எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---35  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 35 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 15 பிப்ரவரி 08

எழுத்துக்கூடத்தின் 35 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்


கதாவிலாசம்:

"நேற்றிருந்த வீடு" என்ற கதை இந்த வாரம் எடுத்துக்கொள்ளப்பட்டது. மதுரையில் இருந்த சொந்த வீடு, கடன் அதிகமானதால் முழ்கிப் போக, பிற்காலத்தில் வசதி வந்ததும், புதிய வீடு கட்டியவரின் அனுபவம் பற்றியது. மதுரை வீட்டில் விளக்கு வெளிச்சம் இன்றி வெகு காலம் கழித்த விரக்தி மாற, புது வீட்டில் விளக்குகள் பல பொருத்தி எப்போதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற நாயகனின் ஆசை அர்த்தமுள்ளதாகப் படுகிறது.

இதே கருத்தை ஒட்டிய கரிச்சான் குஞ்சுவின் "ரத்த சுவை" எடுத்தாளப்படுகிறது. அதிகக் கடன் தொல்லையால், கடன் தந்தவருக்கே வீட்டை எழுதிக் கொடுத்து விட்டுப் பைத்தியமாகிறான் ராமு. அவன் குரங்கின் பின்னால் அலைவது ஒரு அன்றாட நிகழ்வாகி விடுகிறது. தான் பைத்தியமில்லை என்று கூறும் ராமு, தற்செயலாக ரத்தசுவை பார்த்த ஒரு குரங்கு மாமிசபட்சிணியாகி விட்டதைக் கண்கூடாகப் பார்த்ததால்தான் குரங்கின் பின்னால் அலைவதாகாக் கூறுகிறான். அதைப் போல வட்டி கொடுப்பவனும் வட்டியின் சுவையால் மிருகமாகி மனிதனிடம் பணம் வசூல் செய்கிறான் என்று விளக்குகிறான்.

கதாசிரியர் குறிப்பு:




"பசித்த மானுடம்" என்ற அரிய நாவலை எழுதி, தமிழ் நாவல் உலகில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர் கரிச்சான் குஞ்சு. தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள சேதின்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் நாராயணசாமி. இவரதுநெருங்கிய நண்பர் எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலன் "கரிச்சான்" என்ற புனைபெயரில் எழுதியதன் நினைவாக, தன் பெயரை "கரிச்சான்குஞ்சு" என்று மாற்றிக் கொண்டவர். இசையில் ஆழ்ந்த புலமை படைத்தவர். கும்பகோணத்தில் வாழ்ந்து மறைந்த இவர், இந்தியத் தத்துவங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர்.

திரு.இளங்கோவன், திரு.பாலா, திரு.ராஜா, திரு.ராசப்பா மற்றும் பேராசிரியர் மாசிலாமணி அனைவரும் இது தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். அதிலும் திரு. ராசப்பாவின் நண்பரின் கதை அனைவரையும் நெகிழ வைத்தது.

தாக்கம் தந்த தமிழர்கள் - முடிவுரை:

அதிகத் தாக்கம் தந்த பத்து தமிழர்களைப் பற்றிக் கடந்த வாரங்களில் தொகுத்து வழங்கிய பேராசிரியர் மாசிலாமணி இந்த வாரம் அறிவியல் துறை வாயிலாய்த் தமிழர் பெருமை நிலை நாட்டிய மூவரைப் பற்றிய தொகுப்பு வழங்கினார்.

கணித மேதை இராமானுஜம்: துறைமுகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிய இவர் எழுதிய கணிதக் குறிப்புகள், பிரசிடென்சி கல்லூரிப்பேராசிரியர் ஒருவரால் இங்கிலாந்து அறிவியல் அறிஞர் ஹார்டிக்கு அனுப்பப் பட்டது. அதை வியந்த ஹார்டி ராமானுஜத்தை இங்கிலாந்துக்கு வரவழைத்து ஆராய்ச்சிகள் தொடர்ந்தார். அங்கே நிலவிய தட்பவெப்பம் அவருக்கு நிமோனியா காய்ச்சலைத் தோற்றுவிக்க, இந்தியா திரும்பி இளவயதிலேயே
மறைந்துவிட்டார்.

சர்.சி.வி.இராமன்: எளிய சோதனைக் கருவிகள் கொண்டு வலிய சாதனைகள் புரிந்தவர். இவர் நோபெல் பரிசு பெற்ற செய்தி நாம் அறிந்த ஒன்றுதான். ஆனால் அதற்குப் பின் இருக்கும் ஒரு சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் அவர்கள். தற்செயலாக ஒரே சமயம், ஒரே செய்தியை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டனர் இராமனும், ஸ்மிக்கல் என்ற வெளிநாட்டு அறிஞரும்.
ஸ்மிக்கலின் மைத்துனர் அதிக குடிபோதை காரணத்தால் கைதாகிவிட, அவரை விடுவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால், ஸ்மிக்கல் தன் ஆய்வுக்கட்டுரையை நோபெல் பரிசுக் குழுவுக்கு அனுப்பத் தாமதமாகிவிட்டது. எனவே இராமனுக்குப் பரிசு கிடைத்தது.



சந்திரசேகர்: இராமன் வழித்தோன்றலான உறவினர்தான் இவர். இவரது பேராசிரியரே இவரை முன்னேற விடாமல் தடுக்க, விரக்தியடைந்து சிகாகோ சென்று பணியாற்றினார். மீண்டும் இந்தியா வந்த போது, போதிய அளவு ஊக்குவிப்பு கிடைக்காத காரணத்தால் மீண்டும் அமெரிக்கா சென்று விட்டார். அவரது கண்டுபிடிப்புக்கு முப்பது ஆண்டுகள் கழித்து, மிகவும் தாமதமாக, 1980 ஆம் ஆண்டுதான் இவருக்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டது.



தமிழர்களை இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளம் காண்பித்த பெருமை இவர்களையே சாரும்.

"அறிவியல் இமயம் சந்திரசேகர்", "பௌதீகம்" என்ற இரு அறிவியல் தமிழ் நூல்கள் பேராசிரியர் மாசிலாமணி வெளியிட்டுள்ளார் என்பது ஒரு சிறப்புத் தகவல்
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.