எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---18  ஒரு பார்வை.

                 - பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

எழுத்துக்கூடத்தின் 18 ஆம் கூட்ட  சந்திப்பு 
 

வழக்கம் போல எழுத்துக்கூடத்தின் பதினெட்டாவது அமர்வும் பாலமுகுந்தன் ஐயா அவர்கள் இல்லத்தில் இனிதே நடைபெற்றது. 

இந்த வாரம் சிறுகதையாளர் வண்ணநிலவன் (உ. நா . இராமச்சந்திரன்) எழுதிய "எஸ்தர்" என்கிற சிறுகதை எஸ்.ராவின் வழியே எடுத்துக்கொள்ளப்பட்டது. நண்பர் கல்யாண் தம் நளினக்குரலில்,'பண்பலை'யில் ஒரு சிறுகதை போல மிருதுவாகவும் சுவையாகவும் வாசிப்பு நிகழ்ந்தது .

   தீக்குச்சியை செலவிடுவதும் பாரமாகி விடுகிற பொழுதில், பஞ்சம் பிழைக்க பரம்பரை வீட்டையும் ஊரையும் விட்டு புலம் பெயர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஒரு குடும்பத்தில், சுமையாகி விடுகிறாள்   ஒரு வயது முதிர்ந்த பாட்டி. சுமந்தவரே சுமையாவதும் வாழ்வின் அவலங்களில் ஒன்றுதான் போலும். 

 பஞ்சம் பிழைக்கப் புறப்படுவதற்கு முந்தைய இரவு குடும்பத்தின் தலை(வி)யெனத் திகழும் எஸ்தர் சித்தி   பாட்டியின் பக்கத்தில் சென்று படுத்துக்கொள்கிறாள் . விடிந்ததும் பாட்டி இறந்துப்போயிருப்பது தெரிய வருகிறது. இப்படியாக,  'எங்கெல்லாம் பாட்டியையும் நாம் அழைத்துச்சென்று அல்லல்படுவது' என்று  தவிக்கிற குடும்பக்கவலைக்கு விடையாகவும், வாசகர்களிடம் வினாவாகவும்   அந்த மரணம் நிகழ்வதை சொல்லாமல் சொல்லியிருக்கிற வண்ண நிலவனின் எழுத்து ஒரு உயர் ரசனைக்கு வாசகனை உந்தித் தள்ளுவதை எஸ்.ரா இயல்பாக எடுத்துக்காட்டியிருந்தார்.

சிறந்ததொரு சிறுகதையை, அதன் ஆக்கத்தை; ஆசிரியரை சிலாகிக்க வரும் ஒவ்வொரு முறையும் தன்னை ஈர்த்த அம்சங்களையும் ஒரு புனைவாகவோ, அபுனைவாகவோ யாரும் அறியாவண்ணம் எஸ்.ரா சொல்லிச்செல்வதை அறிவோமில்லையா, அவ்வகையில் இம்முறை மண்.

 

மனிதனுக்கு பிறப்பால் மட்டுமல்ல, இறப்பாலும் தான் மண் மனநெருக்கம் தருகிறது என்பதை தன் அனுபவம் ஒன்றின் வாயிலாக தொட்டுக்காட்டியிருந்தார். 'மண்ணைப் போற்றினாலும், 'மண்ணாய்ப் போவதை' வசவாகத்தான் வைத்திருக்கிறான் மனிதன் " என்கிற என் கவிதையொன்று  மனதில் மீண்டும் வந்துப்போனது..  .

 இரண்டாம் நிகழ்வாக, முனைவரும் புரவலருமான மாசிலாமணி ஐயா அவர்கள் தமிழிலக்கியம், தமிழ்ச்சமூகம் பற்றிய தன் தொடர் உரைக்குத்  திறப்பளித்தார்கள். தமிழில் மிகுந்த தாக்கம் ஏற்படுத்திய   ஐம்பது பேரில் முதல் பத்துபேரை   வரிசைப்படுத்தி விளக்கம் தந்து சுவைப்படுத்தி அறிவை விரிவு செய்ய முன்வந்த பேராசிரியருக்கு மனமார்ந்த நன்றிகள்.

இவ்வுரை தனி இழையாகத் தரப்பட வேண்டும் என்று நம் அமைப்பாளர் கல்யாண் கேட்டுக்கொண்டதால் அதை விரிவாக இங்கு குறிப்பிட இயலாது தான். எனினும் ஒரு சோறு பதமாக சிலவற்றைச் சொல்லலாம் :

 1). திருவள்ளுவர் தொடங்கி, அவ்வையார் வரை செல்கிற பட்டியலில் ஒற்றைச் செங்கோல் இருவர் கையில். மற்றதெல்லாம் எழுதுகோல்களே.

2).முதல் நூல், சார்பு நூல், விளக்கவுரை, மொழிபெயர்ப்பு நூல்,  கடைநூல் என்று நூலெழுதுவாருக்கும் அளவு  சொன்ன தொன்மைஆசான் தொல்காப்பியரே .

3). அகத்திணையில் பெயர்கள் கூடா. புறத்திணையோ பெயரின்றி கூடா - இதுவும் தொல்காப்பியர் சொல்லியிருப்பதாகப் பேராசிரியர் சொன்னது.

 பேராசிரியர் அவர்களின் உரையில் தமிழறிவு தழைக்கும் . எழுத்துக்கூடம் எழுந்தினி வேகமாய் நடக்கும் .

தீபாவளி மணம் கமழ அதிரசம் முறுக்கினை அனைவர் வயிற்றுக்கும் ஈந்து மனம் நிறைத்தனர் மாசிலாமணி ஐயா - விஜிமா தம்பதியினர் . இந்த வருட தீபாவளியுடையது தான் என்று விஜிமா ஆணித்தரமாக அறிவித்ததை நம்பி அடுத்த அமர்விலும் அதிரசம் கிடைக்குமென்றால் தன் பயணத்தையே தள்ளி வைக்க தயார் என்று ஒரு நண்பர் முடிவெடுத்ததை இங்கு நான் விவரிப்பது நல்லதில்லை :-)), விட்டு விடுகிறேன்.

"மசூர் பாகு" (கடலைமாவுக்குழம்பு) என்கிற பதார்த்தம் தமிழனின் குளிர்மூளையில் "மைசூர்பாக்காக" இறுகிப்போனதையும் முனைவர் ஐயா அவர்களின் தயவில் அசைபோட   முடிந்தது.( பல்லை பதம் பார்க்கச்செய்யும் பாகை மட்டுமாவது பாக்கு என்று சொல்லிக்கொள்ளலாம் என்பது அடியேனின் அபிப்ராயம்).
 

இன்னொரு அதிரசமாய் திகழ்ந்துவரும் ராஜா அவர்களின் 'வெண்பா வகுப்பு ' இந்த வாரம் அவருடைய வருகையின்மையால் தடைப்பட்டது . குடும்பத்தாரின் உடல்நலக்குறைவு காரணமாக ராஜா அவர்களால் வர இயலாது போனதாக கல்யாண்   குறிப்பிட்டார் .

பொறுமையாகவும் , அருமையாகவும் , குளிர்நீராலும் , பழச்சாறாலும், அவ்வப்போது தன் ஆழிய கருத்துக்களாலும் உபசரித்த பாலமுகுந்தன் ஐயா அவர்களும் நன்றிக்குரியவர்களே .

 

=================================================

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.