எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---34  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 34 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 04  ஜனவரி 2008

எழுத்துக்கூடத்தின் 34 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு.வெற்றிவேல் அவர்கள் இல்லம்.


கதாவிலாசம்: இந்த வாரக் கதை "மிதந்து செல்லும் கனவு". மனித மனங்களின், குறிப்பாக மத்தியதர வர்க்கத்தின் கனவுகள், ஆசைகள் குறித்த கதை. பொருளாதார வசதிக் குறைவால் அடைய இயலாத வசதிகள் குறித்த ஏக்கம் பற்றிய கதை. எந்தப் பொருளைப் பார்த்தாலும் அதன் விலை குறித்துக் கேள்வி எழுப்பும் சுண்டல் விற்கும் பெரியவர் ஒருவர், அவரின் இந்த
நடவடிக்கையால் தர்மசங்கடத்துக்கு ஆளாகிய மகன் இது ஒரு வியாதி என்றும் தன்னால் வாங்க முடியாது என்று தெரிந்தாலும் இப்படிக் கேள்வி கேட்டுத் திருப்திப்படுவது அவர் பழக்கம் என்றும் கூறுகிறான். இதையொட்டிய கருவில் வரும் புதுமைப்பித்தனின் கதை ஒன்றையும் மேற்கோள் காட்டுகிறார்.

இந்த வாரக் கதாசிரியர் - கிருஷ்ணன் நம்பி. அவர் எழுதிய "எக்ஸென்ட்ரிக்" என்ற கதையின் நாயகன் மாதம் எண்பது ரூபாய் சம்பளம் வாங்கும் சராசரி மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவன். காரில் நாயுடன் வந்த பெண்ணைக் கண்டு பொறாமை கொண்ட அவன், மிச்சம் ஏதுமில்லாமல் எண்பது ரூபாயையும் செலவழித்து விட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பி
சம்பளம் மறுநாள் வரும் என்று சொல்வதுடன் கதை முடிகிறது.

கிருஷ்ணன் நம்பி அழகிய பாண்டியபுரத்தில் 1932ல் பிறந்தவர். இயற்பெயர் அழகிய நம்பி. சசிதேவன் என்ற பெயரில் கவிதைகளும், கிருஷ்ணன் நம்பி என்ற பெயரில் சிறுகதைகளும் எழுதியவர்.நெருக்கடியில் உழலும் மனிதனின் சுகதுக்கங்களை மெல்லிய பகடியான தொனியில் விவரிப்பவை இவரது கதைகள். "யானை என்ன யானை" என்ற குழந்தைகள் கவிதைத் தொகுப்பும் "நீலக்கடல்", "காலை முதல்" என்னும் சிறுகதைத் தொகுப்புக்ளும் வெளி வந்துள்ளன. தனது 44 வயதில் நோயின் காரணமாய் மரணமடைந்தார்.

தாக்கம் தந்த தமிழர்கள் வரிசையில் இந்த வாரம் முனைவர். திரு.மாசிலாமணி அவர்கள் எடுத்துக்கொண்ட தமிழர் பெரியார். இந்த நூற்றாண்டின் ஒப்பற்ற தலைவர். பல சீர்திருத்தக்கருத்துக்களை வலியுறுத்தியதோடு செய்தும் காட்டிச் சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்றவர். நாகார்ஜுனர், புத்தர், அம்பேத்கார் முதலானோர் கீழ் சாதி மக்களின் முன்னேற்றத்துக்குப்
பாடுபட்டாலும், முழு அளவில் புரட்சி செய்து, ப்ரச்சனையின் வேரின் இறுதி வரை சென்று கொள்கைகளைச் செயலாக்கி வெற்றி பெற்றவர். படித்தவர்களை மட்டுமே தாக்கம் செய்தனர் பிற பெரியோர்கள். படித்தவர் மட்டுமின்றிப் பாமரரும் பின்பற்றிப் போற்றும் வண்ணம் பல தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்கள் பெரிய அளவில் கண்ட பெருமை பெரியாருக்கே உரியது.

இலக்கியங்கள் மயக்கம் தருபவை. வாழ்க்கைக்கு உபயோகமில்லாதவை என்று புத்தகங்களைப் புறக்கணித்து, புதுவாழ்வு பெறும் செயலாற்றலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். வைக்கம்போர் இவரது பெரிய சாதனை. இவர் வித்திட்ட புரட்சிக் கருத்தும், செயல்களும், போராட்டங்களும்தான் இன்று நம் சமுதாயத்தையே வாழ்விக்கும் சக்தியாகப் பரிமளிக்கிறது. மக்கள்
மத்தியில் இந்த அளவு விழிப்புணர்ச்சி வேறெந்தத் தலைவரும் ஏற்படுத்தியதில்லை. அறுபது வருடம் நீண்ட பொது வாழ்வில் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட செயல்வாதி இவர்.சில காழ்ப்புணர்ச்சிகளுக்குக் காரணமானவர் என்றாலும், தம் கொள்கைகள் மூலம் தமிழ் சமுதாயத்தையே புதிய வெற்றிப் பாதையில் வழி நடத்தியவர்.

திரு.வெற்றிவேல் அவர்களும், திரு.ஃபக்ருதீன் அவர்களும் பெரியார் குறித்த தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

அதிகம் தாக்கம் தந்த பத்து தமிழர்கள் பற்றிய பகுதி முடிவடைகிறது. முடிவுரை மற்றும் தாக்கம் செய்த இன்னும் சில தமிழர்கள் பற்றிய சிறு குறிப்புகளும் வரும் சந்திப்புகளில் தரவிருப்பதாகப் பேராசிரியர் அவர்கள் கூறினார்.
 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.