எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு --38  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 38 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================

 07 மார்ச் 08

எழுத்துக்கூடத்தின் 38 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. பாலமுகுந்தன் அவர்கள் இல்லம்


 

கதாவிலாசம்:

இந்த வாரம் எடுத்துக்கொள்ளப்பட்ட கதை 'புகை நடுவில்.' சித்ரா என்ற நடுத்தர வயதுப்பெண் தன் மகனுடன் எஸ்.ராவைப் பார்க்க வருகிறார், பால்யப் பள்ளித் தோழி என்று சொல்லிக் கொண்டு. பார்த்த நினைவு இல்லை எஸ்.ராவுக்கு. மகளுக்குத் திருமணமென்றும், நான்கு பேரிடத்தில் தானம் வாங்கித் தாலி செய்வதற்காகத் தெரிந்தவர்களிடம் பணம் வசூல் செய்வதாகவும் அதற்காக அவரைத் தேடி வந்ததாகவும் சித்ரா கூறுகிறார். தான் தேடி வந்தது இவரில்லை என்று தெரிந்ததும், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கொடுத்த பணத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டு, திருமணத்துக்கு வரும்படி அழைத்து விட்டுத் தர்மசங்கடத்துடன் வெளியேறுகிறார். இதுவும் ஒருவித நட்பு, ஆனால் தொடர முடியாதது என்றெண்ணி வருந்துகிறார் எஸ்.ரா.

இதே போக்கில் வரும் கோணங்கியின் 'கோப்பம்மாள்' என்ற கதையில் கோப்பம்மாள் என்ற சலவைத் தொழிலாளியின் மகளுக்கும், மாரியப்பன் என்ற ஏழைச் சிறுவனுக்கும் பள்ளிப் பருவ நட்பு ஏற்படுகிறது. அவள் வாங்கி வந்த ஊர்க்கஞ்சியைப் பகிர்வது முதல், மாரியப்பன் தன் அப்பா இறந்த பிறகு, அவர் சட்டையைத்தான் வெட்டித் தைத்து உடுத்தும் கதை வரை பரிமறிக் கொள்ளும் நட்பு அவர்களுடையது. அவள் ருதுவானதும், பள்ளிப்படிப்பு பாதியில் நிறுத்திவிட்டுக் கல்யாண ஏற்பாடு நடைபெற, நட்பு தொடர முடியாமல் போகிறது. திருமணமாகிச் செல்லும்போது, மாரியப்பனின் கிழிந்த சட்டை ஒன்றையும் சீதனங்களோடு எடுத்துச் செல்வதாகக் கதை முடிகிறது.

கதாசிரியர் குறிப்பு:

தமிழ் நவீன கதையுலகில் தனித்துவமான குரல் கோணங்கியுடையது. கவிதைக்கு மிக நெருக்கமாக உள்ள உரைநடையும், அரூபங்கள் மொழியில் சாத்தியமாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். "கல்குதிரை" என்ற சிற்றிதழின் ஆசிரியர். 'மதினிமார்களின் கதை', 'கொல்லனின் ஆறு பெண் மக்கள்', 'பொம்மைகள் உடைபடும் நகரம்", 'பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்' போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

இவரது 'பாழி', 'பிதுரா' என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களைத் தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை. 47 வயதாகும் முழுநேர எழுத்தாளரான கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. தற்போது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாஸின் பேரன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துரையாடல்:

இந்தக் கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதும் அவரவர் மனதில் பால்யப் பள்ளிச் சிநேகங்களின் ஞாபகங்கள் அலைபாய, பேராசிரியர் மாசிலாமணி, திரு. ஜெயசீலன், திரு. வெற்றிவேல், திரு.பாலமுகுந்தன், திரு. ராசப்பா, திரு. மகேஷ், திரு. ராஜா அனவரும் தத்தம் அனுபவங்களை நினைவு கூர்ந்தனர்.

ஒலிவடிவில் புதுமைப்பித்தனின் 'மனித இயந்திரம்' கதை:

இந்தக் கதையைக் கேட்கையில் புதுமைப்பித்தனின் அருமையான விளக்கங்கள் காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்ததை ரசிப்பதா, அல்லது தன் உணர்ச்சிப்பூர்வமான, பாவங்களுக்கேற்ப மாறும் தொனியில் ஒலிவடிவில் உயிர் கொடுத்த திரு. பாலமுகுந்தன் அவர்களின் குரல்வளத்தை ரசிப்பதா என்ற குழப்பமே மேலிட்டது. இரண்டுமே மிகச் சிறப்பு.

1937ல் எழுதப்பட்ட கதை. மளிகைக்கடையில் வேலை செய்யும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் மன உணர்வுகளை விளக்கும் முகமாய் எதார்த்தம்,நகைச்சுவை, மெல்லிய இழையில் ஒரு சோகம் அனைத்தும் கலந்து பின்னப்பட்ட கதையிது. பட்டணம் போய்ப் பணம் சம்பாதித்துப் பெரிய மனுஷனாகி ஊருக்குள் வந்து அனைவரின் மதிப்பையும் பெற நினைக்கிறார் மீனாட்சி. கடையில் பணத்தை எடுத்துக் கொண்டு ரயிலேறியும் விடுகிறார். நாவறண்டு போகக் கலர் வாங்கிக் குடிக்கிறார்.

(இங்கே கலர் சோடா விற்ற பையனையும், மீனாட்சி விட்ட ஏப்பத்தையும் மிகத் தத்ரூபமாகக் கண்முன் கொணர்ந்தது திரு. பாலமுகுந்தன் அவர்கள் குரல்)

டிக்கெட் பரிசோதகர் தெரிந்த நண்பராகப் போய்விட, ஏற்கனவே அரை மனதுடன் வந்த மீனாட்சிக்கு பட்டணம் போவதற்கான தைரியம் இல்லாமல் போய்விட, வந்த வழியே திரும்புகிறார். கடை முதலாளியிடம் சாவியைக் கொடுத்துவிட்டு, பழைய வாழ்க்கைக்கே திரும்புகிறார். ஒரு எளிய மனதின் எதார்த்தமான ஏக்கங்கள், இயலாமையைப் படம் பிடித்துக் காட்டிய இந்தக்கதை அனைவரையும் நெகிழ வைத்தது.

'அரபு நியூஸ்' செய்தித்தாளில் தமிழ்ப்பக்கங்கள்:

செய்தித்தாளில் தமிழ்ப்பக்கங்கள் இணைப்பு வெளிவர ஆவன செய்யவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு, அதன் சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டன. கடினம்தான் என்றாலும் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும், உறுதியும் ஏற்பட்டது. அரபு நியூஸ் திரு. இக்பால் அவர்களைக் கலந்தாலோசித்து அதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.