எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---47  ஒரு பார்வை.

--.பஃக்ருத்தீன் , லக்கி ஷாஜஹான

எழுத்துக்கூடத்தின் 47 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

--பஃக்ருத்தீன் , -லக்கி ஷாஜஹான்

========================   

15 ஆகஸ்டு 2008


இடம்: லூசண்ட் பின்புறம் உள்ள மகிழகம்  

விடுதலைத் திருநாள் - ஓர் எழுத்துக்கூட கொண்டாட்டம்.


அடுத்தச் சந்திப்பு எந்தத் தேதியில் வருகிறது என்று கடந்தச் சந்திப்பின் இறுதி நிமிடங்களில் யோசித்தபோது...
"அட, விடுதலை நாளல்லவா 15 ஆகஸ்ட் 2008,
"விடுதலைத் திருநாளை நம் எழுத்துக்கூடம் சார்பாக அன்றைக்கு கொண்டாடலாமே" என்கிற ஒரு சிறு பொறி தட்டியது. நம் கலைஇலக்கியக்குழு தலைவர் வெற்றிவேல் ஐயா, சபாபதிஐயா, இளங்கோவன் ஐயா, நண்பர் எஸ்.என். இராசா ஆகியோருக்கு தம் செயலூக்கத்திறமைகளை வெளிப்படுத்த அச்சிறுபொறியே போதுமாயிருந்தது.

நிகழ்வுக்கு இருநாள்களுக்கு முன்பே.. நானும் நிகழ்வில் கவிதை வாசிக்க வேண்டியிருக்கிறது என்பது நினைவுக்கு வர, ஒரு விருத்தம் முயற்சி செய்யலாம் என்று அக்கணமே அமர்ந்து எழுதிவிட்டேன்.

பாசமிகுந்த நண்பர்களிடம் அதனைப் பகிர்ந்துகொண்டு அபிப்ராயமும் கேட்டேன். (பின்னே, விருத்தம் என்கிற பேரில் தமிழில் ஒரு வருத்தத்தை ஏற்படுத்திவிடக் கூடாதல்லவா..) நல்லவேளை, நன்றாக இருக்கிறது என்று சொல்லக்கேட்ட போது கொஞ்சம் ஆசுவாச பெருமூச்சு. ('அட, நீ கவிஞன் தாம்லே' என்றான் சேனாதானா).

அடுத்தடுத்த இரண்டு நாள்களில் கடும்பணி பளுவும், விருந்தினர் வருகையுமாக அமைந்துவிட... சும்மாவே பறக்கும் நாள்களுக்கு மேலும் சிறகுகள் முளைத்துவிட்டிருந்தன.

புதிய நண்பர் அஜீஸ், பாசத்திற்குரிய பழைய நண்பர் 'இலக்கியார்' ஆகியோரோடு கவிதை அளவளாவல்கள் என்று கழிந்த நேரங்கள் இனிமையாக இருந்தன.. "என்னப்பா, நவீன கவிதை அதுஇதுன்னு கதச்சிட்டிருக்க... இங்க..சந்தையே அதுக்கு இல்ல... தெரியுமா"

"வெள்ளிக்கிழமை பிற்பகல் தொழுகைக்குப் பிறகு இராசப்பா அண்ணன வரச்சொல்லியிருக்கேன்.. நாம மூணுபேரும் அவர் வண்டில போகலாம்" என்றார் இலக்கியார்.

அதன்படி நிகழிடமான மகிழகத்தை நினைத்த நேரத்தில் அடைந்தோம். பின்னாலேயே வந்த அறிஞர் இளங்கோ ஐயா, நாவலர் இராசா என்று ஒரு தமிழ்ப்பட்டாளமாக உள்ளே நுழைந்தோம் - சிறிய காத்திருப்புக்குப் பின்.

உள்ளே.. மும்முரமாகச் சுழன்று பணியாற்றிக்கொண்டிருந்த சபாபதி, இரமேஷ் மற்றும் குழுவினர் தேனீக்களை நினைவூட்டிக்கொண்டிருந்தனர். ரியாத் தமிழ்ச்சங்கத்தலைவர் ஜவஹர் அண்ணன் தலைவருக்கேயுரிய தன்மையுடனும் தன் பொருளாளருடனும் (பெரோஸ்கான்) வந்து சேரவும் திறந்தவெளி அரங்கில் விடுதலை நாள் கொண்டாட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இது எழுத்துக்கூடம் தானா என்று எண்ணவைத்த கூட்டம் ஒரு மெல்லிய வியப்பை வழங்கியபடியிருந்தது. சபாபதியண்ணனை இனி சபைபதியண்ணன் என்றே சொல்லலாம்.

