எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---49  ஒரு பார்வை.

--.எஸ் என் ராஜா

எழுத்துக்கூடத்தின் 49 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

--எஸ் என் ராஜா

========================   

19 செப்டம்பர் 2008


இடம்: லூசண்ட் பின்புறம் உள்ள மகிழகம்  

 

அறிஞர் அண்ணா நூற்றாண்டு சிறப்புக் கூட்டம்.

அண்ணா, (எல்லா வயதினரும் இப்படித்தான் அழைத்ததாக சொன்னாங்க)

எழுத்துக்கூட இந்த வார சிறப்பு வாரத்தில் உன்னைப்பற்றி பல விஷயங்கள் கேட்டு
அறியக்கேட்டோம். (எழுத்துக்கூட பார்வை நண்பர்கள் எழுதுகிறார்கள்).

அவரை சீராட்டிய திரு. ஜெயசீலன் கைக்குட்டையை நேரில் பார்த்தது முதல், வியத்தகு
விபரங்கள் சொன்ன சுவாமிநாதன் தொடர்ந்து, அண்மையில் அரியணை அமர்ந்த அண்ணல்
ஜவகரின் இடைச்செறுகளாய் வந்த பெரியார் - அண்ணா - கலைஞர் பற்றின செய்திகள்,
இருவரி புகழ் வெற்றிவேலரின் பலவரிச் செய்திகள் உட்பட, கேப்டன் ராசப்பா (கேப்டனை
இப்போது தமிழில் மாற்ற ... தமிழனுக்கு ஒரு தைரியம் வரும்வரை இப்படியே
அழைக்கிறேன்) அவர்களின் புள்ளிவிவர புத்தகங்கள் மற்றும், கன்னிப்பேச்சு ரமேஷ்ன்
வாலி வதைக்(கலைஞரின் எதிரிகளை) கவிதைமன்ற கவிதைகள் --- இப்படி பல
பார்வையாளர்களாகிய எங்களை உன்னைப்பற்றி பல விசயங்ளை ஆச்சரியப்பட்டு பார்க்கத் தோன்றியது, மேலும் தூண்டுகிறது.

மேலும், மாணவர் எழுச்சி எப்படி உம்மையும் (அண்ணாவையும் அன்றைய) திமுகவையும்
அரியணையில் ஏற்றியது வரை பல விபரங்களை ஆர்வமாக தெரிந்து கொண்டோம். ஆச்சரியமாக
பார்த்தும் கொண்டோம்.

எத்தனையோ எதிர்ப்பை மீறி வெற்றி கொண்ட நீ புற்று உன் மீது வைத்த பற்றால் -
நாலரை கோடியான அன்றைய தமிழக் மக்கள் தொகையில் ஒன்னரை கோடி சென்னையில் கூடிய
செய்தி - மிகையே இல்லாமல் திகைப்பாக இருந்தது. அது கின்னஸ் சாதனை புத்தகத்தில் ஏறி அந்த கின்னஸும் மேலும் பெருமை
தேடிக்கொண்டதையும் தெரிந்துகொண்டோம். அதே நேரத்தில் அதிர்ச்சியாய் ஒரு உபரி செய்தி உயிர்நாடியை உலுக்கியதும்
தெரிந்துகொண்டோம். உயிர்நீங்கிய உன் உடலையாவது பார்த்துவிட மாட்டோமா என கொள்ளியாற்றின் மேல் பயணம்
செய்த புகைவண்டியில் (அனுமதியில்லாமலும் இட வசதியில்லாமலும் வேறு வழியில்லாமலும் சென்றதாக சொல்லப்பட்டது) பாலத்தில் அடிபட்டு - ஆறு ரத்தமாகிய விபரத்தை நண்பர் ராஜா KV சொல்லிய போது, "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என அடிக்கடி நீ கூறி வந்ததை அர்த்தத்தோடு பார்க்கவேண்டி இருக்கிறது.

