எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---8  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

எழுத்துக்கூடத்தின் எட்டாம் சந்திப்பு

- ஒரு பார்வை.

-

லக்கி ஷாஜஹான்.

ஒன்று விட்ட வெள்ளி தோறும் என்றாலே ஒரு படபடப்பு வந்துவிடுகிறது மனசுக்கும் உடம்புக்கும்

...

ஆறு நாட்களும் முழு நேரப் பணியாளனான எனக்கு

( அடங்குடா.. மத்தவங்க மட்டும் என்ன சும்மா உட்கார்ந்தா சம்பாதிச்சிக்கிட்டு இருக்காங்க.. ? ) வெள்ளிக்கிழமை என்பது சுகம் ... பதினொன்றை மணிக்கு எழுந்து - கிளம்பி - இறை தொழுது பின் ஆங்காங்கே நின்று ஊர்க்கதைகள் பேசி - சமூகம்-சமுதாயத்திற்காக கவலைப்பட்டு ( என்னா மாப்ள அஸினுக்கு படமே இல்லையாமே .. ? ) பின் உணவருந்தி -முடிந்தால் ஒரு மேட்னி ஷோ பார்த்து - சமயங்களில் அந்த தவறுக்காக வருந்தி ( இந்த மாதிரி குப்பையை பார்த்ததுக்கு படுத்து இன்னொரு தூக்கம் போட்டிருக்கலாமோ.. ? )பின் சித்தப்பாவின் ஏதேனும் ஒரு கடையில் நின்று விட்டு இரவு படுக்கப் போகும்போது ஏக்கத்தோடு ( அடுத்த வெள்ளிக் கிழமை எப்போது வரும் ..? ) தூங்கிப் போய் - இத்தனை வருஷமும் இப்படித்தான் போய்க்கொண்டிருந்த வேளையில் எழுத்துக்கூடம் செல்லத் தொடங்கியபோது மட்டும் கொஞ்சம் அர்த்தமுள்ளதாக மாறிப்போனது சில வெள்ளிக்கிழமை தினங்கள்.

நல்ல வெய்யில் காலம் வேறு ஆரம்பித்து விட்டது

.. சில சமயம் முகத்தில் வழிவது வேர்வையா ..தலையில் தேய்த்த எண்ணெயா அல்லது உள்ளே இருந்து வழியும் மூளை போன்ற ( இருக்கா - என்ன.. ? ) வஸ்துவா என்னுமளவிற்கு வெயில் அடித்த ஒரு மதிய நேரத்தில் - மலாஸ் ரியாத் உயிரியல் பூங்கா எதிரே உள்ள அல்- ஹுதா கல்விக்கூடத்தில் துவங்கியது சென்ற வார எழுத்துக்கூடத்துக்கான சந்திப்பு. மேட் ஃபார் ஈச் அதர் என்பது போல் அந்த கூட்டத்தில் நிகழ இருக்கும் - ரசிக்க இருக்கும் - விவாதிக்க இருக்கும் பொருளும் கோடைப் பற்றியதே என்பது தனிச்சிறப்பு . ஆம், இந்த வார நிகழ்வில் எஸ் .ராவின் கதாவிலாசத்திலிருந்து எடுத்துக் கொள்ளப் பட்ட பகுதி மாநகர கோடை என்ற தலைப்பில் அமைந்த கட்டுரையும் - இணைப்பாக பிரபல எழுத்தாளர் திலீப்குமாரின் ஒரு சிறுகதையும் .

இந்த வார பதிவை நண்பர் பாலராஜன்கீதா வாசித்தளித்தார்

. பொறுமையாகவும் நிதானமாகவும் தேவையான இடங்களில் ஏற்ற இறக்கங்களுடன் நண்பர் வாசிக்கையில் நண்பர்கள் ஒவ்வொருவரும் தம்முடைய கோடை அனுபவங்களை கதையோடு ஒப்பிட்டு உவமைகளோடு பங்கிட்டு உள்வாங்கிக் கொண்டது அந்தப் பதிவின் தாக்கத்தை இன்னும் அதிகமாக்கியது. எது ஒன்றைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோமோ அப்போது அதைப் பற்றிய சூழலில் இருப்பது என்பதுதான் இங்கு விசேஷமே...