அடுத்ததாக ரி.த.ச. தலைவர் ஜவஹர் இரத்தினச்சுருக்கமாக ஒரு வாழ்த்துரை வழங்கினார். ரியாத் தமிழ்ச்சங்கம் தன் சிறகுகளில் ஒன்றான எழுத்துக்கூடத்தை உளமாற மெச்சித்தந்த அந்த வாழ்த்து, ஒரு தாய் தன் மகவை உச்சிமோந்ததைப் போலிருந்தது.

தொடர்ந்த கவியரங்கத்தில் முதலில் நான் அழைக்கப்பட்டேன். (கவிதை வாசிப்பு எப்படி இருந்துச்சுன்னு மத்தவங்க தான் சொல்லணும்). நிரலில் அடுத்ததாக இருந்த கார்த்தி ஏனோ கவிதை வாசிக்காமல் போய்விட, தொடர்ந்து அஜீஸ், பெரோஸ்கான் ஆகியோர் கவிதை வாசித்தனர்.

புதியவர் அஜீஸ் தனக்கு இலக்கணம் தெரியாது என்று சொன்னவராக... ஒரு புதுக்கவிதை வாசித்தளித்தார்.. அதில் ஆங்காங்கே மின்னல் கீற்றுகள். " தகப்பன் பணமும் தகனமாகும் சிகரெட் நுனியில்" - இது இன்றைய இளைஞர்களைப் பற்றிய அவருடைய கவிப்பார்வை. பிறகு வந்த பெரோஸ்கான் விடுதலைவீரர்களுக்கான அஞ்சலிக்கவிதையை வசனக்கவிதையாக நன்கு வாசித்தளித்தார். "பெரொஸ்கானுக்கு நல்ல குரல்வளம் - அரசியல்வாதியைப்போல" என்று பாராட்டினார் இலக்கியார். "எந்த நேரத்தில் யாரை ஞாபகப்படுத்துகிறார் பார்" என்றான் சேனா தானா.

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு செய்தி: தம் தந்தையார் எழுதிய இசைப்பாடலை பாடி அசத்திய காமராசு. அவருக்குத்துணையாய் இராசா. விடுதலைஉணர்வூட்டும் பாடல்.
அதுபோல, வெற்றி ஐயாவின் நண்பரான கவிஞர் இளங்கோ என்பார் தாயகத்திலிருந்து தொலைபேசி வழியே தம் கவிதையொன்றை பகிர்ந்து கொண்டார். வசனக் கவிதை.

கவியரங்கம் நிறைவடைய அடுத்ததாக உரையரங்கு.

முதலில் சிம்மக்குரலோன் இலக்கியார் வழமை கம்பீரத்துடன் தமிழக விடுதலை வீரர்களைப் பற்றிய ஒருஅரிய கட்டுரையை வாசித்தளித்தார். நல்ல குறிப்புகள். பூலித்தேவன் தொடங்கி தென்னாற்காட்டின் லீலாவதி அம்மையார் ஈறாக -முடிந்தவரை அனைவரையுமே - வேர்களைப் பற்றிய ஒரு தளிரின் விசாரிப்பாக நினைவு கூர்ந்த இலக்கியாரின் இவ்வுரை மடலாற்குழுவில் நிச்சயம் வெளியிடப்படும், இறைநாட்டம்.

அதற்கடுத்ததாக விடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழின் நிலை என்ற தலைப்பில் அருமையான ஒரு ஆய்வுக்கட்டுரையை வழங்கிய அறிஞர் இளங்கோவன் ஐயா, சங்கக்காலம் தொட்டே தன் ஆய்வுகளை முன்வைத்தார். தமிழின் முதல் அச்சுப்பிரதி இன்றைய தமிழர்களாகிய நம்மால் படிக்க இயலாத அளவுக்கு 44 விழுக்காடு மொழிக்கலப்படத்துடன் (அக்கால சூழல்படி) இருப்பதைச் சான்றுடன் சுட்டிய இளங்கோ ஐயா, அண்மையில் மறைந்த தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் சுஜாதா 1976 ஆம் ஆண்டில் எழுதிய ஒரு கட்டுரையிலும் 27விழுக்காடு மொழிகலப்பு இருப்பதை நிரூபித்தார். தமிழ் என்றில்லாமல் எல்லா இந்தியமொழிகளிலும் வடமொழி கலந்த மணிப்பிரவாளம் என்ற மொழிநடை அன்றைக்கு ஒரு வியூகத்துடனும் வேகத்துடனும் செயல்படுத்தப்பட்டதாகச் சொன்னார் இளங்கோ அண்ணன். "அதனால் தான், தமிழ்க்கொடி பறந்த சேரளம் இன்று கேரளமாகிப் போனது"

