எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---17  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் பதினேழாம் கூட்ட சந்திப்பு
- ஒரு பார்வை .
லக்கி ஷாஜஹான்.

* * *

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் உலகத் திரைப்பட வசூல் தரத்தில்

32 ஆவது படம் என்ற சாதனையை தந்திருக்கிறது..இதே படம் கன்னடத்தில் ஆப்த மித்ரா என்ற பெயரில் வந்து அங்கும் படம் எடுத்த தயாரிப்பாளரை ஏமாற்றவில்லை .சந்திரமுகியின் நதிமூலம்-ரிஷ்மூலமான மலையாள பதிப்பு மணிச்சித்திரத் தாழ் படமும் நன்றாக ஓடி அதில் நடித்த நடிகைக்கு மிகப்பெரிய விருதெல்லாம் வாங்கிக் தந்திருக்கிறது . கதைக்கரு என்னவோ ஆங்கிலத்தில் Dual Personality எனச் சொல்லப்படும் இரட்டை ஆளுமைத் தன்மை மனநோய் என்றாலும் ரசிகர் மத்தியில் வெற்றி பெற்றதற்கு காரணம் லக்கலக்கலக்கலக்கலக்க... பேய் தான்.

 

என்னடா எழுத்துக்கூட நிகழ்வு பற்றி சொல்கிறதாய் தலைப்பிட்டு விட்டு சம்பந்தமேயில்லாமல் சந்திரமுகி பற்றி எழுதியிருக்கிறானே என்று நீங்கள் குழம்புவது தெரிகிறது .இந்த வாரம் எழுத்துக்கூடத்தில் எஸ்.ராவின் கதாவிலாச பகுதியின் சாரம்சம் பேய் பற்றியதுதான் .. அவர் அறிமுகப்படுத்தி சிலாகித்திருக்கும் எழுத்தாளர் புதுமைப்பித்தன் சிறுகதையும் பேய்பற்றிதான் என்பதால் மேற்சொன்ன ஒரு கொசுறு செய்தியுடன் இந்த பதிவை ஆரம்பித்திருக்கிறேன்.

ரமலான் விரத நாட்களை அனுஷ்டிக்கும் விதமாக அதன் வழிபாடு மற்றும் செயல்முறைக்கு இடர்ப்பாடு நேராதவாறு எழுத்துக்கூட ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்கனவே எடுத்த முடிவு படி எழுத்துக்கூட கூட்டத்தின் வழக்கமான கூட்ட நேரம் மாற்றியமைக்கப்பட்டு பகல் 1:30 மணிக்கு நண்பர். திருவாளர் பாலமுகுந்தன் அவர்கள் வீட்டில் சென்ற வார எழுத்துக்கூட கூட்டம் தொடங்கியது.கொஞ்சம் வெயில் கொளுத்தி அனத்துகின்ற நேரம் தான் .. என்ன செய்வது..?

இனி எழுத்துக்கூட நிகழ்வு பற்றி

....

* * *

உலகத்தில் பேய் பிசாசுகள் உண்டா இல்லையா என்று ஆதிகாலத்திலிருந்து இன்றைய வரை ஒரு சர்ச்சை வந்து கொண்டேயிருக்கிறது

.திருமணமானவர்களுக்கு அந்த பயம் இல்லை என்றும் அதனூடேதான் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதாகவும் அனுபவஸ்தர்கள் சொல்கிறார்கள் .நான் பேயை 70mm-ல் பார்க்கும் போது மட்டும் கொஞ்சம் அரண்டு போயிருக்கிறேன் . மற்றபடி ஆங்கில பேய்களை எல்லாம் வீடியோவில் சத்தத்தை ஊமையாக்கிக் கொண்டு பார்த்தால் நல்ல நகைச்சுவைப் படம் பார்த்த திருப்தி கிடைக்கும்.பேய்ப்பிடித்தவர்களைப் பார்க்கும்போது பயத்தை விட பரிதாபமே மேலோங்குகிறது . கிராமத்து பேய்கள் பெரும்பாலும் பிரியாணிக்காகவும் , சுருட்டு சாராயத்துக்காகவும் மட்டுமே மனிதர்களை பிடித்துக் கொள்கிறது. நகரத்தில் பதவி ,பணம் என நிறைய வசதிகளுக்காக மனிதர்களே அல்லாடுவதால் பதவிப்பேய் ,பணப்பேய் என்று அவர்களே ஆல் இன் ஆல் போல் ஆவி இன் ஆவியாக ஒற்றைப்பிம்பமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .ருத்ரன் இதுபற்றி ஏதும் பதில் வைத்திருக்க கூடும். ரியாத்தில் பேய் இருக்கிறதா என்று தெரியவில்லை.நம் தேசத்திலிருந்து வந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்று யோசித்தால் அதுவும் சான்ஸ் இல்லை . இங்கு முறையாக வருபவர்களுக்கே இம்சை கிரமம் மன்னிக்கவும் இமிக்கிரேஷன் பிரச்னைகள் இருக்க பேய்க்கு நிச்சயம் வாய்ப்பில்லை.

