எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---46  ஒரு பார்வை.

--.லக்கி ஷாஜஹான

எழுத்துக்கூடத்தின் 46 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

---லக்கி ஷாஜஹான்

========================   

01 ஆகஸ்டு 2008


இடம்: லூசண்ட் பின்புறம் உள்ள மகிழகம்
 

சின்னத்தம்பியின் குறிப்பு:

இதை எழுத்துக்கூடத்தின் 46 ஆம் கூட்ட சந்திப்பின் பார்வையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
==================================

தொலைந்து போனவற்றை
தேடத் தொடங்கியதிலிருந்து
தொலைந்து போகின்றன
நேரங்களும்...
புதிதாய் தொலைத்துக்
கொண்டிருக்கும்
இன்னும் பிற பொருள்களும்..

இந்த வரிகளை சொன்னவர் யார்?

அ] பாப்லோ நெரூதா
ஆ] டால்ஸ்டாய்
இ] எட்மண்ட் ஃப்ராங்களின்
ஈ] ஷேக்ஸ்பியர்.

விடை கடைசியில்...
===============================================
அடிக்கடி சின்ன சின்ன பொருள்களைத் தொலைக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்..?

இந்தப் பதிவை இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது.இப்படி உங்களைக் கேள்வி
கேட்டு நீங்கள் ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்வதற்குள் என்னால் ஒரு சின்ன
பின்னோக்கிய நினைவுப் பயணம் போய்விட்டு வந்துவிட முடியும்.ஒருவேளை நீங்கள்
உடனடி பதில் தர இயலாமல் கொஞ்சம் சிந்திக்கத் தொடங்கி விட்டால் அடுத்து நான்
எழுதப்போவது உங்களுக்கு உதவக்கூடும்.

பள்ளிப்படிப்பு காலத்தில் அதிகம் செருப்பணிந்து நடந்ததாக எனக்கு நினைவில்லை.
கொஞ்சம் முழுநீள கால்சட்டை அணியும் பருவத்தில் - பாருங்கள் அப்படி ஒரு வாய்ப்பே
எனக்கு 11 ஆம் வகுப்பு போகும்போதுதான் கிடைத்தது.சந்தேகப்படும் நண்பர்கள் எனது
உயரத்தை நினைவில் கொள்ளவும். அப்போதுதான் எப்போதும் செருப்பணிந்து போகும்
பழக்கம் வந்தது. அரைக்கால் சட்டை அணியும் பருவத்தில் செருப்பணியாததற்கு காரணம்
வறுமை அல்ல

வழமையாய் செருப்பைத் தொலைக்கும் பழக்கம்.

உயர்நிலை-மேல்நிலை வகுப்புகளுக்கு மாரியம்மன் கோவில் போய் படிக்கும் நேரத்தில்
ஐந்து கி.மீ தொலைவிலுள்ள அந்த ஊருக்கு நடந்துதான் போய்ப்படிக்க வேண்டும்.பேருந்து
வசதிக்கு நிதி நிலமை இடம் தராத மத்யமர் குடும்பம்.அப்படி நடக்கும் அரைகால் சட்டைப்
பருவத்திலும் அடிக்கடி செருப்பைத் தொலைத்ததால் சில சமயம் வீட்டில் அதாலேயே அடி
வாங்க நேர்ந்தது.

சரித்திர பிரசித்தி பெற்ற சம்பவம் ஒன்றை இங்கு இப்போது பதிவு செய்கிறேன்.

பள்ளிக் காலத்திலேயே கதைப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இருந்தது என்பதை அடிக்கடி
சொல்லி வந்திருக்கிறேன்.அப்படி ஒரு நாள் புதுக்கதை புத்தகம் ஒன்று கிடைத்த சந்தோஷத்தில்
மாலை பள்ளி விட்டு வரும்போது ஒரு மாட்டு வண்டியில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்போதைய காலகட்டத்தில் அந்த பிரதான சாலையில் பள்ளிக்குப் போகும்போதோ
-வரும்போதோ யாரேனும் வாகனத்தில் வந்தால் கொஞ்சம் கேட்டு பயணித்து வருவது வழக்கம். அது அவரவர் நேரத்தைப் பொறுத்தது. சைக்கிள், லாரி, இருசக்கர வாகனங்கள் சமயத்தில் காலியாய் போகும் மாட்டுவண்டி.

