எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---6  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக் கூடத்தின் ஆறாம் கூட்டம்

- ஒரு பார்வை. -லக்கி ஷாஜஹான்.

(அல்லது )
 
அசோகமித்திரனும் ஆறாவது கூட்டமும்

- லக்கி ஷாஜஹான்.

 *

சராசரி வாழ்க்கையின் அவலங்களை யதார்த்தமாக சொல்லும் எத்தனையோபடைப்புகள் அது எந்த வடிவில் இருந்தாலும் சரி

.. மக்களிடத்தில் மிகப் பெரிய வெற்றிகளை பெற்றிருக்கிறது. சுந்தர ராமசாமி, லா ..ரா, ஜானகிராமன்,ஜெயகாந்தன் அசோக மித்திரன் போன்ற ஜாம்பாவான்களை தொடர்ந்து அண்மையில் தெருவாசகம் தந்த யுகபாரதி வரை இலக்கிய உலகம் காட்டும் எழுத்து சிற்பிகள் ஏராளம் ஏராளம் . தமக்கு வெளியே உள்ள உலகத்தை சக மனிதனாக பாவித்து அந்த உலகின் எண்ணற்ற, பெயரற்ற , நாளும் நசுங்கும் மனிதர்களில் தானும் ஒருவராய் உணர்ந்து தம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அமைதியாக பதட்டம் இல்லாமல் அணுகக் கூடியவர்களாலேயே பாமர இலக்கியங்கள் படைப்பது சாத்தியமாகின்ற து. இத்தகைய்ய எழுத்து உலகை ஓர் அரிய சமன்பாடுடனும் , சிறிதே எள்ளலுடனும் பார்க்கும் அபூர்வமான தேர்ந்த படைப்பாளிகளில் ஒருவரான அசோக மித்திரனை அறிதல் - பகிர்தல் வேண்டி அலசத் தொடங்கினோம் சென்ற வார ரியாத் தமிழ் சங்க எழுத்துக்கூடத்தில்.

(கூட்டம் நடந்த நாள் : 21 - 04 - 2006 )

இந்த வாரம் அசோகமித்திரன் என தேர்வு செய்ததற்கு காரணம் தொடர்ந்து நம்

இலக்கிய கூடத்தில் வாசிக்கப்பட்டு/ விமர்சிக்கப்பட்டு வரும் விகடனின் - கதாவிலாசத்தின் வரிசையில் எஸ்.ரா அறிமுகம் செய்திருக்கும் இவ்வார பதிவை அலங்கரித்தவர் அசோகமித்திரன் . எஸ்.ரா வழக்கம்போல் தம் வசீகர எழுத்துக்களில் சில முன்னுரைகள் தந்துவிட்டு சினிமா துணை நடிகர்கள் பற்றிய சிந்தனையை நம்முள் விதைத்து விட்டு அதற்கு பலம் சேர்க்க அசோகமித்திரனையும் - அவரது படைப்பு ஒன்றையும் கூட்டணியாக்கி விருந்து பரிமாறியிருக்கிறார்.

அசோக மித்திரனைப் பற்றி அறிவதற்கு முன்னால்

துணை நடிகர்கள் பற்றிய எஸ்.ராவின் எண்ணங்கள் சற்றே சிந்திக்க வைக்கின்றன ."அலிபாபாவும் நாற்பது திருடர்களும் " படத்தில் திருடர்களாக வந்த எவரையேனும் நினைவிருக்கிறதா ?"கர்ணன்" படத்தில் யுத்தக் காட்சியில் வரும் தேரோட்டிகள் எவர் முகமேனும் ஞாபகம் இருக்கிறதா ? என்றெல்லாம் கேட்டுவிட்டு நாற்பத்து மூன்று படங்களில் துணைநடிகராக நடித்து தற்சமயம் சென்னையில் ஒரு சந்தினுள் மர கடையில் எடுபிடியாக இருக்கும் தான் சந்தித்த ஒருவரைப் பற்றிய அனுபவங்களை நமக்கு விவரிக்கிறார் எஸ் .ரா.தோற்றுப் போய் துவண்டு வாழும் அந்த கலைஞனைப்பற்றிய நிஜம் பளீரென நெஞ்சில் அறைகிறது.