கோடை பற்றிய எஸ்

.ராவின் எண்ண ஓட்டங்கள் ஆரம்பத்திலேயே கட்டுரையை சுவாரஸ்யமுள்ளதாக எதிர்பார்க்கச் செய்து விடுகிறது . வெருகுப் பூனை காட்டில் அலைவது போல் மூர்க்கமாக சுற்றிக் கொண்டிருக்கிறது கோடையின் சூரியன் என்ற உவமையில் ரசிக்க வைக்கிறார் எஸ். ரா. மாநகரக் கோடை என்று குறிப்பிட்டு தலைப்பிட்டிருப்பது நகரங்களில் உள்ள தண்ணீர் பிரச்னையின் அவலத்தை சொல்ல வருகிறது . ஒரு கடுமையான கோடைகாலத்தில் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடிய ஒரு சூழலில் தாம் தங்கியிருந்த இடத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் எஸ் .ரா.ஒன்றாக அந்நியோன்யமாக பழகி வந்த வீட்டுக்காரம்மா ஒரு வாளி நீர் எடுத்ததற்காக ஒரு கர்ப்பிணிப் பெண்ணை கடுமையாக அர்சித்த விதம் பற்றி நெகிழ்வாக குறிப்பிட்டு கோடை அவர்களின் இணக்கத்தை துண்டித்து விட்டது. தண்ணீர் என்பது கருணையும் , தீராப் போராட்டமும் என்ற இரண்டு தலை கொண்டதாக இந்த உலகில் உருமாறி விட்டதாக குறிப்பிடுகிறார் எஸ்.ரா. பின் இதே பிரச்னையை மையமாக வைத்து திலீப்குமார் எழுதிய ஒரு சிறுகதையை பகிர்கிறார் எஸ்.ரா .

இருபதாண்டுகளுக்கு மேலாக சிறுகதைகள் எழுதி வரும் திலீப்குமார் இன்றைய வரை தமிழ் உலகத்துக்கு தன்னாலான எல்லா சேவைகளையும் செய்து வருகிறார்

. அமெரிக்கப் பல்கலைகழகங்களுக்கும், வெளிநாட்டில் தமிழ் கற்றுக் கொடுப்பவர்களுக்கும் வழிகாட்டுதல் மற்றும் தமிழ் புத்தக விநியோகங்களை செய்தல் போன்ற சீரிய பணிகளை செய்து வருகிறார் . ( நம் எழுத்துக்கூடத்தை வழி நடத்தும் அன்பர்களில் ஒருவர் தற்போது தாயகத்திலிருக்கும் ஐயா அப்பாஸ் இப்ராஹிம் நடத்தி வந்த ஞான ரதம் என்ற பத்திரிக்கையில் கூட திலீப்குமார் சில காலம் இருந்ததாக ஐயா ஒரு மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்கள் ) திலீப் குமாரின் கதைகளை வாசித்து முடிக்கும் போது பூனை தன் குட்டிகளை வாயில் கவ்விக் கொண்டு போவது போல் சூழ்நிலை மனிதர்களை கவ்விக் கொண்டு போகிறது போன்ற உண்மை புரிகிறது என சிலாகிக்கிறார் எஸ்.ரா.