அத்துடன் நிற்கவில்லை ஆச்சரியங்கள், இதோ, இந்த எழுத்துகூட மடலாற்றில், அது எப்படி, நீ அறுபதுகளில் தூவிய விதை -
தப்பிப்போயோ, தவறிப்போயோ, இலக்கியார் என்று பெயர்கொண்டு இந்த பாலையிலும் இப்படி செழித்து வளர்ந்து நிற்கிறது.
என்னையும் இப்படி எழுதத் தூண்டியது.

அன்புடன்,
 

எஸ் என் ராஜா
 

எ.கூடத்தில் அறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தைக் கொண்டாட இருக்கும்
தருணத்தில் அடியேன் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பங்குபெற இயலவில்லை.
அதனால் என்ன இருக்கவே இருக்கிறது மடலாற்குழு.. இதோ இது போறவில்லை
என்று சொல்லுங்கள்.. இன்னும் சொல்கிறேன் அண்ணாவைப் பற்றி...

*அறிஞர் அண்ணாவும் சிறியோன் எண்ணங்களும்...*

நம் தலைமுடியைவிட
நீளமாய் தாடி வளர்த்தவன்
தமிழன் தலைநிமிரவேண்டும்
என்பதற்காக ஓடி உழைத்தவன்
மண்டைச் சுரப்பை உலகு தொழுத
மாவீரன் பெரியாரின்
தொண்டைப் பேசவே
தொண்டை வாங்கியவர் அண்ணா..

அண்ணா,
உன் செந்நாவிலிருந்து சீறிய
வார்த்தை அம்புகளைத்
தாங்க முடியாமல்
தலைத் தெறிக்க
ஓடினார்கள்
தமிழின் எதிரிகள்

தமிழகத்தில் காஞ்சிப்
போன நதிகள்
பல உண்டு...
ஆனால் காஞ்சியிலிருந்து
ஊற்றெடுத்து ஓடிய
ஒரே நதி நீ தான்..

நீ பட்டு பட்டென்று
எதிரிகளைப் பார்த்துக்
கேள்வி கேட்பாயாமே - அது
ஏன் என்று இப்போதுதான்
புரிகிறது
காரணம் நீ பட்டு நெய்த
ஊரில் பிறந்தவன் அல்லவா?

பட்டுக்குப் பேர் போன
ஊரில் பிறந்தாலும்
என்றும் பட்டுப் போகாத
ஆலமரம் நீ..

அண்ணா,
கடவுள் இல்லை என்று
சொல்ல நீ
கடைபிடித்த வழியே
மிகவும் அலாதியானது
ஏழையின் சிரிப்பில்
இறைவனை காண்போம்
என்றாய்
ஏழை எப்போதும் சிரிக்க மாட்டான்
என்று உனக்கு
அப்போதே தெரிந்திருக்கிறது..

நீ ஒரு
விசித்திரமான சமையல்காரன்
அண்ணா நீ ஒரு
விசித்திரமான சமையல்காரன்
ஆன்மீகவாதிகளின் அடிவயிற்றில்
புளியைக் கரைத்து
கம்ப ரசம் வைத்தாய்

அரசியலில் பலர்
பணம் சேர்த்து
வங்கிக் கணக்கில் பற்று
வைத்துக் கொண்டார்கள்..
பாவம் நீதான்
உடலில் புற்றுவைத்துக்
கொண்டு போனாய்..

நீ மூக்குபொடி போட்டுக்கொண்டே
வகுத்த வியூகங்களுக்குப்
தாக்குப் பிடிக்கமுடியாமல்
பலர் தரைமட்டம் ஆனார்கள்..

நீ பொடிபோட்டும் பேசுவாய்
சில சமயங்களில்
பொடி வைத்தும் பேசுவாய்
ஆனால் பொடியன் அல்ல நீ
பூகம்பம்

அண்ணா நீ படித்தது
பச்சையப்பன் கல்லூரிதானே
பின் எப்படி உன் சிந்தனைகள்
எல்லாம் சிவப்புமயமாய்
இருந்தது..?

மக்கள் பணத்தைச் சுரண்டி
கொழிக்கும் முதலை யார்
எனக் காட்டிய
முதலியார் நீ

திராவிட நாடு என்னும்
பெருங்கனவு கண்டாய்
ஆனால் இங்கு
காவிரி கூட
மாற்றான் தாய் போல்
தன் மார்பை
தமிழன் உதடுகளுக்குத்
தர மறுக்கிறது..

