எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---7  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக் கூடத்தின் ஏழாம் சந்திப்பில்

... - லக்கி ஷாஜஹான்.

அன்பு தமிழ் சொந்தங்களுக்கு

...

ஒரு சின்ன திருத்தம்

: திருமதி விஜயலட்சுமி மாசிலாமணி அவர்களின் தவம் புத்தக வெளியீட்டு விழாவில் நான் வாழ்த்துரை வழங்கும்போது 'இது ரியாத் தமிழ் சங்கத்தில் நடக்கும் முதல் புத்தக வெளியீட்டு விழா என்று பேசியிருந்தேன். ஆனால் அது ரியாத் தமிழ் சங்க எழுத்துக் கூடம் நடத்தும் முதல் புத்தக வெளியீட்டு விழா என்று வர வேண்டும். ஏனெனில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ரியாத் தமிழ் சங்கத்தை துவங்கி வைக்க வருகை தந்த விழாவிலே நிறைய படைப்பாளர்கள் தம் படைப்புகளை புத்தமாக வெளியிட்டிருப்பது எல்லோர்க்கும் நினைவிருக்கலாம். எனவே நான் அப்படி குறிப்பிட்ட பிறழ்வுக்காக அன்பர்களும் நண்பர்களும் பிழை பொறுக்க கேட்டுக் கொள்கிறேன்

.(மனசுல பெரிய குஷ்புன்னு நினைப்பு ... விவாதத்திலேயும்,விமர்சனத்துலயும் எதையாவது உளற வேண்டியதே உனக்கு வேலையாப் போச்சு..இந்த லட்சணத்துல கட்டுடைச்சி பேசுறேன் ,கட்டைல போறேன்னு டயலாக் வேற .. திருந்துடா ஷாஜி திருந்து.. )

அன்புடனும் உரிமையுடனும் சுட்டிக்காட்டிய நண்பர்கள் இம்தியாஸ்,ராஜா அவர்களுக்கு நன்றி ! நன்றி !!

-----------------------------------------------------------------

எழுத்துக்கூட பார்வைக்குள் நுழையும் முன் என்னுரையாய் ஒரு முன்னுரை...

அப்பாயாணம்...!

ஆறு வயதில்

எங்கப்பா மா(தி)ரி யாரும் இல்ல தெரியுமா அவர பீட் அடிக்க யாராலியும் முடியாது அவருக்குத் தெரியாத விஷயமே இல்ல தெரியுமாடா உனக்கு எங்கப்பா போல ஆளே கிடையாது ...

பதினாறு வயதில்

இன்னும் இளையராஜாவாம், ஏஆர்ஆர், ஹாரிஸ் ஜெயராஜ் யாருன்னாவது தெரியுமா அவருக்கு இப்படி முடி வெட்றது சரியில்லையாம் எப்படி இருந்தா இவருக்கு என்னாவாம் கோவா டூர் போக காசில்லையாம் இந்தாளை ஏம்மா கல்யாணம் பண்ணிக்கிட்டே

இருபத்தாறு வயதில்

அப்பா, அவள் சொல்றதுதான் சரி அந்தக்கால ஆசாமி நீங்க வாயை மூடிட்டு இருங்க

முப்பத்தாறு வயதில்

வயசானவுடனே மூளையும் போயிடுமா சிவனேன்னு கெடக்காம, எல்லாத்திலயும் மூக்க நுழைக்கணுமா

நாற்பத்தாறு வயதில்

பெரியவன் போக்கே சரியில்ல சின்னவன் என் பேச்சை கேக்குறதே இல்ல பொண்ணுக்கு வந்த வரன் குழப்பமா இருக்கு அப்பா மட்டும் இப்ப இருந்தா அவருக்கு தெரியாத விஷயமே இல்ல தெரியுமா உங்களுக்கு

----------------------

பொதுவாகவே படைப்புகளிலும் திரைப்படங்களிலும் தாய்ப்பாசமே எப்போதும் பிரதானப்படுத்துவதுண்டு . தாய் 'பத்து மாசம் சொமந்து பெத்ததே' பெரிதாகப் பேசப்பட்டாலும் அந்த மகனோ அல்லது மகளோ ஆளாகி தன் சுயக்காலில் நிற்கும் வரையும் - அதற்கும் பின்னாலும் கூட - அவனைத் தன்னுடைய நெஞ்சில் சுமக்கும் தகப்பன்மார்களின் சிரமங்கள் அவ்வளவாகப் பேசப்படுவதில்லை . அந்தக் குறையை நீக்கி அண்மையில் தமிழில் தவமாய் தவமிருந்து என்ற பெயரில் ஒரு படம் கூட வந்தது .

