எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---23  ஒரு பார்வை.

                 - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் 23 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
- லக்கி ஷாஜஹான்.
========================

16 மார்ச் 2007

 ========================

 

பால்ய வயது நினைவுகளை எப்போதாவது மனம் அசைபோடத்தொடங்கும் போது அவிழ்த்து விட்ட கன்றுக்குட்டியின் துள்ளலாய் வந்து அலைமோதிப்  போகின்றன சில நினைவுகள்.தூக்கம் கலையாத முகத்துடன் ஒரு அவசரக் குளியல்,அதே வேகத்தில் ஆடையுடுத்தி அலங்காரப்படுத்திக் கொண்டு சிந்தியும் சிந்தாமலும் உணவு உண்டு உள்ளே கொஞ்சமும் வெளியே கொட்டியது  கொஞ்சமுமாய் - குழந்தை உண்ட சோறு (நன்றி: வார்த்தைப்பிரயோகம்  ஹ.ஃபகுருதீன்) உவமையை உறுதிப்படுத்துவதுபோல் சாப்பிட்டு - முதுகில்  சுமையுடன் எல்லோருக்காகவும் காத்திருக்கும் ஒரு ஆட்டோ அல்லது பஸ்ஸில் பிதுங்கி பள்ளி சென்று வந்து மம்மி - டாடி என விளிக்கும் ஒரு  ஆங்கில ஊடக பள்ளி மாணவ பருவம் வாய்க்கவில்லை என்றாலும்  ( அடேங்கப்பா எவ்வளவு நீள வாக்கியம்.. ? ) ஒரு சராசரி அரசினர் - பஞ்சாயத்து  போர்டு ஊராட்சி  ஒன்றியத்துவக்கப் பள்ளி மாணவனாய் சில நினைவுகள்  இன்னும் வெல்வெட்டாய் - கல்வெட்டாய் பஞ்சுப் பொதி மேகமாய் இன்னும்   என்னன்னவோவாய் சேர்த்து வைத்திருக்கிறேன் நெஞ்சில்...

கலர் கலரா கனவிருக்கு கண்ணுக்குள்ளே

கவிதை ஒண்ணு பூத்திருக்கு நெஞ்சிக்குள்ளே

என்ற எதுவும் தெரியாத அந்த வயதில் ஒரு அரைக்கால் ட்ராயரும்  முன்னுக்குப் பின் முரணாக உள்ள பட்டன்களையும் கொண்ட சட்டையில் மிச்ச மீதி இடங்களை இணைத்திருக்கும் ஊக்கின் உதவியில் மூக்கில் வளியும்  சளியை கையின் பின்புறத்தில் அலட்சியமாய் துடைத்து அது ஒரு பக்க மீசைபோல் இழுத்து அதுவும் ஒரு ஸ்டைலாய் ஒரு புத்தகம் - ஒரு கரும்பலகை  மறக்காமல் எடுத்து வைக்கும் மதிய உணவுக்கான தட்டு என்று மூன்றே  பொருளுடன் பள்ளி சென்ற நாட்கள் எவ்வளவு இனிமையானவை.

