எழுத்துக்கூடத்தின் சந்திப்பு

எழுத்துக்கூடத்தின் சந்திப்பு ---9  ஒரு பார்வை.

       - லக்கி ஷாஜஹான்

"உடைந்த கண்ணாடியைப் போல வாழ்வு முகம் காணும் யாவரையும் சிதறடித்துதான் காட்டுகிறது. வாழ்வின் கரங்கள் எப்போது உயர்வைத் தருகிறது. எப்போது கீழ்மையை உருவாக்குகிறது என்பதைஎவரும் சொல்ல முடியாது .யாராலும் வெல்ல முடியாத வில்லாளியான அர்ச்சுனனும் கூட சில காலம் அரவாணியாகத்தான் வாழ்ந்திருக்கிறான் ..இப்படித்தானிருக்கிறது வாழ்வின் ருசி... "

 

--- எஸ். ராவின் கதாவிலாசத்திலிருந்து 02-06-2006 அன்று எழுத்துக்கூடத்தின் பார்வையில்....

 

எழுத்துக்கூடத்தின் ஒன்பதாம் சந்திப்பு

- ஒரு பார்வை .

-

லக்கி ஷாஜஹான்.

 

நம் எண்ணங்கள் என்பதை யுகயுகமாக தொடரும் மனித வேட்கையின் மொத்த குவியல் என்று படித்திருக்கிறேன். வாழ்க்கை என்பது என்ன என்பது பற்றிய கேள்விகளும் , வாழ்வில் சாதிக்க நினைப்பது என்ன என்பதையும் , சக மனிதர்களைப் பற்றிய கவலையும் , உலகினைப் பற்றிய உலகார்ந்த பார்வையும் பற்றிய இன்றைய மனிதர்களின் எண்ணங்கள் கவிதைகளாய் ,கதைகளாய் துணுக்குகளாய் எவை எல்லாம் பத்திரப்படுத்திக் கொள்ள ஏதுவாக இருக்கிறதோ அவற்றில் எல்லாம் புதையுண்டு போய் கிடக்கின்றன . இந்த அரேபிய வாழ்க்கையில் துக்கங்கள் பெரிதாய் ஏதும் கிடையாது. ஆலன் சோலி ட்ரெளசர்களும், பேசிக் சட்டைகளும், பிட்சா கார்னர் பர்கர்களுமாய் இருந்த வாழ்வினைத் திருப்பிப் போட்டு பார்த்தோமானால் நாம் கடந்து வந்த பாதைகளின் சிரமங்கள் நமக்கு தெரியக்கூடும் . பிரபலங்கள் என்றில்லை, அதிர்ஷ்டத்தில் அமைந்துவிட்ட உயர்ந்த பதவியில் இருக்கும் மேல் தட்டு மனிதனிலிருந்து வெறும் 450 ரியாலுக்கு சாலையில் உள்ள செடிகளுக்கு கொளுத்தும் வெயிலில் நீரூற்றும் பணியை மேற்கொண்ட நம் சகோதரன் வரை திரும்பும் திசையெங்கும் ஆசான்களாய் இருக்கிறது உலகம் . பார்க்கும் பார்வையிலும் மனிதர்களை அணுகவதிலும் தான் ஒளிந்திருக்கிறது வாழ்தலின் ரகசியம் .

எஸ்

.ராவின் எழுத்துக்களை சிலாகிக்கத் தொடங்கிய பிறகு இப்படித்தான் ஒரு கட்டுரையை ஆரம்பிக்க வேண்டும் என்று கொஞ்சம் பெருமூளைக்கும் சிறுமூளைக்கும் இடைப்பட்ட பகுதி குறுகுறுக்க தொடங்க தோணியதை எழுதிவிட்டேன் ..அன்பர்கள் சிரமம் பார்க்காது ( ? ) கட்டுரையை தொடரவும்...

கடந்த

02-06-2006 அன்று நண்பர் அப்பாஸ் ஷாஜஹானின் வீட்டில் நடைபெற்ற எழுத்துக்கூட சந்திப்பு ரியாத்தின் கதிரவனுக்கு கட்டுப்பட்டு 3:30 க்கு தள்ளி வைக்கப்பட்டு விட்டது. புதிதாய் எழுத்துக் கூடத்தில் இணைந்திருக்கும் நண்பர் சிக்கந்தருடன் சரியான நேரத்துக்கு சென்றுவிட அடுத்த ஐந்து நிமிடத்தில் படித்தல் - பகிர்தல் -அலசல் தொடங்கி விட்டது .