என்றாலும் இந்தப் படம் தகப்பனின் பெருமையை மாத்திரமே பேசுவதாய் நான் நினைக்கவில்லை . மாறாக, இன்றைய இயந்திர வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் தனித் தீவாகி சக மனிதனை ஒரு போட்டியாளனாகவே பார்த்து, உறவுகளை அறுத்துக் கொண்டு குடும்பம் குடும்பமாய் விலகுவதில் உள்ள அபத்தத்தையும் , உறவுகளின் மேன்மையையும், அவசியத்தையுமே சொல்வதாய் நான் நினைக்கிறேன் .

ஒரு தகப்பனின் வாழ்க்கைப் பயணம் பற்றிய எந்தவொரு இலக்கியமும் நாம் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை

.. நம் வீட்டில் நம் தந்தையாய் இருந்தாலுமே கூட .. உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த தந்தையை ஒரு கட்டத்திற்கு மேல் புறக்கணிக்கும் நன்றிக் கெட்ட பிள்ளைகளாய் நாம் மாறி விடக்கூடாது என்ற சின்ன விஷயத்தைப் பற்றி உங்களுடன் பகிர்வதற்கெனவே இந்த நீண்ட முன்னுரை தருவது அவசியமாகிவிட்டது. பிள்ளைகள் பிறந்தபிறகு தமது வாழ்க்கையின் மற்றொரு புள்ளியை நோக்கி நகரும் பெற்றோர்களின் குறிப்பாக தந்தையின் தேடலும் எதிர்பார்ப்பும் பிள்ளைகள் வாழ்க்கைக்கான தம் அர்ப்பணிப்பும் அடடா இந்திய வீடுகளில் தான் எத்தனை எத்தனை மகாத்மாக்கள் ..?

 

இனி எழுத்துக்கூடத்தின் ஏழாம் சந்திப்பு பற்றி

...

பிள்ளைகளுக்காய் வாழ்க்கையை தொலைக்கும் அப்பன்கள்

, அவர்களுக்கு பிள்ளைகள் காட்டும் நன்றிகள் என்று இன்றைய வாழ்க்கையில் நடக்கும் நிஜங்களை அப்பட்டமாய் தனது அனுபவ நிகழ்வில் அலசியிருக்கும் எஸ்.ராவின் கதாவிலாசம் பற்றிய அணிந்துரையுடனும் அதற்கென அவர் எடுத்தாண்ட ந . முத்துசாமியின் ஒரு சிறுகதையைப் பற்றி அலசலும் நோக்கி எழுத்துக்கூட அங்கத்தினர்கள் ஒன்று கூடினோம் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (05-09-2006) அன்று எழுத்துக்கூட கூட்டத்துக்காக ஐயா வெற்றிவேல் அவர்கள் வீட்டில் ..

வழக்கமாய் வரும் நண்பர்களைத் தவிர இந்த வார இலக்கியக் கூட்டம் ரியாத் தமிழ் சங்கத்தின் முக்கிய பிரதானிகளை பங்கேற்பாளர்களாய் ஏற்று தன்னை கம்பீரமாக காட்டிக் கொண்டது

. இவர்கள் இனி எல்லா அமைவுக்கும் கலந்து கொள்வார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி தரும் செய்தி.ஐயா மாசிலாமணி அவர்கள் சொன்னது போல் 'கொஞ்சம் கொஞ்சமாக இந்த எழுத்துக்கூடம் ஆரோக்கியமான ஒரு இலக்கிய பரிவர்த்தனைக்கும் சிறந்த படைப்புகளை ரசிக்க/படைக்க தயார்படுத்தும் மறுமலர்ச்சிக்கும் தயாராகிக் கொண்டிருக்கிறது.. ' என்பதற்கேற்ப அன்றைய கூட்டத்தில் சில புதிய திட்டங்கள் ,செயல்முறைகள் பேசப்பட்டன. அதை பின்னர் பார்ப்போம் .

