எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு --33  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 33 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 07 டிசம்பர் 2007

எழுத்துக்கூடத்தின் 33 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்


பேராசிரியர் திரு. மாசிலாமணி அவர்களின் "தாக்கம் தந்த தமிழர்கள்" வரிசையில் இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட தமிழர் பாரதி...

கம்பர் காலத்துக்கு அப்புறம் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டிருந்த நீண்டதொரு இடைவெளியை ஈடு செய்தவர் பாரதி. கிட்டத்தட்ட ஏழு நூற்றாண்டுகள் (கம்பர் - பதிமூண்றாம் நூற்றாண்டு) வள்ளலார் தவிர வேறு யாரும் பெரிய அளவில் தாக்கம் தரும் இலக்கியப் பணிகளில் ஈடுபடவில்லை என்ற தன் கருத்தை முன் வைத்தார் பேராசிரியர். தந்தையின் தொழில் மகனுக்கு, மகனின் தொழில் பேரனுக்கு
என்ற சமுதாய அமைப்பு இருந்த கால கட்டம் அது..சாதி ஏற்றத்தாழ்வுகள், ஆங்கிலேயர் ஆட்சி என்று உள்நாட்டு, வெளிநாட்டுக் குழப்பங்களில் ஆழ்ந்திருந்தனர் மக்கள்.

இந்தச் சூழலில் கம்பீரமாக ஒலித்தது பாரதியின் குரல்.இவர் ஒரு மகாகவி, யுகபுருஷன், மகாமனிதர் என்று சொன்ன பேராசிரியர் எப்படி கம்பர் முதலானோர் மகாகவிகளாகவே இருந்தனர், பாரதி மட்டும் கவிதை எல்லையைத் தாண்டிச் சமுதாய நலன் குறித்த சிந்தனையாளராகவும் இருந்தார் என்று விவரித்தார். சமுதாயச் சீர்திருத்தம் பாடல்களில் பேசியதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் செய்தும் காட்டியவர் அவர். அவரது வாழ்க்கை காட்டாற்று வெள்ளத்தில் நிகழ்த்தும் கட்டுமரப் பயணம் போன்று சவால்கள் நிறைந்தது.

ஆங்கில ஆதிக்கமும், குறுநில மன்னர்களின் ஆட்சியும் இருந்த அடிமைக்காலம் அது. சிற்றிலக்கியங்களும் அரசர் மற்றும் ஜமீந்தார் புகழ் பாடிய காலம்.இப்படிப்பட்ட காலத்தில் புரட்சிகரமான கருத்துகளை எடுத்து வைத்ததோடு, வாழ்வில் செயல்படுத்தியும்
காட்டிய பெருமை பாரதியையே சாரும்.

தாகூர் எழுத்தை ரசித்தவர் பாரதி என்றாலும் அவரை விடச் சிறப்பான தகுதி தனக்கு உண்டு என்று நம்பியவர். தாகூருக்கு நோபல் பரிசு அறிவித்த போது, மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டித் தானும் தாகூரும் பேசினால்(ஆங்கிலத்தில்- பொது மொழி என்பதால்) யாருக்குக் கைதட்டல் அதிகமாகக் கிடைக்குமோ அவருக்கு நோபல் பரிசு கொடுக்கட்டும்
என்று தன்னம்பிக்கையுடன்அறைகூவியவர்.

மேலும் பாரதி தேசியம், ஆன்மிகம், சமுதாயம் மற்றும் தன்வயம் என்ற நான்கு முகங்களில் படைப்புகளை வெளிப்படுத்தியவர் என்று அவர் படைப்புகளை மேற்கோள் காட்டினார்.

பண்டிதரிடம் சிக்கிக் கிடந்த தமிழைப் பாமரனும் எளிதில் புரிந்து கொள்ளும் எளிய நடையில் எழுதியவர்.

எல்லாக் கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் இன்னும் எழுதும்படி ஊக்குவித்த காலத்தில் பாரதி மட்டுமே எழுதக்கூடாது என்று பலரால் நிந்திக்கப்பட்டு, ஓட ஓட விரட்டப்பட்டு, ஓடி ஒளிந்து எழுதியவர் என்பதைப் பேராசியர் வெளிப்படுத்தினார்.

கலந்துரையாடல்: இந்த உரைக்குப் பின்னர் அனைவர் மனதிலும் பாரதியைப் பற்றிய பெருமித எண்ணங்கள் இன்னும் அதிகப்படியானது என்றே சொல்ல வேண்டும். பாரதிக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரிவரக் கிடைக்காததை அனைவரும் குறிப்பிட்டனர். தாகூருக்குக் கிடைத்த சமூக அங்கீகாரம் பாரதிக்குக் கிடைக்கவில்லை. தன் வாழ்நாளில் பிறர் வசைகளை அதிகம் கேட்டாரேயன்றிப் புகழ் வார்த்தைகள் கேட்கவில்லையென்ற வருத்தம் தொனித்தது

கவிஞர்களைப் பற்றிப் பேசும் போது தாகூர், கண்ணதாசன், பாரதிதாசன் அவர்கள் வாழ்க்கை மற்றும் எழுத்து பற்றியும் அவரவர் கருத்துகளைத் தெரிவித்தனர். மணி ஆறு ஆகியதை அறியாத சுவாரசியத்தில் கலந்துரையாடல் பரிமளித்தது.

தமிழ் நூலகம் அமைக்கும் முயற்சி பற்றித் திரு. வெற்றிவேல் அவர்கள் குறிப்பிட்டு, இயன்ற அளவு நூல்கள் பெற்றுத் தரும்படி அனைவரிடமும் கேட்டுக் கொண்டார். பேராசிரியர் திரு. மாசிலாமணி அவர்கள் சுமார் 50க்கும் மேல் புத்தகங்கள் தருவதாகக் கூறினார்.

திரு. இளங்கோவனின் சங்க இலக்கியம் பற்றிய உரையும், திரு.ஃபக்ருதீனின் நவீன கவிதைகள் பற்றிய ஆய்வும், திரு, பாலமுகுந்தனின் திட்ட மேலாண்மை பற்றிய கட்டுரையின் மூன்றாவது பகுதியும் அடுத்த சந்திப்பில்....

 

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.