எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---20  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

ஒரு அவசியமான முன் குறிப்பு

இதைப் படித்தபிறகு எங்கேனும் உள்ள ஏடாகூட வரிகளுக்கு என்னைத் திட்ட/வசைபாட தோன்றினால்

அதை எழுத்துக்கூடத்திற்கு தெரியப்படுத்தவும்.அவசியமேற்பட்டால் நானே வந்து நேரில் உதை வாங்கிக்

கொள்ளவும் சித்தமாயிருக்கிறேன்.

-ஷாஜஹான்.

*

பாலியல் பற்றிய நல்லதான உரையாடல் என்றால் கூட சொல்லவொண்ணாத தயக்கம் வந்து சூழ்ந்து கொள்கிறது உடனே அந்த இடத்தில்,மலையாளப் படம் பார்க்கப் போகிறேன் என்று சொன்னால் முறைத்துப் பார்க்கும் தமிழகத்து தாய்மார்கள் போல.தஞ்சாவூரில் ஒட்டப்படும் மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களின் சுவரொட்டிகளின் விளைவாக இம்மொழிகள் சார்ந்த எந்த ஒரு நல்ல திரைப்படத்திற்கும் போக வீட்டில் அனுமதி வாங்க பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியதிருந்தது ஒரு காலத்தில்..பாலியல் பற்றிய பாடம் முதலில் சேர்க்கப்பட்ட பத்தாம் வகுப்பு பிரளயத்தின் முதல் செட் மாணவன் நான். ஆசிரியை அதை எவ்வளவு நாகரிகமாக விளக்கினாலும் கெக்கே-பிக்கே என்று சிரிக்கும் கேனத்தனமான மாணவர்களில் ஒருவனாய்... ( ஹெச்.எம் ஸார், இவன் சிரிப்பை ஆரம்பிச்சி வைக்கிறான்..மத்தவனுங்க சிரிக்கிறானுங்க.. கிளாஸே எடுக்க முடியலை... அப்படிங்களா.. இந்த சாப்டர் முடியற வரைக்கும் இவனுங்களை கிளாஸ் உள்ளே உடாதீங்க...இங்க வா ஏன் சிரிக்கிறே.. இல்லே ஸார் இந்த பரமசிவம்  இருக்கானே மண்புழுன்னு எழுதுறதுக்கு பதிலா.. ஐயோ அடிக்காதீங்க ஸார்)

சமீபத்தில் சிக் ஜோக் ஒன்று படித்தேன்.காமத்துப் பாலிலிருந்து குறள் சொல்ல சொன்னால் ஆசிரியரை மாணவன் முறைத்துப் பார்க்கிறானாம்.காரணம் அது Adulst Only யாம்.தெய்வப்புலவர் என்றும் ஆழ்வார்களில் அல்லது நாயன்மார்களில் ஒருவராக திருவள்ளுவரை ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் கூட அவர் காமத்துப் பால் அதிகாரத்தை எழுதியதுதான் என்று சில செய்திகள் நிலவுவதுண்டு.கதைகளில் கொஞ்சமே கொஞ்சம் 'சதை'வீதம் கலந்து நளினமாய் எழுதும் எழுத்தாளர்களில் சுஜாதா,பாலகுமாரன் எனத்தொடங்கி புஷ்பா தங்கதுரை என சில எழுத்தாளப் பெருமக்கள் இருக்கின்றனர். கதைக்கு தேவையென்றால் காட்டப்படும் கவ்ர்ச்சிப் போல் என்று பொய் சொல்லிக் கொண்டு ஆபாசம் விற்கும் திரைச் சித்ரங்களை விட சில எழுத்துக்கள் அல்லது எழுத்தம்ச சாரம்சங்கள் கொஞ்சம் கூட்டங்களில் பேச அதுவும் சம வயது, இள வயது , மூத்த வயதினர் கூடிய சபையில் கொஞ்சம் என்ன நிறையவே தயக்கமாகத்தான் இருக்கிறது.

 இந்த வார எழுத்துக்கூட கதாவிலாச சந்திப்பில் அலசப்பட்ட ஜி.நாகராஜனின் படைப்பு வாசிக்கப்பட்ட பின் (அதைப் படிக்க http://www.vikatan.com/av/2005/may/29052005/av0602.asp கிளிக்குங்கள் ) ஏற்பட்ட சற்று நேர மௌனமே முந்தைய இரண்டு பத்திகள் எழுத காரணம்.நவம்பர் எழுத்துக்கூட சந்திப்புக்கு பின்னால் நிறைய இடைவெளி விழுந்துவிட்ட படியால் மீண்டும் புத்துயிர் பெற்ற எழுத்துக்கூடக் கூட்டத்திற்கு இந்தப் பதிவிலிருந்து திரும்ப எழுத தொடரலாம் எனத் தீர்மானித்து இதை எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று மாத இடைவெளியில் ஏதும் மாறவில்லை.பால முகுந்தன் ஐயா இல்லம், கதாவிலாசம், தாக்கத்தை ஏற்படுத்திய தமிழர்கள் ( ஐயா மாசிலாமணி ), கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விஷயம்,கொஞ்சம் பிஸ்கட்,கொஞ்சம் பழரசம்,இன்ன பிற..இன்ன பிற...