இந்த வார கதாவிலாசத்தின்

'நரையேறும் காலம்' பகுதியை திருமதி விஜயலட்சுமி மாசிலாமணி அவர்கள் படிக்க அதன் பிரதியை நகலிட்டு , வந்த அனைவருக்கும் வழங்கினார் எழுத்துக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளார் நண்பர் கல்யாண் .. . ஏற்ற இறக்கங்களுடனும் தேவையான இடத்தில் தேவைப்பட்ட உரையாடல் தொனியுடனும் திருமதி விஜிமா அவர்கள் படித்த விதமே ஒரு தனி சுவாரஸ்யம் ..

எஸ்

.ரா தினமும் அதிகாலையில் தாம் சந்திக்கும் மூன்று தலைமுறையின் உயிர் பிம்பங்களைப் பற்றிய தனது எண்ணத்தை அழகாய் வர்ணிக்கிறார் தமக்கே உரிய எழுத்து நடையில். உடற்பயிற்சி நிமித்தம் நடைப் பயிற்சி மேற்கொள்ளும் அந்த மூவரின் இயல்புகள் பற்றிய எஸ் .ராவின் பார்வை அலாதியானது. சின்னக் குழந்தை போல் பிள்ளைகளுக்கு இலையை சுருட்டி ஊதுகுழல் செய்து தரும் பெரியவர். அவரிடம் எப்போதும் சிடுசிடுவென எரிந்து விழுந்து பத்து ரூபாய் தந்து பதினெட்டு வேலைகள் பணிக்கும் மகன் . இவர்கள் இருவரும் சென்ற பிறகு அந்த இடத்தில் சிகரெட் புகைத்து பபுள்கம் சுவைத்து பின் அதை மரத்தில் ஒட்டவைத்துவிட்டு போகும் மூன்றாம் தலைமுறை - பதினாறு வயது இளைஞன் இவர்களை கேம்கார்டராய் தொடரும் எஸ்.ராவின் எண்ண ஓட்டம் அவரது எழுத்தில் காட்சியாய் விரிகிறது .

 

துணி துவைப்பதற்காக உவர் மண் எடுக்கச் செல்பவர்கள் கழுதைகளின் கால்கள் நடுங்க மணல் மூட்டைகளை ஏற்றிவருவதைப் போல இத்தனை வேலைகளைப் பெரியவரின் முதுகில் ஏற்றியபோதும் அவர் எப்படிச் சலனம் இல்லாமல் ஏற்றுக்கொள்கிறார். உண்மையில் யார் அப்பா, யார் பிள்ளை? என்ற எஸ்.ராவின் எண்ண ஒட்டங்களைப் பின் அந்த பெரியவரிடம் பகிர்ந்து கொள்கிறார் எஸ் .ரா. " அப்பாவும் பிள்ளையும் கொஞ்சிக்கிடறதும் ஒட்டிக்கிட்டு தூங்குறதும் பத்து வயசு வரைக்கும்தான் . அப்புறம் வளர வளர இடைவெளி வந்துருது. உடைந்த கண்ணாடியில் முகம் பார்த்தா முகம் சிதறித்தான் தெரியும். அப்படித்தான் பையன் அப்பனைத் தப்பு சொல்றான் . அப்பன் பையனைத் தப்பு சொல்றான். மரத்து நிழல் மாதிரி இருந்துட்டுப் போயிட்டா பிரச்னையில்லை. புரியலையா? மரத்து நிழலால மரத்துக்கு ஒரு லாபமும் கிடையாது. மத்தபடி வெயில்ல ஒதுங்குற யாரா இருந்தாலும் அது குளிர்ச்சியானது தான் " என்ற பெரியவரின் பேச்சுக்களை அசை போட்டவாறு தாம் படித்த ந .முத்துசாமியின் ஒரு சிறுகதையை நமக்கு பந்தி வைக்கிறார் எஸ்.ரா.