சென்ற வார எழுத்துக்கூட நிகழ்வில் வாசிக்கப்பட்ட கதாவிலாசத்தின்  எஸ்.ரா நினைவுகளில் வலம் வரும் பள்ளிக்கூட மணி பற்றிய நினைவூட்டலில் எனக்கும் - என் பள்ளி நினைவுகளுக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. பள்ளிக்கூடத்தில் அந்த மணி அடிக்கும் வேலைக்கென்றே போட்டி போட்ட மாணவர்கள் நிறைய பேர்எனக்கும் எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் ( சில கொடுக்காப்புளி காய்களும் ஆரஞ்சுமிட்டாய்களும் லஞ்சமாக தந்து ). பள்ளிக்கூட மணி தொடங்கும்போது  அடிக்க வரும் அழைப்பை விட பள்ளி விடும்போது வரும் அழைப்புக்கு கொஞ்சம்  போட்டி குறைவு .ஏனெனில் எல்லோரும் புத்தகப்பையை ஒரு கையிலும், எப்போதும்  அவிழ்ந்துவிடக்கூடிய அபாயம் உள்ள அரை ட்ராயரின் முடிச்சை  ஒரு கையிலும்  பிடித்துக்கொண்டு ஓட ஆயத்தமாக இருப்போம் .  மழைக்கால பள்ளி நாட்களில் மாலை நேரத்தில் பாடங்களை கவனிப்பதை விட மணியடிப்பது பற்றிய சிந்தனையிலேயே இருந்த வேளைகள் அதிகம் ஏனெனில் இந்தியா இலங்கைக்கு சென்ற போட்டியில் கொடுத்த எக்ஸ்ட்ராக்கள்  போல சில வேளைகளில் சில மணித்துளிகள் முன்னதாகவோ அல்லது ஓரிரு பீரியட்கள் கட் பண்ணி மழைக்காக பள்ளி விடும் வாய்ப்புகளே அதிகம் .  இந்த தண்டவாள இரும்பும் மணியும் ஐந்தாம் வகுப்பு வரை கொடுத்த  சந்தோஷங்கள் மிக மிக அதிகம் . ஆறாம் வகுப்பு வேறு பள்ளி மாறியதும் அங்கு பனிரெண்டாம் வகுப்பு  படித்த வரை அந்தப் பள்ளியில் இந்த சுவாரஸ்யம் இல்லை.ஏனெனில்  அங்கு மின்சாரத்தில் இயங்கும் மின்சார மணி  வைத்திருந்தார்கள் சமயங்கள் அது காதுக்கே கேட்காது .( என்னா பெல் அடிச்சிட்டாங்களா ? எப்ப .. ? )  பள்ளிக்கூடத்திற்கு செல்லும் முதல் நாள் பற்றிய அனுபவங்களைத் தொடரும்  எஸ்.ராவின் எழுத்துக்களில் மாசிலாமணி ஐயாவும், நண்பர் பாலமுகுந்தனும் தம் பிள்ளைகளை பள்ளிக்கு சேர்த்த முதல் நாள் அனுபவங்களை நம்முடன்  பகிர்ந்து கொண்டார்கள் . அவர்கள் இரண்டு பேரின் அனுபவங்களும்  எதிர் எதிரே இருந்தன. மாசிலாமணி ஐயா தம் பையனை சேர்த்துவிட்டு  அவன் அழுது செய்த ரகளையில் சோகமாய் பள்ளிக்கு எதிரே இருந்த  மரத்தடியில் பையன் பள்ளி விட்டு வரும் வரை நின்றுக் கொண்டிருந்ததை சொல்ல பாலமுகுந்தன் அவர்கள் தம் பையன் சிரித்துக் கொண்டே ஆர்வமாய்  பள்ளிக்கு போனதை சொன்னார்கள். அதற்கான காரணத்தையும் விளக்கினார்கள் . அவ்ர்கள் குடியிருந்த தெருவின் கடைசியிலேயே பள்ளி இருந்ததால் ஆசிரியர்களும்  மாணவர்களும் தினமும் அவ்வழியே பள்ளி செல்ல அதைப் பார்த்து பழகிவிட்ட  காரணத்தால் அவனுக்கு பள்ளிப் பற்றிய பயம் இல்லை . எனக்கு முதல் நாள்  அனுபவம் நினைவில் இல்லை . அப்படி செஞ்சேன் -இப்படி செஞ்சேன்  என்று ஜல்லியடிக்கவும் விருப்பம் இல்லை.என் அக்கா பையனை சரியான வால் -  L.K.G சேர்த்து விட நான் தான் போனேன். அட்மிஷன் போட்டுக் கொண்டிருந்த  போதே சடாரென மேஜை மேல் ஏறி அங்கிருந்த உருண்டையான பேப்பர்  வெயிட்டை எடுத்து பின்னால் வீசிவிட்டான். கொஞ்சம் குறி தவறியிருந்தால்  10  செமீ பக்கத்திலிருந்து கிளர்க்குக்கு அன்றே பால் ஊத்த வேண்டியதாய் போயிருக்கும்

இதனூடே வாசிக்கப்பட்ட ஒரு சிறுகதை வழியாக எஸ்.ரா அறிமுகப்படுத்தும் மா.அரங்கநாதன் என்ற எழுத்தாளரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. தமிழில் ஆழ்ந்த புலமையும் தீவிர தேடுதலும் கொண்ட மா.அரங்கநாதன், 1950 களில்  சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். இவரது 'பொருளின் பொருள் கவிதை' என்ற  கட்டுரை நூல் 1983 ல் வெளியாகி, தமிழ் இலக்கியப் பரப்பில் சலனத்தை உருவாக்கியது. நாஞ்சில்நாட்டில் பிறந்த இவர், சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ' முன்றில்' என்ற இலக்கிய இதழின் ஆசிரியர்.

