========================
கவியரசு கண்ணதாசன்
புதல்வர் காந்தி கண்ணதாசனுடன் தொலைபேசி
உரையாடல்.
04 சூலை 2008
எழுத்துக்கூடத்தின் 44 வது சந்திப்பு - ஒரு
பார்வை
இடம்: திரு. வெற்றிவேல் அவர்கள் இல்லம்
அனைவரின் எதிர்பார்ப்புகளுக்கும் பல படிகள்
மேலாக, மிகச் சிறப்போடு நடைபெற்றது
எழுத்துக்கூடத்தின் கண்ணதாசன் பற்றிய
சிறப்புக்கூட்டம்.
கண்ணதாசன் படைப்புகள் பற்றி எழுத்துக்கூடத்தில்
வந்த கட்டுரைகள் பற்றிய கலந்துரையாடலுடன்
ஆரம்பித்தது இந்த வாரக் கூட்டம். மடல்களில் பல
கருத்துகள் வெளிவந்திருந்தாலும், கண்ணதாசன்
போன்றோரின் படைப்புகளைப் பற்றிய கருத்துப்
பரிமாற்றத்துக்கு எவ்வளவு நேரம் ஒதுக்கினாலும்
போதாது.
கூட்டத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது கவிஞரின்
புதல்வர் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களுடனான
தொலைபேசி உரையாடல். அனைவருக்கும் ஆச்சரியமும்,
மகிழ்ச்சியும் தரும் வகையில் திரு. வெற்றிவேல்,
இந்திய நேரம் மாலை 7 மணிக்கு இந்தத் தொலைபேசி
உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
போக்குவரத்துக்கு மத்தியில் பல வித சத்தங்களின்
இடையூறு இருந்த போதும் அவர் தன் நினைவுகளை
எழுத்துக்கூட அன்பர்களுடன் பகிர்ந்து கொண்டது
அங்கிருந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவருக்கும்
மிக்க மகிழ்ச்சி என்பது அவரது குரலிலேயே கேட்க
முடிந்தது.
தன் தகப்பானாரின் நினைவுகள் பலவற்றைப்
பகிர்ந்து கொண்டார். அவர் கூறிய சில செய்திகள்
புதியனவாக இருந்தன. குடும்பத்தில் 14 பிள்ளைகள்
இருந்த போதும் அனைவரும் ஒரே வீட்டில் வாழ்ந்த
காலகட்டங்களின் இனிமையைப் பகிர்ந்து கொண்டார்.
பாடல்களை எந்த விதச் சூழலில் கவிஞர் எழுதினார்
என்பதையும் பகிர்ந்து கொண்டார். மது
அருந்திவிட்டுதான் கவிஞர் பாடல்கள் எழுதுவார்
என்ற பலரின் நம்பிக்கையும் தவறானது என்று
கூறினார். கவிஞர் பாடல் எழுதப் பதினைந்து
நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்
கொள்வாராம்.
கண்ணதாசனின் புதல்வர் கண்மணி சுப்பு ஒரு முறை
தன் அப்பாவிடம் தன்னைப் பற்றிய பாடலொன்றை
எழுதும்படிக் கேட்டபோது "ஏன் பிறந்தாய் மகனே"
பாடல் எழுதியதாகக் கூறினார்."தமிழ் எனக்குக்
கிடைத்த பெரிய வரம்" என்று கவிஞர் அடிக்கடி
கூறுவாராம். பலவிதமான சத்தங்களுக்கு இடையேயும்,
அவரின் பலவித அலுவல்களுக்கிடையிலும் அவர்
அனைவருடனும் பேசியது மிகவும் மகிழ்ச்சியான
ஒன்றாகும். எழுத்துக்கூட அன்பர்களுக்கும் தன்
வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
திரு. இளங்கோ, அவரிடம் இரண்டு கேள்விகளை முன்
வைத்தார். திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும்
நானே பாவமும் நானே' மற்றும் 'பாத்தா பசுமரம்'
இரண்டு பாடல்களும் எந்தவிதச் சூழலில் எழுதினார்
என்று கேட்டார். கவியரசர், இசையமைப்பாளர்
மற்றும் இயக்குநர் இவர்களின் கூட்டணி எப்போதும்
ஒருவருக்கொருவர் நல்ல புரிந்துணர்வுடன்
இருந்ததால் பல வெற்றிகளைக் காண முடிந்தது என்று
கூறினார். மேலும், கவிஞர் கடினமான
சூழல்களுக்காக எழுதிய பாடல்கள் மிகவும் பெரிய
அளவில் வெற்றி பெற்றது என்று கூறினார். நாம்
அவருக்கு நன்றி கூற வேண்டிய நிலையில், அவர்
அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும்
தெரிவித்தார்.