சஹாராவில்
சங்கமித்துவிட்டத் தென்றலாய்
உன் கொள்கைகள் இங்கு
கவனிப்பாரற்றுக் கிடைக்கிறது...

நீ மாற்றான் தோற்றத்து
மல்லிகைக்கும் மணம் உண்டு
என்றாய்
இன்று மாற்றான் தோட்டத்து
மல்லிகைக்கு மட்டுமே மணம்
உண்டு என்கிறான் நம்மாள்

சாக்கடை இருந்தால் கொசுவரும்
என்பதை கூட
சாக்ரடீஸ் சொன்னால்தான்
ஒத்துக் கொள்கிறான் தமிழன்

குட்மார்னிங்கில் ஆரம்பிக்கும்
தமிழனின் துவக்கம்
குட்நைட்டில் முடிகிறது
குட்நைட் என்பது
கொசுவை மட்டுமல்ல
தமிழையும் அழிக்கும்
மருந்தும் கூட

பொங்கலில் உள்ள
சோற்றுப் பருக்கைகளை
இணைத்து வைப்பது
கஞ்சி
யோசித்துப் பார்த்தேன்
பொங்கியத் தமிழனை
சேர்த்துத் தமிழுக்கு
போராட வைத்தது காஞ்சி..

குந்தித் தின்றால் குன்றும் மாளும்
என்று பலர் பொருள் சேர்த்துக்
கொண்டிருந்த போது
இந்தி தின்றால் எம் தமிழ் சாகும்
என்று போராட்டம் செய்தவன் நீ

எல்லா நதிகளும் கடலைச் சேரும்
எல்லா நதிகளும் கடலைச் சேரும்
அண்ணா நீ
பெரியார் என்னும்
பெருங்கடலிலிருந்து பிரிந்து
தனிக்குடித்தனம் போனவன்..

சனாதனக் கோட்டைகள் மீது
சடார் சடார் என விழுந்த
பகுத்தறிவு இடி நீ
உன் முன்வழுக்கையே
நாட்டின் நம்பிக்கை ஆனது

மத்திய அரசு கெடுபிடி
இராவிடம்
நீ கண்ட கனவு திராவிடம்

எல்லோரையும் உன் வாரிசுகள்
என நான் கூற முடியுமா?
வெள்ளாட்டுக்கு கூட தாடி இருப்பதால்
அது வள்ளுவரின் சந்ததி என யாரும்
வழி மொழிவார்களா..?

உன் சாதனைகள் சொல்லில்
அடங்காது திமிருகின்றன..
பண்டிதருக்கு மட்டுமே எட்டும்
உயரத்தில் இருந்த தமிழை
பாமரனுக்கும் தாழ்த்தித் தந்த
கொண்டிக்கோல் நாவுக்காரன் நீ

புல்லாங்குழலுக்குள்
புகுந்த காற்று
இசையாவது போல
உன் தங்க நாவுக்குள்
புகுந்த தமிழ் தனி அவதாரம்
எடுத்தது..

உன் ஆச்சரிய உச்சரிப்புகள்
கண்டு மேடையின்
ஒலிபெருக்கிகள் கூட
மூர்ச்சையடைந்திருக்கின்றன

மொழியை மூலதனமாக்கி
அரசியல் ஆதாயம் தேடாமல்
ஆட்சியை மொழிக்காக
மூலதனமாக்கிய
அபூர்வம் நீ

கன்னிமாரா நூலகத்தின்
அத்தனை புத்தகங்களும்
உன் விரல்முத்தங்கள் பெற்ற
பாக்கியத்தில்
விக்கித்து நின்றனவாம்
பின்னே பல
இலக்கிய எஜமானர்கள் கூட
உன் வேலைககாரி பின்னால்தானே
சுற்ற ஆரம்பித்தார்கள்..

