எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு -5  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக் கூடத்தின் ஐந்தாம் கூட்டம் :- ஒரு பார்வை -
- லக்கி ஷாஜஹான்

நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் இருந்து கூட நாம் கற்றுக் கொள்ளக் கூடியவை என்பது ஏராளமாக இருக்கிறது.. செல்லும் நடைபாதையில் , சில நிமிஷங்கள் மட்டும் சந்திக்கும் நபர்களிடமிருந்து, எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத கடலில் இருந்து,
இங்கு வந்த பிறகு இந்த அரேபிய மண்ணில் பலருக்கு பல்வேறு நிகழ்வில் நடந்த பல்வேறு அனுபவங்களில் இருந்து இப்படி எத்தனை
எத்தனையோ.. ஆனால் பணம் துரத்தல் என்று வந்த பிறகும் கூட இந்த கற்றல் அல்லது கற்றலுக்கான தேடல் என்பது மட்டும் இன்னும்
அதன் இலக்கை அடைந்ததாய் திருப்தியேயில்லை. தேடல் ஒருபோதும் முடிவதில்லை (Chase Never Stop ) என்று எப்போதோ யாரோ
சொல்லி வைத்துவிட்டுப் போனது நிஜம்தானோ..?

கடந்த 07 - 04 - 2006 அன்று வெற்றிவேல் ஐயா வீட்டில் நடந்த எழுத்துக்கூடத்தின் ஐந்தாம் கூட்டத்தை முடித்துவிட்டு வரும்போது
என்னுள் தோன்றியவைதான் மேலே சொன்னதெல்லாம். இந்த மூன்று மணி நேரத்துக்காக முன்னூறு மணி நேரம் தவம் கிடந்தது வீண் போகவில்லையோ என்று தோன்றுமளவுக்கு அவ்வளவு சிறப்பாக நடந்தேறிய இந்த நிகழ்வு ஒரு சுகமான அனுபவம். இரண்டே
இரண்டு கட்ட அலசல்கள் தான் அந்த கூட்டம்.. ஆனால் இரண்டிலும் கிடைக்கப்பெற்ற விஷயங்கள் எத்தனை எத்தனை..?

தமிழ் இலக்கியத்தின் நவீன வடிவத்தை பாமரனுக்கு கொண்டு வந்ததில் எஸ்.ராவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பதை அவரது
கதாவிலாசத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும் கண்கூடாக பார்க்க முடிகிறது. அன்றைய எழுத்துக் கூடத்தில் பார்க்கப்பட்ட 'முன்
கதவும் பின் கதவும் ' என்ற பகுதி  அடியேனால் வாசிக்கப்பட்ட போது நிறைய இடத்தில் எஸ்.ராவின் புனைவுத் திறன் (Fiction Style)
கண்டு வியந்து போனேன்.. இதுவரை கணவன் மனைவி சண்டையை எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்று உலக
வழக்கு வழங்கி வருவதைதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.. இவர் முயலும் ஆமையும் போல் என்கிறார். முயல் மற்றும்
ஆமையின் குணாதிசயங்களை விளக்கி விட்டு அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் உவமையாய் பொருத்தினார் பாருங்கள்.. அங்குதான் நான் வெகுவாய் திகைத்துப் போனேன்.