அன்றைக்குப் பார்த்து கிடைத்த, அந்த எரிபொருள் மாசு தீங்கற்ற ச.த.அ 9002 அங்கீகாரம் பெற்ற
மாட்டுவண்டியில் இடம் கிடைத்த குதூகலத்தில் ஏறி சட்டென செருப்பைக் கழட்டிப் போட்டு
பையிலிருந்த புத்தகம் எடுத்துப் படிக்கத் தொடங்கிவிட்டேன். செருப்பு - மியாமி குஷன் 49.00
ரூபாய்க்கு முதல்நாள் இரவுதான் அம்மா வாங்கி வந்தார்கள்.இந்த செருப்பையும் தொலைச்சா
இனி செருப்பால அடிச்சிதான் மறக்கவிடாம செய்யணும் என்ற இலவச இணைப்போடு
அந்த செருப்பு தரப்பட்டது என்பதை இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

சுமார் 45 நிமிட பயண முடிவில் இலக்கை அடைந்ததும் சட்டென பின்னால் நகர்ந்து புத்தகத்தை மூடி பையில் நுழைத்து வீட்டுக்குள் நுழையும்போது மட்டுமே - நினைவுக்கு வந்த
புதிய செருப்பை - மறந்து விட்டு இறங்கி வீட்டுக்குள் போய்விட்டேன். அம்மா மறதித் தமிழச்சியாய் இருந்தால் பின் விளைவுகளில் சற்றேனும் மாற்றம் இருந்திருக்கும்.மறத்
தமிழச்சி என்பதை மறக்காமல் நிரூபித்து வாரிய தாக்குதலில் சிலபல நொடிகளில் வரிக்குதிரை
மாறி ஆகிவிட்டது உடம்பு. ஆனால் அப்போது அடி வாங்கியது கூட வலிக்கவில்லை,வீட்டுக்குள்
நடப்பதை எல்லாம் இருந்து கவனித்து அடிவாங்கும் போது மட்டும் வெளியே வந்து கெக்கே
பிக்கே என்று சிரித்த மாமா பெற்ற பாவாடை-தாவணி சனியனை மட்டும் இன்னும் மன்னிக்க முடியவில்லை.

சரியாய் 6 வருடம் கழித்து கல்லூரி நாளின் ஒரு மழைக்கால மாலை நேரத்தில் கையில் சுருட்டிய குடையுடன் அந்த கல்லூரியில் சைக்கிள் நிறுத்தகம் வைத்திருக்கும் நண்பனுடன்
பேசிக் கொண்டிருந்து விட்டு - பின் கல்லூரி உணவகத்தில் தேனீர் என்ற பெயரில் சூடாய் எதையோ அருந்திவிட்டு வழக்கம்போல் பக்கத்தில் உள்ள ஈடிதாமஸ் மாணவிகளை பார்த்து-இரசித்து,பத்திரமாக
நின்று கவனித்து பாதுகாப்பாய் பஸ் ஏற்றி விட்டு ஒரு கிமீ தொலைவிலுள்ள வீடு நோக்கி
நகர்கையில்தான் ஞாபகம் வந்தது. கவனமாய் குடையைத் தொலைத்த விஷயம்.

கல்லூரி பையனை அம்மா கைத்தொட்டு அடிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை இருந்தாலும்
ஒரு குடையைக்கூட பத்திரமா கொண்டுபோய் கொண்டார முடியலையே இதெல்லாம்
குடும்பத்துக்கு விளங்குமா என்று போய்சேரும் தருவாயில் - எல்லோருக்கும் போக்கு காமித்துக்
கொண்டிருக்கும் பக்கத்து வீட்டு பாட்டி பேச்சுக் கேட்டு எதாவது நடக்குமோ என்றெல்லாம்
அச்சப்பட்டுக் கொண்டு நடந்ததில் முகமெல்லாம் வெளிறிபோய் சற்றுமுன் தோழமைகளை
பஸ் ஏற்றிவிட்ட சந்தோஷமெல்லாம் பறந்து போய் வீட்டுக்கு வந்தால் சரியாய் என் நேரமோ
என்னவோ வாசல் நுழைந்தவுடன் எதிரில் அம்மா.

தம்பி.. என்னடா.. என்னாச்சு ஏன் இப்படி வாரே..?

வந்து.. ஒண்ணுமில்லைம்மா..?

இல்லையே மூஞ்செல்லாம் பேயறைஞ்சா மாதிரி இப்படி வாடிப் போயிருக்கு..
என்ன விஷயம் உடம்பு கிடம்பு சரியில்லையாப்பா?

அதெல்லாம் இல்லம்மா.. குடையைத் தொலைச்சிட்டேன்..

அவ்வளவுதானே போவுது விடு.நான் கூட என்னாச்சோ ஏதாச்சோன்னு பயந்துட்டேன்.

*
இப்படியான ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்ட சிறுகதை
ஒன்றினைத் தந்திருக்கும் நீல.பத்மனாபன் பற்றியவரைத் தெரிந்துகொள்ளும்
கதாவிலாச நிகழ்வோடு தொடங்கியது இந்த வார எ.கூ சந்திப்பு நஸீம் அருகிலுள்ள லூசண்ட் பின்புறம் உள்ள ஒரு மகிழகத்தில் ( இட ஏற்பாட்டில் உதவியவர் திரு.சபாபதி)

பொருள்களை தொலைத்துவிட்டு திரும்ப வந்து தேடும் இயல்பான மனிதர்களிடம் அவர்கள் தொலைத்த பொருளை
பத்திரமாக எடுத்து வைத்திருந்து தரும் - அதையே தம் கடமையாக வைத்திருக்கும் ஒரு பெரியவரைப் பற்றிய அறிமுகத்தோடு தொடங்குகிறார் எஸ்.ரா.