ஜெயித்தவர்களின் கதை ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் இருக்கின்றன

.தோற்றுப் போனவர்களின் கதையோ பெரும்பாலும் ஒன்று போலத்தான் இருக்கிறது . தோல்வி என்று அதை சொல்ல முடியுமா என தெரியவில்லை . புறக்கணிப்பின் பெயர் தோல்வியா என்ன என்றெல்லாம் கேட்டுக்கொண்டே போகிறார் எஸ் .ரா. சினிமா உலகின் நிஜத்தை துல்லியமாக எடுத்துக்காட்டும் ஒரேயொரு நாவலாக அசோகமித்திரனின் "கரைந்த நிழல்கள்" உள்ளது என அறிமுகப்படுத்தி பின் சினிமாவில் உள்ள துணை நடிகன் பற்றிய 'புலி கலைஞன் ' என்ற சிறுகதையை பற்றி சிலாகித்திருக்கிறார் எஸ் .ரா.

சினிமா கம்பெனி ஒன்றில் வேஷம் கேட்க போகும் புலி வேஷம் போடுவதில் சமர்த்தியசாலியான ஒரு மனிதனை பற்றியதே புலி கலைஞன்

. தனக்கு தெரிந்த புலி பாவனையெல்லாம் செய்து காண்பிக்க படப்பிடிப்பின்போது வாய்ப்பு தருவதாக திருப்பியனுப்பப் படுகிறான் அந்த கலைஞன். பின் ஒரு வாய்ப்புக்காக அவனை தேடுகையில் அந்த விலாசத்தில் அவன் இல்லை என்று தெரிய வருகிறது . எங்கே போனான் அந்த புலி கலைஞன்.சினிமாவில் நிஜ யானையையே கோமாளி போல் டவுசர் அணிந்து பைக் ஓட்டுவதற்கும் பந்து போடுவதற்கும் பழக்கப்படுத்துப் பட்டு விட்ட சூழ்நிலையில் புலிவேஷம் போடுபவனுக்கு என்ன மதிப்பிருக்கும் . புலியாக வாழ்வதற்கு புலியாலேயே முடியவில்லை என்ற நிஜம் அவனுக்கு புரிந்து போய் விட்டானா.. அல்லது வாழ்க்கையின் பற்சக்கரங்கள் கருணையற்று அவனை மென்று தின்று துப்பி விட்டதா .. என்றெல்லாம் அசோக மித்திரனின் கை வண்ணத்தில் காட்சிகள் விரிய மனம் கனத்துப் போகிறது .

இது இப்படி இருக்க நம் எழுத்துக் கூடத்தில் பங்கெடுக்க கிளம்பி அவசர வேலையாக தமாம் சென்ற டாக்டர் சோமு அவர்கள் பின் என்னிடம் எழுத்துக்கூடத்தின் அன்றைய சாரம்சம் பற்றி

பேசுகையில் ' சினிமாவை சுவாரஸ்யமாக கொண்டு செல்வதே துணை நடிகர்கள் தான்.. லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஈரோ -ஈரோயின்களை ( : ) ) மூன்று மணி நேரமாக தொடர்ந்து பார்க்கையில் வெறுத்து போகிறது. குழுவுடன் நடனமாடுபவர்கள் - அடியாட்களாக வருபவர்கள், கூட்டங்களில் தெரிபவர்கள் இவர்கள்தான் சினிமாவின் சில முக்கிய காட்சிகளை தீர்மானிக்கிறார்கள் ' என்றார். என்னே ஒரு நேரிய பார்வை( Positive Thinking ).

அசோகமித்திரனின் படைப்பை - கதாவிலாசத்தின் இந்த வார பகுதியை நம் எழுத்துக் கூடத்தின் புதிய நண்பர் வெங்கட் வாசித்தளிக்க நாங்கள் அசோகமித்திரனின் எழுத்து திறமையையும் சொல்வன்மையையும் ர (ரு)சிக்க தொடங்கினோம். பின் அசோக மித்திரனைப் பற்றி பேசத் தொடங்கியபோது ஏராளமான செய்திகள் வந்து விழத் தொடங்கின.

