நண்பர் பாலமுகுந்தன் வீட்டில் தொடர்ந்து நடைப் பெற்று வருவது அனைவரும் அறிந்ததே .விடுமுறைக்கு தாயகம் சென்று வந்தபின் அன்னாரின் குடும்பத்தார்கள் வருவதால் எழுத்துக்கூடத்தை நிலையான வேறு ஒரு இடத்தில் நடத்துவது பற்றி ஒருங்கிணைப்பாளர்கள் சிந்திக்கத் தொடங்க பாலமுகுந்தன் அவர்கள் தம் வீட்டிலேயே எழுத்துக்கூடத்தை தொடர்ந்து நடத்த கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். வீடும் தந்து வெளிநாட்டுக் குளிர்பானம் பெப்ஸியும் தாயக கலாச்சார உள்நாட்டு உற்பத்தி பானம் கருவேப்பிலை போட்டு தாளித்த மோரும் தந்து உபசரித்து எழுத்துக்கூடத்தை தொடர்ந்து தொய்வின்றி நடத்த அனுமதித்திருப்பதற்கு தமிழ் கூறும் நல்லுலகம் எழுத்துக்கூட அமைப்பாளர் - பங்காளர்களுடன் தம் நன்றிகளை தாராளமாக ஐயா அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறது .

இனி எழுத்துக்கூட நிகழ்வு பற்றி

....

* * *

உலகத்தின் ஜீவிதத்தையும் இயக்கத்தையும் தீர்மானிக்கும் அடிப்படை தேவையான பசியின் பல்வேறு பரிமாணங்களை பசிக்கொடுமை அல்லது பசியின் தேவை பற்றிய எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அதைப் பற்றிய எஸ்.ராவின் ஒரு அறிமுக உரையோடு துவங்கியது கதாவிலாசம் படிக்கும் நிகழ்ச்சி நண்பர் அஹமது சுபைர் வழக்கம்போல் வாசித்தளிக்க அந்த கட்டுரையோடு பயணிக்கத் தொடங்கியது எஸ் ராமகிருஷ்ணனின் எண்ண ஓட்டங்களும் எழுத்துக்கூட நண்பர்களின் அனுபவ பரிமாறல்களும்... தன்னைப் பார்க்க வந்த நண்பனை அழைத்துக் கொண்டு எஸ்.ரா வடலூர் வள்ளலார் அமைவிடத்துக்கு செல்வதிலிருந்து தொடங்குகிறது கட்டுரையின் தாக்கம் . அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற மந்திரத்தை வேதமாக கொண்டு பசித்தவர்களுக்கு உணவிடும் ,எந்நேரத்திலும் அணையாத அடுப்பைக் கொண்டிருக்கும் அந்த இடத்தைப் பற்றி விளக்குகிறார் தம் நண்பனுக்கு எஸ். ரா. இனம் , மதம், மொழி , தேசம் வித்தியாசம் பாராது யார் வந்தாலும் உணவிடுவதை மிகப் பெரிய அறமாக , கடமையாக வைத்திருக்கும் அந்த இடத்தின் தன்மையறிந்து நண்பன் வியப்பதினூடே சில நெகிழ்ச்சியான சம்பவங்களும், அனுபவங்களும் எஸ் .ராவினால் விவரிக்கப்படுகிறது.

தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்ற மகாககவியின் ஆவேச வரிகளில் இருந்தே உணவு தேடலின் அத்தியாவசியம் உள்ளங்கை நெல்லியாய் பளிச்சிடுகிறது. பசியென்று வந்தவர்க்கு உணவிடுதல் பற்றிய அறத்தை எல்லா மதங்களுமே அழுத்தமாய் போதிக்கின்றதுஇன்றளவு வடலூர் வள்ளலார் அமைவிடத்தில் அணையாத அடுப்புடன் வந்தவர்க்கெல்லாம் உணவு வழங்கிடும் அறவழி போல் உலகெங்கும் இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதால்தான் பூமி இன்னும் சுபிட்சமாகவே இருந்துக் கொண்டிருக்கிறது . சில இடங்களில் தெரிந்தும், தெரியாமலும் அதிக விளம்பரங்களின்றியும், ஆலயங்களில் அன்னதானம் என்ற பெயரிலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த தவம் போற்றுதலுக்குரியது என்றால் மிகையில்லை . வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாருக்குப் பின்னால் இன்றளவும் நடைபெற்று வரும் இந்நிகழ்வு பற்றி படிக்கையில் முகமது நபி பற்றிய ஒரு நிகழ்வொன்று என் நினைவாடலில்.. ஒரு முறை நபிகளார் தம் தோழர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில் தோழர்கள் கேட்கிறார்கள். இஸ்லாத்திலேயே சிறந்த செயல் எது..? என்று. அதற்கு நபிகளார் சொன்னார்கள்.பசியென்று வந்தவர்களுக்கு உணவிடலும் , அறிந்தவர் அறியாதவர் என்ற பேதம் இல்லாமல் ஒருவருக்கொருவர் சமாதானத்தை(ஸலாம்) தெரிவித்துக் கொள்ளுதலும் .

இதைத் தொடர்ந்து எஸ்.ரா அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் கு. .அழகிரிசாமியின் சிறுகதை ஒன்றும் அதே கருத்தை ஒட்டியதுதான். வாழ்ந்து கெட்ட ஒரு பெரிய மனிதர் ஒரு தினத்தில் பசி தாங்காது , தெரிந்த ஒரு சிற்றுண்டி சாலைக்கு செல்கிறார் .அதன் உரிமையாளரிடம் பேசிக் கொண்டே அவர் தனக்கு ஏதாவது சாப்பிட தருவார் என்ற எதிர்பார்ப்பிலேயே பேசிக் கொண்டிருக்க நேரம் கரைகிறது .ஆனால் அவரோ ஏதும் தந்தபாடில்லை.கடையை மூடும் சமயத்தில் எஞ்சியுள்ள உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு உரிமையாளர் கிளம்ப இவர் அதை கேட்க வாய்த்தகராறில் தொடங்கி கைக்கலப்பு வரை நீள்கிறது .இறுதியில் அந்த உரிமையாளர் அந்த உணவுப்பொருளைத் தூக்கி எறிய இவர் ரோஷம் மேலிட அதை எடுக்காமல் சண்டை போட்டாலும் தான் அந்த உணவுப்பொருளை சாப்பிடாது விட்டது குறித்து அந்த பசியுடனே சந்தோஷமும் கொள்கிறார் என்பதாய் முடிகிறது கதை . இதைப்படித்தவுடன் எப்போதே படித்த சுயம்புலிங்கத்தின் ஒரு சிறுகவிதை நினைவுக்கு வந்து போனது .

கைகால் இல்லாது
உறுப்புகள் கோரப்பட்டு
போன மனுசங்க
இருக்காங்க
வயிறு இல்லாத
மனுசன்
இல்லவே இல்ல...

எழுத்தாளர் கு.. அழகிரிசாமி நாகர்கோவில் - இடைச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் .அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன் . கி. ரா பற்றிய ஒரு எழுத்துக்கூட நிகழ்வு பற்றிய கட்டுரையில் இதுபற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.கு ..அழகிரிசாமியும் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பெற்றவர்.இவருடைய கதைகள் பெரும்பாலும் மனிதனின் வறுமைநிலையை சுற்றி எழுதப்பட்டதாகவே இருந்திருக்கிறது .

இதற்குப்பின் திரு வெற்றிவேல் ஐயாவும், நண்பர் ராஜாவும் வள்ளலார் பற்றிய சில செய்திகளை சுவைபட பகிர்ந்து கொண்டார்கள் .சென்னையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வள்ளலார் நகர் என பெயர் வந்த காரணத்தை வெற்றிவேல் ஐயா விளக்கினார்கள்.

