எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு --26  ஒரு பார்வை.

--அஹமது சுபைர்.

எழுத்துக்கூடத்தின் 26 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
- அஹமது சுபைர்.
========================

 04  மே 2007

 ========================

 

வெயில் ஓய்ந்தாலும் அதன் அனல் ஓயாத மே மாதத்தின் முதல் வெள்ளி மாலை.

DQ எனப்படும் தூதரகப்பகுதியின் சோதனைச்சாவடியில் தொடங்குகிறது இக்கட்டுரை. ஆறு மணிக்குள் இந்தியத்தூதுவர் ஐயா அவர்களின் வசிப்பிடத்தை, எழுத்துக்கூடத்தின் பாவேந்தர் நினைவுக்கூட்டத்தின் பொருட்டு அந்நோக்கில் விரைந்து வந்த எங்களை 5:55க்கு நிறுத்திய அந்த சோ.சா.பாதுகாப்பு அதிகாரிக்கு 'இந்தியத்தூதர் அகம்' என்று நாங்கள் விடையளித்தும் 'இந்தநேரத்தில் எதற்கு?' என்ற எதிர்க்கேள்வியில் ஓரங்கட்டி விட, பின்னால் வந்த வாகனத்தில் ஐயா அப்பாஸ் ஷாஜஹான். அவர்களைக் கண்டு சற்றே ஆறுதலடைந்தோம்.

ஒருவழியாக, (வேற வழி இல்லை :-)) ) தூதர் ஐயா அவர்களின் வசிப்பிடத்தை அடைந்தபோது, கூட்டம் அப்போதுதான் தொடங்கப்பட்டு இருந்ததை உணரமுடிந்தது. பாவேந்தர் அவர்கள் வாழ்ந்த புதுவை மண்ணில் பாவேந்தருக்கு பற்பல அரசு விழாக்கள் கண்ட புதுவையின் நாயகர் தூதர் ஐயா அவர்கள் முன்னிலையில் எழுத்துக்கூடத்தின் 26ம் அமர்வு பாரதிதாசனார் நினைவைப் போற்றிடும் வகையில் கூட, கூடவே எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாய் புதுவையின் இளையத்தாரகை, அமைச்சர் ஷாஜஹான் அவர்கள்.

தமிழிலும் தமிழர் பரப்பிலும் புரட்சியை விதைத்த பாவேந்தர் நினைவுக்கூட்டம் இலக்கியம் சமைத்த, இலக்கியம் ருசித்த, இலக்கியம் ஆய்ந்த பேரறிஞப் பெருந்தகைகள் கூடியிருந்தக் கூட்டத்தில் நாங்களும் கல்லூரியில் முதல் நாள் அமர்ந்து பாடம் கவனிக்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தோம்.

முதலில் கலந்துகொண்டவர்கள்,

1. மாண்புமிகு இந்திய தூதுவர் திரு M.O.H.ஃபரூக் அவர்கள்

2. மாண்புமிகு புதுச்சேரி கல்வி, கலை மற்றும் கலாசாரம், போக்குவரத்து, மீன்வளம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு. ஷாஜஹான் அவர்கள் (அப்பாடா எல்லாதுறையையும் சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்.. :-))

3. தமிழ்ச்சங்க கலை மற்றும் இலக்கிய குழு ஒருங்கிணைப்பாளரும், எழுத்துக்கூட நிறுவனர்களில் ஒருவரும் ஆன ஐயா திரு. வெற்றிவேல் அவர்கள்

4. தமிழ்ச்சங்க முன்னாள் தலைவரும், வேலைத்திறன் மேம்பாட்டுக்குழு உறுப்பினரும், எழுத்துக்கூடத்தின் தூண்களில் ஒருவருமான ஐயா திரு. ஜெயசீலன் சந்தானம் அவர்கள்

5. "நோபல் நாயகன்", "தமிழின தொண்டன்" ஐயா திரு. மாசிலாமணி அவர்கள்

6. தமிழ்ச்சங்க தலைவர் திரு. சஜ்ஜாவுதீன் மற்றும் குடும்பத்தினர்

7. தமிழ்ச்சங்க செயலாளர் திரு. சுவாமிநாதன் அவர்கள் (லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து தூதர் ஐயா அருகிலேயே இடம் கிடைக்கப்பெற்றவர்)

