எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு -2  ஒரு பார்வை.

       - கல்யாண்

எழுத்துக்கூடத்தின் இரண்டாம் கூட்டம்

பிப்ரவரி மாதத்தில் கிளுகிளுக்கும் குளிர்காற்று ஆச்சரியப்படும் விதத்தில் அங்கிருந்தோர் அனைவரையும் தழுவிச்சென்று கொண்டிருந்தது. அது ஒரு மதியமும் மாலையும் கலந்த நேரம். நரகாசுரனை மரணிக்கச்செய்ய அப்படி ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்ததாக கதை உண்டு. ரியாத் தமிழ் சங்கம், சோம்பல் என்னும் அசுரனை அழித்து எழுத்தாளர்களை உருவாக்கத் தேர்ந்தெடுத்தெடுத்த வெள்ளிக்கிழமை, அலுவலகம் செல்லாத நாளின் ரியாத் நகரின் மயான அமைதியை அனுபவிக்கும் சுகத்தினை கெடுக்கக்கூடியதாக இருக்குமோ என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது. ஆனால், அந்த கூட்டம் முடிந்த பின்னர், கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சும் கருத்துக்களும் அப்படிப்பட்ட எண்ணங்களையே இல்லாமல் செய்துவிட்டிருந்ததுதான் உண்மை.

அன்றைய தினம் தலைப்பு ' எஸ்.ரா எழுதிய கதாவிலாசத்தின் இரண்டாம் கதாசிரியர், திரு. ஆ.மாதவன் அவர்கள் பற்றி. அழுத்தமாக ஏற்றத்தாழ்வுகளுடன் சுவாரஸ்யமாக அனுபவித்து படித்துக்கொண்டிருந்தார் நண்பரொருவர். ஆ.மாதவன் அவர்களைத்தேடி எஸ்.ரா பயணித்த விபரம் அந்த கட்டுரையில் முதலில் எழுதப்பட்டிருந்தது. திருவனந்தபுரத்தின் அந்த சாலையில் அப்படி ஒரு மனிதரை யாருமே அறிந்திருக்கவில்லையாம்! 'பாண்டியா' என்று கேட்டார்கள் என்று மட்டும் சொல்கிறார். பேச்சு இப்பொழுது 'பாண்டி' பற்றி திரும்பியிருந்தது. தமிழர்களை பாண்டியர்களாக்த்தான் திருவனந்தபுரத்தினர் குறிக்கிறார்கள் என்பது எனக்கு புதிய செய்தி. 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்ற பழமொழிக்கு இரண்டு அர்த்தங்கள் இருக்கக் கூடும். ஒன்று சோழியன் என்ற சோழி உருட்டும் ஜோசியக்காரரின் குடுமி காரணமில்லாம ஆடாது என்பதாகவும், மற்றொருந்து 'சோழ நாட்டி'னரின் குடுமி என்ற அர்த்தமும் இருந்திருக்கலாம். 'தஞ்சை குசும்பு' என்பதும், தஞ்சை வசவு நடை என்பதும் தனித்தன்மை வாய்ந்ததாக பேசப்படுவதுண்டு! கூடவே 'கொல்டி' என்று நாம் கூப்பிடுவதுபோலத்தானே அவர்களும், என்று தோழி ஒருவர் கூற, உண்மைதானே என்று எல்லோருக்கும் தோன்றியது!

எஸ்.ரா - வின் கதா விலாசத்தில், தெரிந்து கொள்ளவேண்டிய, எழுத்தார்வலர்கள் அறிந்து கொள்ள வேண்டிய விதயங்கள் நிறையவே இருக்கிறது. ஒரு எழுத்தாளரை வாசகர் தேடிச் செல்வது என்பதில் தவறில்லை. ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தன்னம்பிக்கையும், எழுத்தார்வமும் நிரம்பிய, எழுதவும் தெரிந்துவிட்ட பலர் அதை ஒரு மேம்போக்காக மட்டுமே வைத்துக்கொள்வதென்பது இயல்பு. ஆனால், எஸ்.ரா இந்த கதாவிலாசப் பக்கங்களில் அவருடைய உணர்வுகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார். ஆ. மாதவனை தேடிக்கொண்டிருந்தவர், அவருடன் பேசிக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது, தேடி அலைந்ததை முகத்துக்கு நேர் சொல்ல கூச்சப்பட்டிருந்த அனுபவத்தை பதிவு செய்திருப்பது, அவரது அனுபவம் வாசகர்களை நேரடியாகச் சென்றடையும் உத்தியாகவும் மாறிவிடுகிறது. தன்னைப் பொருத்தி வைத்து பார்க்கும் வாசகனாக இந்த கட்டுரைகளை எஸ்.ரா எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரியவருகிறது.

'கதாவிலாசம்' விமர்சன பாணியில் எழுதப்படாமல், ஒரு முன்னுரை, கதை, அனுபவத்துடனான முடிவு, எழுத்தாளர் குறிப்பு என்று வித்தியாசமான ரசனைப்பதிவாக எழுதப்பட்டதனால்தான், தொடர்ந்து வாசிப்பும், உள்வாங்குதலும், ரசிப்பும், விமர்சிப்புமாக அதனை அலச முடிகிறது!

வாசகனும் எழுத்தாளனும் சமதளத்தில் இருந்திட வேண்டும். அப்பொழுதுதான், எழுத்தாளன் சொல்வது வாசனை சரியான விதத்தில் 'ரீச்' ஆகும். 'பக்கிம் சந்திர'ரின் எழுத்துக்கள் புரியவில்லையே என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, தாகூரின் பதில், 'அவர் எனக்காக எழுதுகிறார், நான் உனக்காக எழுதுகிறேன்' என்பதாக இருந்தது என்று தாகூரின் எடுத்துக்காட்டுடன் பேசிக்கொண்டிருந்தார் டாக்டர். அப்பாஸ் இப்ராஹிம்.

பேச்சு பல தளங்களில் பயணித்த வண்ணமிருந்தது. தோழி ஒருவர், பாலகுமாரன் எழுத்துக்களில் தெரிக்கும் காமம், ஜெயகாந்தனின் எழுத்துக்களில் தெரிவதில்லை என்பதாக கருத்து தெரிவித்தார். எனக்கு ஏற்புடையதாக இல்லை. பாலகுமாரன் 'செக்ஸ்' எழுதுகிறார் என்பது பலர் வைக்கும் சராசரி வாதம். ஆனால், பாலகுமாரன் எங்குமே அத்துமீறவில்லை என்பது என் கருத்து. கணவன் மனைவியிடையே உறவு என்பதும், நெருக்கம் என்பதையும் காட்டுவதற்கும், இன்னமும் சபையில் பேசமுடியாத ஏராளமான கருத்துக்களையும் தமிழ் எழுத்துக்களில் பாலகுமாரன் அளவுக்கு எவருமே பதிவு செய்ததில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. ...

 

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006