எழுத்துக்கூட நிகழ்வின் இரண்டாம் பகுதி

( வெண்பா பயிற்சி )

நண்பர் கே.வி. ராஜாவின் வெண்பா பயிற்சி வகுப்பு வழக்கம்போலவே சுவாரஸ்யமான வகுப்பாக நடந்தேறியது. வெண்பா எழுதுதலின் சில முக்கிய விதிகளை அன்றைய வகுப்பில் நடத்திக் காட்டினார் ராஜா .அன்றைய கவிஞர்கள் ஔவையார், கம்பர், ஒட்டக்கூத்தர் முதலாய் இன்றைய கவிஞர்கள் வைரமுத்து , வாலி வரை சில ஒப்பீடு செய்திகளும் சுவையாக அலசப்பட்டன. இதுவரை நடந்த வெண்பா வகுப்பு பற்றிய பாடம் ரியாத் தமிழ் சங்க வலைமனையில் இடம்பெற்றது போல் இந்த வகுப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்களும் அதில் விரைவில் இடம்பெறும் .நண்பரை கலந்து கொண்டு அதையும் விரைவில் எழுதலாம் என்றிருக்கிறேன் .

வகுப்பின் முடிவில் நண்பர் ராஜா கலந்து கொண்டவர்களுக்கு இரண்டு தலைப்புகளில் வெண்பா எழுதி வர சொல்லியிருக்கிறார் ( வீட்டுப் பாடமாக ) .இனி வரும் வகுப்புகளில் இது அதிகமாகலாம். இது சரியாக வெற்றியடையும் பொருட்டு ரியாத் மாநகரில் மரபுக்கவிஞர்கள் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது... ( இப்போதே எழுத்துக்கூட மடலாற்குழுவில் ஒரே வெண்பா மழை ) .அடியேனும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் .

எழுத்துக்கூடத்துக்கு வரும்போது ஒரு வங்காளதேச ஓட்டுனரின் டாக்ஸியில் நானும் நண்பர் ஃபக்ருதீனும் பயணித்திருந்தோம். அவன் என் கையில் உள்ள கதாவிலாசம் புத்தகத்தை வாங்கி புரட்டி புரட்டி பார்த்தான். புத்தகத்தினுள் இருந்த படங்கள் அவனுக்கு வித்தியாசமாய் பட்டிருக்கும் போலிருக்கிறது . எடுப்பதும் பார்ப்பதும் வைப்பதுமாக இருந்தான். சிக்னலுக்கு சிக்னல் இந்த செயல் திரும்ப திரும்ப நடந்தது.பின் அதைப் பற்றி என்னிடம் ஆர்வமாய் விசாரித்தான் . எனக்குத் தெரிந்த அரைகுறை இந்தியில் விளக்கினேன் .அவனுக்கு என் மேல் மரியாதை அதிகமாகிவிட்டது போல் தெரிந்தது. அதுபோல் புத்தகங்கள் அவனுக்கும் பிடிக்கும் என்பதாக என்னிடம் பேசினான்.. அப்போ என் பொழைப்பு பத்தியெல்லாம் கூட இந்த புத்தகத்திலே எங்கேயாவது இருக்கும் இல்லையா என்றான் .பேச்சு சுவாரஸ்யமாக போக ஃபக்ருதீன் என்னருகே வந்து இது கூட நல்லாத்தான் இருக்கு ..இதை வச்சி ஒரு சிறுகதை எழுதிடுங்க ஷாஜி என்றார். எனக்கும் ஆசைதான் .. பார்ப்போம். இப்படி பார்த்தது , கேட்டது , ரசித்தது எல்லாவற்றையும் எழுத ஒரு உத்வேகம் எழுத்துக்கூடத்துக்கு வந்த பிறகுதான் அதிகரித்திருக்கிறது என்பது மில்லியன் டாலர் உண்மை .

=================================================


 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.