8. தமிழ்ச்சங்க பொருளாளர் திரு. ஜாஃபர் சாதிக் அவர்கள்

9. தமிழ்ச்சங்க சமூக சேவைக்குழு ஒருங்கிணைப்பாளரும் மற்றும் எழுத்துக்கூடத்தின் தூண்களில் ஒருவருமான ஐயா திரு. இம்தியாஸ் அவர்கள்

10. ஐயா ஜாஃபர் அவர்கள் (புதிய உறுப்பினர்)

11. ஐயா அப்துல் அஜீஸ் அவர்கள் (புதிய உறுப்பினர்)

12. ஐயா திரு.சபாபதி மற்றும் அவர் துணைவியார் கவிஞர் மலர் சபாபதி அவர்கள்

13. "வாழும் தமிழ்" ஐயா திரு. இளங்கோவன் அவர்கள்

14. கணிணித்துறையின் நாயகன் பில்கேட்ஸின் ஆசி பெற்ற திரு அப்பாஸ் ஷாஜஹான் மற்றும் குடும்பத்தினர் (Microsoft'ல வேலை செய்யுறார்பா)

15. கம்பர் மற்றும் பாரதியின் வரிசையில் வளரும் எழுத்தாளர்  திரு. மீரான்

16. எழுத்துக்கூட ஒருங்கிணைப்பாளரும், எங்களின் வாத்தியாருமான திரு. ராஜா அவர்கள்

17 &18. இவர்களுடன் நாங்கள். (அஹமது சுபைர் & ஹ.ஃபக்ருத்தீன்)

ரியாத் வாழ் தமிழர்கள் செய்த பாவத்தின் (அ) புண்ணியத்தின் பலன் நாம் தமிழ் எழுதுவதை படிக்க வேண்டி இருப்பது. (தாழ்வு மனப்பான்மையில் எழுதாதீர் என்று இளங்கோவன் ஐயா சொன்னதற்கேற்ப இங்கு 'புண்ணியம்' சேர்ந்துக்கொண்டது)

சரி, செய்திக்கு வருவோம்.

பாரதிதாசன் பிறந்ததும் இறந்ததும் நிகழ்ந்தது ஒரே வாரத்தில். ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 29 வரை. இந்த ஒரு வாரமும் நமது எழுத்துக்கூடத்தில் கொண்டாடப்பட்ட "பாரதிதாசன் வாரம்" நிறைவு பெற்றது ஐயா இந்தியத்தூதரின் இல்லத்தில்.

பாரதிதாசனைப் பற்றி பேசுவதற்கு இந்திய தூதர் ஐயா அவர்களை விடவும் வேறு ஆள் வேண்டுமோ என்பதுபோல் அவர்களின் எளிய; அழகிய பேச்சு இருந்தது.

தமிழுக்காக தன்னை அர்ப்பணித்த ஒரு புரட்சிக்கவியின் இல்லத்தினை அரசுடமையாக்க, மேதகு இந்திய தூதர் புதுச்சேரி முதல்வராக இருந்தபோது எடுத்துக்கொண்ட முயற்சிகளையும், அதனால் பட்ட மனத்துயரங்களையும் விவரிக்கும் போது நம்மை நாம் மறந்துபோனோம் என்பது உண்மை.

இந்த நேரத்திலே கலைஞர் அவர்களின் சாதனையாக, "பாரதிதாசன் பாடல்களை" அரசுடமையாக்கியதை நினைவுகூர்ந்தார்.

பாரதிதாசனின் "காதல் குற்றவாளிகள்" பாடலை ஐயா எழுத்தும், வடிவமும் மாறாமல் பாடிக்கொண்டே வர, "எனது ஞாபக சக்தி குறைந்து வருகிறது" என்ற அவர்களின் சுய மதிப்பீட்டை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாரதிதாசன் கவிதைகளை கையிலும் இதயத்திலும் ஏந்தி வந்திருந்த ஐயா இளங்கோவன் அவர்கள் சுவைபட திரைத்துறை பற்றிய பாவேந்தர் பாடல்களை செப்பியபோது, கவிஞரின் தீர்க்கதரிசனம் விளங்கப்பட்டது.

எத்தனையோ சிறப்புகள் பரிமாறப்பட்ட போதும் அதை எங்கள் எழுத்துநடையில் கொண்டுவருதல் அத்தனை சுலபமன்று.