இவரது வீடு பேறு சிறுகதைத் தொகுப்பும் பறளியாற்று மாந்தர் நாவலும்  குறிப்பிடத்தக்க படைப்புகள். சிவனொளிபாதம் என்ற புனைபெயரிலும்  கட்டுரைகள் எழுதியுள்ள இவர், சாகித்ய அகாதமிக்காக சில சிறுகதைகளை  மொழியாக்கம் செய்திருக்கிறார். இவரது கதைகள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியாகியுள்ளன. தமிழ் வாழ்வின் நுட்பங்களைப் பேசும்  தனித்துவமான எழுத்து இவருடையதுபால்யம் சோப்பு நுரைகளைப் போல நூற்றுக்கணக்கான கனவுக் குமிழ்கள்  மிதந்து செல்லும் வெளி போலும். கரும்பலகையின் கீழ் உதிர்ந்து கிடந்த சாக்பீஸ்  சியைவிடவும்வகுப்பறையில் மாணவர்கள் தங்களுக்குள் பேசித் தீர்த்த  சொற்கள் ஏராளமானவை. நட்சத்திரங்களைவிடவும் பள்ளியில் கண்ட கனவுகள்  அதிகம் . விரலில் பட்ட மைக்கறை அழிந்துபோய் பல வருடமாகி இருக்கலாம்ஆனால் , மனதில் படிந்த பள்ளியின் நினைவுகள் என்றும் அழியா சுவடுகளாகவே  இருக்கின்றன ! என்ற எஸ்.ராவின் வரிகள் எவ்வளவு உண்மை ...?

இரண்டாம் நிகழ்வாக பேராசிரியர் மாசிலாமணி ஐயாவின் தாக்கம் தந்த தமிழர்கள் வரிசையில் திருஞான சம்பந்தர் பற்றி இந்த வாரம்  உரை நிகழ்த்தப்பட்டது . அவர் தமிழ் வளர எந்தளவில் அனுசரணையாக  இருந்தார் என்பதும் அவர் காலகட்டத்திலான தமிழ் பற்றியும் - அது தொடர்பான பல்வேறு விவரங்களையும் அருமையாக நிகழ்த்தினார் . நான் அது பற்றி  தனியேத் தலைப்பிட்டு எழுதியதால் இங்கே இன்னும் விவரிக்க  அவசியமில்லை என்று கருதுகிறேன் . தேவைப்படும் அன்பர்கள் 20 - 03 - 2007  தேதியிட்ட மடல்குழுவில் தேடிப் பிடித்து படித்துக் கொள்ளுங்கள்

.விரைவில் இப்பதிவு இதற்கு முன் நிகழ்த்தப்பட்டவை எல்லாம் ரியாத் தமிழ்ச்சங்க  வலைத்தளத்தில் பிரசுரிக்கப் படும்.அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்  கொண்டிருக்கின்றன .வெண் தாளில் வெளியிடும் முன் மின் தாளிலும் அது  கிடைத்தலுக்குரிய முயற்சியை திரு மாசிலாமணி ஐயாவும் திரு வெற்றிவேல் ஐயாவும் செய்து கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாரத்திலிருந்து புதிய நிகழ்வாக இலக்கியக்கூடத்தில் பொருளாதாரப் பார்வை  என்ற புதிய வித்தியாசமான சிந்தனையில் திரு பாலமுகுந்தன் அவர்கள்  நுண்வியாபார உரிமை என்ற தலைப்பில் ஒரு அருமையான கட்டுரையை  பகிர்ந்து கொண்டார்.அவர் எழுத்தின் வடிவத்தில் தராத வேறு சில பரிமாணங்கள் அவர் விளக்குகையில் 'அட இதில இவ்வளவு விஷயம் இருக்கா'  என சற்றே வியப்பு மேலிட வைத்தது.சிலர் எழுதும்போது  வரப்பெறாத விஷயங்கள் அதையே உரையாகத் தரும்போது நடப்பு நிகழ்வுகளை கொண்டு  உதாரணம் காட்ட சுவாரஸ்யம் பெற்று விடுகிறது .இந்த தலைப்பினாலான   விஷயங்களை அவர் ஏற்கனவே தம் வலைப்பூவில் எழுதியிருந்தாலும் இங்கு சுமார் 45 நிமிடங்கள் அதைப் பற்றி மேலதிக விபரங்களுடன்  உரையாடினார் .வரும் வார எழுத்துக்கூடத்தில் மீள் அடமானம் பற்றி  பேச இருப்பதாகக் குறிப்பிட்டார்.  

சில அதிமுக்கிய காரணங்களுக்காக நண்பர் ராஜாவின் வருகை இல்லாததால் வெண்பா வகுப்பு நடை பெற வில்லை . இனி வெண்பா  வகுப்புகளும் தடைபடாது என நண்பர் உறுதியளித்திருக்கிறார் . இது தவிர இப்போது எழுத்துக்கூட நண்பர்கள் மின் மடலாற்குழுவில்  அதிகம் பங்களிக்கத் தொடங்கி இருப்பதால் அவர்களது புதிய படைப்புகளும்  இனி எழுத்துக்கூடத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

.--
Failed is a beautiful experience
Successful is a historical evidence.
*
அன்புடன் - அன்பிற்காக
லக்கி ஷாஜஹான்.
050 84 94 160.

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.