.முத்துசாமி தஞ்சை மாவட்டத்தில் பிறந்தவர்.தெருக்கூத்தை தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்களில் முதன்மையானவர் . நவீன நாடகங்கள் உருவானதற்கு மிக முக்கிய காரண கர்த்தவாக இருந்தவர்.கூத்துப் பட்டறை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் நாடக பரிசோதனைகள் நடத்த வழிகாட்டியாக இருந்தவர் . கசடதபற, நடை போன்ற இலக்கிய இதழ்களில் நிறைய சிறுகதை எழுதி இருக்கிறார் .நவீன தமிழ் நாடகங்களை உலகெங்கும் நடத்திக் காட்டிய பெருமை ந.முத்துசாமிக்கு உண்டு.

அப்பா எப்படி குழந்தைகள் மனதில் படிந்து போயிருக்கிறார். அல்லது அப்பாவை எப்படி நினைவுகொள்வது என்பதுதான் கதையின் மையம். பெரும்பான்மை வீடுகளில் அப்பாவின் உருவம் துர்கனவில் வரும் உருவம் போலவே குழந்தைகளுக்குள் படிந்து இருக்கின்றன. அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். தனது விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ள முடியாத கோபம். அடுத்தவர்கள் தன் குடும்பத்தை மதிக்க வேண்டும் என்பதற்காக அப்பா விதித்த கட்டுப்பாடுகளின் மீதான கோபம். இந்தக் கோபங்கள் சில நேரம் நீர்க்குமிழியைப் போலக் கரைந்து விடுகின்றன . சில நேரம் தீக்காயம் போல நாள்பட்டும் உலராமலே போய்விடுகின்றன.
 

எஸ்.ராவின் இந்த கட்டுரையில் அவர் ஆரம்பத்தில் அந்த பெரியவர் பற்றிய ஒரு பரிதாபமான பார்வையை நமக்குள் விதைத்ததும் பின் அதற்கு என்ன காரணம் என ஒரு இளைஞன் மன நிலையில் நின்று மேற்சொன்ன பார்வையில் விவரிப்பதும் வெகு அருமை . இந்த கட்டுரை எழுதிக் கொண்டிருக்கையில் அப்பா பற்றிய நண்பர் ஷாஜஹான் ( துபாய் ) எழுதிய ஒரு அருமையான கவிதை என் நினைவாடலில் வந்தது.. இங்கு அதை தருவது பொருத்தம் என்று நினைக்கிறேன் . முகமூடி என்று தலைப்பிடப் பட்ட அந்த கவிதை எனக்குள்ளும் சில பாதிப்பை ஏற்படுத்தியது.. அப்பா பற்றிய இன்னொரு பார்வை அவருடையது ..

-----------------------------------------------------------

 

முகமூடி

அப்பாவின்அறைக்குள்
நான் நுழைவதில்லை

அன்றொருநாள்
நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம் உறுமிக் கொண்டே

ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது .

முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மாமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.

அன்றிலிருந்து
அப்பாவின் அறைக்குள்

நான் நுழைவதில்லை.

வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும் .
நறுமணத் தூவாளையை பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே .
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.

சீறி சீறிப் பாயும் -
அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்து புன்னகைக்கும்

நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்
காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள்

உண்டாம் ஏராளம் .
எதிர்க்க திராணியற்ற பிராணிகள் ..

இரவில் வரும் நேரம்
எனக்குத் தெரியும்

என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா தன் ஆத்மாவை என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த

அப்பாவின் அறைக்கு. ..

----------------------------------------------------------------

அப்பாக்களை ஏனோ மகன்கள் அதிகம் விரும்புவதில்லை

. அம்மாக்களை ஏனோ மகள்கள் அதிகம் நெருங்கிய தோழியாக ஏற்றுக் கொள்வதில்லை . சிலவை விதி விலக்காக இருக்கலாம். இந்த அம்மா - மகன் , அப்பா - மகள் எதிர்மறை நல்லுறவு சித்தாந்தங்களுக்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை . சிக்மண்ட் ஃப்ராய்டு ஏதேனும் காரணம் வைத்திருக்க கூடும்.