"நம் மொழி நமக்கு என்ன செய்தது என்று கேட்பது அறிவீனம். நம் மொழிக்கு நாம் என்ன செய்கிறோம் என்று எண்ணுவதே மொழி சார்ந்த ஒரு குமுகாயம் நிலைத்திருக்க உதவும்" என்ற
இளங்கோ அண்ணன் அதற்குச் சான்றாக காந்தியடிகளை, இலெனினை அவர்தம் சொற்களோடு நினைவு கூர்ந்தார். அவர்தம் அரிய உரையை மடலாற்குழுவிலும் வலைப்பூவிலும் பதிவு செய்யும்படி நான் தனிப்பட்டு கேட்டுக்கொண்டேன். இப்போது ஒரு மீண்டும்முறை.

தொழுகை மற்றும் சிற்றுண்டி இடைவெளிக்குப் பின்னர் தொடங்கிய மக்கள் மன்றத்தின் விவாதத்தலைப்பு:
விடுதலைக்குப் பின் தமிழ் வாழ்கிறது /வீழ்கிறது /மாற்றமில்லை.

முதலாம் அணிக்கு சபாபதி அண்ணன் தலைமைத் தாங்க, இரண்டாம் அணி திரு. செயபால் தலைமையிலும் மாற்றமில்லை என்ற மூன்றாம் அணிக்குத்தலைவராக இராசப்பா அண்ணன்.

இறுக்கமான தன் பேச்சில் வளர்ச்சியின் புள்ளிவிவரங்களை அள்ளித்தெளித்த அண்ணனை 'கேப்டன்' என்றது கூட்டம். 'அதையும் தாண்டி...' என்றான் சேனாதானா.

மூன்று அணிகள். ஒவ்வொன்றிலும் நான்கு உறுப்பினர்கள். கொளுத்திப்போட்ட பட்டாசுகள். ("சரவெடி" என்ற அடைப்பெயரிலேயே ஒரு சகோதரர் பெயருக்கேற்ப).
ஆக்ரோஷமாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசிய சீனுவாசன், காதர், கீதா போன்ற புதிய சகோதரர்கள் நம்பிக்கைத் தருபவர்கள்.

நடுவராக நம் வெற்றிவேல் ஐயா.

எல்லா ஓரங்களிலும் ஒலிவாங்கிக்கொண்டும் வழங்கிக்கொண்டும் தொகுத்தளித்தபடி நண்பர் இராசா. எழுத்துக்கூடத்துக்கு ஒரு நல்ல தொகுப்பாளர் உறுதியாகிவிட்டது.

ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை என்பதாக மூன்று அணியினரும் தம் திறமையைக் காட்ட....நடுநடுவே கலகலப்பு கூட்டிய நேயர்களில் இலக்கியாரும், இராசாவும்.... சும்மா...கலக்கிட்டாய்ங்க. நேரம் போனதே தெரியவில்லை.

நாட்டுப்பண்ணுக்கு முந்தைய நன்றிநவிலலிலும் நாவன்மைமிக்க நண்பர் இலக்கியார் தம் நாநயத்தால் இன்னுங்கொஞ்சம் தொடரமாட்டாரா என்று எண்ண வைக்கிற அளவுக்கு பங்களித்த ஒவ்வொருவரைப் பற்றியும் பாங்காய் பண்புநலன் சொல்லி அசத்தினார். (சேனாதானாவுக்கு கோபம் வரும் வகையில் என்னை உருதுமொழிக்காரன் என்று தவறாகச் சொன்னதும் அந்த அசத்தலில் அடங்கும்).


அவர் நன்றி சொன்ன விதத்துக்கே ஒரு நன்றி சொல்லலாம் போல. திருட்டியாய் நண்பரும் நாவலருமான இராசாவைக் குறிப்பிடாது விட்டது திடீர் ஞாபகமறதியில்.