இந்த வார நிகழ்விற்கான பகுதியை நண்பர் சிக்கந்தர் படிக்க அதன் பிரதிகள் நண்பர் கல்யாணால் அனைவர்க்கும் வழங்கப்பட்டது

.. சிற்சில வார்த்தைப் பிறழோடு நண்பர் படிக்க நேர்ந்தது சிறு குழந்தையின் மழலைப் பேச்சை ஒத்திருந்தது.. நண்பர் சிக்கந்தர் தாய்மொழி தமிழ் இல்லையென்றாலும் அவர் தமிழ்மீது கொண்டிருக்கும் பற்றும் காதலும் ஆர்வமுடன் தமிழ் கற்றுக் கொண்ட பிடிவாதமும் அவரை எழுத்துக்கூடம் வரை கொண்டு வந்து சேர்த்து விட்டது என்றால் அது மிகையில்லை . எழுத்துக்கூட தாக்கத்தில் இப்போது கவிதை கூட எழுத தொடங்கி இருக்கிறார் நண்பர் சிக்கந்தர்.

இந்த சந்திப்பில் எஸ்

.ராவின் கதாவிலாசத்திலிருந்து படிக்கப்பட்ட பகுதி புகையும் வயிறு என்ற தலைப்பிலான எஸ்.ராவின் முன்னுரையும் எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின் ஒரு சிறுகதையும் ஆகும் .

எழுத்துக்கூடம் துவங்கி ஒன்பது சந்திப்புகளுக்கு பிறகும் எஸ்

.ராவின் எழுத்துக்களை படிக்க படிக்க ஒரு வியப்பும் -திகைப்பும் விரிந்துகொண்டே போகிறதே தவிர குறையவில்லை . இந்த முறை அவர் எடுத்தாண்டிருக்கும் கதையும் - கதையாசிரியரும் நெஞ்சை நெகிழ வைத்தார்கள் என்றால் எஸ் .ரா அதற்கு முன் எழுதியிருக்கும் முன்னுரையிலும் கனத்துப் போகிறது நெஞ்சம் ...

மகனின் அஸ்தியை ராமேஸ்வரக்

கடலில் கரைக்க எடுத்துப் போகும் ஒரு வட இந்தியப் பயணியிடம் ஒரு பஸ் ஏஜெண்ட் ஏமாற்றி வேறு இடத்திற்குப் போகும் பஸ்ஸில் ஏற்றி உண்மை தெரிந்து இறங்கப் போக நடக்கும் போராட்டத்தில் அஸ்திக் கலசம் உடைந்து போய் சாலையெங்கும் கொட்டிய சாம்பலும் அந்த தம்பதியரின் வேதனையும் எஸ். ரா எழுத்துக்களில் படிக்க நெஞ்சம் எல்லாம் ஒரு வேதனை கவ்வி வலி ஊசியாய் இறங்கியது எல்லோர் மனதிலும் ... எஸ் .ரா காட்டும் பஸ் நிறுத்தக் காட்சிகளும் அவ்விடம் உள்ள மனிதர்களும் வாழ்க்கையில் நாம் எல்லோரும் கண்ட தாயகத்தில் காணப் போகும் காட்சிதான் ..அதன் வாயிலாக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை சூழலையும் விளிம்பு நிலையில் வாழும் மனிதர்களையும் அவர்களின் உலகங்களையும் நமக்கு விவரிக்கிறார் எஸ் .ரா.. இதையொத்த தம் அனுபவம் ஒன்றை எழுத்துக்கூடத்தில் பகிர்ந்து கொண்டார் திருமதி உதயா ஜெயசீலன் அவர்கள்..

கணவன் மனைவி இருவருமே வேலைக்குப் போய்வரும் அடித்தட்டு குடும்பம் ஒன்றில் நடக்கும் ஒருநாள் சம்பவத்தைப் பற்றிய எழுத்தாளர் கோபி கிருஷ்ணனின்

சிறுகதை ஒன்றை இந்தப் பதிவிற்காக தேர்வு செய்து தந்திருக்கிறார் எஸ்.ரா . எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் நவீன தமிழ் சிறுகதை உலகின் தனித்துவமான எழுத்தாளராக மதிக்கப்படுகிறார். நடுத்தர வர்க்கங்களின் போலியான மதிப்பீடுகளையும், அவலங்களையும் தொடர்ந்து தனது கதைகளில் வெளிப்படுத்தி வந்தவர் . 2003 ல் காலமான எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் மனநல மருத்துவ ஆலோசகரகப் பணியாற்றியதோடு அல்லாமல் நாவல்கள் பலவும்

எழுதியவர்

.எழுத்துக்கெனவே செய்யும் தொழிலை துறந்து இலக்கியப் பணியாற்றியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது ..வேலைக்குப் போய் வரும் இளம்பெண்கள் சந்திக்கும் பாலியல் உள்ளீடான பல்வேறு தொல்லைகளைப்பற்றிய பார்வை கோபிகிருஷ்ணனின் சிறுகதையில் சமூகத்தின் நிலையைப் பல்லிளிக்க வைக்கிறது . அதனூடான மத்திய வர்க்கங்களைப் பற்றியும் ஒரு பாதிப்பை சொல்லிவிட்டுப் போகிறது அவரின் எழுத்துக்கள் .. கடைசியில் நெருக்கடிகளுக்கு பழகிக் கொள்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் இந்த நடுத்தர வர்க்கங்களால் என்பதாய் அந்த சிறுகதை முடிகிறது. இதற்கு பின் இதைப் பற்றிய தன் பார்வையில் எஸ் .ரா " நூற்றாண்டுகளாக அறிவுறுத்தப்பட்டு வரும் நீதி நூல்களும் தர்ம விசாரங்களும் வாழ்க்கையின் மீது எந்த எதிர்வினையையும் ஏற்படுத்த முடியவில்லை " என்று சொல்லியிருப்பது நிகழ்காலத்தின் நிதர்சனமாய் ஒத்துக் கொள்ள முடிகிறது.