எஸ்.ரா தம் அறிமுக உரையில் சொல்லும் பேயின் தன்மைகள் உலகம் முழுவதற்கும் பொதுவானதாகவே எண்ணத் தோன்றுகிறது .அவை இரவு 12 மணிக்கு மட்டுமே நடக்கத் தொடங்குகின்றன .பெண் பேய்கள் எப்போதுமே வெள்ளை உடையைத்தான் அணிகின்றன. ஆண் பேய்களுக்கு இப்படி எந்தக் கட்டுப்பாடும் இல்லை.குறிப்பாக வெள்ளைச் சட்டை, வெள்ளை வேஷ்டி அணிவது இல்லை. ( அடிக்கடி துவைக்க வேண்டிய பிரச்னை.. பின் லாண்டரி பில் போன்ற பிரச்னைகள் அதனால் கூட இருக்கலாம் என்று எழுத்துக்கூடக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது .)கதைகளில் வரும் பேய்கள் ஒரு லட்சியத்துடனேயே இயங்குகின்றன.அவை யாருமற்ற வீடுகளில்தான் குடியிருக்கின்றன . யாருமற்ற பாதைகளில் தான் நடக்கின்றன. யாருமற்ற கிணற்றிலேதான் குளிக்கின்றன , முகம் கழுவுகின்றன, பல் விளக்குகின்றன .. சில பேய்கள் விதிவிலக்காக 13 ஆம் எண் வீட்டில் மட்டுமே தங்குகின்றன.

எழுத்துக்கூடத்தில் இந்தப் பதிவு அடியேனால் படிக்கப்பட பல அமானுஷ்ய விவாதங்கள் எஸ்.ராவின் பார்வைகளை மையமாக கொண்டே விவாதிக்கப்பட்டன . பேய்பிடித்தவர்கள் செய்யும் அசாதாரண வேலைகள் ஒரு மனநோய்க்கு உட்பட்டவையே என்று ஐயா மாசிலாமணியும் பேய்கள் பிடித்து அமுக்குவது மூச்சுத்திணறுவது என்பதெல்லாம் காற்றில் மிகுதியாய் வரும் கார்பன் - டை - ஆக்ஸைடு காரணமாகவே என்று நண்பர் ராஜாவும் அறிவியல் ரீதியாய் விளக்கம் கொடுத்தார்கள். புளிய மரத்தினடியில் படுக்கும் நோயாளிகள் பேயடித்து செத்துப் போனதாக கிராமங்களில் உலவும் கதைகள் உண்டு. கார்பன் - டை - ஆக்ஸைடு அதிகம் பிரசவிக்கும் தன்மை கொண்ட மரங்களுல் புளியமரங்களும் ஒன்று. இவை நோயாளிகளைத் தாக்கும் போது மூச்சுத் திணறல் எடுத்து இயல்பாய் இறக்கும் தன்மையிலும் புளியமரங்கள் சாபத்தை பெற்றுவிடுகின்றன . பாலைநிலங்களில் மீத்தேன் வாயு திடீரென காற்றுடன் வினைபுரிந்து தீப்பிடித்து நகர்வதை கொள்ளிவாய் பிசாசு என்று மக்கள் பயந்தோடிய கதைகளை எல்லாம் படித்திருந்தது நினைவுக்கு வந்தது .ஆக பேய்களை விடவும் பேய்கள் பற்றிய கதைகள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை என்ற பேய்கதையை- சிறுகதையை எஸ் .ரா புதுமைப்பித்தனின் எழுத்துக்களுக்கு உதாரணம் காட்டி எடுத்தாண்டிருக்கிறார்.உலகின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியர்கள் எவரோடும் சமமாக வைத்து பேசப்படக்கூடிய எழுத்து புதுமைப்பித்தனுடையது .அவரின் தலை சிறந்த எத்தனையோ சிறுகதைகள் இருக்க ஏன் பேய்பற்றிய இந்த சிறுகதையை எஸ். ரா எடுத்துக் கொண்டார் என்று தெரியவில்லை.நேரில் சந்தித்தால் கேட்க வேண்டும்.1934 லில் இருந்து எழுதத் தொடங்கிய புதுமைப் பித்தன் அதன் பிறகு தொடர்ந்து பதினாலு ஆண்டுகள் சிறுகதை,கவிதை ,நாடகம்,சினிமா, அரசியல் கட்டுரைகள் மொழிப்பெயர்ப்பு கதைகள் என பன்முகத் தன்மைக் கொண்ட கலைஞனாக விளங்கினார்.இவர் கதைகள் தமிழ் வாழ்வின் நாடித்துடிப்புகள் எனலாம் .கடவுளைக் கூட காபி கிளப்புக்கு அழைத்துச் செல்லும் ஆபூர்வமான பகடி எழுத்துப் புதுமைப்பித்தனுடையது . தமிழ்ச் சிறுகதையுலகின் உன்னதக் கலைஞன்.பாரதியைப் போல் அசலானதொரு தமிழ்க் கலைஞன் .அவரது கற்பனையும் மொழியும் தமிழ்ச் சிறுகதை உலகுக்கு ஒரு புதுப்பாய்ச்சலை உருவாக்கியது என்றால் அது மிகையில்லை .