பெண் விற்பனைப் பிரதிநிதி ஒருவரின் ஒருநாளைய சந்திப்பின் அனுபவங்களினூடே எஸ்.ரா அறிமுகப்படுத்தும் ஜி.நாகராஜன் என்ற எழுத்தாளரின் சிறுகதை ஒரு பாலியல் தொழிலாளியின் வாழ்க்கைப் பற்றியது.பாலியல் பெண் தொழிலாளி என்ற வார்த்தைப் பிரயோகம் சரிதானா என்று தெரியவில்லை. ( அசிங்கமா எழுதறான்யா என்று யாரேனும் அடிக்க வரப் போகிறார்கள்)

விலை மாது,விலை மகளிர் என சமூகம் நிறைய வார்த்தைகளை வைத்திருக்கிறது.பொது மகளிர் என ஒரு முறை கலைஞர் ஏதோ ஒரு கேள்வி-பதிலில் குறிப்பிட்டிருந்தார்.சங்க இலக்கியத்தில் வரைவில் மகளிர் என குறிப்பிடப்பட்டுள்ளதாக மாசிலாமணி ஐயா தெரிவித்தார்.பெற்ற தந்தையின் சுகவீனத்துக்கு அல்லது வறுமைப்பாட்டு தீர்க்க தம்பியே 'அழைப்பாளனாக' இருந்து தொழில்  நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் 'வாடிக்கையாளராய்' வரும் இளைஞன் அவளின் பின்புல விவரங்கள் கேட்டு திடுக்கிட்டு தான் ஒரு ஆண்மையற்றவன் என பொய் சொல்லி அப்பெண்ணைத் தொடாது திரும்பி ( திருந்தி..? ) போகும் ஒரு இளைஞனின் சிந்தனையோடு முடிவடைகிறது அந்த சிறுகதை ( ரொம்ப நாள் கழிச்சி எழுத வந்தா இப்படியா ஒரு தலைப்பு கெடைக்கணும்..ம் .. நேரந்தான்)

தன் வீட்டுக்கு வரும் விற்பனைப் பிரதிநிதிக்கு (பெண்) குளிர்ந்த நீர் தந்து தம் கழிப்பறையை உபயோகித்துக் கொள்ள அனுமதித்து பின் அவளுடன் அவள் தொழில் பற்றி உரையாடும் எஸ்.ராவின் இந்த வடிவத்தில் அதை வாசிப்பவர்க்கு நிறைய முரண்பாடுகள் இருக்கலாம்.எனக்கிருக்கிறது.நிறைய புனைவுகளை கற்பனைக் கப்பலில் ஏற்றி ஒரு சிறுகதை அல்லது எழுத்தாளர் அறிமுகத்துக்கு வலிந்து திணித்து பிரயாணிக்கும் பயணம் ஏற்பதற்கில்லை.ஒரு கூட்டத்தில் நண்பர் கல்யாண் சொன்னது நினைவுக்கு வருகிறது 'எஸ்.ராவின் பதிவுகள் வர வர சுவாரஸ்யத்தை குறைத்துக் கொண்டிருக்கின்றன'.

எழுத்துக்கூடத்தின் ஆஸ்தான வாசிப்பாளன் - அன்புத் தம்பி சுபைரின் இந்த பதிவு வாசிப்புக்குப் பின்னால் அங்கத்தினர்கள் அனைவரும் சற்றே ஆமைதி காத்தது அந்த இடத்திற்கு கொஞ்சமும் பொருந்தாது போனதால் நானே பேச்சைத் தொடங்கினேன் "சப்ஜெக்ட் செக்ஸ் சம்பந்தப்பட்டது என்பதால் ஒவ்வொரு பதிவு வாசிப்புக்கு பின்னால் தொடரும் விவாதத்துக்கு இங்கே வேலையில்லாமல் போய்விட்டது அப்படித்தானே...". இடைமறித்த ஐயா நாக இளங்கோவன் 'இல்லை ஷாஜஹான்.. இந்த கதையின் முடிவில் எனக்கு சற்றும் உடன்பாடில்லை. விலை மாதிடம் போன இளைஞன் மனமில்லாது திரும்பி வர வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். தான் ஒரு பேடி என சொல்லிவிட்டு வெளியே வந்தது ஒரு வலிந்து திணிக்கப்பட்ட முடிவாக இருக்கிறது"என்று கூறினார்.

மேலும் இளங்கோ ஐயா தொடர்ந்தார்." நாயகன் படத்திலே கூட இப்படி ஒரு காட்சி வரும்.கதாநாயகி பள்ளிக்கூட மாணவியா இருப்பா.. சீக்கிரம் விட்ருவீங்களா..நாளைக்கு பரீட்சை இருக்குது..உடனே நாயகன் விலகிப் போவார். " நடைமுறையில் இதெல்லாம் ஒவ்வாததப்பா என்று சொன்னால் அனுபவம்போல என்று கேட்பவர் 'பட்டம்' கட்டி விடும் அபாயம் இருக்கிறது. சில விஷயங்களை பூடகமாகத்தான் பேசிக்கொள்ள முடியும் - தெரிந்து கொள்ள முடியும் - கற்றுக் கொள்ள முடியும்...