விடைபெற்றுக்கொண்டு வெளியே வர.., "உணவருந்தி விட்டுப்போங்கள்" என்ற அன்பழைப்புக்கு இணங்கவேண்டியிருந்தது. அவை நிரம்பிய தமிழுணவுக்குப் பிறகு சுவையான தமிழர் உணவு.
சுவைத்து அருந்தினோம்.

எழுத்துக்கூடத்தின் தலையாயத் தூண்களான முனைவர் மாசிலாமணி ஐயா, ஜெயசீலன் ஐயா, நண்பர் கேவிஆர், இம்தியாஸ் ஐயா, சகோதரி மலர் போன்றவர்கள் விடுமுறையில் இருப்பதால்...
பங்களிக்க இயலாமற் போனது உணரப்பட்டது!


(கேடயக்குறிப்பு:
1). படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
2).எனக்குத் தெரிந்த / அறியவந்த பெயர்களையே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். பெயர் குறிப்பிடாத பல சகோதரர்களின் உழைப்பும் உணர்வும் உள்ளபடியே மெச்சத்தகுந்தவை)

--
பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)
------------

லக்கி ஷாஜஹான்

நன்றி ஃபகுருதீன்.. வழக்கமான உங்கள் பதிவிலிருந்து மாறுபட்ட ஜனரஞ்சக பதிவு. இதுவும்
நாம எழுதுவோம்ல என்று நிரூபித்திருக்கீறீர்கள்.இலக்கியார் என்று குறிப்பிட்டிருப்பது
என்னைத் தானே ( சி.த : ஷாஜஹான்னே எழுத வேண்டியதுதானே.. என்ன இலக்கியார்.. சேனா தானா
ஓப்பனிங்கே சரியில்லையே...)

மிச்சத்தை நான் சொல்றேன் நண்பா...

// (கவிதை வாசிப்பு எப்படி இருந்துச்சுன்னு மத்தவங்க தான் சொல்லணும்) //

சி.த : மாட்டிக்கிட்டீங்களா..? மரபுக்கவிதைல படிச்சீங்க.. யாருங்க இப்ப மரபுக்கவிதைலாம் ரசிக்கிறா?
ஷாஜி: சும்மா இருப்பா.. கவிதை நன்றாக இருந்தது ஃபகுருதீன்.. வாழ்த்துரை அறுசீர் விருத்தத்திலும்
முதன்மைக் கவிதை எண்சீர் விருத்தத்திலும் தந்திருந்தது கேட்க இனிமை. அனைவருமே நன்றாக
கேட்டு இரசித்தனர் என்பதே உண்மை..அதை எ.கூ - ல் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

//வெற்றி ஐயாவின் நண்பரான கவிஞர் இளங்கோ என்பார் தாயகத்திலிருந்து தொலைபேசி வழியே தம் கவிதையொன்றை பகிர்ந்து கொண்டார்.//

இளங்கோ - திரைப்பட பாடலாசிரியர். நடிகர் விஜய் நடிக்கும் படங்களின் ஓரிரு அறிமுகப் பாடலும் துள்ளலிசைப் பாடலும் இளங்கோ எழுதியவையே.. சச்சின் படத்தின் வாடி வாடி வாடி கைபடாத சிடி பாடல்,அப்படி போடு போடு ( கில்லி), சர்க்கரை கட்டி, மச்சான் பேரு மதுர ( மதுர) பாடல்கள் கவிஞர்
இளங்கோ எழுதியவை. சந்தமும் சத்தமும் ஒருங்கே அமைந்த பாடல்கள் கவிஞர் இளங்கோவுடையது.
துள்ளலிசைப் பாடல்கள் எழுதுவது இவரின் விருப்பம்.

//அருமையான ஒரு ஆய்வுக்கட்டுரையை வழங்கிய அறிஞர் இளங்கோவன் ஐயா, //
தமிழின் முதல் அச்சு நூலான பைபிள் புத்தகத்தின் முதல் பக்கம், பின் அதற்கடுத்தாற்போல் வந்த நூலின்
பக்கம்,சுஜாதா நூலிலிருந்து ஒரு பக்கம் என ஆய்வுக்குறிப்புகள் எடுத்து வந்து அசத்தினார் ஐயா.உரையோ
தெள்ளிய நீர்நிலைபோல் அவ்வளவு எளிமை+தெளிவு. ஐயா பற்றிய என் மதிப்பீடுகளை இன்னும் உயரத்துக்குக் கொண்டு போன பேச்சு ஐயாவுடையது.

