எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---42  ஒரு பார்வை.

--.லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் 42 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.லக்கி ஷாஜஹான்

========================

 06 ஜூன் 2008

எழுத்துக்கூடத்தின் 42 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. ஜெயசீலன் அவர்கள் இல்லம்


பத்தா - ரியாத் மாநகரின் தமிழர்கள் மற்றும் வங்கதேசத்தினரின் இதயப்பகுதி. மேல்மட்ட
நாகரீக மக்களின் கலீஜ் ஏரியா என்ற அடையாளப்பகுதி.தலைநகரின் மாஃபியா இடங்கள்
சுமேசியும்,பத்தாவும் என்று அரசாங்கத்தின் கறுப்புமை இடப்பட்டு குறித்து வைக்கப்பட்டுள்ள
இடத்தில் ஒன்று.சொந்த ஊரில் இருப்பது போலவே என்னைச்சார்ந்த நிறையபேருக்கு
இதமளிக்கும் இடம்.. இங்குள்ள தமிழர் பரப்பையும்-கேரளா சந்தையையும் பிரிக்கும் நெடிய
பாம்பு போன்ற பாலத்தின் அடியில் இந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் வாயில் கசியும்
முலைப்பாலோடு எங்கோ பார்த்திருக்க அவர்களை ஏதோ ஒரு அலட்சிய நிலையில் மடியில்
போட்டுக் கொண்டு கைகளை ஏந்தி வாஹித் ரியால் பஸ் என்ற குரலோடு கூடிய கறுப்பாடை
மாதுக்களை பார்த்ததுண்டா..?
அங்கு மட்டுமன்றி எங்கும் காணக்கூடிய இந்த காட்சி இங்கு பிரதானமாகி கொண்டிருக்கிறது.
அதை விடுங்கள்.. ஊரில் சிவப்பு விளக்கு பார்த்து செத்த நாழி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்
இயந்திர நகர்வூதிகளின் இடையே பல்வேறு வயதுகளில், பல்வேறு உடைகளில் சிலசமயம்
அவற்றிலும் வறுமை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்க கார்கதவு தட்டி கைஏந்தும்
பிச்சைக்காரர்களை பார்த்ததுண்டா..? எத்தனை பேருக்கு உதவி செய்திருக்கிறீர்கள்..எத்தனை
பேரை புறக்கணித்திருக்கிறீர்கள்..? எத்தனை பேரை விலக்கி மிகச்சிறிய பேர்களுக்கு போடும்
சில்லறைக்கு சில நியாயமான கருத்துக்களை கொண்டிருப்பீர்கள்.. அப்படிப்பட்ட மனிதர்களுக்கும்
மனங்களுக்கும் இடையே உள்ளனவற்றையும் - அதைப் பற்றியதொருமான கருத்தாழத்தை
பின்னணியாகக் கொண்டதுமான சந்திப்பே இந்த வார எழுத்துக்கூடத்தின் கதாவிலாசமும் -
கலந்துரையாடலுமாய் இருந்தது ஐயா ஜெயசீலன் வீட்டில்..

என்னைக்கவர்ந்த தலைவர்-நடிகர்-நடிகையர்- இதர இதர 'கவர்ந்தவர்களில்' பிச்சைக்காரர்
என்று யாரேனும் உங்களுக்கிருக்கிறார்களா..? எனக்கு இருக்கிறார்கள்.. எனக்கு நெருக்கமானவராக
இருந்திருக்கிறார்.. இதைப்பற்றி ரியாத் தமிழ்ச்சங்க இணைய தளத்தில் 'பேனா விற்கும் பில்கேட்ஸ்'
என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன். இதை எழுத்துக்கூட சந்திப்பின் கலந்தாய்வில் பகிர
நான் மறந்து போனேன்.படித்த ஏனையவர்களும் மறந்து போனார்கள்.. பிச்சைக்காரர்களை விட
உச்சமான மற்ற சிலவைகளும் இச்சைக்குரிய இஷ்டமானவைகளும் மட்டுமே நம்
நினைவாடல்களில்...

நான் இன்ன இடத்திலிந்து இங்கு வந்தேன்.கையிலுள்ளவை எல்லாம் திருடுபோய் விட்டது.
ஊர் போய் சேர இவ்வளவு தேவைப்படுகிறது.கொடுத்துதவுங்கள் என்று கண்ணீர் மல்க
கேட்டவனுக்கு நான் மட்டும் கொடுக்காமல் என்னுடைய நண்பர்களிடம் வாங்கித் தந்து
(பெரிய கர்ணமகா பிரபு இவரு.. ஃபிராடுடா இவனுங்க என்று நண்பர்களில் ஒருவன்
சொன்னதை அலட்சியப்படுத்தி) பின் அந்த ஊர் தொலைந்த மனிதரை தஞ்சை ஜுபிடர்
தியேட்டரிகல் எனக்கு பினால் நான்கு வரிசைகள் தள்ளிப் பார்த்தேன்.துண்டுபீடி உதட்டில்
கசிய அலட்சியமாய் உட்கார்ந்திருந்தான்.இதைப் போலவே இப்போதும் தஞ்சை ஜுவி ஸ்டூடியோ
எதிரே ஒரு பேரிளம்பெண்ணைப் பார்க்கலாம்.பார்க்கவே மிகப்பரிதாப தோற்றத்துடன் கையேந்தும்
அந்த முதிய பெண்மணி சேர்ந்த காசை வச்சி பட்டை அடிக்கும் என்பதை புதியவர்கள் யாரும்
சூடம் ஏற்றி சத்தியம் செய்தாலும் கூட நம்பப் போவதில்லை.