இதற்கு முன் எழுத்துக் கூடத்தில் விவாதிக்கப் பட்ட நரையேறும் காலம் என்ற தந்தை

- மகன் உறவுகளிடையே நிகழும் மாற்றம் பற்றிய பதிவு பாதிப்பில் இந்த வாரம் மூன்று பேர் அது தொடர்பாய் தம் படைப்புகளை எழுத்துக்கூடத்தில் வழங்கினார்கள் . முதலாமவர் நண்பர் பாலராஜன். கட்டுரை வடிவில் தந்த இவரது தந்தை பற்றிய நினைவாடல்கள் வெகு சுவாரஸ்யம் .. ஏற்கனவே நண்பரது வலைப்பூவில் அவரது எழுத்துக்களை வாசித்திருந்தாலும் இப்போது அவரே எழுதி - அவரே வாசிக்க இது ஒரு தினுசாய் சுவையாய் சுவாரஸ்யமாய் எழுதியிருந்தார் . இந்த பதிவை பார்த்த பிறகு நண்பர் தம்முடைய அந்த பதிவை நம் மின்மடலாற்குழுவில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னொருவர் திருமதி மரியம்பீவி ஷாஜஹான்

. அவர் எழுதி வந்த சிறுகதையை விட அந்த சிறுகதையின் பாத்திரப் பெயர்கள் எல்லாமே வானத்தில் உள்ள வஸ்துகளின் பெயர். தந்தைக்கும் - மகனுக்குமான புரிதல் பற்றிய ஒரு சிறு நிகழ்வு அது . பாலராஜன் , திருமதி மரியம்பீவி ஷாஜஹான் இருவருமே எழுத்துக்கூடத்தின் தொடர் வருகையாளர்கள் . இவர்கள் படைத்திருப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால் அன்றைய எழுத்துக் கூடத்தில் தம் படைப்பை அரங்கேற்றிய மூன்றாம் நபர் அன்பர் அப்பாஸ் ஷாஜஹானின் புதல்வி செல்வி மெஹர் நிஷா. இதுவரை இவர் ஒரு கூட்டத்திற்கு மட்டுமே வந்திருக்கிறார் ..மறுவாரமே அது தொடர்பாய் ஒரு சிறுகதை எழுதி கொண்டு வந்து விட்டார். குடும்பமே இலக்கிய குடும்பம். ஐயா அப்பாஸ் இப்ராஹிம் அவர்களின் பேத்தி. இலக்கியம் ஜீனிலேயே தொடர்வதில் வியப்படைய ஏதுமில்லை. சிறுமி மெஹர்நிஷா கைவசம் ஏழெட்டு திறமைகள் வைத்திருக்கிறார். நன்றாக பாடுகிறார். கவிதை எழுத முயற்சிக்கிறார். கொண்டு வந்திருந்த சிறுகதை கோபமுள்ள அப்பாவுக்கும் பொறுப்பற்ற மகனுக்கும் இடையே நடக்கும் உரசல் பற்றிய ஒரு நிகழ்வு . தன்னளவுக்கு முயன்றிருக்கிறார் இவரது அறிமுகமும் - படைப்பும் எழுத்துக்கூட வளர்ச்சியின் பாதிப்பாகவே கருதுகிறோம். ஏனைய அன்பர்க்ள் சொன்ன திருத்தங்களை கவனமாக கேட்டுக் கொள்கிறார்.. நிச்சயம் இன்னும் நிறைய எழுத தொடங்கினால் சீர்படக் கூடும்.. வரவேற்போம்.. வாழ்த்துவோம்.

சிறுகதைகளின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி ஐயா ரஷீத் பாட்சா சில கருத்துக்களை சொன்னார்