அண்ணா நீ ஒரு மரம்
உன்னில் பழுத்ததுதான் இதயக்கனி
உன்னில் முளைத்ததுதான்
இரட்டை இலை

பெரியாரின் ஐந்தடி கைத்தடி நீ
ஆகாயத்தின் குள்ள ரூபம் நீ
மேல்துண்டு போட்ட அணுகுண்டு நீ

சென்னையில் உன்
கல்லறை பார்க்கும்போதெல்லாம்
சிந்தனையில் ஒரு
சந்தேகம் உதிக்கும் எனக்கு
அதெப்படி ஒரு சமுத்திரத்தின்
கரையில் இன்னொரு
சமுத்திரத்திற்கு கல்லறை..

அண்ணா என்னும்
அட்சயப் பாத்திரத்தில்
அள்ள் அள்ள அற்புதங்கள்
இன்னும் இன்னும் என்ன
இருக்கிறது மீதம்
நான் எடுத்துச் சொல்ல..
 

---

நலந்தானா? பாடல் தில்லானா மோகனாம்பாள் படத்தில் பார்த்த
அறிஞர் சொன்னாராம்:

''கவிஞர் கண்ணதாசன் எனக்காகத்தான் அப்பாடல் எழுதியிருக்கிறார்.
சண்முகசுந்தரம் புண்பட்டதை நேரில் பார்த்தவள் மோகனா..

''புண்பட்ட சேதியைக் கேட்டவுடன்'' - இந்த வரி எனக்காக..

என் நோய் பற்றிக் கேட்டும் வந்து பார்க்காதபடி
இப்போது காங்கிரஸ் எனும் எதிர் அணியில் கவிஞர் இருக்கிறார்.
கருப்புத்துணி வாயில் கட்டி கடும் போராட்டமும் நடத்துகிறார்.

வந்து பார்க்காமல், அரசியல் நிலை தடுத்தாலும்
வைத்த பாசம் மாறாமல் நலம் கேட்கிறார்'' என்றாராம் அண்ணா..
---------------------------------------
மறைவுக்கு முன் வந்த பிறந்தநாளில் தம்பிகள் வற்புறுத்த
முகச்சவரம் செய்து, புத்தாடை அணிந்து, வாசல் வந்து
நாதஸ்வரம் வாசிக்கும் சிவாஜி போல் கன்னத்தில் காற்றடைத்து
அபிநயம் செய்து, தம் நோய்த்துன்பம் மறைத்து-
கண்ணதாசன் நல விசாரிப்பைக் காத்திருந்தவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்த
அன்புமய அண்ணா!!

அண்ணா போல் வேறு யார் இங்கு?
---------------------------------------

வைரமுத்து அண்ணா நினைவாடலில் ஓரிடத்தில்

இளைஞன் : பேரறிஞர் அண்ணா அவர்களே..நான் இப்போது அரசியலில் சேர மிக விருப்பமாக
இருக்கிறேன்..சேரலாமா?

அண்ணா : தம்பி இந்த வயதில் அரசியல் என்பது உனக்கு அத்தைப் பொண்ணு போல..
பார்க்கலாம் - பேசலாம் - சுத்தலாம் - தொட்டுவிடக்கூடாது...

-------------------------------
அண்ணா பற்றி என் பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழ் புத்தகத்தில் படித்த ஒரு சம்பவம்..
அறிஞர் அண்ணா ஒரு பொதுக்கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அங்கு போய்ச்சேர
மிகத் தாமதமாகி விட்டது. ஆனாலும் அண்ணாவின் கன்னித் தமிழ் கேட்க விருப்பபட்டு கலையாமலே
காத்திருந்தது கூட்டம்.அண்ணாத்துரை மேடை ஏறியதுமே ஆரம்பித்தார் அடுக்கு மொழியில்..

மாதமோ சித்திரை
மணியோ பத்தரை
உங்களைத் தழுவுவதோ நித்திரை
மறக்காது எமக்கிடுவீர் முத்திரை..

ஆர்ப்பரிக்கத் தொடங்கிய அலைஓசையை கடலுக்கே விரட்டியதாம் கைத்தட்டல்கள்..
 


லக்கி ஷாஜஹான்.
 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.