பேய் பற்றிய அவரது சிறுகதையும், எஸ்.ராவின் பேய் பற்றிய அனுபவங்களும் எழுத்துக்கூடத்தின் அன்றையக் கூட்டத்தை தொய்வின்றி உற்சாகமாக கொண்டு செல்ல உறுதுணையாக இருந்தது என்று சொல்ல வேண்டும் .ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். பேய்கள் மட்டும் இல்லையென்றால் பி .டி.சாமியிலிருந்து தக்காளி சீனிவாசன் தொடங்கி பேய்விரட்டும் ஒப்பந்தக்காரர்கள் என்று நிறையப் பேர் பொருளாதார ரீதியாக பாதிப்படைய நேரிடும் என்று விளங்குகிறது . ஆவிகள் காலை டிஃபனிலிருந்தே நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக கலந்துவிடத் தொடங்குகிறது ( ஆவி இல்லையென்றால் இட்லி அவிப்பது எப்படியாம்.. ? ) என்ன ஒன்று நம்மாட்கள் ஓரளவு திருப்தியானவுடன் நின்றுவிடுகிறார்கள்.ஆவியைப் பயன்படுத்தி இட்லியும் புட்டும் அவிக்கலாம் என்பதோடு நம்மாட்கள் ஆராய்ச்சியை நிறுத்திவிட மேற்குலகில் அதை வச்சி ரயிலும் விடலாம் என்று கொஞ்சம் விரிவாய் போய்விட்டான்.. சரி விடுங்கள் நான் தலைப்பை விட்டுவிட்டு எங்கெங்கோ போய்விட்டேன்.

எழுத்துக்கூட நிகழ்வின் இரண்டாம் பகுதி

( வெண்பா பயிற்சி )

நண்பர் கே.வி.ராஜாவின் வெண்பா பயிற்சி வகுப்பில் இந்த முறை முதலிருந்து நடத்திய பாடம் அனைத்தும் மீண்டும் மீள்பார்வையாக மற்றொருமுறை நடத்தித் தருமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டது . கொஞ்சம் கூட சலிப்பின்றி மீண்டும் முதலிலிருந்து தற்போதைய வகுப்பு வரை உள்ளப் பாடங்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் நடத்தினார் நண்பர் .வாத்தியாரின் வகுப்புகள் விரயமாகவில்லை. எழுத்துக்கூட அன்பர்கள் எல்லாருமே இப்போது ஆர்வமாக வெண்பா எழுதத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது . தவறோ சரியோ எல்லாருமே முயற்சிக்கிறார்கள் என்பது பாராட்டப்பட வேண்டிய விஷயமே.