மனதின் வக்கிரங்கள் ஒரு அபாயகரமான-ஒளிந்திருக்கும் எரிமலைப் போல.சாதிக் அண்ணன் கூட அருமையாய் அதுபற்றி ஒரு விளக்கம் தந்தார்.சமீபத்தில் படித்த ஒரு புத்தகத்திலிருந்து 'உவ்வே' சர்வே ஒன்று திடுக்கிட வைத்தது.பாத்ரூமில் பென்சில் கொண்டு 'பண்பாடி' வைக்கும் நூறில் எண்பத்தைந்து சதவீதம் உயர்குடி மக்கள்(உயர் படிப்பு படித்த - வசதியுடைய என்று அர்த்தம் கொள்க). எங்கேயாவது எப்படியாவது வக்கிரங்களை வாந்தியெடுத்து வைக்க வேண்டும். கழிப்பறைகளில் கண்டதை எழுதும் மக்களை கடவுளே மன்னிக்க யோசிப்பார்.(சப்ஜெக்டை விட்டு வெளியே ரொம்ப தூரம் போய்விட்டேனோ..? )

சற்று இடைவெளிக்குப் பிறகு மாசிலாமணி ஐயாவின் 'தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழர்கள்' தொடர் தொடங்கியது.இம்முறை ஐயா எடுத்துக் கொண்ட நபர் திருவள்ளுவர். திருக்குறள் எழுதப்பட்ட காலம் - பின்புலம் - காரண காரணிகள் - சமணம் பற்றிய தாக்கம் திருவள்ளுவர் சமண சமயத்தவரா.. இன்னும் பல இன்னும் பல சல்லி வேர்களாய் விரிவடைகிறது ஐயாவின் பேச்சு. அவர் இது பற்றி தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் விஷயங்களை விரைவில் தொகுத்து தருவதாய் சொல்லியிருக்கிறார்.அப்படி வெளி வந்தால் சௌதி அரேபியாவிலேயே முதன் முறையாக வெளிவரும் ஒரு அற்புதமான இலக்கியமாய் அது இருக்கும் என்பதில் அதைதொடர்ந்து கேட்பவர்களுக்கு இரண்டாம் கருத்து இருக்க முடியாது.முதன் முறையாக ஆங்கில நாட்டினரின் ஆதிக்கம் தமிழகத்தில் எங்கு வேரூன்றியது என ஐயா விவரித்தவை பள்ளிக்கூட வரலாற்று புத்தகத்தில் இல்லாத விஷயங்கள். கண்முன்னே இராபர்ட் கிளைவ் மற்றும் ஃபிரஞ்ச் ஆதிக்க கதாநாயகர்கள் எல்லாம் ஹோலோகிராம் பிம்பங்களாய் வந்து மறைந்து போனார்கள்.ஐயா விரைவில் கையெழுத்துப் பிரதியாக என்னிடம் தந்து அதை கணினிக்கு ஏற்ற கேட்டுக் கொண்டார்கள்.தமிழுக்கு செய்யாமலா..?

தொடர் பங்காளர் அன்பின் நண்பர் சகோ.கேவியார் இல்லாது பா'வகுப்புகள் பற்றிய அடுத்தக்கட்ட தொடர்களை விவாதிக்க இயலவில்லை.சகோ.இம்தியாஸ்,சகோ.சாதிக், சகோ.சுபைர்,நாக இளங்கோவன் ஐயா,மாசிலாமணி ஐயா,வெற்றிவேல் ஐயா,பாலமுகுந்தன் ஐயா மற்றும் நண்பர் ஃபகுருதீன் ஆகியோர் பங்கு கொண்டனர்.சகோ.கல்யாண் ஏதோ முக்கியப் பணிக்குப் போவதாக முன்பே தெரிவித்திருந்தார்.தொடர்ந்து பங்கேற்கும் திருவாளர்கள் ஜெயசீலன்,அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் சில நண்பர்கள் அடுத்தடுத்த கூட்டங்களில் தவறாது பங்கேற்க அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்.

எழுத்துக்கூடத்தின் நிகழ்வமைப்புகளில் இன்னும் சில மாற்றங்கள் செய்தால் அந்த சந்திப்பை இன்னும் உபயோகப்படுத்திக் கொள்ள இயலும் எனத் தோன்றுகிறது.என்ன செய்யலாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்களிடமே விட்டு விடுகிறேன்.இந்த மாதத்துடன் எழுத்துக்கூடம் பிறந்து ஒரு வயதாகிறது.சின்னதாய் ஏதும் சிறப்பு சந்திப்பு நிகழ்த்தலாமே..?

அன்புடன்

லக்கி ஷாஜஹான்.

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.