எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு -4  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக் கூடத்தின் நான்காம் கூட்டம் - லக்கி ஷாஜஹான்

எழுத்துக் கூடத்தின் நான்காவது கூட்டம் பற்றிய கண்ணோட்டம் இந்த வாரம் கவிஞர் ஹ.பஃகுருதீன் எழுதுவதாக இருந்தது.. அதிக வேலைப் பளுவின் காரணமாக கவிஞர் எழுத கொஞ்சம் தாமதமாக அதற்கு வருத்தம் தெரிவித்து என்னை எழுதும்படி கேட்டுக் கொண்டார்... இனி கூட்டம் பற்றி... ( சற்றே நீண்டுவிட்ட இப்பதிவுக்கு என்னை மன்னிக்கவும் )

அடாது மழை பெய்தாலும் விடாது வெயில் அடித்தாலும் கெடாது நம் கூட்டம் என்று சொல்வது போல் எழுத்துக்கூடத்தின் இந்த நான்காவது கூட்டம் அக்காரியா சமூகவியல் கூடத்தில் குறிப்பிட்ட தேதியில் ( 17.03.2006 ) ஒன்று கூடியது.. வழமையாய் வருகை தரும் சில நண்பர்கள் தவிர்க்க இயலாத மற்றொரு நிகழ்வுக்கு சென்று விட புதிதாய் சில நண்பர்களும், விடுப்பில் சென்றிருந்த நண்பர்களும் வந்து விட இலக்கிய கருத்தூட்டம் பகிர்தல் பறிமாற்றத்துக்கு ஆயத்தமானது..

முதல் நிகழ்வாய் எஸ்.ராவின் கதாவிலாசத்திலிருந்து இலக்கிய எழுத்துக்களின் அடையாள கல்வெட்டுகளில் ஒருவராய் விளங்கும் தி.ஜானகி ராமனின் சிறுகதை படிக்கப்பட்டது. ரியாத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு ஜெயசீலன் அவர்களின் துணைவியார் கதை வாசித்தளிக்க மற்றவர்களுக்கும் இதன் பிரதிகள் தரப்பட்டு அனைவரும் ஆர்வமுடன் தி.ஜாவின் படைப்புத் திறனில் ஆழ்ந்து போயினர். இசையோடு தொடர்புடைய தி.ஜாவின் இந்த படைப்பும் அதே இசையோடு உவமையாக கூறப்பட்ட எஸ்.ராவின் முன் குறிப்பும் படிக்க கேட்டு முடிக்கையில் ஒரு நல்ல இசையை கேட்ட திருப்தியை தந்தது.. பின் நண்பர் கே.வி.ராஜா தி.ஜாவின் மோகமுள் கதை பற்றி சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.ஞான சேகரனின் இயக்கத்தில் படமாக வந்த போது ஏன் வெற்றி பெற முடியவில்லை என்பதற்கான காரணங்களும் சுவை பட அலசப்பட்டன..( கூட்டம் பற்றி மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும் என்பவர்கள் கீழ் உள்ள இரண்டு பத்தியை படிக்காமலேயே தாண்டி விடவும் )

நாவலைப் படமாக மாற்றும்போது சில மிக மோசமாகத் தோற்றிருக்கின்றன. (பொய்முகங்கள், ப்ரியா, இது எப்படி இருக்கு போன்ற திரைப்படங்கள் சுஜாதாவின் நாவலை மையமாக எடுக்கப்பட்ட திரைப்படங்கள். பொய்முகங்கள் பரவாயில்லை ரகம். மற்ற இரண்டும் மிக மிக மோசம் ) சில படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. (முள்ளும் மலரும், கள்வனின் காதலி ( இப்ப வந்தது இல்லீங்கைய்யா... ) , சொல்ல மறந்த கதை, மோக முள் போன்றவை ). இயக்குநரின் திறமையில்தான் வெற்றியோ தோல்வியோ ஒளிந்திருக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.இன்னொன்றையும் பாருங்கள் நன்றாகவந்திருக்கின்றன என்றுதான் எழுதியிருக்கிறேன்.. நன்றாக ஓடி வெற்றி பெற்றவை என்று சொல்லவில்லை.. ( முள்ளும் மலரும் கொஞ்சம் விதி விலக்கு )

" பிரபலப் புத்தகங்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் வெற்றி கண்டிருக்கின்றன; தோல்வியும் கண்டிருக்கின்றன. இரண்டாம் பட்சமான நூல்களைச் சார்ந்து எடுக்கப்பட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன. சில இயக்குநர்களுக்கு தங்கள் பார்வை அவர்களுக்கே தெளிவில்லாமல் இருக்கும். இவர்கள் ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலைச்சார்ந்து அதனைத் தங்கள் பார்வைக்கு ஏற்ப மாற்றிக்கொண்டு திரைப்படமாக அமைக்கிறார்கள். இவைதாம் பெரும் வெற்றி அடைகின்றன. மிகச்சிறந்த ஆசிரியரின் நூல்கள் இயக்குநரின் பார்வைக்கு இடம்தருவதில்லை. மேலும் அந்நூல்கள் மிகுந்த வாசகர்கள் மத்தியில் பரவியிருக்கும் நிலையில் வாசகர்கள் பார்வையாளர்களாக வரும்போது தாங்கள் படித்த நூலின் அத்தனைப் பக்கங்களையும் திரைப்படத்தில் காட்சி ரூபமாக எதிர்பார்க்கிறார்கள். இயக்குநரால் அவர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்படுவதில்லை. பிரபலப் புத்தகங்களைச் சார்ந்த திரைப்படங்கள் தோல்வி அடைய இதுவும் முக்கியமான காரணம் " . (நன்றி : சுந்தர ராமசாமியின் கேள்வி-பதில் ஒன்றிலிருந்து.. )