இந்த முறை கொஞ்சம் வகுப்பு இடைவேளை கிடைக்க மறைந்த நடிகை பத்மினி பற்றி நண்பர் ராஜா "பத்மினியைப் பற்றியொரு பா" என்று ஒரு ஈற்றடிக் கொடுத்து எழுதச் சொன்னார். ( அந்தக் கவிதைகள் எல்லாம் எழுத்துக்கூட மடலாற்குழுவில் கிடைக்கும் ) .இதுவரை நண்பர் ராஜா நடத்திய வகுப்பின் சாரம்சங்கள் தொகுக்கப்பட்டு ரியாத் தமிழ்சங்க வலைமனையில் கிடைக்கின்றது .இரண்டாவது பாடத்தொகுப்பும் பரிசீலனையில் இருக்கிறது.விரைவில் வலையேற்றப்பட்டு விடும் .

 எழுத்துக்கூடச் சந்திப்பை நிறைவாக முடித்து விட்டு ஒரு நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு திரும்பும் போது இரவு மணி பத்து ஆகிவிட்டிருந்தது.  'ரவ்தா' என்ற இடத்திலிருந்து 'பத்தா'வுக்கு திரும்ப 'கோஸ்டர்' எனப்படும் 'சவூதிக்கே உரித்தான' மினிபஸ்ஸில் பயணித்தோம்.

"இந்த பஸ்ஸில் வந்து பல நாளாயிடுச்சு" - இது ஃபக்ருத்தீன்.

"நான் தினமும் இதுல போறேன், என்ன ஒண்ணு ஸ்லோவா போய் வெறுப்பேத்துவானுங்க" - இது நான்
 
"கன்னா பின்னானு ஓட்டுவாய்ங்க, இவங்களாலயே அடிக்கடி ட்ராஃபிக் ஜாம் ஏற்படும்"
 
"என்ன தான் இருந்தாலும், திறமையா ஓட்டுவாய்ங்க, இவங்களால விபத்து அதிகம் ஏற்படறதில்ல அதேநேரம், இவங்க சின்ன சின்னதா செய்யற மரபு மீறல்கள் ரசிக்கும்படி இருக்கும்" (யாருங்க, கொரல் உடறது, "அடப்பாவிகளா, எதஎதத்தான் ரசிக்கறதுண்ணு இல்லியா?ன்னு)

"சரி, இத வெச்சு ஒரு வெண்பா எழுதாலாமா?"

"ஹஹாஹா!, இது நல்லாருக்கே, இந்தாங்க, ஈற்றடி 'புதுக்கவிதை போலாகும் பஸ்' "

"நீங்க ஒரு வரி, நான் ஒரு வரின்னு மாத்தி மாத்தி எழுதலாமா?"

"ம், ஆரம்பிங்க"

"சொந்தத்தில் வாகனம் செலுத்துவார் பயந்திட"

" ..ம்ம் அப்புறம்"

"இப்ப, நீங்க தான்"
 
".. சரி எழுதிகிடுங்க,

"அந்தநிலை வாடகை ஓட்டுனரும் -எந்த"
 
"மதிப்பின்றி நகரும் மரபை மீறிய

"புதுக்கவிதை போலாகும் பஸ்"
 
"கொஞ்சம் தளை தட்டுதே.."
 
"சரிபண்ணிடலாம் இப்ப பாருங்க"

சொந்தத்தில் வாகனம் செல்லும் சிரமத்தில்
அந்தநிலை வாடகை ஓட்டுனரும் - எந்த
மதிப்பிலும் செல்லும் மரபினை மீறும்
புதுக்கவிதை போலாகும் பஸ்!
 

 

(அஸரீரி: அடப்பாவிகள, பஸ்ஸுல போனாலும், பாத்ரூம்ல போனாலும் இந்த வெண்பாவ விடமாட்டீங்களா?)

சரி சரி, வண்டியை விட்டு எறங்குங்க,

"இருங்க, இருங்க, 'ராஜா' வந்து 'ரைட்' சொல்லட்டும், அதுவரைக்கும் ஹோல்டான்" :-))

 =================================================

லக்கி ஷாஜஹான்
தமிழே சுவாசமாய்...

=================================================

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.