மாசிலா ஐயா அவர்கள் அக்காலத்தில் நிலவிய அரசியலை மெல்லிதாக கோடிட்டுக் காண்பித்து 'பாரதி'யை தாழ்த்த நினைத்தவர்களுக்கு 'பாரதிதாசன்' என்ற பெயரே தடையாக அமைந்ததை, அத்துடன் பாரதியை விட்டுக்கொடுக்காத பாரதிதாசனாரின் இடி போன்ற மறுமொழியை எடுத்தியம்பினார்.

பொதுவாக, வரலாறு வடக்கிலிருந்து ஆய்வு செய்யப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற நிலை மா(ற்)றி, தெற்கிலிருந்து(ம்) பார்க்கப்படவேண்டியதன் தேவையை எடுத்துவைத்த இளங்கோவன் ஐயாவின் கூற்று ஏற்புடையதாக இருந்தது. இதுபற்றி எழுத்தாளர். ஜெயகாந்தன் ('தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள்' புகழ்) பேசியிருப்பதாகச் சொன்னது எங்களுக்கு புதியச்செய்தியாக இருந்தது.
கவிதாயினி மலர் அவர்கள், தனக்கு ஊக்கமளித்த தமிழ் கவிஞருள் பாவேந்தரின் பாடல்களே முதன்மை இடத்திலுள்ளன என்று நெகிழ்வாகக் குறிப்பிட்டார்.

எல்லாரும் தமிழ் பற்றி விவாதித்துக்கொண்டிருக்க, நாங்கள் தூதர் ஐயாவின் உபசரிப்பிலும் கவனம் கொண்டிருந்தோம். (மசாலா வடை, தேநீர் மற்றும் பிஸ்கட். அப்பப்பா என்ன சுவை! என்ன சுவை!).

'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்..' 'தமிழுக்கும் அமுதென்று பேர்' 'தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ் தான் இல்லை' இப்படி நினைவுகளில் ஒளிர்ந்து வரும்
பாரதிதாசனின் புகழ் போற்றிய அவையிலும், தன் இயல்பான பேச்சால் மகிழவைத்த தூதர் ஐயா அவர்கள், தன் மனங்கவர்ந்த கம்பனைக் குறிப்பிடவும், மேற்கோள் காட்டவும் தவறவில்லை.

தமிழ்ச்சங்கத்தலைவர் சஜ்ஜாவுதீன், செயலாளர் சுவாமிநாதன், இவர்களின் கருத்துக்களும் இடம்பெற்ற இந்த எழுத்துக்கூடத்தில், பொறுப்பானவர்களின் இத்தகைய கருத்துக்கள் தொடரவேண்டுமென்று கோரிக்கை வைத்த திரு.ராஜாவுக்கு கைத்தட்ட வேண்டியது கடமையாக இருந்தது.
 

இந்தியத் தூதுவரும், நம் தமிழ்ச்சங்கப்புரவலருமான மேதகு M.O.H. ஃபரூக் ஐயா அவர்கள், பாவேந்தர் கவிதை நூற்களை; குறுந்தகடுகளை புதுவை அரசின் சார்பில் அனுப்பித் தரும்படி புதுவை அமைச்சர் ஷாஜஹான் அவர்களிடம் கோரிக்கை வைத்ததும், விரைவில் ஆவன செய்வதாக அமைச்சர் மறுமொழிந்ததும்.

தமிழுக்குத் தொண்டாற்றும் அரசுக்குப்பின்னர் இத்தகைய உயர்தமிழ்ச் செம்மல்களைப் போற்றும் விழாக்கள் தொடர்ந்து நடைபெறுமா? என்ற கவலை தொனிக்க வினா தொடுத்த தஞ்சை மீரானுக்கு, காலம் தன் தேவைகளை தானே தயாரித்துக்கொள்ளும் என்ற ரீதியில் தூதர் ஐயா அளித்த மறுமொழி.


பாரதிதாசன் நிழற்படத்துக்கு மாலையிட்டு துவங்கிய இவ்விழா, அவரின் மாலையிட்ட படத்துடன் நிழற்படம் எடுத்துக்கொள்ள இனிதே நிறைவுற்றது.

பேச்சு மழை ஓய்ந்து வெளிவர, வானம் தானும் பேச ஆர்வங்கொண்டிருந்ததும் விளங்கியது.
 

 
அன்புடன்,
 
சுபைர்.

நிழற் படங்கள்

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.