முகத்தை வெளியில் காட்டக்கூட ஆயிரம் தயக்கம்.பயமும் கூச்சமும் தான் ஆமையின் சுபாவம்.இப்படித்தானே பெண் காலமாக வாழ்கிறாள் என்கிறார், எதையும் தாவிப் போய்விட முடியும் பெருமை ஆனால் சிறு சப்தம் கேட்டால் கூட சிதறித் தப்பியோடும் சுபாவம்..நூற்றாண்டுகளாக உள்ள ஆண் இந்த முயலைப் போலத்தான் என்கிறார். இந்த ஆமையும் முயலும் கலந்து கொள்ளும்
கதைதான் குடும்ப சரித்திரமா என்று நம்மை யோசிக்க சொல்கிறார்.. முதுகில் ஓட்டை சுமந்து செல்லும் ஆமையைப் போல ஒரு
பெண் தன் செல்லுமிடமெல்லாம் ஒரு வீட்டை சுமந்து கொண்டுதான் செல்கிறாள் என்கிறார்.சிலந்தியைப் போல் அவர்கள் வீட்டை
கண்ணுக்கு தெரியாத ஆயிரம் நூல்களால் கட்டியிருக்கிறார்கள் போலும் அதனால் தான் என்னவோ எந்த நூலும் அறுபட்டுப்
போய் விடக்கூடாது என்ற பயம் அவர்கள் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது என்ற எஸ்.ராவின் வரிகளை நான் இப்போதைய நேரம் வரை அசை போட்டு பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.. நிறைய இடங்களை வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை விமர்சித்து சொல்லிக் கொண்டே போக ஆசை அல்ல பேராசைதான் ஆனால் பதிவின் நீளம் கருதி சில மேற்கோள்கள் மட்டும் மேலே
தந்தேன்.. யாவர் வீட்டிலும் தூசி படிந்திருப்பது போல, மனக்குறைகளும் வெளிப்படுத்தப்படாத ஆசைகளும் படிந்து கிடக்கின்றன.வார்த்தைகளை மென்று விழுங்கி விழுங்கியே பெண்களின் தொண்டையில் ஆறாத ரணம் இருக்கிறது என்றெல்லாம்
அப்பட்டமான நிஜங்களை தோலுரித்து காட்டியபடியே திமிறுகின்றன எஸ்.ராவின் வரிகள்.

எஸ்.ரா அடையாளம் காட்டும் சிறுகதைகள் தரும் உணர்வுகளை எல்லாம் வெகு ஜன இதழில் , சீரியலில் மற்றும் வியாபாரத்தை மட்டுமே கணக்கில் கொண்ட ஊடகங்களில் பார்க்க முடியாது. அவர் காட்டும் எழுத்தாளர்களையும்..இம்முறை ஆதவன் என்ற
எழுத்தாளர் எழுதிய 'சினிமா முடிந்த போது' என்ற சிறுகதையை பற்றி சொல்லியிருக்கிறார். இளம் கணவன் மனைவிக்குள்
நடக்கும் பிணக்கும்,இச்சையும் வார்த்தைகளில் வெளிப்ப்டுத்த முடியாத குழப்பங்களும் ஆதவன் எழுத்தில் அபூர்வமாகவும்
துல்லியமாகவும் காட்டப்பட்டிருக்கிறது. 

நண்பர்களின் சுவையான அனுபவங்களூடே முதல் கட்ட நிகழ்வு விவாதிக்கப்பட்டு இரண்டாம் கட்ட நிகழ்வான சிலப்பதிகார திறனாய்வு -
சிலம்பு மடலில் இருந்து சில அத்தியாயங்கள், ஜீன்ஸ் போட்டு வந்த நவீன இளங்கோவடிகள் திரு நாக இளங்கோவன் அவர்களால்
வாசிக்கப்பட தொடங்கியது.

நாக.இளங்கோவன் அவர்களையும்,அவர் எழுதிய சிலம்பு மடல் பற்றியும் போன கூட்டம் பற்றிய பார்வையிலேயே பல முறை
சிலாகித்து விட்டாலும் அவருடைய வரவும் - பகிர்வும் நம் எழுத்துக் கூடத்துக்கு கிடைத்த அரிய பொக்கிஷமாகவே
நான் கருதுகிறேன்.( பெரும்பாலான நண்பர்களின் கருத்தும் அதேதான் என்றும் பின் உணர்ந்தேன் ) இரண்டாம்
நூற்றாண்டு இலக்கியத்தை இன்னமும் சாகவிடாமல் புதுப்புது சொல்லோவியம் கொண்டு அழகு படுத்தியும்,
கொல்லாத ஒரு இலக்கிய நடையில் நல்லதான தமிழ் வார்த்தைகளை கொண்டு நகாசு வேலைகள் செய்து சிலப்பதிகாரத்தை செதுக்கி
வைத்து நூதனப் படுத்தியிருப்பதும் நம் எழுத்துக்கூடம் - ரியாத் தமிழ் சங்கம் மட்டும் அல்ல உலகத்தில் தமிழுக்காக உருவான அனைத்து தமிழ் சங்கங்களுக்குமே அடையாளம் காட்டப்பட வேண்டிய ஒரு தமிழ் இலக்கியவாதி திருவாளர் நம் நாக. இளங்கோவன் என்பதில் எள்முனையளவும் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை.

