எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---48  ஒரு பார்வை.

--.ராஜா கே. வைரக்கண்ணு

எழுத்துக்கூடத்தின் 48 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

--ராஜா கே. வைரக்கண்ணு

========================   

5 செப்டம்பர் 2008


இடம்: லூசண்ட் பின்புறம் உள்ள மகிழகம்  

எழுத்துக்கூடம் தொடங்கிய நாள்களில் இருந்து சந்திப்பினை குறித்த எனது பார்வையை எழுதாமல் முடிந்த அளவு தவிர்த்து வருகிறேன். ஆனாலும், இந்தச் சந்திப்பில் வழக்கமாக எழுதக்கூடிய லக்கி ஷாஜஹான், ஃபக்ருதீன், மலர்செல்வி ஆகியோர் வராததால் தப்பிக்க வேறு வழியில்லாமல் எழுதுகிறேன்.

எழுத்துக்கூடத்திற்கு நிரந்தர இடம் என்ற கனவில் இருந்த எனக்கு, அது நினைவாகும் நேரத்தில் சந்திப்பில் கலந்துகொள்ள இயலாத நிலை. வெற்றிகரமாக இரண்டு சந்திப்புகள் மகிழகத்தில் நடந்து மூன்றாவது சந்திப்பிற்கே என்னால் கலந்துகொள்ள முடிந்தது. எழுத்துக்கூடம் மகிழகத்தில் நடக்கத் தொடங்கிய பின் பல புதிய தமிழ் ஆர்வலர்களை கூடத்தில் சந்திக்க முடிகிறது. வரும் நாள்களில் இன்னும் பல நண்பர்களும் வந்திருந்து எழுத்துக்கூடச் சந்திப்பினை சிறப்பாக்குவார்கள் என்று நம்புவோம்.

இரமதான் நோன்பின் காரணமாக கூட்டம் மாலை 4:30க்கு தொடங்குவோம் என்று அறிவித்து இருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்தது திரு. ராஜப்பா மட்டுமே. மடலில் நேரத்தை அறிவித்த நானும் ஐந்து நிமிடம் கழித்தே மகிழகத்தை அடைந்தேன். அடுத்த முறை சரியான நேரத்திற்கு கூட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்துக்கொண்டேன். லக்கி ஷாஜஹான், ஃபக்ருதீன், இம்தியாஸ் ஆகியோர் கூட்டத்திற்கு வர இயலாத காரணத்தை மடலில் தெரிவித்து இருந்ததால் மற்ற நண்பர்கள் வந்ததும் கூட்டம் 5 மணிக்கு தொடங்கியது.

இந்த வாரம், கதாவிலாசம் புத்தகம் யாரும் கொண்டு வராததால் நான் கொண்டு போயிருந்த "கணையாழி கடைசி பக்கங்கள்" தொகுப்பில் சுந்தர ராமசாமியின் "ஜே ஜே சில குறிப்புகள்" குறித்த சுஜாதாவின் கட்டுரையை வாசித்தேன். இடையில் சுஜாதா, சுந்தர ராமசாமி எழுத்துகள் குறித்து நாக.இளங்கோவன், நாவலர் ராஜா (ஸ்.ண். ராஜா என்ற பெயர் இன்னும் சில நாள்களில் எழுத்துக்கூடத்தில் வழக்கொழிந்துவிடும் என்றே தெரிகிறது), காமராஜ் ஆகியோர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பின்னர், எழுத்தில் பேச்சில் ஆங்கிலக் கலப்புப் பற்றி பேசினோம். ஜெயசீலன், நாக. இளங்கோவன், சபாபதி, ரமேஷ், ரமேஷ் (இன்னொரு ரமேஷ்), வினோ, ராஜா (நாவலர்), காமராஜ், சரவணக்குமார், ராஜப்பா மற்றும் அடியேன் என வந்திருந்த அனைவருமே அவரவர் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துகள் வெவ்வேறாக இருந்தாலும் நல்ல தமிழில் பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற எண்ணமே எல்லோரிடமும் மேலோங்கி இருந்தது. அந்த எண்ணத்தில் விளைவாக பேசிய அனைவருமே இயன்ற அளவு ஆங்கிலம் கலவாத தமிழிலேயே சரளமாக பேசினர். இளங்கோவன் ஐயாவின் தாக்கம் நண்பர்கள் இடையே பெருமளவு ஊடுருவி இருப்பதைக் காணமுடிந்தது.

அடுத்து, பழந்தமிழர் வரலாறு குறித்து இளங்கோவன் ஐயா சிறிது நேரம் ஒரு புத்தகத்தில் இருந்து சில குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் புத்தகத்தில் இருக்கும் சில குறிப்புகளின் நம்பகத்தன்மை சந்தேகிக்கக்கூடியதாக இருந்தாலும் (உதாரணத்திற்கு தமிழ் ஏழாயிரம் வருடம் பழமையுடைய மொழி), சொல்லும் காரணங்கள் ஏன் அப்படியெல்லாம் இருந்திருக்க முடியாது என்னும் சிந்தனையையும் தூண்டிவிட்டது. ஷார்ஜா சென்றிருந்த வெற்றிவேல் ஐயா விமான நிலையத்தில் இருந்து வீட்டிற்குச் செல்லாமல் ஆறு மணிக்கு நேரே கூட்டத்திற்கு வந்தது அவரது தமிழ்ப்பற்றையும் எழுத்துக்கூடத்தின் மேல் உள்ள ஆவலையும் சொல்லாமல் சொல்லியது.

ஆறரை மணிக்கு மேல் நண்பர்கள் அனைவரும் இஃப்தார் விருந்திற்கென சபாபதி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த கொறிக்கும் பண்டங்கள், பழங்கள், குளிர்பானம் ஆகியவற்றை வஞ்சனை இல்லாமல் உண்டு களித்தோம். கூட்டமும் சிறப்பாக நிறைவடைந்தது.

கூட்டம் முடிந்த பிறகு நண்பர்கள் பலரும் மகிழகத்தில் எழுத்துக்கூடச் சந்திப்பினை நடத்துவதற்காக தங்களால் இயன்ற தொகையை வழங்கினர்.

தொகை விபரம் பின்வருமாறு:

ஜவஹர் - 200
வெற்றிவேல் - 200
அப்பாஸ் ஷாஜஹான் - 200
ஜெயசீலன் - 200
விஜய் - 200
அறவாழி - 150
நாக.இளங்கோவன் - 100
ராஜா ஸ். ண் - 100
காமராஜ் - 100
சபாபதி - 100
சரவணக்குமார் - 100
அழகப்பன் - 100
ரமேஷ். P - 100
ரமேஷ். J - 100
ஜெயபால் - 100
ராஜா. K.V - 200
 

 

ராஜா கே. வைரக்கண்ணு
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.