அதன் தொடர்ச்சியாக நீல பத்மனாபன என்ற எழுத்தாளரின் கடிகாரம் என்ற கதையைப் பற்றி சுருக்கமாய் சொல்கிறார் எஸ்.ரா. ஓடாத கடிகாரத்தை அவ்வப்போது பழுதுபார்த்து அதனூடே தம் வாழ்நாளைக் கவனித்து வாழ்ந்துவந்து அந்த கடிகாரம் ஓடிக் கொண்டிருக்கும்போதே தம் துடிப்பை நிறுத்திக்கொண்ட ஒரு பெரியவரின் கதை அது.

பொருட்களின் மீது நினைவுகள் பதிந்து விடுவதுதான் அதனுடனான நமது உறவுக்கு உயிர் கொடுக்கிறதோ என்று சில வேளைகளில் தோன்றுகிறது.கல்யாண பட்டு வேஷ்டியும் சேலையும் மற்ற உடைகளுக்கு இல்லாத முக்கியத்துவத்தைப் பெற்றுவிடுவது அவற்றின் நினைவால் தானே..!

தனக்கு விருப்பமான பொருளை இழப்பதன் வேதனையை மனிதன் எதிர்கொள்ளும் மனநெருக்கடியை அழகாகச் சித்தரிக்கிறது நீல.பத்மனாபனின் அந்த கடிகாரம் சிறுகதை.

நீல.பத்மனாபன் தமிழின் சிறந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.அவரது கதையுலகம் தன்னைச் சுற்றிய மனிதர்களின் மீதான அவரது அக்கறையிலிருந்து உருவாகிறது.இயல்பான பேச்சு வழக்கும் கூர்மையான அவதானிப்புகளும் கொண்ட இவரது கதைகள் மிகத் தனித்துவமானவை.

கல்லூரி நாட்களிலிருந்தே கதைகள் எழுதத் தொடங்கியவர்.தலைமுறைகள்,பள்ளிக் கொண்டபுரம்,தேரோடும் வீதியில், உறவுகள் போன்றவைமிக முக்கியமான நாவல்கள்.இவரது நாவல்கள் ஜெர்மன்,ஆங்கிலம்,மலையாளம் உள்ளிட்ட பலமுக்கிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றன.மலையாள இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்ப்பதில் அதிக ஈடுபாடு கொண்ட நீல.பத்மனாபன் மொழிப்பெயர்ப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னால் சில பயனுள்ள அனுபவ நிகழ்வுகளை பகிர்ந்து
கொண்டார்கள் எ.கூ நண்பர்கள்.பல்வேறு அலுவல் பணி நிமித்தம் நண்பர் ஃபகுருதீன் நவீன கவிதைகள் அறிமுகம் பகுதியை அடுத்த சந்திப்புக்கு ஒத்திவைத்தார்.நான் இந்தவாரம் துவங்கிய புதிய பகுதியான திரையிசைப் பாடல்களில் கவித்துவமும் - இலக்கியநயமும் பற்றிய பார்வையை தனிமடல் இடலாம் என்றிருக்கிறேன்.

அடுத்த எ.கூ சந்திப்பு சுதந்திரதின சிறப்பு நிகழ்வாக அமைய இருக்கிறது (இன்ஷா அல்லாஹ்).அனைவரும் கலந்து கொள்ளலாம்.கவிதை,கட்டுரை,கருத்தரங்கம்,வழக்காடு மன்றம் என்ற ஏகப்பட்ட வகைகளுடன் பந்திவைக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது எழுத்துக்கூடம்.

முடிப்பதற்கு முன்னால்

தேவை இல்லை எனினும் சில பின்குறிப்புகள்:

1. என்னை அம்மா அடித்தபோது பார்த்துச் சிரித்த பாவாடை - தாவணி பெண்ணை வாழ்க்கை முழுக்கத் தண்டிக்க நினைத்து நான் கொடுத்த
தண்டனை இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்களே யூகிக்க
முடியாது.அது என்னுடனான திருமணம் (உண்மையிலேயே இது மிகப்பெரிய தண்டனை என்று நீங்கள் முணுமுணுப்பது
கேட்கிறது)

2. தொலைத்த குடை மறுநாளே நண்பனின் சைக்கிள் நிறுத்தத்தில் கிடைத்தது.இருப்பின் செருப்புக்கும்-குடைக்கும் இடைவெளி சில வருஷங்கள் இருப்பினும் அந்த செருப்பை தொலைத்ததிலிருந்து எனக்குப் பிடித்த செருப்பை நான் தேர்ந்தெடுப்பது கல்யாணம் மற்றும் விஷேச வைபவங்கள் நடக்கும் வீடுகளில் தான்.

3.மேலே குறிப்பிட்டிருக்கும் கவிதையை எழுதியவர் அந்தப் பட்டியலில் உள்ளவர் எவருமில்லை.சாட்சாத் உங்கள் சின்னத்
தம்பியேதான்.

 

 

லக்கி ஷாஜஹான்
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.