//புதியவர் அஜீஸ் தனக்கு இலக்கணம் தெரியாது என்று சொன்னவராக... //

கெட்டழியும் பட்டணத்தின் கெட்டிக்கார ஏமாற்றுத்தனத்தின் மையப்பகுதியிலிருந்து வளர்ந்த அஜீஸின்
கவிதை ஆர்வம் எழுத்துக்கூடத்தின் பால் ஏற்பட்டது.எ.கூ-ல் எழுதப்பட்ட வெண்பாக்களை படித்த பிறகு
பிடிவாதமாய் மரபுக் கற்றுக் கொண்டிருக்கும் இளையவன். தொடர்ந்து எ.கூ வர ஆர்வம் உள்ள அஜீஸின்
முதல் கவிதை விடுதலை நாளில் அரங்கேறியது குறித்து மகிழ்ச்சி.

//எல்லா ஓரங்களிலும் ஒலிவாங்கிக்கொண்டும் வழங்கிக்கொண்டும் தொகுத்தளித்தபடி நண்பர் இராசா. //

எஸ்.என்.ராசா என்று சொல்லுங்கள். எ.கூடத்துக்கு இரண்டு அரசர்கள் ஒரு சக்கரவர்த்தி ( நான் தான் ..!! )
( அப்ப நான் இல்லையா..? - அப்பாஸ் ஷாஜஹான் ) மன்னிக்க இரண்டு சக்கரவர்த்திகள். ஜித்தாவிலிருந்து
வந்திருக்கும் ராசா வளநாயகர் (டோஸ்ட் மாஸ்டர்) தகுதிகளில் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பவர்.
ரி.த.சங்க கலைவிழாவில் பிள்ளைகளுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர். நல்ல நண்பர்.அவரை நான்
நன்றியறிவிப்பில் விட்டுவிட்டது மட்டும் கொஞ்சம் எனக்கு வருத்தம். ஜித்தா நம் எ.கூ-க்கு வழங்கிய இரண்டு சொத்துகள் முக்கியமானவை. ஒன்று ஆசாத் அண்ணன் மற்றொன்று எஸ்.என்.ராசா.

//முதலாம் அணிக்கு சபாபதி அண்ணன் தலைமைத் தாங்க//

அந்த அணியின் மற்ற பங்காளர்கள் திருமதி கீதா ரமேஷ், தமிழ்மாறன்,அக்பர் அலி

//இரண்டாம் அணி திரு. செயபால் தலைமையிலும் //

அந்த அணியின் மற்ற பங்காளர்கள் திரு சங்கமம் வினோ, சரவெடி காதர்,ரமேஷ்,வினோத்

//மூன்றாம் அணிக்குத் தலைவராக இராசப்பா அண்ணன்.//

அந்த அணியின் மற்ற பங்காளர்கள் நண்பர்கள் ராமச்சந்திரன்,ஸ்ரீனிவாஸ்,கென்னடி எட்வர்ட்


//ரி.த.ச. தலைவர் ஜவஹர் இரத்தினச்சுருக்கமாக //

சகோ.ஜவஹர் பிறகு என்னிடம் வந்து ஒரு உறுதி வழங்கினார்.எ.கூ தொடர்பான எல்லா முயற்சிகளுக்கும்
தம் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பையும் தன்னால் இயன்றளவு ஆதரவையும் தருவதாக மகிழ்ச்சியுடன்
தெரிவித்துக் கொண்டார்.

//சபாபதியண்ணனை இனி சபைபதியண்ணன் //

நன்றாக சொன்னீர்கள் ஃபகுருதீன்.. அவர் மற்றும் திரு ரமேஷ் அவர்களின் பங்களிப்புகள் பாராட்டத்தக்கவை. நம் நன்றிகளும்-பாராட்டுக்களும்..

நிறைவாக,

ஒருங்கிணைப்பாளர் ஐயா வெற்றிவேல் அவர்களின் ஆர்வமும்-செயல்பாடும் தான் இவ்விழா மிகச்சிறப்பாய் நடைபெற ஏதுவாக இருந்தது. இனி நடக்கவிருக்கும் நிகழ்வுகளிலும் ஐயா கைத்தலம்
பற்றி அந்நிகழ்ச்சிகள் வெற்றிபெற இறைவனைப் பிரார்த்திவனாய் இப்பதிவை நிறைவு செய்கிறேன்.
 

லக்கி ஷாஜஹான்
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.