எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---45  ஒரு பார்வை.

--.மலர் சபாபதி

எழுத்துக்கூடத்தின் 45 ஆம் கூட்டம் - கவியரசு கண்ணதாசன் சிறப்புக் கூட்டம் - ஒரு பார்வை
 

----.மலர் சபாபதி

========================   

28 சூலை 2008

எழுத்துக்கூடத்தின் 45 வது சந்திப்பு - ஒரு பார்வை

இடம்: திரு. ஜெயசீலன் இல்லம்.

கதாவிலாசம்: பிரபஞ்சத்தின் தனித்தன்மையை உணர்வதன் மூலம், தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவைக்கும் கருத்துக் கொண்ட ஒரு ஜென் கதையை மேற்கோள் காட்டி, இயற்கையின் தன்மையை, அதனிடத்திலிருந்து வெகு தூரம் விலகி நிற்கும் நம் இக்கால இயல்புகளை விளக்குகிறது 'சூரியனுக்குக் கீழே' என்ற கதை. இயந்திர கதி வாழ்க்கையில் தொலைந்து போகும் சின்னச் சின்ன அழகுகள்..தொலைக்காட்சியில் தன்னைத் தொலைக்கும் மனங்கள், சூரிய கிரகணத்துக்காக மட்டுமே ஆகாயம் பார்க்கும் மனங்கள், உற்று கவனித்து ரசிக்க நமக்கு மனமில்லாத நிலையில் நேரமில்லை என்று சாக்குச் சொல்லும் மனங்கள், பயன்பாடு என்ற அளவுகோல் மட்டுமே கொண்டு எதையும் அளக்கும் மனங்கள்..இப்படிப் போகிறது கதை.

இதற்கு மாறாகப் பயன்பாடு பேதம் கருதாமல் வியாபித்திருக்கும் இயற்கையின் சிறப்பு,
பலவிதப் ப்ரச்னைகளினூடே இன்னும் கொஞ்சம் மிச்சமிருக்கும் இயற்கையை ரசித்து மகிழும் மனம்..இதுவே சற்று ஆறுதல் என்று முடிகிறது கதை.

இதே கருத்து சார்ந்தது பிரமீள் எழுதிய 'நீலம்' கதை..ஓர் பேருந்துப் பயணத்தில் பயணிக்கும் ஓர் ஓவியனுக்கும் சிற்பிக்கும் இவ்வாறாக சர்ச்சை எழுகிறது.."மனிதன் செய்யும் அத்தனை வேலைகளையும் இயந்திரங்களால் செய்ய முடியுமா, முடியாதா.." கணினி - சிற்பி, ஓவியன் இன்னும் பிற வடிவங்களில் வியாபித்து நிற்கும் இந்தக் காலகட்டத்தில் இயற்கை ரசனை என்பது இயந்திரத்துக்கு இயலாத ஒன்று..ஒரு சிறுவன் 'நீலோத்பலம்'* என்ற மலரைப் பறித்து ஓவியனின் கைகளில் தந்து மறைகிறான்..ஓவியனுக்கு வியப்பு..அந்தச் சிறுவனுக்கு அந்த மலரை ரசிப்பது எப்படிச் சாத்தியமாயிற்று என்று..

"நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது" என்ற கவிதை வரிகளுடன், பிளாஸ்டிக் பூக்கள் உலகத்தில் வாழும் நம் வாழ்க்கையில் ரசிக்கும் தன்மை மறைந்து வருகிறது என்று முத்தாய்ப்பாக முடிகிறது கதை.

ஆசிரியர் குறிப்பு: பிரமீள்...மரபின் செறிவும் கவித்துவத்தின் உச்சமும் கொண்ட கவிஞராக நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர் பிரமீள். இவரது கதைகள் 'லங்காபுரி ராஜா' என்னும் தொகுப்பாக வெளிவந்துள்ளன. இவர் எழுதிய 'ஆயி' என்ற குறு நாவல் மிகவும் முக்கியமானது.

சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' பத்திரிகையில் எழுதத் துவங்கியவர் பிரமீள். தர்மு அரூப் சிவராம் என்ற பெயரில் நிறைய எழுதியுள்ளார். 'கண்ணாடியுள்ளிருந்து', 'கைப்பிடியளவு கடல்', 'மேல்நோக்கிய பயணம்' போன்றவை அவரது முக்கிய கவிதைத் தொகுதிகள். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமீள், தமிழ் உரைநடை குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

எதிர்பாராத உடல்நலக் குறைவு காரணமாக 1997-ல் மரணமடைந்த பிரமீள், இன்றும் நவீன தமிழ் இலக்கியத்துக்கு ஓர் உந்துசக்தியாகவே இருந்து வருகிறார்.

கதை அனைவரின் மலரும் நினைவுகளை, ரசித்த சில அழகுகளை அசை போடவைத்தது. திரு. வெற்றிவேல், திரு. இளங்கோவன், திருமதி & திரு. ஜெயசீலன், திரு. ராசப்பா,திரு.கே.வி.ராஜா, திரு.எஸ்.என்.ராஜா, திரு.அழகப்பன், திரு.காமராஜ் அனைவரும் தத்தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

('நீலோத்பலம்'* : நீலோத்பலம்? நீலோத்பவம்? எது சரி?)

அன்புடன்,
மலர்.

 

பி.கு-- நீலோற்பலம் அல்லது நீலோற்பவம் என்பது எழுத்து வழக்கிற்கு சரியென்று தெரிகிறது.


 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.