கைத்தொலைபேசியில் இந்த உரையாடலைப் பதிவு
செய்திருந்ததால், ஒலிப்பெட்டி உதவியுடன்
மீண்டும் ஒருமுறை இதைக் கேட்டு ரசிக்க
முடிந்தது. மிகப் பொருத்தமான நேரத்தில் சரியான
ஏற்பாடு செய்திருந்த திரு. வெற்றிவேல்
அவர்களுக்கு அனைவரும் பாராட்டுத் தெரிவித்தனர்.
மேலும் திரு. காந்தி கண்ணதாசன் அவர்களின்
பேட்டியடங்கிய குறுந்தகட்டுத் தொகுப்பையும்
கண்டு ரசிக்க முடிந்தது. தன் தந்தை குறித்து
அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் அவருக்கு
மட்டுமல்ல, அனைவருக்கும் மகிழ்ச்சியையும்,
மனநிறைவையும் தந்தது.
கண்ணதாசனின் பாடல்களின் தாக்கம் அனைவரிடமும்
இருந்ததைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
அவரவர் பாணியில் பாடல்களுக்கு அளித்த
விளக்கங்களும் புதிய கோணங்களில் சிந்திக்க
வைத்தன. உதாரணத்துக்கு 'நான் நிரந்தரமானவன்,
அழிவதில்லை, எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை'
என்ற கவிஞரின் வரிகளுக்குத் திரு. இளங்கோ
அவர்கள் கூறிய விளக்கம் புதிய பார்வையைத்
தந்தது. கண்ணதாசன் எண்ணப்போக்கைப் பார்க்கும்
போது, இந்த வரிகள் ஆணவத்திலோ கர்வத்திலோ
எழுதப்பட்ட வரிகளாக இருந்திருக்க முடியாது,
ஆன்மாவுக்கு என்றும் அழிவில்லை என்ற கவிஞரின்
நம்பிக்கையின் பிரதிபலிப்பே இவ்வரிகள் என்று
அவர் கூறிய அந்தக் கோணமும் மிகவும்
பொருத்தமாகவே இருந்தது.
அனைவரின் அனுபவங்கள், மற்றும் பல படைப்புகளைப்
பற்றிய பார்வைகளும் பல புதிய செய்திகள்
தொகுத்தளித்தன. திரு. மாசிலாமணி, திரு.
ஜெயசீலன், திரு. வெற்றிவேல், திரு, இளங்கோ,
திரு. கே.வி.ராஜா, திரு. எஸ்.என். ராஜா, திரு.
அழகப்பன், திரு. ஷாஜஹான், திரு. பக்ருதீன்
அனைவரும் தத்தம் கருத்துகளையும்
எடுத்துரைத்தனர். கூட்டத்துக்கு முன் கவிஞர்
பற்றியும், அவர் படைப்புகளையும் பற்றி
அறிந்திருந்ததை விடக் கூட்டம் முடியும் தருணம்
இன்னும் அதிகமான செய்திகளும் அறிந்து கொண்டோம்
என்று கூறினால் அது மிகையாகாது.
மொத்தத்தில் எழுத்துக்கூடத்தின் கண்ணதாசன்
பற்றிய சிறப்புக் கூட்டம் மிகவும் சிறப்பாக
நடந்தேறியது.
அன்புடன்,
மலர்.