நிகழ்வின் இரண்டாம் அம்சமாக எழுத்துக்கூடத்தின் புதிய வருகையாளர் நண்பர் பால முகுந்தனின்

தேர்தல் 2060 என்ற சிறுகதை ஒன்று அவராலேயே வாசித்தளிக்கப்பட்டது. இன்னும் 55 வருடங்களுக்குப் பின்னால் இந்தியத் தேர்தல்கள் எப்படியிருக்கும் என்ற கற்பனையில் எழுதப்பட்ட அந்த கதை எதிர்கால தொழில்நுட்ப சித்தாந்தங்களையும் அரசியல்கட்சிகள் நிலைப் பற்றியும் நகைச்சுவையூடே சொல்லப் பட்டிருந்தது. இந்த பதிவுக்காக நண்பர் பாலமுகுந்தன் www.thenkoodu.com என்ற தமிழ்வலைத் தள திரட்டி இணையத் தளத்தில் பரிசு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

எழுத்துக்கூடத்திற்கு தவறாது வருகை தரும் நண்பர்கள் சிலர் இம்முறை தவிர்க்க முடியாத பணிகளால் வர இயலாததால் கூட்டம் கொஞ்சம் களை இழந்ததாக தோன்றியது

. ஐயா மாசிலாமணி ஐயா ஜெயசீலன் ஐயா வெற்றிவேல் இவர்களது சில தலைப்புகளில் அமைந்த உரையாடல்கள் அந்த குறையை நீக்கியது. வரவிருக்கும் சந்திப்பில் வெண்பா இலக்கண வகுப்பும் , நண்பர் ராஜப்பா அவர்களின் கதை ஒன்றும் தமிழ் இலக்கியங்கள் பற்றியதான ஐயா மாசிலாமணியின் புதிய தொடர் ஒன்றும் ஆக மூன்று நிகழ்வுகள் கூடுதலாய் நிகழ இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .

எழுத்துக்கூடத்தின் தொடர் சந்திப்புகளை நிரந்தரமாக ஒரே முகவரியில் நடத்த ஆவண செய்யும்படி அதற்கான நடவடிக்கைகள் குறித்து கருத்துக்கள் அலசப்பட அன்பர் அப்பாஸ் ஷாஜஹானின் கோடைக்கேற்ற குளிர்பான உபசரிப்புடன் அன்றைய எழுத்துக்கூட சந்திப்பு நிறைவடைந்தது

.

கூட்டம் முடிந்து ஐயா மாசிலாமணி அவர்களுடன் வந்து கொண்டிருந்தபோது ஐயா அவர்கள் ஒரு

செய்தி சொன்னார்கள் . தமிழின் அக்கால கவிதை இலக்கியத்திலிருந்து இன்றைய நவீன கவிதை வரையிலான பல்வேறு வளர்ச்சியிலான பரிமாணங்களைப் பற்றி ஆராய்ந்து அவற்றின் மிகச்சிறந்த கவிதைகளை தேர்ந்தெடுத்து நூலாக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம் பெறப்போகும் ஆராய்ச்சியில் ஐயா அவர்கள் பலகாலமாக ஈடுபட்டு வருகிறார்கள் . உலகின் மிகச்சிறந்த கவிதைகளை தொகுத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்புக்காக ஐயா இந்தப் பணியில் இறங்கியிருப்பதாக சொன்னார்கள் . லேசர் பௌதீகவியலுக்கும் கேன்ஸர் புனரமைவியலுக்கும் நடுவில் ஐயாவின் இந்த சீரிய பணி வெற்றிப் பெற ரியாத் தமிழ் சங்க எழுத்துக்கூடம் மூலம் முன்னதாகவே ஒரு வாழ்த்தை தெரிவித்துக் கொள்வோம் ...

நன்றி

..!

----------------------------------------------------------------------

லக்கி ஷாஜஹான்

 

தமிழருடன் தமிழில் பேசி, நம் தாய் மொழியைச் சிறப்பிப்போமாக!!!

இணைய தள பொறுப்பாளர் : மு.வெற்றிவேல்... தங்கள் மேலான கருத்துகளை vetri@iname.com என்ற மின் அஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள்.

copyright © RiyadhTamilSangam 2006