எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---43  ஒரு பார்வை.

--.லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் 43 ஆம் கூட்டம் - ஒரு பார்வை
 

----.லக்கி ஷாஜஹான்

========================

 20 ஜூன் 2008

எழுத்துக்கூடத்தின் 43 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. ராஜா  அவர்கள் இல்லம்


எழுத்துக்கூடத்தின் 43 ஆவது கூட்டம் நண்பர் கே.வி.ராஜாவின் வீட்டில் நடைபெற்றது என்று
இந்தப் பத்தியைத் தொடங்குவதற்குள் அந்த கூட்டத்தில் இதுவரை நடக்காத ஒரு புதுமையைச் சொல்ல ஆசைப்படுகிறேன்.சொன்னால் படிக்கும் நீங்களும் ஆச்சரியப்படக்கூடும்.உடனே தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டால் இந்த பதிவின் கடைசி வரிகளைப் படிக்கவும்.

பொதுவாக ஒரு இடத்தில் எ.கூ நடைபெறுவதற்கு இஸ்திரஹா
எடுப்பதற்கு தொடர்பாக நண்பர் ராஜா மடலிட்டுக் கேட்டதே
இந்த இடம்பெயரல்கள் எல்லோருக்கும் சரிவர முடிவதில்லை
என்பதற்காகத்தான்.. தவிர எல்லோரும் சொல்லும் ஒரே
காரணம் அன்று ஒருநாள் தான் குடும்பத்தோடு செலவிடும்
தினம்.அன்றைக்கும் சில மணி நேரங்களை நீங்கள் திருடிக்
கொண்டால் எப்படி..? இலக்கியமும் ஆசைதான்..ஆனால்
வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் என்பது எல்லாக் குடும்பங்களிலும்
கொஞ்சம் பூகம்பத்தை கிளப்புகிறது.இதுக்குத்தான் நான் குடும்பத்தை ஊரிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள்.. ? :-)

காரெடுத்துக் கொண்டு சரியாக 3:00 மணிக்கு வந்துவிடுவதாக
நண்பர் ஃபகுருதீன் தொலைபேசியதிலிருந்து எ.கூ நிகழ்வுக்குச்
செல்லும் ஆர்வத்தை விட இன்று முதல் தொடங்கவிருக்கும்
புதிய பகுதிகளான திரையிசைப்பாடல்களில் இலக்கிய நயம், மற்றும்
நவீன கவிதைகள் ஒரு அறிமுகம் பற்றிய பயமே மேலோங்கியிருந்தது. காரணம் முன்னது
நான்.பின்னது ஃபகுருதீன்.

அனேகமாக நாங்கள் தான் கடைசியாகப் போன ஆட்களாக
இருப்போம் என்று நினைக்கிறேன்.எங்களுக்கு முன்னரே நண்பர் ராஜா வீட்டில் திரு மற்றும் திருமதி பாலராஜன் அவர்கள், மாசிலாமணி ஐயா,நண்பர் இராசப்பா ஆகியோர் வந்திருந்தனர்.
ஏற்கனவே சகோதரி மலர் மற்றும் நண்பர் சபாபதி ஆகியோர் வர இயலாது என்று என்று சொல்லிவிட்டிருந்தார்கள். அதுபோலவே ஜெயசீலன் ஐயாவும் திருமதி உதயா-வும் தூதரக கலையரங்கில் ஏதோ நிகழ்ச்சி என்பதால் வரவில்லை.

ராஜா உற்சாகமாக வரவேற்றார். எ.கூ தொடங்கியதிலிருந்து இப்போதுதான் முதன் முறையாக அவர் வீட்டில் நடக்கிறது என்ற காரணத்தால் என நினைத்தால் பிறகு தான் தெரிந்தது,சகோதரி ஊருக்குப் போயிருக்கும் விஷயம்.அப்படி
ஒரு சந்தோஷம் நண்பருக்கு.. எங்களை உபசரித்ததாகட்டும்,அவர் வீட்டு நூலகத்திலிருந்து ஆளுக்கொரு நூலை எடுத்துக்கொண்டதற்கு கூட ஆட்சேபிக்காத அப்படி ஒரு சந்தோஷம் அது வீடு முழுவதும் எதிரொளித்தது..