இந்த இந்த விஷயங்கள் இப்படி இப்படி நடந்திருக்க பகுத்தறிவில் - மெய்ஞானத்தில் அறிவியல் ஒத்துக் கொள்ளும் விதத்தில் விளக்கம் தந்து அசத்தினார் நாக.இளங்கோவன். பாண்டிய மன்னன் ஒருவன் செய்த தவறுக்கு கண்ணகி ஊரையே கொளுத்தியதில் என்ன
நியாயம் இருக்க முடியும் என்ற என்(னைப் போன்றோர்) நீண்ட கால சந்தேகங்களுக்கும் அன்று முடிவுக்கு கொண்டு வந்தார்
நண்பர்.  இரண்டொரு நாளில் தாயகம் திரும்பவிருக்கும் நண்பர் நாக.இளங்கோ மீண்டும் ரியாத் வந்து இது போல் பல ஆக்கப் பூர்வமான
இலக்கியங்கள் பற்றி உணர்ந்து- அறிந்து - கலந்து -பகிர்தல் செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.. உங்களது தமிழ்
தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய அளவற்ற அருளாளன் -தனிப்பெருங் கருணையாளன் எல்லாம் வல்ல இறைவனை
வேண்டிக் கொள்கிறேன்.

நாக இளங்கோவன் அவர்களுக்கு ஈடு கொடுத்து தனக்கு பூமியின் பௌதீகம் மட்டுமல்ல பூம்புகார் பதிகமும் தெரியும் என 'வூடு'
கட்டி அடித்தார்கள் ஐயா மாசிலாமணி அவர்கள். ( லேசர் பிஸிக்ஸ் பற்றியும் பேசுகிறார் சேரன் செங்குட்டுவன் பற்றியும் பேசுகிறார் ,
சிற்றிலக்கியம் பற்றியும் பேசுகிறார் புற்றிலக்கியம் (Cancer Theory) பற்றியும் பேசுகிறார்..உலகம் , வேதம், கம்ப்யூட்டர்,ஷெர்லாக் ஹோம்ஸ், சுனாமி , த்ரிஷா எல்லாவற்றை பற்றியும் பேசுகிறார் கொஞ்சம் எச்சரிக்கையாகவே பேசவேண்டும் போல் இருக்கிறது ). பக்கத்தில்
திருமதியார் இருந்தபோதும் ' பயமின்றி ' சில ரகசியங்களை போட்டு உடைத்த ஐயா மாசிலாமணி அவர்களும் , அப்பாஸ் ஷாஜஹானும்
உண்மையிலேயே மிகுந்த தைரியசாலிகள் தான். (அதுக்கப்புறம் வீட்டுக்கு போய் ஏதாவது 'தொடரும் பயங்கரம்' ஆகவில்லை தானே..
நலம்தானே )

சகல சௌகரியமாய் இந்த கூட்டம் நடக்க தம் இல்லம் தந்து குளிர்பானமும் தந்து உபசரித்த ஐயா வெற்றிவேல் அவர்களுக்கும்
எழுத்துக்கூடம் சார்பாக நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஒன்று சேர்த்த நண்பர்கள் கல்யாண்  -கே.வி.ராஜா , மற்றும்
எழுத்துக்கூடம் - ரியாத் தமிழ் சங்கத்துக்கும் இந்த நிகழ்வுகளை தாயகத்திலிருந்தபடியே கண்காணித்து - அறிவுறுத்தி தம் கருத்துக்கள் மூலம் தட்டியும் குட்டியும் ஆர்வப்படுத்திக் கொண்டிருக்கும் ஐயா அப்பாஸ் இப்ராஹிம் அவர்களுக்கும் நன்றி கூறி இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

அன்புடன் - அன்பிற்காக

லக்கி ஷாஜஹான்
 

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006