எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---51  ஒரு பார்வை.

--.மலர்.

எழுத்துக்கூடத்தின் 51 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

--மலர்.

========================   

21 நவம்பர் 2008


 

இடம்: மகிழகம், லூசண்ட் காம்பவுண்ட் பின்புறம்

கலந்து கொண்டவர்கள்: திரு. மாசிலாமணி, திரு. ஜெயசீலன், திருமதி. உதயா ஜெயசீலன், திரு. ராசப்பா, திரு. ஜவஹர், திரு. சுவாமிநாதன், திரு. ஸ்ரீநிவாஸ், திரு. அழகப்பன், திருமதி. ராதா அழகப்பன், திரு. ரமேஷ், திருமதி. ப்ரியா ரமேஷ், திரு. கே.வி. ராஜா, திரு. பக்ருதீன், திரு. சபாபதி.

கதாவிலாசம்: 'எழுத்துப்பிடி' என்ற கதை கல்வியறிவு அனைவருக்கும் குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தும் கதை. ஒப்பாரிப் பாடல் பாடும் பேச்சியமாள் ஓர் அதிகாரி உதவியால் எழுதப் படிக்கத் தூண்டப்பட்டு, எழுத்தறிவு வந்ததும் எப்படி பலம் பெற்றதாய்
உணர்கிறார் என்று விவரிக்கிறது கதை. பொதுவாகவே ஆண்கள் பெண்களை அடக்கியாளும் முறை பற்றித் தன் கருத்தையும் முன் வைக்கிறார் எஸ்.ரா.

கதாசிரியர் குறிப்பு: தமிழ்ச் சிறுகதையுலகில் தனித்துவமான எழுத்தாளர் அம்பை. இவரது 'சிறகுகள் முறியும்' என்ற சிறுகதைத் தொகுப்பு, இலக்கியச் சூழலில் மிகுந்த கவனத்தையும் விவாதத்தையும் உருவாக்கியது. தமிழ்க் கலாசாரச் சூழல் பெண்களை நடத்தும்
முறை பற்றிய கோபமும் பகடியும் இவரது எழுத்தின் வழியே வெளிப்படுகின்றன. இவரது கதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல முக்கிய மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. மும்பையில் வசித்து வரும் அம்பை, 'ஸ்பாரோ' என்ற பெயரில் சமூகம் மற்றும் கலை இலக்கியத் துறைகளில் பெண்களின் பங்களிப்பு பற்றிய ஆவணக் காப்பகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஆங்கிலத்திலும் தொடர்ந்து எழுதி வரும் இவரது இயற்பெயர் சி.எஸ். லட்சுமி.

புதுமைப்பித்தனின் 'செவ்வாய் தோஷம்' கதை எடுத்தாளப்பட்டது. ரத்தக்காட்டேரி அடித்து ஒரு மனிதன் இறந்து போவதாகவும், கடந்த வாரம் இறந்த ஒரு மனிதனின் பிணம் இவனை அடித்து அந்த ரத்தத்தைக் குடித்ததாகவும் புனையப்பட்ட கதை. சமூகத்தில் நடக்கும் அநியாயங்களள எதிர்த்து எப்போதும் போர்க்கொடி தூக்கும் புதுமைப்பித்தன் இக்கதையிலும் அதைச் செய்யத் தவறவில்லை. முக்கியமாக மூடத்தைச் சாடினாலும்,
சமூகத்தின் சாதி சமய ஏற்றத் தாழ்வுகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை புதுமைப்பித்தன்.

திரு. மாசிலாமணி அவர்கள் மு.வ. குறித்துச் சிறப்புரையாற்றினார். பேராசிரியர்கள் பலர் சிறந்த எழுத்தாளர்களாகப் பரிமளிக்கவில்லை, ஆனால் மு.வ. இதில் எப்படி விதிவிலக்காகி நின்றார் என்று சுட்டிக் காட்டினார். அகல்விளக்கு, பெற்ற மனம், கரித்துண்டு போன்ற கதைகளில் அவர் பேசிய ஆண்,பெண் இருபாலாருக்கிடையேயுள்ள உறவு நிலைகள் மற்றும் சமூக அமைப்பு விளக்கம் குறித்து விவரித்தார்.

வருங்காலச் சந்ததியினர் பயன் பெறும் வண்ணம், இக்காலச் சரிதங்கள் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். பல காரணங்களால் உலகம் அழியும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறபடியால், இச்சரிதத்தையெல்லாம் தொகுத்து சந்திர மண்டலத்தில் பாதுகாப்பது பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையை திரு. ராசப்பா அளித்தார்.

அண்ணாவின் கடிதங்கள் வரிசையில் இன்று திரு. சபாபதி 'மனிதனும் மிருகமும்' என்ற கடிதம் பற்றிய விளக்கவுரை வழங்கினார். அறிவியல், விண்வெளி, அணு ஆராய்ச்சிகளுக்காகச் செலவிடப்படும் பணத்தில் கொஞ்சமாவது மருந்தியல், உடல்கூறுகள் பற்றிய ஆக்கப்பூர்வமான அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு அதிகம் பயன்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறது இக்கடிதம். கூடி வாழ்தல், கேடு செய்யாதிருத்தல், உழைத்துப் பிழைத்தல், பகிர்ந்தளித்தல் போன்ற உணர்வுகள் பண்பு என்று மட்டும் போற்றப்படாமல், அன்றாட வாழ்வியல் நிலைகளாக வடிவெடுக்க வேண்டும் என்றும் கடிதம் கூறுகிறது.

இன்று முதல் மகிழகத்தில் நூலகம் செயல்படத் துவங்கிவிட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்..

அன்புடன்,
மலர்.

அன்புடன்,
மலர்.
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.