என்னடா எழுத்துக்கூடத்தின் கூட்டம் பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டு ஏதோ ஆராய்ச்சியில் இறங்கி விட்டானே என்று நினைக்க வேண்டாம்.. காரணம் இருக்கிறது.. அன்றைய கூட்டத்தின் இரண்டாம் நிகழ்வில் நடந்த மற்றொரு திறனாய்வு கட்டம். நண்பர் நாக. இளங்கோ அவர் எழுதிய சிலம்பு மடலில் ( சிலப்பதிகாரத்தின் எளிய வடிவம் ) இருந்து சில பகுதிகளை வாசித்து காட்டினார். பாடப் புத்தகத்தில் மதிப்பெண்களுக்காக படித்த சிலப்பதிகார செய்யுளும் கலைஞர் கதை - வசனத்தில் செல்லூலாய்டில் செதுக்கப்பட்ட பூம்புகார் சித்திரமும் ' சொல்ல மறந்த சங்கதிகளை ' மிக அழகாய் யாருக்கும் போரடிக்கா வண்ணம் எளிமை நடையில் விளக்கி சொன்னார். கோவலன் கொலைக்கள காதையும் , கண்ணகி வழக்குரை காதையும் பற்றிய உண்மையான சில விபரங்களை அவர் விவரித்த விதம் அழகோ அழகு. (என்னமா எழுதறார்யா இந்த மனுஷன் என்று அடி வயிற்றிலிருந்து எழுந்த ஒரு புகைச்சலை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை ).எல்லாம் கேட்டு முடித்த பிறகுதான் தமிழ்த் தாயின் தலைப் பிள்ளை கலைஞர் கூட சினிமா என்று வரும்போது ஒரு இலக்கியத்தை அப்படியே தர இயலாமல் எவ்வளவு காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது என்று தெளிவுற தெரிந்தது..

நண்பர் நாக.இளங்கோவனின் சிலம்பு மடல் தற்கால தலைமுறைகளுக்கு சிலப்பதிகாரத்தை ஒரு எளிய வடிவில் தரும் படைப்பு என்பதை அவர் எதிர்கொண்ட விமர்ச்சனங்களும், சந்தேகங்களுக்கு அவர் அளித்த பதில்களும் ஐயமின்றி காட்டியது.. ரியாத் தமிழ்ச் சங்க செயலாளர் திரு இம்தியாஸ் கேட்ட நியாயமான சந்தேகங்கள் எழும் கேள்விகளுக்கும் என்னைப் போன்ற 'அதிகப்பிரசங்கி' கேட்ட கேள்விகளுக்கும் ( உதாரணம் : பாண்டிய நெடுஞ்செழியனுக்கு பட்டத்தரசி ஒருவர்.. கிட்டத்தரசி எத்தனை பேர்.. ? ) நாக இளங்கோவன் அளித்த பதில்கள் எல்லோரையும் கவர்ந்தன என்றால் அது மிகையில்லை.. இடையிடையே பிள்ளையார் பால் குடித்த கதையும் பிரேமானந்தா லிங்கம் தந்த விதமும் பற்றி 'வயிறு வலிக்க' அலசப்பட்டது.. 'சோ'வும் கூட தப்ப வில்லை. ( நீதி : எழுத்துக் கூடம் என்றால் இலக்கியம் மட்டும் தான் பேசப்பட வேண்டும் என்றில்லை..)

இந்த வாரம் இவர் பொறுப்பு என்ற முடிவு மற்றவர்க்கு தெரியாததால் இரண்டு தேனீர் இடை வேளைகள்.. திருமதி மரியம் ஷாஜஹான் மற்றும் திருமதி ஜெயசீலன் இருவரும் ஏற்பாடு செய்திருந்த தேனீர் உபசரிப்புக்கு பின் விவாதங்கள்,பகிர்தல்கள் தொடர்ந்தன.நேர அரக்கன் மட்டும் குறுக்கிடாமல் இருந்தால் அலசுவதற்கென்று ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன.. கூட்டம் முடிந்த பிறகு வெளியே ஒரு குட்டி கூட்டம் போட்டு 'ஆங்கிலம் கலக்காது அழகிய தமிழில் பேச பழகி கொள்வோம் ' என்ற கருத்தை வலியுறுத்தி அதன் சாரம்சங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டன.( அதன் பின் வாசலுக்கு வெளியே இன்னொரு குட்டி கூட்டம் போட்டு கொஞ்ச நேரம் வேறு பல உபயோகமான விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தது தனிக்கதை )

அவசியம் வருகிறோம் என்று சொன்ன சில படைப்பாளி நண்பர்கள் வராதது சற்று ஏமாற்றமாக இருந்தது.. அடுத்த கூட்டத்திற்கு ( 31 - 03 - 2006 ) அவசியம் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இறை நாடினால் வரும் கூட்டத்தில் கதாவிலாசம் , சிலம்பு மடல் கருத்தோட்டம், இன்னும் பல சுவையான நிகழ்வுகளோடும் சூடான விவாதங்களோடும் எழுத்துக் கூடம் இனிதே நடை பெறும். மிக பொறுப்பாய் இந்த கூட்டத்தை நடத்திச் செல்லும் நண்பர் சாகரனுக்கும், தற்போது தாயகத்திலிருக்கும் ஐயா அப்பாஸ் அவர்களுக்கும் பின்னணியில் பல படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி ஆர்வப்படுத்தி எழுத வைத்துக் கொண்டிருக்கும் ரியாத் தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளுக்கும் ரியாத் தமிழர் உலகம் நிச்சயம் கடமைப்பட்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006