. அது பற்றிய விவாதத்தில் நண்பர் கல்யாண் ,நண்பர் ராஜா ஆகியோரின் கருத்துக்கள் பயனுள்ளதாக இருந்தது. அடுத்து ரியாத் தமிழ் சங்க அறிவுக்கூடத்திற்கு புத்தகங்கள் சேமிப்பது பற்றி பேசினோம். நண்பர் ராஜப்பா தம்மிடமுள்ள சில புத்தகங்களை எடுத்து வந்திருந்தார் . வெகு வேகமாக இந்த புத்தகங்கள் சேகரிக்கும் பணி ஆரம்பிக்கும் என்பதை தெளிவாக அறிய முடிந்தது .நண்பர் இம்தியாஸ் கவிதை - கதை எழுதுவது பற்றி விவாதிக்க தொடங்க அது பற்றிய ஒரு உற்சாக பகிர்தல் தொடங்கியது. கவிஞர் - எழுத்தாளர் திருமதி விஜயலட்சுமி மாசிலாமணியும் நண்பர்கள் கல்யாணும் ராஜாவும் போட்டி போட்டுக் கொண்டு தமக்கு தெரிந்த குறிப்புகளை வழங்க ஒரு பசித்திருக்கும் புலியின் வேட்கையோடு நாங்கள் ஆர்வமாய் விஷயத்தை உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கினோம் .அடடா எவ்வளவு பயனுள்ள விஷயங்கள்... பகிர்தல்கள் ..?

வர இருக்கும் எழுத்துக் கூட

கூட்டத்தில் வெண்பா பற்றி அறிந்து கொள்ள மரபுக்கவிதை எழுத கை பிடித்து கற்றுத் தர இருக்கிறார் எழுத்துக்கூட நண்பர் ஒருவர். இது எழுத்துக்கூட கூட்டத்தின் வேறொரு பரிமாணம் . இன்னொரு முகம். புதுக்கவிதை என்ற பெயரில் சுமாராய் எழுதும் அடியேன் போன்ற ஆட்களுக்கு இந்த வெண்பா வகுப்பு வெகுநிச்சயம் பயன் தரக் கூடும் . ஆர்வமுள்ள அன்பர்கள் அனைவரையும் அழைக்கிறோம். எழுத்துக் கூடம் தம்மை மிக மென்மையாய் மிக நிதானமாய் பண்பட்ட இலக்கிய கூடமாய் தன்னை உயர்த்திக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது . எல்லாவற்றை பற்றியும் இந்த எழுத்துக்கூடம் தொட்டுப் பேச வேண்டும் என்ற மாசிலாமணி ஐயாவின் அவா வெற்றி பெற இறைவனிடம் பிரார்த்திப்போம் .

கூட்டம் முடிந்து வெற்றிவேல் ஐயா வண்டியில் வரும்போது அவருடன் பேசிக் கொண்டு வந்தது இன்னொரு அனுபவம்

. கிராமப்புற இலக்கியங்கள் பற்றி ஏகப்பட்ட சரக்குகள் கைவசம் வைத்திருக்கிறார் .அடுத்து அவரது பார்வை கல்விக்கூடம் , அறிவுக்கூடம் பக்கம் திரும்பியிருக்கிறது .எழுத்துக் கூடத்திற்கு ஏன் நிறைய பேரை வரவழைக்க முயற்சி செய்ய கூடாது என்ற என் கேள்விக்கு ஆர்வலர்கள் மட்டுமே எழுத்துக் கூடத்தை சிறப்பானதாக்கி பயன் பெற்றுக் கொள்ள முடியும் . கூட்டம் சேர்ப்பதனால் எந்த பயனும் இல்லை என தெளிவாக சொன்னார். அதுவும் சரிதான் என்று தோணுகிறது .

எப்படியோ சில விஷயங்களை கற்றுக் கொள்ள வந்து அதை விட பல படிகள் கற்பதில் பயணப்படத் தொடங்கியாயிற்று

.எழுத்தாளர் பாலகுமாரன் சொல்வார் , எப்போது தெரியாது என ஒத்துக் கொண்டாயோ அப்போதே கற்றுக் கொள்ள தொடங்கி விட்டாய் என்று ... நானும் கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டேனா என்பதை காலம் தான் தீர்மானித்துப் பதில் சொல்ல வேண்டும் .

----------------------------------------------------------------------

லக்கி ஷாஜஹான்

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006