நெகிழ்த்தியவர்களும் இருக்கிறார்கள்.தஞ்சை-திருச்சி அகல ரயில்பாதையில் தினமும் சென்று
வரும் நண்பர்கள் அறியக்கூடும் அவரை.. சுமார் அறுபது வயது பெரியவர். ஒவ்வொரு பெட்டியாக
ஊர்ந்து தம் கையில் உள்ள துண்டால் நம் உட்காரும் இடம்,கீழே நம் பெட்டிகள் ,ஜன்னல்கள்
எல்லாம் துடைத்து சுத்தப்படுத்திவிட்டு பின் கையேந்துவார்.. மிகச்சிலரைத் தவிர யாரேனும்
மறுத்ததில்லை. சிறுவன் ஒருவனை கையில் பிடித்துக் கொண்டு கண்தெரியாமல் கறுப்பு
கண்ணாடி அணிந்து "எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்..நான் வாழ யார் பாடுவேர்' என்று
நெக்குருக்கும் குரலில் கையில் வைத்திருக்கும் சதங்கை போன்ற ஒன்றால் பாடிக் கொண்டு
வரும் முதியவரும் என் தஞ்சை-திருச்சி ரெயில் பயணங்களில் நினைவாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் பற்றிய அறிமுகத்துக்கான முன் எஸ்.ரா தாம் சந்தித்த ஒரு நிகழ்வை
நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். வயிற்றுக்காக கையேந்துவதில் சில ஏமாற்றுவேலைகளை
அவர்கள் கைக்கொண்டாலும் எல்லோருக்கும் இருப்பது போல் ஈர நெஞ்சமும் வாழ்க்கைப்
பற்றியதான தேடலும் அவர்களுக்கும் உண்டு என்பதை விவரித்து இதற்கான பிரபஞ்சன்
சிறுகதை ஒன்றையும் நமக்கு பந்தி வைக்கிறார் எஸ்.ரா..

அரசு வேலையில் தங்கையை சேர்க்க வரும் ஒரு நபர் அரசியலில் ஏமாற்றிப் பிழைத்துக்
கொண்டிருக்கும் ஒருவரிடம் சிபாரிசுக்கு வர அவனோ இவனிடமிருந்த காசை எல்லாம்
முறைகேடாக செலவழித்துப் பின் நிறைய பேரை பார்ப்பதாய் போக்கு காட்டி வெளியே வர
'எனக்காக இவ்வளவு கஷ்டப்படறீங்களே' என அவன் காலில் விழப்போக அந்த ஏமாற்றுப்
பேர்வழி மனம் திருந்தும் சிறுகதை.

பிரபஞ்சன் தமிழ் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர்.பண்டிச்சேரி மண்ணின் மைந்தர்.
குற்ப்பிடத்தக்க படைப்புகளை மட்டும் செய்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பவர்.
வானம் வசப்படும் போன்ற கருத்துச்செறிவுள்ள கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.பல விருதுகள்
பெற்றிருக்கிறார்.

இதற்குப் பின்னால் எழுத்துக்கூடத்தில் இந்த பதிவு தொடர்பான சம்பவங்கள் பரிமாறிக்
கொள்ளப்பட்டன. ஐயா மாசிலாமணி, ஐயா வெற்றிவேல்,ஐயா ஜெயசீலன், சகோதரி
மலர்ச்செல்வி,நண்பர்கள் திரு சபாபதி,கே.வி.ராஜா,இராசப்பா ஆகியோர் இந்த எழுத்துக்
கூட சந்திப்பில் பங்கேற்றுக் கொண்டனர்.திருமதி உதயா ஜெயசீலன் தேநீர் உபசரித்தார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எழுத்துக்கூடம் களைகட்டத் தோன்றியதாக உணர்ந்தேன்.இதை
இன்னும் நெறிப்படுத்தி முறைப்படுத்த பல யோசனைகள் மேற்கொள்ளப்பட்டு முடிவாகின.
விரைவில் அதைப்பற்றிய அறிவிப்புகளை எழுத்துக்கூட ஒருங்கிணைப்பாளர் நண்பர்
கே.வி..ராஜா வெளியிடுவார்.

அடுத்து, எழுத்துக்கூட சந்திப்பில் புதிய அம்சமாக நவீன கவிதைகள் ஒரு அறிமுகம் என்ற
தலைப்பில் நண்பர் ஃபகுருதீன் ஒரு தொடர் ஆரம்பிக்கிறார்.. 'திரையிசைப்பாடல்களில்
கவித்துவ நயம்' என்ற தலைப்பில் என்னை ஒரு தொடர் ஆரம்பிக்க சொல்லியிருக்கிறார்கள்.
ரியாத்தின் தமிழ்வாசிகள் அனைவரையும் எழுத்துக்கூடம் பக்கம் இழுக்கும் ஒரு இனிதான
முயற்சி துவங்கியிருக்கிறது.. முடிந்தால் முடியாததும் உண்டா என்ன...?
 


 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.