எழுத்துக்கூடத்தின் 39
ஆம்
கூட்டம் - ஒரு
பார்வை
========================
04 ஏப்ரல் 08
எழுத்துக்கூடத்தின் 39 வது சந்திப்பு - ஒரு
பார்வை
இடம்: திரு. ஜெயசீலன் அவர்கள் இல்லம்
கதாவிலாசம்:
இந்த வாரம் எடுத்துக் கொள்ளப்பட்ட கதை "கயிற்று
ஊஞ்சல்". முதியோர் இல்லம் ஒன்றின் அன்றாட
நடவடிக்கைகள் பற்றிய கதை. இயல்பாகத் தொடங்க
வேண்டிய காலைப் பொழுது கொஞ்சம் இறுக்கமாகத்
தொடங்குகிறது இந்த முதியோர் இல்லத்தில். வயதான
காலத்தில் உறவுகளிடம் இருந்து
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒருவருக்கொருவர்
ஆதரவாக இருந்த வந்த முதியோர்கள் நிறைந்திருந்த
இல்லம் அது.
அவர்கள் அறை அமைப்பு முதல் இல்ல அமைப்பு
வரையான விளக்கங்கள் அவர்கள் தனிமையையும், ஒரு
இயந்திரகதியான வாழ்க்கையையும் வலியுறுத்துவதாய்
விளங்குகின்றன. உணவருந்துவது முதல்
உறங்கப்போவது வரை துன்பம் இடைவிடாது இழையோடும்
துக்கமான வாழ்க்கை முறை அவர்களுடையது. ஒரு
மனிதனைப் புறக்கணிப்பதும்,
தனிமைப்படுத்தப்படுவதும்தான் அவனுக்குத் தரும்
மாபெரும் தண்டனை. முதியோர் பலர் தற்சமயம் இது
போன்ற இல்லங்களில் அனுபவித்து வரும் துன்பம்
பற்றி இயல்பாகப் பேசும் கதை இது.
இதையொட்டிய கருத்தில் கதாசிரியர் தமயந்தி
எழுதிய "அனல் மின் நிலையங்கள்" கதை
பேசப்படுகிறது. தூத்துக்குடி கடற்கரையில்
உருவாக்கப்பட்ட அனல் மின் நிலையத்தால் மீன்
பிடித் தொழில் பாதிக்கப்படுகிறது. எனவே
செபஸ்தியான் என்ற மீனவனின் தொழிலும்
பாதிக்கப்படுகிறது. அவன் தாயாரை உடன்
வைத்திருப்பது இனிமேலும் கஷ்டம் என்று மனைவி
கூறிவிட, அவள் வற்புறுத்தலின் பேரில் தாயாரை
அண்ணன் வீட்டில் விட்டு வரப் புறப்படுகிறான்
செபாஸ்தியன். அவன் மதினி அவர்களை
வீட்டுக்குள்ளேயே விடவில்லை. திரும்ப அழைத்து
வரும் வழியில், கோவில்பட்டி பேருந்து
நிலையத்தில் தாயாரை உட்கார வைத்துவிட்டு,
தூத்துக்குடி பேருந்து வருகிறதா என்று
பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுத்
தூத்துக்குடி பேருந்தில் தனியாக ஊர் செல்கிறான்
செபாஸ்தியான்.
கதாசிரியர் பற்றிய குறிப்பு:
ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம்
பெற்றுள்ள தமயந்தி, திருநெல்வேலிக்காரர்.
இவருடைய முதல் கதை 1978 - ல் ஆனந்த விகடனில்
வெளியானது. 'தமயந்தி சிறுகதைகள்' என்பது இவரது
முதல் சிறுகதைத் தொகுப்பு. 'அக்கக்கா குருவிகள்'
என்கிற இவரது சிறுகதைத் தொகுப்பு மிகவும்
முக்கியமானது. தற்போது இவர் திருநெல்வேலியில்
சூரியன் எஃப். எம் வனொலியில்
பணியாற்றி வருகிறார்.
கலந்துரையாடல்:
முதியோர்கள் பற்றிய இந்த இரு கதைகளும் அனைவரின்
மனதையும் நெகிழ வைப்பதாய் இருந்தது.
பேராசிரியர் மாசிலாமணி, திரு. ஜெயசீலன், திரு.
இளங்கோ மற்றும் திரு.மகேஷ் அவர்கள் தாம் கண்ட
/ கேள்விப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து
கொண்டனர். வேலை நிமித்தம் மட்டுமன்றிப் பல்வேறு
காரணங்களுக்காகவும் ஆதரவற்ற தனிமையில் முதியோர்
வாழும் நிலை அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியதை,
அவர்கள் பகிர்தல் மூலம் புரிந்து கொள்ள
முடிந்தது.
.
|