எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---52  ஒரு பார்வை.

--.மலர்.

எழுத்துக்கூடத்தின் 52 ஆம் சந்திப்பு   - ஒரு பார்வை
 

--மலர்.

========================   

19 டிசம்பர் 2008


கதாவிலாசம்: 'தென்னாடு உடையவன்' என்ற கதை எடுத்தாளப்பட்டது. கோவிலில் மேளம், நாயனம் போன்ற இசைக்கருவிகள் இருந்த இடத்தை இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிடப் பல இசைக் கலைஞர்களும் வேலையின்றி வறுமையில் வாடுவதை மையக் கருத்தாகக் கொண்டு இது போன்ற வாத்தியக்கருவிகளின் இசையை தற்போது காணமுடியவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தும் கதை. இப்படிப்பட்ட இசைக்கலைஞர் ஒருவர் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக உணவுவிடுதி ஒன்றில் சர்வர் வேலை பார்த்து வருவதைப் பற்றிய கதை. இது போலவே நம்பிய விஷயங்கள் கைவிட்டுப் போகும்போது ஏற்படும் ஏமாற்றம் தாங்கமுடியாதது என்று விளக்குகிறது பிச்சமூர்த்தியின் 'கவலை மாடு' என்ற கதை. தன் பேச்சைக் கேட்காத இளைய தலைமுறையைப் பார்த்து வருந்தும் பெரியவர் ஓருவரின் கதை.

ஆசிரியர் குறிப்பு: தமிழ் உரைநடையில் தத்துவார்த்தம் படிந்த கதை சொல்லும் முறையை அறிமுகப்படுத்திய ந. பிச்சமூர்த்தி, கும்பகோணத்தில் 1900 - ல் பிறந்தார். புதுக்கவிதையில் முன்னோடியான இவர், வழக்கறிஞர் பட்டம் பெற்றுப் பணியாற்றியவர். தத்துவத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பிச்சமூர்த்திக்கு, ரமண மகரிஷியின் மீது மிகுந்த ஈடுபாடு உண்டு. இவரது முதல் சிறுகதை 1932 - ம் ஆண்டு வெளியானது. இந்து அறநிலையத்துறையின் அதிகாரியாகப் பணியாற்றியவர் பிச்சமூர்த்தி. இவரது குறிப்பிடத்தக்க படைப்புகள்... 'பதினெட்டாம்பெருக்கு', 'மோகினி', 'மாங்காய் தலை', 'காபூலிக் குழந்தைகள்'. இவரது மொத்தக் கதைகளும் தொகுக்கப்பட்டு, 'ந.பிச்சமூர்த்தி கதைகள்' என்ற பெயரில் வெளியாகி உள்ளது. 1976 - ல் தனது 76 வயதில், சென்னையில் காலமானார் ந. பிச்சமூர்த்தி.

சாரு நிவேதிதாவின் திரைப்பார்வை குறித்த கருத்துகளை திரு. கே.வி. ராஜா வழங்கினார். 'பருத்தி வீரன்', 'மொழி', மற்றும் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'..இந்தப் படங்கள் குறித்த சாருவின் விமர்சனம் கதையமைப்பு, பாத்திரப்படைப்பு, மாறுபட்ட வழக்கமான கதாநாயகன் பாணி இவற்றைப் பாராட்டும் முகமாக விளங்குகிறது. ஆஸ்கார் குறித்த விளக்கங்கள், ஆஸ்கார் என்பதைத் திரையுலகம் புரிந்து கொண்டிருக்கும்
விதம் இவை பற்றிய சாருவின் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

திருமதி கீதா ரமேஷ் ஜெயகாந்தன் சிறுகதைகளில் வெளிப்படும் எழுத்து நடை, பாத்திரப்படைப்பு, கதைக்கரு, மற்றும் வட்டார வழக்கு முதலியவை மிக இலகுவாக, இயல்பாகக் கையாளப்பட்டிருக்கும் விதம் குறித்த தம் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சங்க இலக்கியம் குறித்த திரு. இளங்கோவின் விளக்கவுரை நேரமின்மை காரணமாக அடுத்த கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது.

அன்புடன்,
மலர்.
 

 

.

 
தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

.