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப் படுகிறது . தச்சன் அதைச் செய்யும்போது மிகக் கவனமாகச் செய்கிறான் . ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி.

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌன மாகப் பார்க்கும் தச்சனைப் போன்றது தான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை
போன்ற அற்புதமான உவமைகளுடனும் கருத்துக்களுடனும் எஸ் .ராவின் கட்டுரை முடிய பின் வெகு சுவாரஸ்யாமாய் இதைப் பற்றி அவரவர் கருத்துக்களும் , அப்பாயாணமுமாய் பல அலசல்கள் நடை பெற்ற பின் எழுத்துக்கூடத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு என்ன செய்வது என விவாதிக்க தொடங்கினார்கள் .

எழுதும் ஆர்வம் உள்ளவர்களை எழுத வைக்க வேண்டும் என்பதுதான் எழுத்துக் கூடத்தின் தலையாய நோக்கம் என்று உணர்த்தி அதன் பொருட்டுதான் நல்ல சிறுகதைகள் ,படைப்புகள் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நடை, உவமைகள்-உவமான உதாரணங்கள் , புதிய சொற்கள், புரிந்துணர்வு இது பற்றியெல்லாம் விவாதிக்கப்படுகிறது என்று மாசிலாமணி ஐயா சொல்ல சில நல்ல திட்டங்கள் ஆராயப்பட்டன .அவற்றில் ஒன்று இனி வாரம் ஒரு முறை படிக்கும் ஏதேனும் ஒரு படைப்பை ஒட்டிய தமது எண்ணங்களை , அனுபவங்களை , கருத்துக்களை மற்றவர்கள் மறு சந்திப்புக்கு வரும்போது கதையாகவோ, கட்டுரையாகவோ ,கவிதையாகவோ எழுதிக் கொண்டு வந்து வாசிக்க வேண்டும். அது உணர்வுப்பூர்வமாகவோ நகைச்சுவையாகவோ எந்த வடிவில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதாக அறிவிக்கப்பட்டது

இந்த வாரத்திலிருந்தே தொடங்குவோம் என குரல் தந்த சகோதரர் அன்பு நண்பர் இம்தியாஸ் அவர்கள் வரும் வாரம் தன் படைப்பு ஒன்றை சமர்ப்பிப்பதாக அறிவித்தார்

அவரைத் தொடர்ந்து ரியாத் தமிழ் சங்கத்தின் தலைவர் முனைவர் ரஷீத் பாட்சா அவர்கள் தானும் குறிப்பிட்ட ஒரு தலைப்பை பற்றி வருகின்ற கூட்டங்களில் பேச இருப்பதாக சொல்ல இது ஒரு ஆரோக்கியமான விஷயமாக எழுத்துக் கூடம் இனி முழு வீச்சில் செயல்படக் கூடியதாக நடக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனி போல் தெளிவாக தெரிந்து போனது

டாக்டர் திரு.சோமு, திரு ஜெயசீலன், திரு ஷேக்தாவூத் ஆகியோரும் கலந்து கொண்டு தம் தம் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சிறப்பான முறையில் தெரிவித்தனர் . நண்பர் கே.வி.ராஜா , நண்பர் கல்யாண், நண்பர் அப்பாஸ் ஷாஜஹான்,ஐயா மாசிலாமணி ஆகியோர் தம்பதி சகிதமாக வருகை தந்திருந்தனர் . பாலராஜன், வெங்கட் ஆகிய வழமையான நண்பர்களும் பங்கு கொள்ள அடுத்த கட்ட நிகழ்வான புத்தக வெளியீட்டு விழாவுக்கு கலந்துகொள்ளும் பொருட்டு கூட்டம் நிறைவடைந்தது

-------------

அன்புடன்

- அன்பிற்காக

லக்கி ஷாஜஹான்

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006