தமிழ் இலக்கிய உலகின் முக்கிய ஆளுமைகளில் ஒருவர் அசோகமித்திரன் என்றால் அது மிகையில்லை

. அவரது எழுத்துக்கள் வாழ்வின் அவலங்களை எளிமையான நடையில் வலிமையாக சொல்கிறது .வெறும் சிறுகதை நாவல்களோடு நின்றுவிடாமல் நிறைய கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட இரண்டு கட்டுரை தொகுதிகளை எழுதி இருக்கிறார் . இவரது கட்டுரைகள் அனைத்தும் உலகம் தழுவியவை.பல அரசும் சமூகமும் வாழ்க்கையும் அன்றாடம் நடத்தும் வன்முறைகளைப் பற்றிய கூரிய பார்வை கொண்டவை .அவரது கட்டுரைகளில் இந்த வன்முறைகளுக்கு எதிர்மறையாக கோபமோ , எரிச்சலோ, உலகை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற உத்வேகமோ தென்படுவதில்லை. ஆனால் இதுதான் நடந்தது என சொல்லும் போதே நடந்ததின் தாக்கத்தை நம் மீது நம்மையே அறியாமல் சுமத்திவிடுகிறார் என்று இவர் கட்டுரைகள் பற்றிய ஒரு விமர்சனம் படித்தேன். அசோகமித்திரன் எழுதிய சில கட்டுரைகள் உலக இலக்கியத்தில் எழுதப்பட்ட சில கட்டுரைகளோடு ஒப்பிடத் தக்கவை என்றும் படித்தேன் . பின்னாளில் நம் எழுத்துக் கூடத்தில் இந்த கட்டுரைகளை வாசிக்க நேர்ந்தால் அது பற்றியும் எழுதும் எண்ணம் இருக்கிறது.

அசோக மித்திரனின் வேறு சில சிறுகதைகளை நண்பர் வெங்கட் இணையத்திலிருந்து இறக்கி

அச்செடுத்து வந்து விநியோகிக்க அதிலிருந்து ' அழகு' என்ற ஒரு சிறுகைதை அடியேனால் வாசிக்கப்பட்டது.பின் நண்பர்கள் கே.வி. ராஜா , கல்யாண், பாலராஜன், வெற்றிவேல் ஐயா போன்றோர்கள் அசோக மித்திரனின் நாவல்கள், கனவு தொழிற்சாலையை துகிலுறுத்திக் காட்டும் கல்லூரி பூக்கள் , ஜரிகை கனவுகள்

(பாலகுமாரன் ), கனவுத் தொழிற்சாலை ( சுஜாதா ) மற்றும் துணை நடிகர்களின் அவலங்கள் சொல்லும் திரைப்படங்கள் என அன்றைய பதிவின் தொடர்பான விஷயங்களை சுவாரஸ்யமாய் அலசி விவாதிக்க அன்றைய கூட்டம் நடக்க இல்லம் தந்து அடிக்கின்ற வெயிலுக்கு இதமாய் குளிர்பானமும் தந்து உபசரித்தார் அன்பு நண்பர் அப்பாஸ் ஷாஜஹான் .

நானும் ஒரு இலக்கியவாதியாய் அறியப்பட ( இது உனக்கே கொஞ்சம் அதிகமா தெரியலை .. ? ) என்னன்னவோ எழுதி பார்க்கிறேன் , படித்துப் பார்க்கிறேன்.. ஆனால் ஒவ்வொரு முறை எழுத்த்துக்கூடத்து கூட்டத்தின் முடிவில் எல்லாம் தெரிந்து கொள்ளும் செய்தி ' நீ இன்னும் கத்துக்க வேண்டியதே எக்கச்சக்கம்மா இருக்குப்பா ' என்பதுதான்.. எப்போது எல்லாம் கற்றுக் கொண்டு , எழுத தொடங்கி , ஞான பீடம் விருது வாங்கி.. ம் ஹூம் சாத்தியமேயில்லை போல் தெரிகிறது.. சாகித்ய அகாதெமி விருது கிடைக்க எளிமையான வழி ஏதும் இருந்தால் விசாரித்து சொல்லுங்களேன் ...போகும் வழிக்கு புண்ணியமாக போகும் .

*

அன்புடன்

- அன்பிற்காக

லக்கி

ஷாஜஹான்:

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006