நண்பர் ராஜா போட்ட மடலுக்கு எத்தனை பேர் ஆர்வம் தெரிவித்திருந்தனர் என்று மாசிலாமணி ஐயா கேட்ட கேள்வியிலிருந்து தொடங்கியது கூட்டம்.ராஜா மடலில் தொடர்பு கொள்ளவும் எனக் கொடுத்திருந்த இன்னொரு நபரான எனக்கு
அந்த வாரம் மட்டும் 1320 மடல்கள் வந்திருந்தன.ஆனால் அதில்
ஒன்று கூட இது தொடர்பாய் இல்லை என்று நான் சொன்னதை
மாசிலாமணி ஐயா அவ்வளவாய் ரசிக்கவில்லை.

முதலில் நண்பர் ஃபகுருதீனின் நவீன கவிதைகள்...

எழுத்துக்கும் - அதை பேச்சில் விவரிக்கும் பாங்கு என்ற இரண்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
நான் பெரிதாய் நேசிக்கும் எழுத்தாளர்கள் சுஜாதா-பாலகுமாரன்
இருவரின் எழுத்துக்கள் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை.
ஆனால் இருவருமே மேடைப் பேச்சுகளில் - நேர்காணல்களில்
அவ்வளவாய் பிரகாசித்ததில்லை என்பது கண்கூடு. நண்பர் ஃபகுருதீன் பலம் அவரது எழுத்துக்களில் இருக்கிறது.
மென்மையாய் ஒரு இலக்கியப் பகுதியை விவரிப்பது என்பது
கொஞ்சம் கடினம் தான்.. ஒருவேளை கவிதைகளே மென்மையானது என்பதால் அங்ஙனம் ( இந்த வார்த்தை எல்லாம் இப்போது நாம் தமிழில் பயன்படுத்துவதே அரிதாகி விட்டது ) வாசித்தளித்தாரோ என்னவோ..?

தம் கருத்துக்களுக்கு மேலும் பலம் கூட்ட நண்பர் சேகரித்து
வந்த குறிப்புத்தாள்களைப் பார்த்ததிலிருந்தே இதற்கென அவர்
எவ்வளவு மெனக்கெட்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.சாதாரண கவிதைகளில் இருந்து நவீன கவிதைகள்
எந்தளவு முன்னேற்றம் கண்டு அந்தப் பாதைகளை விட்டு
விலகிப் போயிருக்கின்றன என்பது பற்றியெல்லாம் அந்த
குறிப்புகளில் இருந்து விளக்கி விவரித்தார் நண்பர். கூடுதலாய்
ஒரு மண்டை காய வைக்கும் குறிப்பு - அதை என்னை விட்டு
படிக்க வைத்ததில் மட்டும் அடிக்கும் வெயிலுக்கு அனலாய்
இருந்தது அந்த பதிவு.

எனது தலைப்பினால் ஆன பகுதி அடுத்ததாய் தொடங்கியது.
உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லாத வெங்காயம் போல் அப்படி
ஒரு பதிவை அழகாய் விவரித்ததில் சி.த அசந்துபோனான்.அதெப்படி விஷயமே இல்லாமல் கொஞ்சம் கூட
வெட்கப்படாமல் இவனால் ஜல்லியடிக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அவனுக்கு.. அதை சரியாக கண்டுபிடித்த நண்பர்கள் அடுத்தவாரம் நன்றாய் தயார்செய்து வரும்படி சொல்லி ஆரம்பித்த 478 வினாடிகளில் முடிக்க வைத்து விட்டார்கள்.இந்த பத்தி
(இதைப் பத்தி) எழுதியிருக்க வேண்டிய அவசியமே இல்லை.:-)

பிறகு வழமையாய் பேசப்படும் நவீன இலக்கிய அவதானிப்புகள்
சிற்சில விஷயங்கள் அலசப்பட்டு கூட்டம் நல்லபடியாய் நிறைவடைந்தது.


எதை முக்கிய நிகழ்வாகக் கொண்டு எழுத்துக்கூடம் நகர்கிறதோ அந்த நிகழ்வு - எஸ்.ராமகிருஷ்ணனின்
கதாவிலாசம் படிக்கும் நிகழ்வு அன்று நடைபெறவில்லை.அதனால் எ.கூ வழமையான சுவாரஸ்யத்தை
இழந்து விடவும் இல்லை.
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.